இலங்கையின் சரித்திரம் முழுமையாக தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற்றைக் கூறுகின்ற பழைய வரலாற்றேடுகள், தமக்குள் பல முரண்பாடான செய்திகளைக் கொண்டிருப்பினும், வரலாற்று முரண்பாடுகளைக் கொண்டிருப்பினும், வரலாற்றெழுத்தியல் முறையில் தவறுகளைக் கொண்டிருப்பினும் இலங்கையின் வரலாற்றை முழுமையாகவும் பெருமளவுக்குத் தொடர்சியானதாகவும் முன்வைத்திருக்கிறது. மீண்டும் மீண்டும் அவ்வரலாறுகளில் மீளாய்வுகள் செய்யப்படினும் முழுமையான ஒரு வரலாறு முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்களின் வரலாற்றைக் கூறும் நூல்கள், வடக்கில் வாழும் தமிழர்களின் வரலாற்றையே கூறியுள்ளன. அது மட்டக்களப்புத் தொடர்பான செய்திகளை திரட்டிக்கொள்வதில் உள்ள இடர்பாடுகளால் ஏற்பட்டதே. ஆயினும் வடக்கில் வாழும் தமிழர்களின் வரலாறு, தர்க்கவியலடிப்படையிலாவது முழுமையாக முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஏதாவது ஒரு முறையில் தொடர்ச்சியான, முழுமையான வரலாற்றை முன்வைப்பதன் மூலமே சரியான வரலாற்றை அறிய வாய்ப்புக்கிட்டும் போல் தென்படுகிறது.
மட்டக்களப்பின் முழமையான, தொடர்ச்சியான வரலாறு ஊக அடிப்படையிலாவது இன்னமும் முன்வைக்கப் படவில்லை என்ற குறைபாடு நிலவி வந்தது. அதற்கான முதல் முய்றசியை
மட்டக்களப்பின் வரலாற்றைப் பற்றிக் கூறும் டி. சிவராம், (“மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்” நூலின் வரலாற்று அறிமுகக் குறிப்பில்) மட்டக்களப்பின் வரலாற்றை விபரிக்கக்கூடிய அடிப்படை மூலங்களை மூன்று பகுதிகளாகப் பிரித்து,
பழைய வரலாற்றுக் காலப்பகுதி,
சோழர் காலப்பகுதிப் பின் போர்த்துக்கேயரின் வருகை வரையான, அதாவது 16ம்
நூற்றாண்டு வரையான நடுக்காலப்குதி,
காலணியாதிக்கக் காலப்பகுதி என வகைப்படுத்தியுள்ளார்.
முதல் கால கட்டம் தொடர்பான அதாவது சோழர் காலத்திற்கு முற்பட்ட காலம் தொடர்பான திட்டவட்டமான வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இதுவரை கிடைத்தில எனக்கூறும் சிவராம், கிடைக்கின்ற பழைய சான்றுகள் கி;.பி. 16ம் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும் எனச்சுட்டிக்காட்டியிருக்கிறார். இதன்மூலம் மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றை எடுத்துரைக்கக் கூடிய சான்றுகளின் போதாமையை நாம் நன்குணரலாம்.
ஆயினும் மட்டக்களப்பின் இடைக்காலத்திற்கு முற்பட்ட மட்டக்களப்பு வரலாற்றை அறிந்து கொள்ள அடிப்படையாக இருப்பது “மட்டக்களப்பு மாண்மியம்” (எப்.எக்ஸ்;.சி.நடராசா அவர்களால் 1962ல் வெளியிடப்பட்டது)
“மட்டக்களப்பு மாண்மியம்” மட்டக்களப்பின் வரலாற்றை ஆய்வுக்குட்படுத்தி வெளியிடப்பட்ட வரலாற்று நூலல்ல என்பதே உண்மை. அது ஏற்கனவே இருந்த ஏடுகளின் தொகுப்பாகும். அந்நூலில் கூறப்பட்டுள்ள செய்திகளை ஆராய்ந்தும் மற்றும் அதில் கூறப்பட்டுள்ள செய்திகளையும் இலங்கையின் பிற வரலாற்றுச் செய்திகளையும் ஒப்பீட்டாராய்ந்தால்தான் மட்டக்களப்பின் வரலாற்றை அறிய முடியும். அந்நூலில் கூறப்படும் செய்திகளில் மட்டக்களப்பின் பிற்பட்ட கால வரலாற்றுச் செய்திகளே ஒப்பிட்டு நோக்கத்தக்கன.
மட்டக்களப்பு மாண்மியத்தின் “நூல் வரலாற்றில்”, மட்டக்களப்பு மாண்மியம் பலரால் பலகாலத்தில் எழுதப்பட்டதாகக் கூறுப்பட்டுள்ளது. பண்டைச் சரித்திரத்தையும் அதே வேளை ஒல்லாந்தர் வரையான சரித்திரமும் இந்நூலில் காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்நூல், குறிப்பாக 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுந்தது எனவும் சிலவேளை பழைய காலத்திற்குரிய ஏட்டுப்பிரதிகள் அதில் இருந்திருக்கலாம் எனவும் கருதமுடியும்.
இலங்கையின் வரலாற்றுடன் தொடர்பு படுத்தி மட்டக்களப்பின் வரலாற்றை அறிய முற்படுவதே தற்போதைக்கு சாத்தியமானதாக அமையும் போல் தெரிகிறது. அத்துடன் மட்டக்களப்பில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியதும் அவசியமானதாகும். அதிலும் அதற்கான ஆரம்பப் பணிகளையே செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கு, முதலில் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட விடயமான வரலாறு எழுதும் முறை பற்றியும், வரலாற்றதாரங்கள் பற்றியும் நாம் பேசவேண்டும்.