மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் நாராயண் ரானே ,இவர் சுதந்திர தினத்தையொட்டி நடந்த விழா ஒன்றில் பேசிய போது “ மாநிலத்தை ஆளும் முதல்வருக்கு இது எத்தனையாவது சுதந்திர தினம் என்பது கூட தெரியவில்லை. உதவியாளரிடம் அதை கேட்கிறார். தாய்நாட்டின் சுதந்திர தினத்தை தெரியாமல் ஒரு முதல்வர் இருப்பது அவமானமாகும். நான் மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தால் ஒரு அறை விட்டிருப்பேன்,” மகாரஷ்டிர முதல்வரான உத்தவ் தாக்கரேவை அறைவேன் என்று மத்திய அமைச்சர் பேசியது சிவசேனா தொண்டர்களை உசுப்பி விட.
மும்பை உட்பட மகாராஷ்டிர மாநிலம் முழுக்க பாஜக அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. பாஜக தலைவர் நாராயன் ரானேவை கைது செய்ய வேண்டும் என்று சிவசேனா தொண்டர்கள் போராட்டம் நடத்த அது பாஜக சிவசேனா மோதலாக மாறியது.’
இந்நிலையில் மத்திய அமைச்சரான நாராயன் ரானேவை நாசிக் காவல் ஆணையர் கைது செய்யும் படி உத்தரவிட்டார். இதனையடுத்து மகாராஷ்டிர போலீசார் ரானேவை கைது செய்தனர். அவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. உயர்நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனுத்தாக்கல் செய்த நிலையில் அதையும் அவசர வழக்காக நீதிமன்றம் விசாரிக்க மறுத்து விட அவர் இன்னும் போலீசார் கட்டுப்பாட்டில்தான் உள்ளார்.
இன்று பாஜகவில் இருக்கும் நாராயன் ரானே சிவசேனா கட்சியில் இருந்துதான் தன் அரசியல் வாழ்வை துவங்கினார். 2005-ஆம் ஆண்டு அளவில் உத்தவ் தாக்கரேவுக்கும் பால் தாக்கரேவுக்கும் இடையில் முரண்பாடுகள் எழுந்த போது அக்கட்சியை விட்டு விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் 2017-ஆம் ஆண்டு காங்கிரஸ் தன்னை முதல்வராக்க வில்லை என்று தனிக்கட்சி துவங்கினார். பின்னர் அக்கட்சியை பாஜகவில் இணைத்து விட்டு பாஜகவில் ஐக்கியம் ஆனார்.