சமீபத்தில் தமிழ் நாட்டுக்கு செல்லும்; இலங்கையர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக கூறும் இலங்கை வெளிநாட்டு அமைச்சு, இலங்கை பிரஜைகள் தங்களது பாதுகாப்பை மனதில் கொண்டு, இனி மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் நாடுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனக் கூறியிருக்கிறது.
தமிழ்நாட்டில் 184 இலங்கையர்கள் பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு செல்வதில் பிரச்சினை ஏதும் இல்லை எனவும் அது கூறியிருக்கிறது.
சமீப காலங்களில் தமிழ் நாட்டுக்குச் சென்ற இலங்கைச் சுற்றுலா பயணிகள், யாத்ரிகர்கள், விளையாட்டு மற்றும் கலாசார துறை தொடர்பானவர்கள், தொழில் முறை பயிற்சிக்காக செல்பவர்கள் என பலதரப்பட்டவர்கள் இது போன்ற அச்சுறுத்துலுக்கு ஆளாவதாக வெளிநாட்டு அமைச்சு கூறியிருக்கிறது.
அதே வேளை இந்திய உளவுத்துறை ஈழத் தமிழர் பிரச்சனையில் தலையிடுகிறதா என்ற சந்தேகங்கள் பரவலாக எழுந்துள்ளது. ஈழத் தமிழர் பிரச்சனையில் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பெரும் தலைகளின் திடீர்த் தலையீடும், தமிழ் இனவாதிகளின் தடையற்ற வளர்ச்சியும் 80 களின் ஆரம்பத்தில் ஈழப் பிரச்சனையில் இந்தியத் தலையீட்டை நினைவுபடுத்துவதாக அமைகிறது என பலர் தெரிவிக்கின்றனர். இலங்கையில் பௌத்த சிங்கள பெருந்தேசிய பாசிஸ்டுக்களுக்கு எதிரான போராட்ட சூழல் உருவாகிவரும் நிலையில் இந்திய உளவுத்துறை தனது கட்டுப்பாட்டிற்குள்ளான எதிர்ப்பு இயக்கங்களை உருவாக்கி மீண்டும் முன்னைப் போன்ற சீரழிவுகளையும் அவலங்களையும் ஏற்படுத்தலாம் என சந்தேகங்கள் எழுவதாக தமிழ் நாட்டிலிருந்து கருத்துத் தெரிவிக்கவல்ல ஒருவர் தெரிவித்தார்.