திருமதி மீனாட்சியம்மையார் எழுதிய அனைத்தும், குறிப்பாக பத்திரிகைகளில் அவர் தமது சொந்தப் பெயரிலும் புனைப்பெயரிலும் (இதுவரை எந்த தகவலும் இல்லை) எழுதிய கட்டுரைகள் யாவும் இதுவரை நூலுருப்பெறவில்லை. மீனாட்சியம்மாள் எழுதிய நூல்களாவன ‘இந்தியத் தொழிலாளர் துயரச்சிந்து – இரண்டு பாகங்கள்(1931-சகோதரி அச்சகம், அட்டன்), இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை (1940-கணேஸ் பிரஸ், அட்டன்). இரண்டாவது நூல் பெண்கள் ஆய்வு வட்டத்தினரால் மறுப்பதிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது தொகுப்பே இன்றைய ஆய்வாளர்களின் கவனத்தைப் பெற்றது. இதனை ஆதாரமாக கொண்டே மீனாட்சியம்மாளின் ஆளுமையை மதிப்பிட முனைந்துள்ளனர். இவர்களின் ஆய்வுகள் கவனத்தில் கொள்ளத்தக்கது என்ற போதினும் அம்மையாரை வெறும் கவிஞராக மட்டுமே கண்டு அமைதி காணும் மயக்கம் தொடர்ந்தும் நிலவி வருவதை அவ்வெழுத்துக்கள் எடுத்துக் காட்டுகின்றன. சாரல் நாடன், சித்திரலேகா மௌனகுரு, லெனின் மதிவானம் முதலானோர் மீனாட்சியம்மாள் பற்றி எழுதிய கட்டுரைகளில் தேசபக்தன் பத்திரிகையில் வெளிவந்த அம்மையாரின் கட்டுரைகளை ஆதாரமாகக் கொண்டு எழுதியிருந்தனர். இவ்வம்சம் அவரைக் கவிஞராகப் பார்ப்பதற்கு அப்பால் தொழிற் சங்கவாதியாக, அரசியல்வாதியாக, பத்திரிகையாளராக, சமூக செயற்பாட்டாளராக பார்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நிற்கின்றன. அண்மையில் இக்கட்டுரையாசிரியர் மீனாட்சியம்மையார் தேசபக்தனில் எழுதிய கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றினைத் தொகுத்து நூலாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். இத்தொகுப்பு மீனாட்சியம்மாள் பற்றிய ஆய்வுகளுக்குச் சிறப்பான பங்களிப்பினை நல்கும் என்ற போதினும் இதுவே முடிந்த முடிபாகவும் ஆகிவிடாது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
இவற்றை ஆதாரமாக கொண்டு நோக்குகின்ற போது மீனாட்சியம்மாளின் முழு ஆளுமையையும் வெளிக்கொணரத்தக்க வகையிலாக பன்முக ஆய்வொன்று இதுவரை வெளிவராமை துரதிஸ்டவசமானதொன்றே. நடேசய்யரின் பங்களிப்புகள் வெளிக் கொணரப்பட்ட அளவு அம்மையாரின் பங்களிப்பு வெளிக் கொணரப்படவில்லை என்றே கூற வேண்டும். அந்தவகையில் மீனாட்சியம்மாள் பற்றிய ஆய்வுகள் தொடக்கநிலையில் கூட இல்லை என்றே கூறத் தோன்றுகின்றது. எனவே மீனாட்சியம்மாள் மறைக்கப்பட்ட ஆளுமையாகவே உள்ளார். இது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். அத்தகைய தேடுதல் முயற்சியும் சிந்தனையும் மறைக்கப்பட்ட மறைக்கப்பட்ட பல ஆளுமைகளை வெளிக் கொணருவதற்கான உந்துதலாகவும் அமையும்.
அரசியல், பொருளாதாரத் துறையில் எவ்வாறு ஆதிக்க சக்திகளின் ஆதிக்கம் நிலவுகின்றதோ அவ்வாறே சிந்தனைத்துறையிலும் பண்பாட்டுத் துறையிலும் அதன் பாதிப்பினைக் காணலாம். ஓவ்வொரு காலகட்டத்திலும் ஆதிக்கச் சிந்தனைகள் பொருளாதார அரசியல் பலத்தினைக் கொண்டு அவை தமது சிந்தனைகளை: பண்பாடுகளை மக்கள் மத்தியில் நிலைநிறுத்தி வருகின்றனர். மனித வரலாற்றில் தனிச்சொத்துரிமை தோன்றிய பின்னர் வர்க்கச் சமுதாயத்தில் அதன் பக்க விளைவுகளான சுரண்டலும் வர்க்க முரண்பாடுகளும் தோன்றி சிந்தனைத் துறையிலும் தாக்கம் செலுத்தியது. அதிகார வர்க்கம் பொருளாதாரப் பலத்தினைக் கொண்டு தமக்குச் சாதகமான கல்வெட்டுகளையோ சாசனங்களையோ ஆக்கினார்கள். இந்தச் சூழலில் இலக்கிய கர்த்தாவோ, அரசியல் பொருளாதாரச் சிந்தனையாளனோ தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் அரச- பொருள் படைத்தவர்களின் நிழலில் நின்று தமது இலக்கிய அரசியல் பணிகளை முன்னெடுத்தனர். இது தொடர்பில் சுவாரசியமான கதையொன்றும் உள்ளது. சங்க காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கதையொன்றில் நாட்டில் போர் தலை விரித்தாட அதனையொட்டிய ஊர்கள் எரியூட்டப்பட்டு அதன் வெளிச்சத்தில் கொள்ளையடிக்கப்படுகின்றது. அரண்மனைகளை அலங்கரிப்பதற்காக குடும்பக் கொழுந்துகளையெல்லாம் இழுத்து செல்லும் காட்சிகள் ஒருபுறம்: கூடவே பிள்ளைகளின் கதறல்கள், விதவைகளின்- மக்களின் மரண ஓலங்கள:; இவை யாவற்றையும் கண்ணால் பார்க்க முடியாத செவியால் கேட்க முடியாத புலவனொருவன் ஏனையோரையும் கூட்டி மன்னனின் மனைவியின் கூந்தலில் நறுமணம் உண்டா இல்லையா என தமிழாராய்ச்சி செய்துக் கொண்டிருந்தானாம். இன்றுவரை இவ்வராய்ச்சிகள் வௌ;வேறுவடிவங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு மாறாகப் பொது மக்கள் சார்பான எழுத்தாளர்களும் கலைஞர்களும் காலத்திற்குக் காலம் தோன்றாமலில்லை. கல்வெட்டுகளும் சாசனங்களும் மக்களுக்கு எதிரானவையாகத் தோன்றிய போது அவற்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து உடைத்தும் உள்ளார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் எத்தனையோ எழுத்தாளர்கள் கலைஞர்கள் பத்திரிகையாளர்கள் படு கொலைசெய்யப்பட்டுள்ளார்கள். இந்தப் பின்னனியில் தான் மனித குலத்தின் பயனங்கள் தொடர்கின்றன, ஓர் இடைவிடாத போராட்டமாய்..!
இத்தகைய புரிதலுடன் மக்கள் சார்பாகத் தமது வாழ்நாளை அர்ப்பணித்த ஆளுமைகள் குறித்து நோக்குகின்ற போது அவை வெறும் நாமம் மட்டுமல்ல. இயங்கு சக்திகளாகும். ஒவ்வொரு காலகட்டத்திலும் உழைக்கும் மக்கள் நலன்சார்ந்த பதாகைகளை உயர்த்திய அவர்களின் வெற்றிகள், சவால்கள், விருப்பு வெறுப்புகள், தோல்விகள் இன்னும் இது போன்ற எண்ணுக்கணக்கற்ற அனுபவங்கள் அடுத்த தலைமுறையினருக்கு ஆதர்சனமாக அமைந்திருக்கின்றன. இவ்விடத்தில் நாம் பிறிதொரு விடயம் குறித்தும் தெளிவு பெற வேண்டியுள்ளது. அதாவது இவ்வாளுமைகளின் வெற்றிகள் மட்டுமல்ல தேல்விகள் கூட அடுத்த தலைமுறையினருக்கு ஆதர்ஷனமாக அமைந்துள்ளன. இவ்வகையான ஆய்வுகளை ஆழமான-நுட்பமான- மார்க்சிய ஆய்வுகளின் ஊடாகவே வெளிக் கொணர முடியும்.
இலங்கையுடன் இந்தியாவை ஒப்பிட்டு நோக்குகின்றபோது சமூக ஆளுமைகள் ஓரளவு வெளிக் கொணரப்பட்டுள்ளன என்றே கூறத்தோன்றுகின்றது. பாரதி, அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், கோதாவரி பாருலேகர் முதலான ஆளுமைகள் பற்றிய தேடுதல்கள் இடம்பெற்றுள்ளன. இதனூடாகப் பல விடயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
அந்தவகையில்; மலையக ஆளுமைகள் குறித்து நோக்குகின்றபோது அது குறித்த தேடுதல் முயற்சிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்ற எண்ணமே தோன்றுகின்றது. மலையக சமூக வளர்ச்சியில் தாக்கம் செலுத்தியவர்களான கோ. நடேசய்யர், திருமதி மீனாட்சியம்மையார் அமரர்கள் கே. இராஜலிங்கம், சௌமிய மூர்த்தி தொண்டமான், அஸிஸ், இளஞ்செழியன், சி.வி வேலுப்பிள்ளை, வீ. கே. வெள்ளையன், வீ.ரி. தர்மலிங்கம் இன்னும் இது போன்ற ஆளுமைகள் குறித்த கனதியான ஆய்வுகள் இதுவரை தோன்றாமை பெரும் துரதிஸ்டமே. இவற்றுக்கு அப்பால் மலையக சமூகம் பற்றிய ஆய்வுகள் வெளிவந்திருப்பினும் அவை இவ்வாளுமைகள் குறித்து ஆழ்ந்த கரிசனைக் காட்டத் தவறிவிட்டன என்றேக் கூறத்தோன்றுகின்றது. அரசியல், கலை, இலக்கிய துறைகளில் காணப்படுகின்ற குழு இழுபறி நிலையும் இவ்வாளுமைகளை ஆய்வு செய்வதில் பல தடைகளை ஏற்படுத்தியுள்ளன. இது இவ்வாறிருக்க இன்று இவ்வாளுமைகள் படிப்படியாக மறக்கப்பட்டு வருகின்றன. மலையகத் தோட்டங்களில் மூத்த தலைமுறையைச் சேர்ந்த சிலர் வீட்டில் தான் அமரர் தொண்டமான் அவர்களின் படங்கள் காணப்படுகின்றன. அதுவும் மிக குறைவு.
இந்தச் சூழல் மலையகத்திற்கு மாத்திரம் உரித்தான ஒன்றல்ல. பொதுவாக நூல்ப் பதிப்பில் முக்கிய கவனமெடுத்து வந்த இலங்கையின் வடக்கில் கூட சில ஆளுமைகள் மறைக்கப்பட்டவையாகவே காணப்படுகி;ன்றன. நீர்வை பொன்னயன் அவர்களின் வழிகாட்டலுடன் இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம் ‘வடபுலத்து இடதுசாரி முன்னோடிகள்’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளனர்;. இந்நூலாக்க முயற்சியில் ஈடுப்பட்ட போது வட புலத்தைக் களமாகக் கொண்டு இயங்கிய சில இடதுசாரி முன்னோடிகள் குறித்த தகவல்களைப் பெறமுடியாது உள்ளது என நீர்வை பொன்னயன் இக்கட்;டுரையாசிரிடம் வேதனையோடு தெரிவித்துக்கொண்டார். திரு. அமிர்தலிங்கம், யாழ்ப்பாண மத்தியக் கல்லூhயில் ஆசிரியராக இருந்தவர். இராமசாமி ஐயர், எஸ். கே. கந்தையா இவ்விருவரும் தான்; ‘கம்யூனிட் கட்சி அறிக்கை’ என்ற நூலை முதன் முதலில் (இந்தியாவிலும் பூரணமாக மொழிமாற்றம் செய்திருக்கவில்லை) தமிழில் மொழிமாற்றம் செய்தவர்கள். காதர்; இன்னொரு இடசாரி இயக்க முன்னோடியாகத் திகழ்ந்தவர். இலங்கையில் இடதுசாரிகளால் முன்னெடுக்கப்பட்ட தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் கே. ஏ. சுப்பிரமணியம். இலங்கையின் வடபுலத்துச் சமுதாயச் சூழலை உணர்ந்து அதற்கேற்றவகையிலான போராட்டங்களை மார்க்சிய நிலைப்பாட்டில் நின்று முன்னெடுத்ததில் தோழர் கே.ஏ. சுப்ரமணியம் அவர்களுக்கு முக்கிய இடமுண்டு. அவர் பொறுத்து வெளிவந்த நினைவு மலர் அவருடைய பங்களிப்பைக் கூறினும் அது முழுமையடையவில்லை என்றே கூறவேண்டும். இவ்வாறே கிழக்கைத் தளமாகக் கொண்டு இயங்கிய சில இடதுசாரி முன்னோடிகள் ஆய்வுகளும் நம்மிடையே இல்லை. கேரளாவைச் சேர்ந்த தோழர் கே.வி. கிருஸ்ணக்குட்டி, சுபத்திரன், சாருமதி முதலானோர் குறித்த தேடல்கள்; இன்று அவசியமானவையாக இருக்கின்றன. இவ்வகையில் பார்க்கின்றபோது மானுட நலனுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட பல ஆளுமைகள் மறைக்கப்பட்டவையாகவே உள்ளன. இந்தப் புரிதலோடு மீனாட்சியம்மாள் பற்றிய தேடுதல்களை முன்னெடுக்கின்ற போது பின்வரும் அம்சங்கள் கவனத்தில் கொள்ளத்தக்கவையாகக் காணப்படுகின்றன.
1.மலையக ஆளுமைகள் பற்றி முழுமையாக விபரப் பட்டியலோ, சுருக்கமான வாழ்க்கைக் குறிப்புகளோ பூரணத்துவமாக இல்லை.
2.மலையக எழுத்தாளர்களின் படைப்புகளில் அனேகமானவை நூலுருப் பெறவில்லை. மூத்த எழுத்தாளர் பலரின் ஆக்கங்கள் கூட இதுவரை நூலுருப் பெறவில்லை. அவ்வாறு நூலுருப் பெற்ற படைப்புகளைக் கூட இன்று பெற முடியாத நிலை காணப்படுகின்றன.
3.மலையக ஆளுமைகள் தொடர்பாகச் சேகரித்து வைத்திருந்த பல ஆக்கங்கள், ஆய்வுகள் என்பன மலையகத்தில் இடம் பெற்ற இன வன்முறைகளின் போது அழிந்து விட்டன.
4.மலையக ஆளுமைகள்; தொடர்பாகச் சேகரித்து வைத்துள்ள பத்திரிகைத் துணுக்குகளை தேடிப் பெறுவதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள்.
5.மலையகப் படைப்புகள், எழுத்தாளர்களின் விபரங்களை உள்ளடக்கிய ஆவணக் காப்பகம் ஒன்றில்லாமை.
6.மலையகத்திலுள்ள பெரும்பாலான வாசிகசாலைகள் ரமணிச்சந்திரன், பாலகுமாரன் போன்றோர்களின் நூல்களினால் நிரப்பப்பட்டுள்ளன. மலையகம் சார்ந்த நூல்களை இங்கு பெற முடியாது உள்ளது.
7.மலையக அரசியல், சமூக, இலக்கிய வரலாறு பற்றிய பூரணத்துவமான ஆய்வு நூல் ஒன்று இதுவரை காலமும் எழுதப் படவில்லை.
இந்நிலையில் மீனாட்சியம்மாள் பற்றிய தேடுதலுக்கு ஏற்ற இடமாக இலங்கையின் தேசிய சுவடிகள் திணைக்களம் மாத்திரமே அமைந்து காணப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தமட்டில் எழுத்தாளர்கள் ஆய்வு அறிஞர்கள் தே.சு.தி உபயோகிக்கின்ற நிலை மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது. தே.சு.தி.த்தைப் பிரயோகித்து கனதியான தகவல்களை வெளிக் கொணர்ந்ததில் சாரல் நாடனுக்கு முக்கிய இடமுண்டு. இத்தகைய அனுபவங்களுடன் மீனாட்சியம்மாள் குறித்த தேடுதலை இக்கட்டுரையாசிரியர் மேற்கொண்ட போது ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களையும் இவ்விடத்தில் பகிர்ந்து கொள்வதும் அவசியமானதாகும்.
தே.சு.தி. இல் தமிழ் அலுவலகர்கள்(அடிநிலை ஊழியர்கள் கூட) இல்லாத நிலையில் தமிழறிவையோ ஆங்கில அறிவையோ மட்டும் அறிந்து வைத்திருப்பவரால் – சில சமயங்களில் சிறிதளவு சிங்கள அறிவுடையவர்களாலும் இத்திணைக்களத்தில் தொழில் புரியும் அலுவலகர்களுடன் கலந்துரையாடி ஆவணங்களைப் பெற முடியாத நிலை காணப்படுகின்றது. சட்டத்திட்டங்களும் கடுமையானதாக இருப்பதனால் ஆய்வு அல்லது தகவல்களைத் தொகுக்கும் ஆர்வம் கொண்டவர்கள் யாவரும்; இந்நிறுவனத்திற்குள் செல்ல முடியாத நிலைக் காணப்படுகின்றது. அத்துடன் இங்குள்ள ஆவணங்கள் மிகவும் பழுதடைந்து எளிதில் சேதப்பட்டு அழிந்து போகும் நிலையில் காணப்படுகின்றன. எனவே அவற்றை வாசிக்கின்ற போதும் அவற்றைப் பிரதியெடுக்கும் போது காணப்படுகின்ற தெளிவின்மைகள் காரணமாகவும் உரிய தகவல்களைத் தேடிப் பெற முடியாத நிலை உள்ளது. இதற்கு அப்பால் இத்துறையில் தேடலையும் ஆய்வுகளையும் மேற் கொண்டவர்கள் தங்கள் மீது கொண்ட அளவுக்கதிகமான காதல் காரணமாக, தமக்குப் பின் இத்துறையில் வேறுயாரும் ஆய்வுகளைத் தொடரக் கூடாது என்ற எண்ணத்தில் பழுதடைந்திருக்கின்ற அவ் ஆவனங்களை சிதைத்து, அதன் பக்கங்களை மாற்றி அல்லது சில பக்கங்களே இல்லாதளவிற்கு அவற்றை மறைத்து விடுகின்ற பணியினையும் செய்திருக்கின்றார்கள். மீனாட்சியம்மாள் போன்ற மறைக்கப்பட்ட ஆளுமைகள் தொடர்பில் ஆவனங்களைப் பெறக் கூடியதாக உள்ள ஒரே இடமான தே.சு.தி;. இலும் இவ்வாவணங்களைப் பெற முடியாதுள்ளது.
நடேசய்யர் இலங்கைக்குக் குடியேறிய பின்னர் ஒன்பது தமிழ் நூல்களையும் இரண்டு ஆங்கில நூல்களையும் எழுதிப் பிரசுரித்தார். இவைகளுள் ‘அழகிய இலங்கை’ என்ற நூல் இந்தியாவில் அச்சிடப்பட்டது. மலையகத்தில் அட்டன் நகரில் கணேஸ் பிரஸ், சகோதரி அச்சகம் என்ற இரு நிறுவனங்களை ஏற்படுத்தி, தனது மனைவியை வெளியிட்டாளராகக் கொண்டு இவைகளை இவர் வெளியிட்டிருந்தார். இவைகளுள் ‘நரேந்திரபதியின் நரக வாழ்க்கை’ என்ற நூல் 226 பக்கங்களில் இரண்டு ரூபா விலைக்கு அச்சிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 1933 இல் வெளியான இந்த நூல் பிரசுர துறையில் ஒரு சாதனையாகும் (சாரல் நாடன் -1997), மலையகம் வளர்த்த தமிழ், துரைவி வெளியீட்டகம்,கொழும்பு,ப.44) இவ்வாறு வெளிவந்த நூல்கள் யாவற்றையும் இப்போது பெற முடியாதுள்ளது. மேலும் இது தொடர்பான தகவல் தெரிந்தவர்களைத் தேடியறிவதும் சிரமமாக உள்ளது. அவர்களில் சிலர் இன்று மறைந்து விட்டமை இன்னொரு துரதிஸ்டவசமான நிகழ்வாகும். அம்மையாரின் புனை பெயர்கள் பற்றிய எந்த விதமான தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை. கைலாசபதி, செ.கணேசலிங்கம் முதலானோரின் ஆக்கங்கள் வெளிவந்த பிரசுரங்கள், காலம், வெளியீட்டாளர்கள்- சில சமயங்களில் ஆக்கங்கள், நூல்கள் பற்றிய தகவல்களுடன் நூலகவியலாளர் என். செல்வராஜா தொகுத்துள்ளார். இவை சமூக ஆளுமைகள் பற்றிய ஆய்வுகளுக்குப் பெரிதும் உதவியுளளன. மீனாட்சியம்மாள் உட்பட மலையக எழுத்தாளர்களின் எழுத்துக்கள் இவ்வாறு பட்டியற் படுத்தப்படவில்லை.
மீனாட்சியம்மாள் தேசபக்தன் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைகள் அம்மையாரின் எண்ணங்களையும் கருத்துக்களையும் பிரதிபலிக்கின்றன. அந்தக் கால அரசியல்- தொழிற்சங்க நடைமுறைகளையும் அரசியல் தலைவர்களின் ஒழுக்கத்தையும், நேர்மையையும் படம் பிடித்துக் காட்டுவனவாக அமைந்துள்ளன. மற்றும் சமூகத்தில் பெண்களுக்குரிய ஸ்தானம் எத்தகையது என்பதையும் பெரியாங்கங்காணி சம்மேளனத்துக்கு எதிரான போராட்டங்கள், தொழிலாளர் நலனசார்ந்த முன்னெடுப்புகள், சர்வசன வாக்குரிமை பற்றிய அம்மையாரின் பார்வையைத் தௌ;ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. அவர் தேசபக்தன் பத்திரிகை ஆசிரியராகவும் சில காலம் கடமையாற்றியிருந்தார். பத்திரிகையாளருக்குரிய நேர்மை, அர்ப்பணிப்பு, திறமை எவ்வாறு அம்மையாரிடம் காணப்பட்டது என்பதையும் இவ்வாறான தேடுதல்களின் மூலமாக அறியக் கூடியதாக உள்ளது.
சமூக ஆளுமைகள் குறித்த தேடுதலை மேற்கொள்கின்ற போது கவனத்தில் கொள்ளத்தக்க விடயங்கள் பற்றியும் இவ்விடத்தில் சிந்தித்தல் அவசியமானதாகின்றது.
அம்மையாரின் ஆக்கங்களைத் தொகுப்பதற்கு முன்னர் அவரது புனைபெயர்கள்(இருந்திருப்பின்),அவரது ஆக்கங்கள் வெளிவந்த பிரசுரங்கள் பற்றிய தேடுதல் அவசியமானதும் பயன்மிக்கதுமாகும். அதன் பின்னணியில் அவரது ஆக்கங்களைத் தொகுப்பதற்கான ‘மீனாட்சியம்மாள் பதிப்புக் குழு’ ஒன்றினை அமைத்தல் காலத்தின் தேவையாகும். தனியொருவரின் முயற்சியை விட கூட்டு முயற்சி பயன்மிக்கதாகவும் பணியை இலகுபடுத்துவதாகவும் அமையும். இத்துறையில் ஈடுபாடு கொண்டுள்ள ஆர்வலர்கள், அறிஞர்கள் ஒன்று கூடி இம் முயற்சியினை மேற்கொள்ளவது சிறப்பானது. 1950 ஆம் ஆண்டு சென்னை அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ‘ பாரதி பதிப்புக் குழு’ பாரதி பற்றிய ஆக்கங்களை தொகுப்பதில் பங்காற்றியுள்ளமையை நாம் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
அந்தவகையில் அம்மையாரின் ஆக்கங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு அடக்கத் தொகுப்பொன்று வெளிவருகின்ற போது காலக் குறிப்பும் பின்குறிப்பும் அவசியமானதொன்றாகும். ஒரு ஆளுமையின் ஆத்ம விகர்சிப்பைப் புரிந்துக் கொள்வதற்கும் காலச் சூழலில் வைத்து அவ்வாளுமைகளை ஆய்வு செய்வதற்கும் அத்தகைய பதிப்புகள் அவசியமானவையாகின்றன. பதிப்பு முயற்சிகளின் போது முந்திய பதிப்புகள் மட்டுமன்றி கையெழுத்து பிரதிகள் வெளிவந்த பத்திரிகைத் துணுக்குகள் என்பனவும் கவனத்திலெடுக்கப்பட வேண்டும். மீனாட்சியம்மையாரின் படைப்புகளைப் பொறுத்த மட்டில் கையெழுத்துப் பிரதிகளைப் பெறுவது சாத்திமற்றதாகவே உள்ளது. ஆனால் ஏனைய விடயங்களைக் கவனத்தில் கொள்ளல் முக்கியமானதாகும்.
மீனாட்சியம்மாள் போன்ற ஆற்றல் மிக்க ஆளுமைகளின் எழுத்துக்கள் பல நிலைகளில் பயன்படுவன. எனவே பல வகையான பதிப்புகள் அவசியமாகின்றன. இவை யாவற்றுக்கும் மூலாதாரமான ‘சுத்த பதிப்பு’ ஒன்று முதலிலே வரவேண்டியது மிக மிக அவசியமானதாகும்.மேலும் பல வகையான பதிப்புகளும் வேண்டப்படுவனவாகும். ஆராய்சியாளருக்குப் பெரிதும் பயன்படும் வகையிலான கால அடைவுப் பதிப்புகள், பாடபேத வளப் பதிப்புகள், பொருளடிப்படையிலான பதிப்புகள், இலக்கிய சுவைஞர்களுக்கான தேர்ந்தெடுத்த பதிப்புகள்- பொதுமக்களுக்கு ஏற்றவாறு பொருள் விளங்கும் படியிலான பதிப்புகள் வெளி வரவேண்டியது அவசியமானதாகும். இப்பதிப்புகளைத் தொடர்ந்து சொல்லடைவு, அகராதிகள் போன்ற அடிப்படை நூல்களை ஆக்கலாம்.
இவ்வாறு புதிதாய்க் கண்டெடுக்கப்படும் மீனாட்சியம்மாளின் படைப்புகள் தக்கபடி பரிசோதிக்கப்பட்டும், அவற்றின் நம்பகத் தன்மை ஐயத்திற்கிடமின்றி நிறுவப்பட்டும் ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும். வரலாற்றுச் சுருக்கங்கள், குறிப்புரைகள், சில முக்கிய தகவல்கள் என்றவகையில், சில தகவல்கள், பயனுள்ள சங்கதிகளையும், செய்திகளையும் தொகுத்தளித்தலும் வேண்டப்படுவதாகும். இவ்விடத்தில் பிறிதொரு முக்கிய விடயம் பற்றிச் சற்று அழுத்திக் கூற வேண்டியுள்ளது. ‘பழந்தமிழ் இலக்கியங்களைப்பதிப்பிக்கும் முன்னோடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில் சி. வை. தாமோதிரம்பிள்ளை, உ.வே. சாமிநாத ஐயர் முதலியோருக்கே பழந்தமிழ் நூல்கள் சிலவற்றின் பெயர்கள் சரிவரத் தெரியாத நிலையிலே, சில தமிழ் ‘ஆர்வலர்கள்’ வினோதமான பெயர்களுடன் சிலபல ‘பழந் தமிழ்’ நூற் பிரதிகளைப் பற்றிப் பேசலாயினர். உதாரணமாக த. மு. சொர்ணம் பிள்ளை என்பவர் ‘இன்னிலை’, ‘ஊசிமுறி’ முதலிய நூல்களைத் தாமே இயற்றிப் பழந்தமிழ் நூல்கள் எனப் பறைசாற்றினார். பிற்பட்ட ஆராய்ச்சிகளினால் இப்பொய்மை ஐயத்திற்கிடமின்றி அம்பலப்படுத்தப்பட்டதெனினும், இலக்கிய உலகிலே சிலகாலம் குழப்பத்தையும் மயக்கத்தையும் உண்டாக்கியது என்பதில் ஐயமில்லை. (கைலாசபதி.க. 1974, இலக்கிய சிந்தனை).
இந்நிலையில் மீனாட்சியம்மையாரின் படைப்புகளைத் தொகுக்கின்ற போதும் மூலப் பிரதிகளை மிகக் கவனமாகப் பரிசீலனை செய்ய வேண்டும். மூலங்களை விபரிக்கும் மனப்பாங்கும் அவசியமானதாகும். எவ்வித தகவல்களும் இன்றி மொட்டையாக ஆக்கங்களைப் பிரசுரிப்பது பல மயக்கங்களையும் குழப்பங்களையும் தோற்றுவிக்கும். மேலும் இத்தகைய பதிப்புகளை மேற்கொள்கின்ற போது ஏற்படக் கூடிய முக்கிய தவறுகள் தான் அப் பதிப்புகளில் அடங்கியுள்ள ஆக்கங்களைப் பற்றிப் பல்வேறு கோணங்களிலிருந்தும் நோக்குநிலைகளிலிருந்தும் பலர் கண்டு காட்டியிருக்கின்றனர். இவ்வகையான பாரதி பற்றிய ஆய்வுகளில் பாரதியின் சொற்களையே ஆதாரமாகக் கொண்டு தமது கருத்துக்களைக் கூறியுள்ளனர். அச்சொற்கள் ஐயத்திற்கிடமானவை என்றால் அதன் முடிவுகள் என்னவாகும்?
‘ ஒரு சிறு உதாரணம். முப்பெரும் பாடல்களில் ஒன்று குயில் பற்றியது. இப்பாடலின் தலைப்பு குயில், குயில் பாட்டு, குயிலி, குயிலின் கதை, குயிற்பாட்டு என்றெல்லாம் வேறுப்படப் பல்வேறு பதிப்புகளிலும் குறிக்கப்பட்டிருத்தலைக் காணலாம். பாரதியார் குறித்த தலைப்பு யாது? ‘குயிற் பாட்டு’ என்ற தொடர் கவிஞரை ‘இலக்கண சுத்தமான’ எழுத்தாளராய்க் காட்டும்: ‘குயில் பாட்டு’ என்ற தொடர் கவிஞரை ‘இலகு தமிழ்’ எழுத்தாளராய்க் காட்டும். எது சரி? பெரும்பாலான மலிவுப்பதிப்பு நூல்களில் சந்திபிரித்தே பாரதியார் கவிதைகள் அச்சிடப்பட்டுள்ளன. இதனாற் பாரதியாரது மூலப் பாடத்தைத் திடமாக அறியும் வாய்ப்பு பலருக்குக் கிடைப்பதில்லை.
மறைக்கப்பட்ட ஆளுமைகளின் படைப்புகளைத் தொகுக்கின்ற போது இத்தகைய குறைபாடுகள் மீண்டும் மீண்டும் தலைக்காட்டாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். பெரும் பாலும் இத்தகைய பதிப்புகளில் ஏற்படுகின்ற தவறுகள் தற்செயற், குறிக்கோட் பிழைகளால் ஏற்படுகின்ற குழப்பங்களாகும். தற்செயற் பிழை என்பது தற்செயலாக ஏற்படுகின்ற எழுத்துப் பிழைகள், அச்சுப் பிழைகளால் ஏற்படுகின்றன. குறிக்கோட் பிழை என்பது ஆசிரியர் இவ்வாறுதான் எழுதியிருப்பார் என்ற நோக்கில் எழுதுவதாகும். உதாரணமாக கோ . நடேசய்யரின்
‘இந்து மக்கள்
சிந்தும் வேர்வை
ரெத்தக்காசு தானே – அடா
இரவு பகல்
உறக்கமின்றி
ஏய்த்துப் பறிக்கலாமா?’
என வரும் கவிதையில் ‘இந்து’ என்ற சொல்லுக்கு பதிலாக ‘இந்த’ எனும் சொல்லை அந்தனி ஜீவா தமது கட்டுரைகளிலும் தாம் பதித்த சஞ்சிகைகளின் அட்டைகளிலும் பிரசுரிந்திருந்தார். இதனை அடியொட்டி எழுதிய ஆய்வாளர்கள் மூல கவிதையைப் பார்ப்பதற்கு பதிலாக அந்தனி ஜீவாவின் பதிப்பையே ஆதாரமாக கொண்டனர். சில வேளைகளில் இந்தத் தவறு தற்செயற் பிழையாக இருந்திருக்கலாம். ஆனால் அவை குறிக்கோட் பிழையாகவே ஆய்வுகளில் இடம் பெற்று வந்திருக்கின்றன. இவ்விடத்தில் பின்வரும் விடயம் தொடர்பிலும் கவனமெடுக்க வேண்டியுள்ளது:’ நடேசய்யர் அவர்களிடம் இந்து சமயம் சார்ந்த எதுகை மோனை சார்ந்த சொற்பிரயோகமாகவே இதனைக் கொள்ள வேண்டியுள்ளது. இந்துக்கள் பெரும்பான்மையினர் என்றவகையில் கையாளப்பட்டாலும் இந்து என்ற சொற்பிரயோகம் இந்தியாவைச் சேர்ந்த மக்க்ள என்போருக் குரியது. பாரதி கூட இந்துக் கிறிஸ்தவர், இந்து முஸ்லிம் என்ற பிரயோகத்தை இப்பொருளில் பாவித்துள்ளார். மலையக மக்களின் நலன் குறித்த ஆழ்ந்த அக்கறையே இக்கவிதையில் முனைப்பு பெற்றிருக்கின்றது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது (லெனின் மதிவானம் (2010), மலையகம் தேசியம் சர்வதேசம், குமரன் புத்தக இல்லம், கொழும்;பு).
மீனாட்சியம்மாள் போன்ற சமூக ஆளுமைகளின் எழுத்துக்கள், அவரது சமூகப் பங்களிப்பு பற்றிய ஆய்வுகள் பல நிலைகளில் பயன்படுத்தப்படுவன. எனவே பல வகையான பதிப்புகளும் அவை பற்றிய ஆய்வுகளும் வேண்டப்படுகின்றன. இதுவரை நடந்த ஆக்கபூர்வமான முயற்சிகளை உறுதிப்படுத்தி இனிமேலும் முன்னேறுவது நமது கடமை. இதற்கு மீனாட்சியம்மாளின் ஆக்கங்கள் நேர்மையாகவும் விஞ்ஞான பூர்வமானதாகவும் பதிப்பித்து வெளியிடல் முதல் தேவையாகும்.