Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கட்டாய தடுப்பு முகாம்களின் உள்ளே : Edna Fernandes

இலங்கையின் வடக்கே வவுனியாவில் இருக்கின்ற காடு ஒன்றில் மரங்கள் வெட்டப்பட்டு, துப்பரவு செய்யப்பட்ட ஒரு இடத்தில் கறுப்பு நிற இராணுவ ஹெலிக்கொப்டர் ஒன்று வந்து இறங்குகிறது. அந்த ஹெலியின் வயிற்றுப் பகுதி பிளந்து, அதிலிருந்து இராணுவ பாதுகாப்புடன் மிக முக்கிய பிரமுகர்கள் இறங்கிக்கொண்டிருக்கும் அதேவேளையில், அந்த வானூர்தியின் இறக்கைகள் கிளப்பி விடுகின்ற செம்புழுதியால், சுற்ற நிற்கும் அனைவரின் மீதும் அழுக்கு ஒரு படலம் போன்று படருகின்றது.

அண்மைய மாதங்களில் வடக்கில் மோதல்கள் நடக்கின்ற பகுதிகளில் இருந்து தப்பி ஓடி வந்த 180, 000 பொதுமக்களை பார்வையிட அங்கு வந்த முக்கிய பிரமுகர்களில், பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்டும் அடங்குகிறார். ஒரு லட்சம் பேரின் உயிரைக் காவுகொண்டு, கடந்த 25 வருடமாக நடக்கின்ற போரைப் பொறுத்தவரை, தற்போது நடப்பது முடிவு காண்பதற்கான இறுதிக்கட்டம் என்கிறது இலங்கை அரசாங்கம்.கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் இலங்கை கண்ட ‘அகதிகளின் அலையலையான இடப்பெயர்வு’ என்பது மிகப்பாரியது. அடத்தியான காடுகளையும், முழங்கால் அளவு கடலேரியையும் கடந்து வந்த பல்லாயிரக்கணக்கான அகதிகள், வவுவியாவில் உள்ள முகாம்களை அடைந்துள்ளனர்.
சிறார்கள் உட்பட பொதுமக்கள் துப்பாக்கி ரவைகளாலும், பெரு வெடித்தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்டார்கள் என்றும், அவர்களுக்கு தலையிலும், முள்ளந்தண்டு சார்ந்த உறுப்புக்கள் மீதும் காயங்கள் ஏற்பட்டன என்றும், நிலக்கண்ணிகளால் அவர்களது அவயவங்கள் வெடித்துச் சிதறின என்றும், மருத்துவமனைகளும், எல்லைகளற்ற மருத்துவர்களுக்கான அமைப்பு( எம் எஸ் எஃப்) போன்ற தொண்டு நிறுவனங்களும் கூறுகின்றன. காயமடந்தவர்களை பெருந்தொகையில் ஏற்றி வந்த பேருந்துகள் அவர்களை மருத்துவ நிலையங்களில் சேர்த்தன, வெறும் சடலங்களை இறக்கியது போன்ற காட்சி அது.
சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கபுரியாக விபரிக்கப்படுகின்ற இலங்கையின் அந்தஸ்த்துக்கும் இவற்றுக்கும் இடையே காணப்படும் வேறுபாடு மிகப்பெரியது.
பலமான, முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால், ஆயிரக்கணக்கான தமிழ் அகதிகள்: உடலும் உளமும் நொருங்கிப் போன முதிய ஆண்களும், பெண்களும் கடை ராக்கையில் அடுக்கிய பொம்மைகளைப் போல நின்றார்கள். காயங்களுக்காக பாண்டேஜுகளால் மருந்து கட்டப்பட்ட கைக்குழந்தைகள் இன்னமும் தமது தாய்மாரின் மார்பில் பால் குடித்துக்கொண்டிருந்தன. சின்னப் பிள்ளைகள் தமது தாய்மாரின் மடியில் களைப்பாறிக்கொண்டிருந்தன.
எல்லாரும் ஒன்றாக கம்பி வேலிக்கு அருகில் கூடியதால், எம்மை சரியாக பார்ப்பதற்காக அவர்கள் ஒருவர் மேல் ஒருவராக எட்டிப்பார்த்தார்கள், கூரிய முட்கம்பிகளை பிடித்து கெந்திப் பார்த்தார்கள்.
25 வருட போரின் கொடுமைக்கும், தற்போதைய கட்டாய தடுத்து வைப்புக்குமான ஆதாரங்கள் அவர்களது கண்களில் தெரிந்தன. ஆனால், சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்குமான நூற்றாண்டு மோதல்களின் அண்மைய அதிரடி மாற்றங்களால், வடக்கில் தலைவிரித்தாடிய பயங்கரத்தில் இருந்து தப்பித்து வந்த இவர்கள் உண்மையில் அதிர்ஸ்டசாலிகள்தான்.

இந்த இரு இனங்களும் இந்தியாவில் இருந்துதான் உருவாகின. சிங்களவர்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள், தமிழர்கள் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இலங்கைக்கான இவர்களது புலப்பெயர்வுகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றவையாகும்.

தமெக்கென சொந்தமான மொழியையும், இலங்கை சனத்தொகையில் 18 வீதத்தையும் கொண்ட தமிழர்களுக்கும், பெரும்பானமையின சிங்களவர்களுக்கும் இடையே உரசல்கள் எப்போதுமே இருந்து வந்திருக்கின்றன.

இலங்கைத் தீவை 1796 இல் கைப்பற்றிய பிரிட்டிஷ்காரர்கள், அதற்கு சிலோன் என்று பெயர் வைத்து, அங்குள்ள தேயிலை மற்றும் கோப்பித் பெருந்தோட்டங்களில் பணியாற்றுவதற்காக தமிழர்களை இந்தியாவில் இருந்து கொண்டுவந்தார்கள். இதனால், பிரிட்டிஷ்காரர்கள் இந்து தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாக நம்பிய, பெரும்பான்மையாக பௌத்தர்களைக் கொண்ட சிங்களவர்கள், ஆத்திரமடைந்தார்கள்.

1948 இல் அந்த தீவில் சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், ஆட்சியை கையேற்ற சிங்களவர்கள், சிங்களத்தை அதிகார மொழியாக ஆக்கியதன் மூலமும், பௌத்தத்துக்கு அரசாங்க ஆதரவை வழங்கியதன் மூலமும் தமது ஆக்கிரமிப்பை மீள ஏற்படுத்தவும், தமிழர்களை ஓரங்கட்டவும் விளைந்தனர்.

இதற்கு பதிலடி தரும் வகையில், தமிழ் ஆயுதக்குழுக்கள் 70 களில் கடுமையான தாக்குதல்களை நடத்தினார்கள். பின்னர் 1983 இல் பதுங்கியிருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் 13 அரசாங்கப் படையினர் கொல்லப்பட, அதன் மூலம் வெடித்த தமிழர்களுக்கு எதிரான நாடாளவிய வன்செயல்கள், நாட்டை படிப்படியாக தற்போதைய கொடிய போருக்குள் இட்டுச்சென்றன. அது இந்த தற்கொலைத் தாக்குதல்களையும் தோற்றுவித்துள்ளது.

வடகிழக்கின் கடற்கரையோர நிலப்பரப்பில், தமிழர்களின் போரின் இறுதி மோதல்கள் நடக்கின்றன. சிங்கள இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள நிலையில், தம்மால் நிர்மாணிக்கப்பட்ட மண் அரண்களுக்கு பின்னால் நிலையெடுத்திருக்கும் நூற்றுக்கணக்கான தமிழ் புலிகள் தமது இறுதிப் போராட்டத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மூலையில் கொண்டு ஒதுக்கப்பட்ட, விரக்தியடைந்த தமிழ் புலிகளின் ஆகர்ஷ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பல்லாயிரக்கணக்கான ஆண்களையும், பெண்களையும், சிறார்களையும் மனித கேடயங்களாக தடுத்து வைத்துள்ளார். உலகம் கண்ட மனிதப் பணய நாடகங்களில் இது மிகப் பெரியது என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது.

பெரும் இரத்தக்களரி ஏற்படும் என்று அஞ்சுகின்ற சர்வதேச சமூகம் போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கை இராணுவத்தை கோருகிறது. ஆனால், இந்த வேலையை என்ன விலை கொடுத்தாவது முடித்துவிடுவது என்ற கடுமையான தீர்மானத்தில் இருக்கின்றன கொழும்பின் ஏ.சி அறையில் இயங்கும் அமைச்சக வட்டாரங்கள்.

போர் முடிந்து அந்த பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் வரை, கட்டுப்படுத்தப்பட்ட முகாம்களிலேயே மக்களை தடுத்து வைப்பது என்று அரசாங்கம் வலியுறுத்துகிறது. அங்கு மிகவும் குறைவான கழிவகற்றும் வசதிகள் மாத்திரம் இருக்கின்ற போதிலும், அங்கு வைத்தே அந்த அகதிகளுக்கு உணவு வழங்கப்படும், அங்கு வைத்தே அவர்களுக்கு மட்டுப்பட்ட மருத்துவ மற்றும் குடிநீர் வசதிகள் வழங்கப்படும்.

இந்த மக்கள் வெளியேற்றம் நடந்து, அந்த முகாம்களில் அவர்கள் வந்து சேர்ந்த பின்னர் அங்கு அந்த வேலிகளுக்குள் நுழைந்து நிலைமைகளை பார்வையிட்ட முதலாவது பிரிட்டிஷ் செய்தித்தாள் நிருபர் நான்தான். நானே இறுதி நிருபராகவும் இருக்கலாம்.

இந்த விஜயம் இலங்கை அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. நாம் சென்ற இடங்களில் அரசாங்க புனர்வாழ்வு நிலையம் ஒன்றும் அடங்குகின்றது. நீண்ட கால அடிப்படியில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரை வெல்வதற்காகத்தான் இந்த நிலையம் என்று அரசாங்கள் கூறுகின்றது.

இந்த நலவாழ்வு முகாம்களுக்குள் செய்தியாளர்கள் உட்பட எவரையும் அனுமதிப்பதில்லை என்று வெள்ளியன்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.

மனிக் ஃபாம் முகாமில் 22,000 அகதிகள் தங்கியுள்ளனர். செம்பாட்டு மண்தரையில்,சாக்குகளாலும், தகரங்களாலும் அமைக்கப்பட்டு, தாழ்வான, கிடுகு மற்றும் தகரக் கூரையுடன், சிமெந்துத்தரையுடன் கூடிய முகாம்கள். ஒவ்வொரு கூடாரத்திலும், இரண்டு, மூன்று குடும்பங்கள் தங்கியுள்ளன. மூவாயிரம் கூடாரங்கள் அங்கு உள்ளன.

பள்ளிக்கூடம், மருத்துவ வசதி மற்றும் கடைகளும் அங்கு உள்ளன. அங்குள்ள மக்களுக்கு மூன்றுவேளை உணவு வழங்கப்படுகின்றது, ஆனால் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் மருத்துவ தேவைகளுக்காக மூன்று டாக்டர்கள் மாத்திரமே உள்ளனர்.

எங்களுக்கு சோறு, கறி மற்றும் தண்ணீர் கிடைக்கிறது, ஆனால், இது எங்களது வீடு அல்ல என்று கூறினார், தனது பெயரைக் கூற மறுத்த ஒரு வயோதிபர். இது எங்களது சிறை என்றார் அவர்.

நான்கு மாதங்களாக இங்கு தங்கியிருக்கும் அவர்களிடம், இன்னும் ஒரு வருடம் வரை அங்குதான் அவர்கள் இருக்க நேரிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. சர்வதேச மட்டத்தில் இந்த முகாம்கள் பெரும் எதிர்ப்பலைகளை தோற்றுவித்துள்ளன. அத்தகைய எதிர்ப்புகளை ஒலித்துள்ளவர்களில் ஒருவர், புக்கர் பரிசு வென்ற அருந்ததி ராய். இந்த முகாம்களை அவர், அரசியல் கைதிகளுக்கான தடுப்பு முகாம் என்று விபரித்துள்ளார்.

ஆனால், இந்த விபரிப்புடன் எல்லாரும் இணங்கிப் போகிறார்கள் என்று கூற முடியாது. ஹியூமன் ரைட்ஸ் அமைப்பின் ஆசிய இயக்குனர், பிரட் அடம்ஸ், இதனை, திறந்தவெளிச் சிறைக்கூடம் என்ற பெயரில் அழைக்க விளைகிறார்.

‘’இவை நலன்புரி முகாம்கள் அல்ல, இவை தடுப்பு முகாம்கள்’’ என்கிறார் அவர். ‘விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து வரும் தமிழர்களை, அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்ற அனுமானத்தின் அடிப்படையில், தடுத்து வைக்க ஏற்படுத்தப்பட்டவையே இவை. இது ஒரு கொடுமையான செய்தியை தமிழ் மக்களுக்கு அனுப்புகிறது.’

அந்த முகாம்களுக்குள் முக்கிய பிரமுகர்கள் நுழையும் போது, அவர்களை ஒரு கூட்டம் அப்படியே சூழ்ந்து விடுகிறது. ஒவ்வொருவரும் தமது கதைகளை கூற வாஞ்சையுடன் இருக்கிறார்கள். இராணுவ அதிகாரிகளுக்கும், சிப்பாய்களுக்கும் மிலிபாண்டுக்கு பாதுகாப்பு வழங்குவது பெரும்பாடாய் போய்விடுகிறது.

வடக்கு மோதல் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு ஏதுவாக போர் நிறுத்தம் வேண்டும் என்று மிலிபாண்ட் அவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கை, முரண் உணர்வுடனேயே இலங்கையால் எதிர்கொள்ளப்பட்டது.

‘’போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் விடுதலைப்புலிகளுக்கு மிலிபாண்ட் அவர்கள் தேவையற்ற ஒரு நம்பிக்கையை, எதிர்பார்ப்பை வழங்குகிறார்’’ என்று இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட வட்டாரம் ஒன்று கூறுகின்றது.

‘’ எங்களது பாரம்பரிய நண்பர்களான சீனா, இந்தியா மற்றும் இரான் போன்றவர்கள் எங்களுக்கு நிதியுதவி தருகிறார்கள். அவர்களுக்கு விமர்சனம் இருக்கும் பட்சத்தில். அதனைச் செய்கிறார்கள், ஆனால், அதனை முடிந்தவரை குறைந்த தொனியில் செய்கிறார்கள். இரான் 1.9 பில்லியன் டாலர்களை தந்தது. சீனா 1 பில்லியன் டாலர்கள். இந்தியா 600 மில்லியன் டாலர்கள். ‘’

‘’பிரிட்டன் எங்களுக்கு தந்தது 2.5 மில்லியன் டாலர்கள் மாத்திரமே. மலம் துடைக்கும் கடதாசியை வாங்கவே பிரிட்டிஷ் பணத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம். அவர்களது செல்வாக்கு இங்கு மிகவும் மட்டுப்பட்டதாகும்.’’
பிரிட்டனின் தேசிய பெருமைக்கு ஏற்பட்ட இழுக்கு மற்றும் காலனித்துவ தலையீடுகளுக்கு எதிரான கசப்புணர்வு காரணமாக ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு மத்தியில், டேவிட் மிலிபாண்ட் இந்த முகாம்களுக்கு விஜயம் மேற்கொண்டார். அவர் கூறுவதை தாம் செவிமடுக்கவில்லை என்று இலங்கை அரசாங்கம் கூறிக்கொண்டிருந்த அதேவேளையில், அந்த முகாம் அகதிகள் மத்தியில் அவருக்கு நல்ல நேயர்கள் இருந்தார்கள்.
எல்லாரையும் தள்ளிவிட்டுக்கொண்டு முன்பாக வந்த ஒரு வயோதிப மாது, போதுமான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் இல்லை என்று முறைப்பாடு செய்தார். தனது கணவரும், மகனும் எந்தவிதமான காரணமும் கூறாமல் எவ்வாறு தூக்கிச் செல்லப்பட்டார்கள் என்பதை விபரித்த போது மற்றுமொரு பெண் தேம்பி அழுதுவிட்டார். இவற்றுக்குப் பதிலாக அவரிடம் எஞ்சியிருப்பது, அவர்களால் தரப்பட்ட, சிங்களத்தில் எழுதப்பட்ட ஒரு அரசாங்க கடதாசி துண்டுதான். ஆனால், சிங்களம் அவருக்கு படிக்கத் தெரியாத மொழி.
அவரது கணவன் மற்றும் மகனுக்கான பற்றுச் சீட்டுத்தான் அந்த கடதாசித்துண்டு. அரைப்பக்க காகிதத்தில் எழுதப்பட்ட ஒரு அரசாங்க பத்திரம், பற்றுச் சீட்டு அது. தமிழ் அகதிகளுக்கு புரியாத மொழியில் எழுதப்பட்ட அந்த ஆவணத்தைத்தான் படையினர் அவர்களுக்கு தருகிறார்கள். தாம் யாருக்கு பாதுகாவல் தருகிறார்களோ அந்த மக்களின் மொழியை அந்த படையினராலும் பேச முடியாது.
அவர்களால் அழைத்துச் செல்லப்பட்ட நபர்கள் இருவரும் விடுதலைப்புலிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள். ரகசிய இடம் ஒன்றுக்கு புனர்வாழ்வுக்காக அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக அந்த கடதாசித்துண்டு கூறுகின்றது.
இந்த நபர்களுக்கு என்ன நடந்தது என்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற இலங்கையின் வெளியுறவுச் செயலர், டாக்டர். பாலித கோகன்னவை நான் கேட்டேன்.
வவுனியா பகுதி முழுவதிலுமாக 2000 விடுதலைப்புலி சந்தேக நபர்கள் இருப்பதாகவும், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் அவர்கள், பயங்கரவாதிகளுக்கான மறுவாழ்வு முகாமில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதற்காக அவர்களது குடும்பத்தினருக்கு ஒரு பற்றுச் சீட்டு வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு அரசாங்கம் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்த நபர்களெல்லாம் இறந்துவிட்டதாக கருதும் அகதிகளுக்கு இது செய்தி.
அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்று அவரை கேட்டேன். நிச்சயமாக இருப்பார்கள் என்று கூறி, அவர் சிரித்தார்.

இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை இவை காட்டுகின்றன. போர் காலத்தில் நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆகவே, தசாப்தகால போரின் பின்னர், தற்போது யார் வெறும் பொது மக்கள், யார் எதிரிகள் என்பதில் ஒரு நிச்சயமற்ற நிலையில் அரசாங்கம் இருக்கிறது.

சிறுபான்மை தமிழர்களுக்கு ஒரு தனி நாட்டை உருவாக்குவதற்காக, 1976 இல் விடுதலைப்புலிகள் இயக்கத்தை, ஒரு உள்ளூர் கெரில்லா அமைப்பாக வேலுப்பிள்ளை பிரபாகரன் தோற்றுவித்தார். பெரும்பான்மை சிங்களவர்களால் பிரயோகிக்கப்படுகின்ற இனவாதத்தையும், அடக்குமுறையையும் காண்பித்து, தனது இரத்தம் தோய்ந்த போராட்டத்தை அவர் நியாயப்படுத்தினார்.

ஏனைய பலரை விட பிரபாகரனை நன்றாக தெரிந்தவர், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் கேணலான, கருணா. அவரது இயற்பெயர் விநாயகமூர்த்தி முரளிதரன். பிரபாகரனோடு ஒன்றாக நின்று செயற்பட்டவர் அவர். பல ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து அரசோடு சேர்ந்துகொண்ட கருணா, தற்போது பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாழ்கிறார்.

மன நோய் பிடித்த ஒரு மனிதர் பிரபாகரன் என்று கூறுகிறார் கொழும்பில் தனது பாதுகாப்பான இல்லத்தில் இருக்கும் கருணா. 24 மணி நேரமும் அவர் போரைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பார் என்றும், ஜேன்ஸ் பாதுகாப்பு வாராந்திர சஞ்சிகையை சந்தா கொடுத்து வாங்கி, என்ன புதிய நவீன ஆயுதம் வந்துள்ளது என்பதை அவர் ஆராய்ந்துகொண்டிருப்பார் என்றும், தனது ஓய்வு நேரங்களில் எப்போதும், தி ஆர்ட் ஒவ் வோர் ( போரியற்கலை) என்பன போன்ற இராணுவ சாஸ்திர புத்தகங்களையே அவர் படிப்பார் என்றும் கருணா கூறுகிறார்.

பயங்கர தாக்குதல்களுக்கான யுக்திகளை அவர் எங்கிருந்து பெற்றார் என்று கேட்டேன்.

‘ஹொலிவுட் சண்டைப் படங்களில் இருந்து. டை ஹார்ட், ஜி.ஜே ஜேன், கொமாண்டோ, ஏதாவது கிளிண்ட் ஈஸ்ட் படங்கள் ஆகியவற்றில் இருந்துதான் அவர் பெற்றார். ஆனால், விசேடமாக டேர்ட்டி ஹரியை கூறலாம். இந்த படங்களின் வீடியோயை வாங்கி, அவற்றை தமிழில் மொழிமாற்றம் செய்து, தனது பதுங்குழியில் உள்ள பெரிய திரையில் அதனை அவர் பார்ப்பார்’.

ஆனால், தற்கொலைத் தாக்குதல்களுக்கான யோசனை படங்களில் இருந்து வந்ததல்ல என்று கருணா கூறினார். 1983 இல் பெய்ரூட்டில் அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட டிரக் குண்டுத்தாக்குதல் பற்றிய செய்திகளின் மூலந்தான் அந்த யோசனை உதித்தது என்றார் அவர்.

வடக்கு கடற்கரையோரமாக அகப்பட்டிருக்கின்ற பிரபாகரன், இறுதி மோதலுக்காக காத்திருக்கும் அதேவேளையில், தமிழ் அகதிகள் எல்லாம் தாம் பயங்கரவாதிகள் அல்ல என்பது நிரூபிக்கப்படும் வரை பயங்கரவாதிகளைப் போலவே நடத்தப்படுவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகிறது. அவர்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்கப்படுவதற்கான நடைமுறைகள் முடிவதற்கு கால எல்லை எதுவும் கிடையாது.

விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்தவர்களை படையினர் கண்டறியும் வரை மக்களை தடுத்து வைக்க இந்த முகாம்கள் பயன்படுத்தப்படும். விடுதலைப்புலிகள் அகற்றப்பட்டு, புலன்விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அல்லது அவர்கள் ஒருவேளை ஒப்புக்கொண்டால் அவர்கள், அரசாங்கத்தின் பயங்கரவாதிகளுக்கான மறுவாழ்வு முகாமுக்கு அனுப்பப்படுவார்கள்.

முன்னாள் போராளிகள், தவறாக வழி நடத்தப்பட்ட இளைஞர்கள் மற்றும் சிறார்களுக்கான புனர்வாழ்வுத்திட்டத்தை நீதியமைச்சு நடத்துகிறது. நன்றாக திட்டமிட்டபடி மூன்று முகாம்கள் உள்ளன. அரசாங்கத்தைப் பொறுத்தவரை இது, வெடிக்காத ஆயிரக்கணக்கான குண்டுகளை செயலிழக்கச் செய்வதைப் போன்றதாகும்.

கொழும்பில் இருந்து இரண்டு மணிநேர கார் ஓட்டத்தின் பின்னர் அம்பேபுஸ்ஸ என்ற இடத்தில் உள்ள பயங்கரவாதிகளுக்கான புனர்வாழ்வு முகாமில், தயாளன் என்ற இளைஞனை நான் சந்தித்தேன். 17 வயதான அவர், ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளின் இதயப்பகுதியாகத் திகழ்ந்த யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

சிறார்களின் நடத்தைகளில் மாற்றத்தை கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு யுனிசெப்பின் மேற்பார்வையில், நடத்தப்படும் இந்த முகாம் கடந்த மார்ச் மாதத்தில்தான் உருவாக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது. அந்த திட்டத்தில் கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் உளத் தேர்ச்சிக்கான சிகிச்சைகள் ஆகியனவும் அடங்கின்றன. ஏனைய நாடுகளில் உள்ள பிரச்சினைக்குரிய பகுதிகளுக்கு இது ஒரு உதாரணமாக அமையும் என்று அமைச்சர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தாம் இந்த திட்டத்துக்கு நிதி உதவியை செய்வதாகவும், வழமையாக அங்கு சென்று சிறார்களை பார்வையிடுவதாகவும் யுனிசெஃப்பின் இலங்கைக்கான சிறார் பாதுகாப்பு அதிகாரியான, அடம் புறூக்ஸ் கூறுகிறார். சிறார்கள் அவர்களது குடும்பத்தினரை சந்திப்பதற்கும், இந்த திட்டத்துக்கான உதவிகளையும் நாம் செய்கிறோம் என்றார் அவர். இந்த முகாம் உருவாக்கப்படும் வரை சிறார் போராளிகள் பெரியவர்களின் சிறைகளுக்கே அனுப்பபட்டனர்.

14 முதல் 17 வயது வரையிலான 30 சிறார் போராளிகள் இந்த முகாம்களில் இருக்கிறார்கள். மேலோட்டமாக பார்க்கும் போது ஏனைய பதின்ம வயதினரைப் போன்றுதான் அவர்களும் இருக்கிறார்கள். அவர்களிடம் சாடையாக காணப்படுகின்ற தயக்கமும், வெட்கமும்தான் அவர்கள் என்ன அனுபவித்திருக்கிறார்கள் என்பதை கோடிகாட்டுகின்றன.

இங்கு முதற் தடவையாக வந்தபோது இந்த சிறார்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்று அந்த முகாமின் ஏற்பாட்டாளரான, கப்டன் சானக்க வீரசிங்கவிடம் நான் கேட்டேன்.

‘பலர் பெரும் நடாத்தை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். பதற்றம், அனர்த்தத்துக்குப் பின்னரான பெரும் அழுத்தம், வலிப்பு போன்றவற்றால் அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள்’ என்றார் அவர். ‘நாங்கள் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும், உளச் சிகிச்சையும் வழங்கினோம்’ என்றார் அவர்.

அவர்களுக்கு சிகிச்சை வழங்கும் டாக்டர்களில் ஒருவர், டாக்டர் ஹரந்தி விஜேமான. உடற்பிரச்சினைகள் மற்றும் முரண்பாட்டு நிலைமைகள் குறித்த நிபுணரான அவர் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.

‘விடுதலைப்புலிகளில் 60 வீதமானவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று எமது ஆய்வுகள் காட்டுகின்றன. சிறார்களை, அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களை இலக்கு வைப்பது மிகவும் இலகு’ என்கிறார் அவர்.

‘எதனையும் அவர்கள் விரைவாக கற்றுக்கொள்வார்கள், அவர்களை மாற்றி அமைப்பது இலகு. படைப் போராளியாக பயிற்றுவிக்கப்பட்ட 12 வயதேயான சிறார்களைக் கூட நான் பார்த்திருக்கிறேன். 1983 இல் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட ஒரு சிறார் போராளி இன்று ஒரு புலிகள் அமைப்பின் தளபதியாக இருக்கிறார். 150 பேரைக்கொண்ட படையணிக்கு அவர் தலைமை தாங்குகிறார்’ என்றார் அவர்.

பல சிறார்கள், அவர்களது பள்ளிக்கூடங்களில் இருந்தும், கோயில்களில் இருந்தும் அல்லது அவர்கள் விளையாடும் போதும் பிடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் டாக்டர். ஹரந்தி கூறினார். சில சந்தர்ப்பங்களில் பயங்கரவாதிகள் சிறார்களை அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து பலவந்தமாக பிடித்துச் சென்றிருக்கிறார்கள்.

தயாளனின் விவகாரம் மேலும் மோசமானது. தாங்கள் அனாதை இல்லத்தில் வளர்ந்ததால், ஆரம்பம் முதலே இந்த நோக்கத்துக்காகவே தாம் வளர்க்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

‘தமிழரின் தாயகத்துக்கான போராட்டம் பற்றி நான் கற்றறிந்துகொண்டேன். பின்னர் எனது 8 வயது முதல், விடுதலையைப் பெறுவதற்கான ஒரே வழி ஆயுதப் போராட்டந்தான் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள்’.

இந்த காரணத்துக்காக அவருக்கு விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையிலான சண்டைகள் பற்றிய வீடியோக்கள் காண்பிக்கப்பட்டுள்ளன. 12 வது வயதில், காட்டில் உள்ள பயிற்சி முகாமுக்கு அவர் அனுப்பப்பட்டார்.

அங்கு, 120 பள்ளிக்கூடச் சிறுவர்கள், தமது விடுமுறை காலத்தில், கெரில்லா படைப்பிரிவு ஒன்றில், ஆயுதப்பயிற்சியைப் பெற்றார்கள். காலை 4 மணிக்கு ஆரம்பமாகும் அந்த பயிற்சிகள் தினமும் இரவு 9 மணிவரை தொடருமாம்.

சீன ரி-56 ரக ரைபிள்கள் மற்றும் கையெறி குண்டுகளை அவர்கள் இயக்க பயின்றார்கள். அந்த பயங்கரவாதப் பள்ளிக்கூடம் அவர்களுக்கு, இலக்குப் பார்த்து சுடுதல், மன ஒருமைப்பாட்டுக்கான தியானம், ஆயுதங்களை துடைத்தல் மற்றும் தாக்குதல் பயிற்சி ஆகியவற்றை போதித்தது.

மதியம் 12.30 மணிக்கு முன்னதாக அந்த சிறார் போராளிகளுக்கு தண்ணீரைத் தவிர எதுவும் கொடுக்கப்படாது. பாடங்களுக்கு இடையே அவர்களுக்கு புலிகளின் தொலைக்காட்சியில் இருந்து போர் படங்கள் காண்பிக்கப்படும்.

16 வயதில் தற்கொலை தாக்குதலாளியாக தயாளன் தெரிவானார். தற்கொலை தாக்குதல்களை நடத்துவதில் விடுதலைப்புலிகள் முன்னோடிகள். அவை அல் கைதாவினராலும், மேலும் பலராலும் பின்னர் காப்பியடிக்கப்பட்டன.

கரும்புலிகளின் தற்கொலையணி ஒன்று நிலைகொண்டுள்ள ஒரு முகாமுள்ள புதுக்குடியிருப்புக்கு தயாளன் அனுப்பப்பட்டார். காலனித்துவ ஆட்சியின் எதிரொலியாக இலங்கையின் கல்வி முறைமை பிரிட்டிஷ் முறையை அடிப்படையாகக் கொண்டதாகும். தனது பயிற்சிகளை ஆரம்பித்தபோது தயாளன் தனது ஓ-லெவலை செய்திருந்தார்.

‘நான் அங்கு வந்ததும், அவர்கள், எனக்கு, இலக்கை எவ்வாறு அடைவது என்பதை கற்றுக்கொடுத்தார்கள். தற்கொலை அங்கி அணிந்திருக்கும் போது நாங்கள் எவ்வாறு நடந்து செல்ல வேண்டும் என்பதை எங்களுக்கு அவர்கள் கற்றுக்கொடுத்தார்கள்.’

‘என்னைப் போன்ற மெல்லிய பெடியன்களையே கரும்புலிகள் தெரிவு செய்வார்கள். மெலிந்திருந்தால்தான் நாங்கள் வெடிகுண்டை மறைத்து எடுத்துச் செல்ல முடியும். தாக்குதலின் தேவையைப் பொறுத்து, தற்கொலை வெடிகுண்டின் எடை 600 கிராமில் இருந்து 3.5 கிலோ வரை மாறுபடும்.’

‘எனது இடுப்புக்கு அருகே கையிடுக்கில் இருக்கும் ஆழியை இயக்குவதன் மூலம் குண்டை நான் வெடிக்கச் செய்ய முடியும். வெடிப்பு வெளிப்புறம் நோக்கியதாக இருக்கும். எனக்கு பின்புறமாக அல்லது என்னைச் சுற்ற எல்லா பக்கங்களிலும் சேதம் மிகவும் பாரதூரமானதாக இருக்கும்.’

‘என்னுடைய பயிற்சி முடிந்தபோது நான் கொலை செய்ய தயாராக இருந்தேன்.’

வவுனியா மாவட்டத்தில் ஒரு இலகு ரக விமானத்தை தாக்குவதே தயாளனில் இலக்காக இருந்தது.

தற்கொலைத் தாக்குதலுக்காக தெரிவு செய்யப்படும் பெடியன்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் உணவுக்காக அழைக்கப்படுவார்கள். ‘எனது தாய், தந்தை இரண்டு பேராகவும் அவரை நான் மதித்ததால், அவரை சந்திப்பதால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.’

தயாளனின் மறுவாழ்வுப் பயிற்சியாளர்களான கப்டன் வீரசிங்க மற்றும் மேஜர் ஹேர்மன் ஆகியோர் பார்த்துக்கொண்டிருக்கையில், அவரிடம் கேட்டேன்,’ இப்போது உங்கள் அபிப்பிராயம் என்ன?’

நான் ஒரு தவறான வழியில் வழி நடத்தப்பட்டு விட்டேன் என்று நான் இப்போது உணருகிறேன் என்று பதிலளித்தார் தயாளன்.

நான் பள்ளிக்கூடத்துக்கு திரும்பி, எனது தாக்குதல் நடவடிக்கைக்காக காத்திருந்தேன் என்றார் அவர். தனது பள்ளிக்கூடத்துக்கு திரும்புவதற்கு முன்னதாக ஒரு இண்டர்நெட் கபேக்கு சென்று தனது ஓ-லெவல் பரிட்சை முடிவுகளை தனது பள்ளிக்கூட இணையத்தில் இருந்து அவர் தரவிறக்கம் செய்தார்.

‘அதுதான் எனது வாழ்வின் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. எனது பெறுபேறுகளை என்னால் நம்ப முடியவில்லை. 6 ஏ, 2 பி, 2 சி எனது முடிவு. எனது வாழ்க்கையில் வேறு எதனையோ சாதிக்க முடியும் என்று நான் உணர்ந்தேன். நான் சாகக் கூடாது என்று நான் முடிவு செய்தேன்’ என்றார் அவர்.

ஆனல், புலிகளைப் பொறுத்தவரை இயக்கத்தில் இருந்து விலகுவதற்கான விலை மரணந்தான். தற்கொலைப் படையின் ஒரு போராளி கைது செய்யப்பட்டு, அந்த குறிப்பிட்ட தாக்குதல் நடவடிக்கை கைவிடப்பட்ட போதுதான் தயாளனுக்கு அதிர்ஸ்டம் திரும்பியது. இலங்கை உளவுப் பிரிவினரால் தயாளன் புலன்விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் சித்திரவதை செய்யப்பட்டாரா?, அவரிடம் கேட்ட்டேன்.

‘அந்த தண்டனை எனக்கு தேவையானதுதான் என்பதை நான் புரிந்துகொண்டேன். ஆகவே அதனை ஒரு சித்திரவதையாக நான் கூறமாட்டேன்’ என்று கீழே பார்த்தவாறு கூறினார் தயாளன். ‘முதலில் நான் எந்த உண்மையையும் கூற மறுத்தேன், ஆனால் பின்னர் எல்லாவற்றையும் நான் கூறிவிட்டேன். பின்னர் என்னை அவர்கள் இங்கே அனுப்பினார்கள்’ என்றார் தயாளன்.

இங்கு வந்த போது முதலில் அவர் வலிப்பால் அவதிப்பட்டார். பெரும் அழுத்தத்தில் அவர் இருந்தார். இப்போது எவ்வளவோ பரவாயில்லை என்றார் அவர்.

பெரும் அதிரடி மாற்றமாக, இப்போது தமது முகாமை நடத்துபவரை தனது புதிய தந்தையாக தான் பார்ப்பதாக அவர் எம்மிடம் கூறினார். நாங்கள் அவரிடம் தனியாக பேசலாம் என்று அவரது போதகர்கள் எமக்கு கூறினார்கள். ஆனால், தயாளன் தேவையில்லை என்று மறுத்துவிட்டார்.

செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியுள்ள புத்தகங்களின் மூலம் அந்த முகாமிலேயே அவர் இப்போது தனது க.பொ.த உயர்தர கல்வியை பயிலுகிறார். அதற்காக அவருக்கு 6000 ரூபாவை அவர்கள் வழங்கியுள்ளனர். பொறியியல் பட்டம் பயில தான் விரும்புவதாக அவர் என்னிடம் கூறினார்.

தயாளனின் இந்தக் கதை நெஞ்சைத்தொடுவதாக இருக்கலாம். ஆனால், இலங்கை தமிழ் சமூகத்தின் பரந்துபட்ட நிலைமை பிரச்சினைக்கு உரியதாகவே இருக்கிறது. இரண்டு வருடங்களுக்குள் விடுதலைப்புலிகளின் நிலையை கிட்டத்தட்ட இலங்கை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவந்து விட்டது. வரலாற்று வெற்றியின் விழிம்பில் தற்போது தாம் நிற்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.

கொடுத்த விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. ஜனவரியில், விடுதலைப்புலிகள் கிளிநொச்சியில் உள்ள தமது தலைநகரை விட்டு வெளியேறியது முதல், இரண்டு லட்சம் தமிழ் பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள் என்றும், 4500 பேர் பலியானார்கள் என்றும், 12,000 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் ஐ. நா மதிப்பிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்துக்கும் இடையில் அகப்பட்ட நிலையில், பாதுகாப்பு வலயம் அல்லது தாக்குதல் சூனியப் பிரதேசம் என்று கூறப்படும் பகுதியில்தான் இழப்புக்கள் அதிகம்.

இந்த பெரிய இராணுவ வெற்றிக்குப் பிறகு, சாதாரண தமிழ் மக்களுக்கு அமைதியை வென்றுதர இலங்கை முன்வரவேண்டும். பிரபாகரன் உயிருடன் இருக்கும் வரை விடுதலைப்புலிகள் மீண்டும் அணி திரண்டு, வெளிநாட்டில் பெருமளவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்தின் பண உதவியுடன் மீண்டும் வருவதற்கான ஆபத்து இருக்கிறது.

விடுதலைப்புலிகள் தமது பிரதேசங்களை இழந்தாலும், எஞ்சிய சிலர் தலைமறைவாகி, தலைநகர் கொழும்பு போன்ற இடங்களில், புதிய வகையிலான கெரில்லா தாக்குதல்களை நடத்தலாம் என்ற அச்சமும் காணப்படுகின்றது.

இந்த பின்னடைவுகளுக்குப் எதிராக, பிரதேசங்களை கைப்பற்றும் போரில் வென்ற பிறகு, முழுமையான அமைதி திரும்ப வேண்டுமானால், தமிழ் மக்களின் நம்பிக்கையை வெற்றிகொள்ள வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கம் உணர்வதும் மிகவும் முக்கியமானதாகும்.

  மொழிபெயர்ப்பு :இனியொரு. 

Exit mobile version