நடப்பு ஆண்டில் தடைபட்டுள்ள முதுநிலை மருத்துவ நீட் கலந்தாய்வை உடனடியாக நடத்தி, மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்துரு சூட் மற்றும் போபன்னா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது 10% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டில் நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி தந்தது. இதன்மூலம், இந்த ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் கலந்தாய்வும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் சாசனத்தின்படி அனுமதிக்கப்பட்டுள்ள 27% இட ஒதுக்கீடு, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசு மட்டுமன்றி தமிழக அரசும் இந்த 27% இட ஒதுக்கீட்டுக்காக குரல் கொடுத்துவந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கை நேற்றைய தினமே விசாரித்திருந்த நீதிபதிகள், இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். முன்னதாக அஜய் புஷன் பாண்டே கமிட்டியில் 10% இட ஒதுக்கீடு தொடர்பாக பரிந்துரைகள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுகுறித்த முதற்கட்ட விசாரணை இன்று பிற்பகலுக்கு மேல் நடக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து விரிவான விசாரணை மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் விசாரிக்கப்படும் என தெரிகிறது.இனி அடுத்தடுத்த நாள்களில் கலந்தாய்வு தேதி தொடர்பான விவரங்கள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 10% இட ஒதுக்கீடு குறித்து மார்ச் மூன்றாவது வாரத்தில் விசாரிக்கப்படும் என தெரிகிறது.