புதிது புதிதாய் ஆண்டுகள்- பல
வந்து வந்து போயின
எம்ஈழத்தமிழ் மக்களுக்கு -என்ன
புதிதாய் ஆயின?
உலகிற்;கு உதிரத்தை தேநீராய்
தந்தான் மலையத்தான்
சரிந்து மண்ணில் சிதைந்தபோது
உலத்தான் என்ன கொடுத்தான்?
அழுதகண்ணீர் வடிந்து
உலர்ந்து உப்பாய் போகுமுன்- எப்படி
தொழுது மகிழ்வை கேட்கிறாய்
புதைந்த ஆண்டே சொல்லுமின்.
பத்தாண்டுச் சுனாமியை நினைத்து இப்போ அழுதோம்
புத்தாண்டில் மகிழ்வை எப்படி உன்னுடன் பகிர்வோம்.
சுனாமியாய் தின்றாய் அன்றும் வடவன்னித்தமிழனை
மண்சரித்துக் கொன்றாய் இன்றும் மலையகத்தமிழனை
தமிழனைத் தீர்த்துவிட்டு தரணியாளும் நோக்கமா?
செய்தவினை அத்தனையும் சேர்ந்துவரம் ஊக்கமாய்
இயற்கையே நீ என்ன இயக்கர்களின் பக்கமா?
அரக்கர்களுடன் வாழ்வது உனக்கு இன்பச்சொர்க்கமா?
தமிழனை தின்று தின்றே கொழுத்தாய்
எம்மைத் தேடித்தேடியே அழித்தாய்
நம்பி நம்பியே நாம் இன்றுவரை கெட்டோம்
தன்நம்பிக்கை கொண்டு புதுவுலகு படைப்போம்
வந்தவழி பார்த்து திரும்பி நீயும் போய்விடு – நாம்
சொந்தவழி கண்டபின் வந்து முகத்தைக் காட்டிடு