காஸாவில் குண்டுமழை பொழிந்து பலஸ்தீனியர்கள் அழிக்க்ப்பட்ட போது வெந்து
கொலைகளை நியாயம் கற்பிக்கும் குரூரமான வன்முறைக் கலாசாரத்திற்கு நியாயம் கற்பிக்கும் இந்தக் ‘மனிதம் செத்துப் போன ‘ கூட்டங்கள், மக்களின் பிணங்களின் மேல் ஜனநாயக சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்ப குருதி தோய்ந்த கரங்களோடு காத்திருக்கிறார்கள். குண்டடிபட்டுச் செத்துப் போன தாயைத் தேடியலையும் காயம் பட்ட பச்சைக் குழந்தை பேரின வாதப் பசியோடலையும் இராணுவத்திற்கு இன்னொரு எதிர்காலத் தமிழன்! அரச பாசிசத்தோடு கை கோர்த்துக் கொண்ட புலியெதிர்ப்பு ஜனநாயக வாதிக்கு புலியழிப்பில் தவிர்க்கமுடியாமல் பாதிக்கப்பட்ட இன்னொரு குழந்தை!! புலிகளிற்கு, தம்மைக் காப்பற்றிக்கொள்ள ஆயுதமாகப் பயன்ப்டும் ஒரு ஜடப்பொருள்!!! எரிகாயங்களுடன் அவலக் குரல்களோடு அனாதரவாக விடப்பட்ட இந்தக் குழந்தைகளைப் பற்றியெல்லாம் சிந்திக்காத இந்த மனித விரோதிகள் தமிழ் பேசும் மக்களைக் காப்பாற்ற அவதாரம்மெடுத்திருக்கும் அவமானம்!!
மகிந்த சிந்தனை தான், பிரித்தானிய ஆட்சிக்குப் பின்னர் உருவான அனைத்து அரசாங்கங்களின் சிந்தனையும். பேரினவாதம், பௌத்த மேலாதிக்கம், சிங்கள நாடு .. இப்படித்தான் பண்டாரநாயக்க விலிருந்து ஆரம்பித்த பாசிசக் கூறுகள் அதன் மொத்த வடிவமாக, இந்தியாவின் ஆசீர்வாதத்தோடு மகிந்த சிந்தனையாக இலங்கை மக்களின் மீது வாந்தியெடுக்கப்பட்டிருக்கிறது. இன அடக்கு முறை தான் புலியை உருவாக்கியது. “தோழர்” டக்ளஸ் தேவந்தாவையும் கூட உருவாக்கியது. வரிக்கு வரி இனவாதத்தைக் கக்கும் மகிந்த சிந்தனையின் வரிவடிவங்களை டக்களஸ் தேவானந்தா படித்திருக்காமல் இருக்க முடியாது. இந்த கீழ்த்தரமான சிந்தனையால் விதைக்கப்பட்ட இனவாதம், பிரிந்து வாழ்வதற்கான உணர்வை தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் இன்னுமின்னும் ஆழ விதைக்கும் என்பதை அமைச்சர் தோழர் “டக்ளஸ்” சிந்திக்காமல் “மாண்புமிகு” அமைச்சராகியிருக்க முடியாது. இந்த மகிந்த சிந்தனையை மாவோ சிந்தனைக்குப் பதிலாக ஏற்றுக்கொண்டு அதற்காகப் பிரச்சாரம் வேறு மேற்கொள்ளும் மாண்புமிகு, “முன்நாள் இடதுசாரி” அமைச்சர் தேவானந்தா, இந்தச் சிந்தனையில் மக்கள் மயங்கி, அரச குடியேற்றத்திட்டத்திற்கு மகிந்த புரம் என்று திரு நாமம் சூட்ட “தோழரை” கேட்டுக் கொண்டார்களாம்.??!!
இப்படித்தான் 14.02.09 அன்று டான் வானொலியில் உறயுப் பாலம் நிகழ்ச்சியூடாக நேயர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த “தோழரின்” பதில்கள் மகிந்த பாசிசத்தின் இன அழிப்பின் நியாயப்படுத்தலாக நகர்ந்து சென்றது.
லசந்த விக்கிரமதுங்க என்ற ஜனநாயக வாதி, 90 களிலிருந்து தமழர்கள் கொல்லப்பட்ட போதெல்லாம் குரல் கொடுத்த ஊடகவியலாளன், அரசுக்கு எதிராக மட்டுமல்ல புலிகளின் கொடூரத்திற்கும் எதிர்வினையாற்றிய மனிதாபிமானி, இவர் கொல்லப்பட்டதும், ஏனைய துணிச்சல் மிக்க ஊடகவியலாளர்கள் இலங்கையை விட்டுத் தப்பியோடுவது பற்றி ஒருவர் கேள்வியெழுப்பிய போது, மகிந்த பயங்கரவாதம் கக்கிய நஞ்சையே “தோழரும்” கக்கிச் சென்றார். இந்த ஊடகவியளாளர்கள் யாழ்ப்பாணத்தை நோக்கி புலிகளின் சார்பானவர்களாகவே உள்ளனர்; எனவே அவர்களின் வெளியேற்றம் ஒரு விடயமே அல்ல என எந்தச் சலனமும் இன்றி தனது “ஜனநாயகக் குரலை” வான் அலைகளில் தவழவிட்டார்.
இந்தியாவின் துணையோடு கட்டியமைக்கப்படும் பாசிச இரும்புத்திரை உலகிலிருந்து ஒரு மக்கள் கூட்டத்தையே தனிமைப்படுத்துகிறது
– புலிகளின் நிலைகளிலிருந்து தப்பிவரும் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுச் சிறை வைக்கப்படுகிறார்கள்.
– மருத்துவ மனைகளில் உறவினர்களைக் கூட அனுமதிக்காமல் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் காயப்பட்ட அப்பவிகள்.
– நாட்டைவிட்டு விரட்டப்படும் ஊடகங்களும் மனிதாபிமான அமைப்புக்களும்.
பேரின வாத அரசு மட்டுமே உட்புகவல்ல நவ-பாசிசச் சிறைச்சாலையைக் கட்டமைக்கும் சிறீ-லங்கா அரசை நியாயப்படுத்த வரிக்கு வரி பொய் பேசும் தேவானந்தா, வெஸ்ட் பாங்கையும், காஸாவையும் துண்டாடிய திட்டத்தைப் போன்று வட-கிழக்கைப் பிரிக்கும் குடியேற்றத் திட்டங்களை தெரிந்து கொள்ளாதது போல நிராகரிக்கிறார்.
வன்னி மக்களின் பிணங்களில் இடறி விழுந்து யாழ்ப்பணம் சென்று முதலமைச்சராகும் கனவை நாசூக்காக வெளிப்படுத்திய “மாண்புமிகு அமைச்சர்” தேவானந்தா அவர்கள், தான் வெளிநாட்டுத்தமிழர்களிடம் யுத்த மீள்கட்டமைப்புக்ககென முதலமைச்சர் நிதியோன்றையும் மகேஸ்வரி அறக்கட்டளை ஒன்றையும் நிறுவ ஒழுங்குகள் செய்ததாக சொன்னார்.இந்த மகேஸ்வரி அறக்கட்டளைக்காக பாராளுமன்றத்தில் மிக சிரமப்பட்டு அனுமதி வாங்கியதையும் குறிப்பிட்டார். மொத்தத்தில் வெளிநாட்டிலுள்ள எல்லாத்தமிழரிடமும் பணம் சேர்த்தால் 378 கோடியை இருமாதத்தில் சேர்தஇது விடலாம் என்ற தனது கணக்குக் கணிப்பையும் குறிப்பிட்டார்.
அப்பவி மக்களின் சாம்பல் மேட்டில் உருவாகும் தமிழீழ ஜனாதிபதிக் கனவில், அழிந்து போகும் மக்கள் தொகையைக் கணக்குப் போட்டுக்கொண்டு வாழ்வாங்கு வாழும் “தேசியத் தலைவர்” பிரபாகரனுக்கும், “ஜனநாயகவாதி” டக்ளசிற்கும் ஆறு வித்தியாசங்கள் காண முற்பட்டால் தோல்விதான் எஞ்சும்.
இட்வர்களைப் பொறுத்தவரையில் இது ஒரு கணித ஒப்பீடுதான். 1500 புலிகளைத் துவம்சம் செய்ய எத்தனை குழந்தைகளையும் அப்பாவிகளையும் கொல்ல வேண்டும் என்று மகிந்தவிற்கும், தோழரிற்கும் ஒரு கணிப்பீடிருக்கும்.
தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எத்தனை குழந்தைகளும் அப்பாவிகளும் கொலைசெய்யப்பட வேண்டும் என்று பிரபாகனிற்கும் ஒரு கணிப்பிருக்கும். இவர்களைப் பொறுத்தவரை இது ஒரு கணித ஒப்பீட்டியல்.
மகிந்த, பிரபாகரன், தேவானந்தா போன்ற எல்லோருமே அப்பவிகளைக் கொன்று குவித்து அவர்கள் சாம்ராஜ்யத்தை நிறுவிக்கொண்டாலும், எஞ்சியிருக்கும் சொற்பமக்களுக்கு மத்தியில் இவர்கள் யுத்தக்குற்றவாளிகளே! சொந்த மக்களையே கொன்று குவித்த சமூக விரோதிகளே!!
இலங்கை அரசு அப்பவிகளைத் தமிழ் பேசுபவர்கள் என்ற காரணத்திற்காகவே கொன்றொழித்த போது, புலிகள் தமது சர்வாதிகாரத்தை நிறுவிக்கொண்டனர். புலிகள் அப்பாவிகளை அழித்தபோது, அரசு தனது சர்வாதிகாரத்தை நிறுவிக்கொண்டது. இன்று அரசும் அதன் பரிவாரங்களின் பயங்கரவாதமும் மக்களை அழித்துக்கொண்டிருக்கிறது. இந்த அழிவிலிருந்து இன்னுமொரு சர்வாதிகாரம் நிறுவப்படாமல் சமூக உணர்வுள்ள அனைத்து சக்திகளும் இணைந்துகொள்ளவேண்டும்.