மக்கள் பணத்தைச் சூறையாடியது தொடர்பாக ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் வாக்குமூலம் பெறப்பட்டபோது கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கான ஆவணங்கள் தனக்கு வழங்கப்படவில்லை என்றும், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்த அவற்றை பார்வையிட அனுமதிக்கும்படியும் தனி நீதிமன்றத்தில் சசிகலா மனு தாக்கல் செய்தார்.
வழக்கை தாமதப்படுத்தும் உள்நோக்கத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக கருதிய நீதிமன்றம், மனுவை நிராகரித்தது. பின்னர், கர்நாடக உயர் நீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகய் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், கடந்த 5ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், ‘மனுதாரர் தான் கேட்டுள்ள ஆவணங்களை பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கான இடத்தை பெங்களூர் தனி நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும். ஆவணங்களை பார்க்கும் நடவடிக்கையை 21 நாளில் முடிக்க வேண்டும். தனி நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையோ அல்லது வாக்குமூலம் பெறப்படுவதோ, இந்த உத்தரவால் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது’’ என்று உத்தரவிடப்பட்டது.