மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோவை அவரது தந்தையும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ நியமித்தார். இது கட்சியின் உயர் மட்டக் குழுவினரிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி அறிவிக்கப்பட்டது என்றும் சொன்னார்.
மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. அவர் எனக்குத் தெரியாமலேயே கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வந்தார் என்றும் வைகோ கூறிய நிலையில், அக்கூட்டத்தை மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, மாநில இளைஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன் உள்பட முக்கிய நிர்வாகிகள் சிலர் புறக்கணித்தனர். அவர்கள் தலைமையில் கட்சி பிளவுபடும் என்று செய்திகள் வெளியான நிலையில் திருப்பூர் துரைசாமியும், கே.ஈஸ்வரனும் கட்சியை விட்டு விலகி தனியாக செயல்படப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
இவர்களுடன் 7 மாவட்டச் செயலாளர்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் மதிமுக இரண்டாக பிளவுபடும் சூழல் உருவாகி உள்ளது. கட்சி பதவிக்கு மகனை கொண்டு வந்தது தொடர்பாகவும், கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு தொடர்பாகவும் துரை வைகோ செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.
“6 சதவிகித வாக்கு வங்கியை மதிமுக வைத்திருந்தது.ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அந்த வாக்கு வங்கி பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. அதை சரி செய்வேன். மேலும் என் மீது அதிருப்தியில் இருக்கும் அண்ணன்கள் மெய்ச்சும் படி நான் நடந்து கொள்வேன். என்னை தலைமைச் செயலாளராக அறிவித்தது என் மீது சுமை ஏற்றப்பட்டுள்ளது போலுள்ளது. இந்த விஷயத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். நானும் அதுதான் சரி என்றேன். அதன்படிதான் எனக்கு இந்த நியமனப்பதவி கிடைத்துள்ளது” என்றார்.