Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மன்னாரில் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இராணுவம்!

மன்னார் மடு வீதிச் சந்தியில் இராணுவத்தினரால் பெரிய உணவகம் ஒன்று திறக்கப்பட்டு, அதற்கு ‘மக்கள் உணவகம்’ எனப் பெயரிடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. இதனால் அப்பிரதேசத்து சிறிய உணவு விடுதிகளை நடத்தும் மக்கள் தமது வாழ்வாதாரத்தையே இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

இது தொடர்பாக அம்மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த எட்டு வருடங்களாக இராணுவத்தினர் இச்சந்தியில் ‘மக்கள் உணவகம்’ என்றபெயரில் இவ்வுணவகத்தை நடத்தி வருகின்றனர். இவ்வுணவகத்தில் எமது கடைகளை விட உணவுகள் மலிவு விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

இதனால் எமது கடைகளுக்கு மக்கள் உணவு உண்ண வருவதில்லை. இதனால் எங்களது இரண்டுகடைகள் மூடப்பட்டுவிட்டன எனத் தெரிவித்துள்ளதுடன், சம்பந்தப்பட்டவர்கள் இதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளனர்.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு மாகாணத்தில் ஏ9 வீதியோரங்களில் இராணுவம் உணவகங்களை நடத்தி வருமானம் ஈட்டி வருகின்றது. அத்துடன், நகர்ப்புறங்களில் தையலகம், முடி திருத்தும் கடைகள் என பலவற்றை நிறுவி மக்களின் கடைகளைவிட அவர்களது கடைகளில் விலைகளைக் குறைத்து தொழில் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் மீது இராணுவத்தினரால் மீண்டும் பொருளாதாரச் சுமை ஏற்றப்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய அரசாங்கம், மீண்டும் மீண்டும் இராணுவ இருப்பைத் தக்கவைக்கும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகின்றது.

Exit mobile version