“எம்மோடு பேச்ச்சுவார்த்தை நடத்தாமல் கத்திகளோடும் பொல்லுகளோடு வந்து இராணுவ முகாமை சூழ்ந்துகொண்டவர்களை மன்னிக்க முடியாது” என்கிறார் ராஜபக்ச இராணுவ சர்வாதிகாரத்தின் யாழ்ப்பாண பிரதிநிதி இராணுவத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க.
கற்களும் பெற்றோலும் அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்,
இதனால் இராணுவ முகாமைச் சூழ்ந்து கொண்டவர்கள் பயங்கரவாதிகள் என்று வேறு கர்ஜித்திருக்கிறார். போராடும் மக்கள் முள்ளிவாய்க்கல் மூலையிலிருந்து அமரிக்கா கப்பல் அனுப்புமா என காத்திருந்தவர்கள் அல்ல. அரச அலுவலகங்களின் முன்னால் மகஜர் சமர்ப்பிப்பதற்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள் இராணுவ முகாம்களைச் சூழ்ந்து போராட ஆரம்பித்திருக்கிறார்கள்.
நாவாந்துறையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது இராணுவம் கோரத்தாகுதல்களை நடத்தியிருக்கிறது. பலர் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கி முனையில் மக்கள் அச்சுறுத்தப்பட்டனர். கொலைப்ப்யமுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
அத்தனை அச்சுறுத்தல்களுக்கும் மிரட்டல்களுக்கும் அடிபணியாத மக்கள் கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தின் முன்னால் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். வாழைச்சேனையில், திருகோணமலையில், மலையகத்தில், வரணியில், நாவந்துறையில் என்று மக்கள் தெருவிற்கு இறங்கிப் போராட ஆரம்பித்துவிட்டார்கள்.
ஐம்பதாயிரம் மக்களை மூன்று நாட்களுள் கொன்று குவித்த இனப்படுகொலை இராணுவத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் போராடங்கள் வீரம் செறிந்தவை. அரபு நாடுகளில் மக்கள் போராடும் சூழலைவிட கோரமான சூழலில் மக்களின் போராட்டம் இன்று முக்கியத்துவப்படுத்தப்பட வேண்டும்.
கிழக்கில் போராட்டங்கள் நடந்தபோது முஸ்லீம் மக்களும் இணைந்திருக்கிறார்கள். மலையக மக்கள் போராடியிருகிறார்கள். ஹம்பாந் தோட்டையில் நிகழ்வொன்றில் கலந்துகொள்ளச் சென்ற நாமல் ராஜபக்சவை சிங்கள மக்கள் கல்லெறிந்து துரத்தியிருக்கிறார்கள். செய்தியை வெளியிட முயன்ற ஊடகங்கள் மிரட்டப்பட்டிருக்கின்றன. ஆக, இலங்கையில் மகிந்த ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த நிலையில் மகிந்த ராஜபக்ச அரசின் பிடியிலிருந்து மக்களை விடுவிப்பதாகக் கூறும் புலம் பெயர் அமைப்புக்கள் எங்கே? நாடுகடந்த தமிழீழம், தமிழர் பேரவை என்ற இன்னோரன்ன அமைப்புக்கள் மக்கள் போராடும் வேளையில் தமது வீடுகளின் கொல்லைப் புறங்களில் பதுங்கிக்கொண்டார்களா?
போராடும் மக்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் ஏனைய போராடும் அமைப்புக்களை இணைத்துகொண்டு இவர்கள் போராடத் தயாரா? மகிந்த ராஜபக்சவைப் பலவீனப்படுத்துவது இவர்களின் நோக்கம் இல்லையா?? இலங்கையில் குறைந்தபட்ச ஜனநாயகம் ஏற்படுவதை இவர்கள் விரும்பவில்லையா??? இப் போராட்டங்கள் குறித்து குறைந்த பட்சம் ஒரு பத்திரிகை அறிக்கையாவது எழுதுவதற்குத் துணியாத இவர்களின் நோக்கம் என்ன????
தமிழ் மக்கள் ஏனய சிறுபான்மை இனங்களோடு மட்டுமல்ல, பெரும்பான்மை இனத்தில் அரச பாசிசத்திற்கு எதிரானவர்களையும் ஒருங்கிணைத்து ஐரோப்பிய நாடுகளின் போராடும் அமைப்புக்களோடு இணைந்து போராட்டங்களை நடத்துவதற்கு இதைவிட சிறந்த சந்தர்ப்பதை நாம் சந்திக்க முடியாது. உயர்தர விடுதிகளில் ஐரோபியப் பாராளிமன்ற உறுப்பினர்களோடு போதை ஏற்றிக்கொள்வதால் விடுதலை வராது. பூதம் தான் வரும்.