
இலங்கையில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின் பலர் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் மூலமே கலாநிதி மன்மோகன் சிங்கைப் படுகொலை செய்யும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக இந்தியப் புலனாய்வுத்துறை கண்டுபிடித்துள்ளது.
மீண்டும் ஒருங்கிணைவதற்கு முயற்சிக்கும் விடுதலைப் புலிகளின் அமைப்பு, இந்தியாவின் முக்கிய தலைவர்களைக் குறி வைத்து தாக்குதல்களை மேற்கொள்ளும் திட்டங்களைக் கொண்டிருப்பதாகவும் இந்தியப் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.
குறிப்பாக இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங், இந்திய உள்துறை அமைச்சர் பீ. சிதம்பரம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி ஆகியோரை இலக்கு வைத்துத் தாக்குதல்களை மேற்கொள்வது அவர்களின் நோக்கமாக இருப்பதாக டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை தெரிவிக்கின்றது.
இலங்கை இராணுவத்தினரிடம் தோல்வியடைந்த நிலையில் இந்தியாவுக்குத் தப்பி வந்திருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்களே மீண்டும் ஒருங்கிணைந்து இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்ளும் திட்டங்களை வகுப்பதாக புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
1991ம் ஆண்டு தமிழ்நாட்டின் ஸ்ரீ பெரும்புதூரில் வைத்து முன்னை நாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்ததும் புலிகள் அமைப்பினர் தான் என்பதால், தற்போது இந்தியாவில் மீளிணைய முயற்சிக்கும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்து கடும் அவதானமாக இருக்க வேண்டும் என்று இந்தியப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.
புலிகளினால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து முக்கிய பிரமுகர்களை அறிவுறுத்தியுள்ள இந்தியப் புலனாய்வுத்துறை, அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பாதுகாப்புத் தரப்பினரை எச்சரித்துள்ளது.
எதிர்வரும் மாதமளவில் கலாநிதி மன்மோகன் சிங் தமிழ்நாட்டில் சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் தொடர்பில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று புலனாய்வு அமைப்புக்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அற்றுப் போயுள்ள சூழல் அனைவரும் அறிந்ததே. தவிர, புலிகளின் ஒரு பகுதி இலங்கை அரசாங்கத்தாலும், இன்னொரு பகுதி இந்திய ஐரோப்பிய அரச அதிகாரங்களாலும் உள்வங்கப்பட்டுள்ளது. ஆக, இந்தியப் புலனாய்வுத் துறையின் இக் கருத்து உள்நோக்கங்களுக்கு உட்பட்டதாக அமைந்திருக்கலாம் என சந்தேகம் கொள்ள வாய்ப்புண்டு.
தமிழ் நாட்டில் உருவாகிவரும் தேசியவாத அரசியலை அழிப்பதற்கான இந்திய உளவுத்துறையின் முன்னேற்ப்பாடுகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிடுகின்றனர்.
இலங்கையில் இந்திய ஆதரவுடன் நடைபெற்ற இனப்படுகொலையின் பின்னர், கஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவு நிகழ்வுகள் ஏனைய மாநிலங்களை விட தமிழ் நாட்டிலெயே அதிகமாக நடைபெற்றமை இங்கு குறிப்பிடத் தக்கது.