Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சி.வி. வேலுப்பிள்ளையின் தேயிலைத் தோட்டத்திலே கவிதைகள் காலத்தின் கண்ணாடி : சை.கிங்ஸ்லி கோமஸ்

மலையக மக்களின் இருப்பு இன்று கேள்விக்குறியாகியுள்ளது என்பது பலராலும் அடையாளம்காட்டப்பட்டு இருக்கின்றது.இந்த கணிணி யுகத்திலும் இலங்கையின் மலையக மக்கள் என்போர் மலைவாழ்சாதியினரா என்று அயல் நாடான இந்தியாவிலேயே கேட்பதாக பலரும் கவலைப்படுகின்றனர் இதுவரையிலும் இந்த மக்களை பிரதிநிதிதிதுவப்படுத்துவோர் என்று கூறிக்கொண்டு வெளிநாடுகளுக்கு பயணம் செய்தவர்களைப்பார்த்து பல்லாயிரம் கேள்விகளைக்கேட்க வேண்டியவர்களாக நாமும் நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.

இவர்களோடு ஒப்பிட்டு நோக்கும் போது 1956 ஆம் ஆண்டிலே ஆங்கில மொழியிலே மலையக மக்களின் அடையாளங்களை உலகத்திற்கு எடுத்தியம்புவதற்காய்  In Ceylons Tea Garden என்னும் புத்தகத்தை சி.வி படைத்துள்ளார் என்றால் மிகையாகாது.

ரஸ்ய கவிஞனும் போராளியுமான மாயாகோவ்ஸ்கி ‘I see finished literary work as a weapon  நான் எனது இலக்கியங்களை படைத்ததன் பின் அவற்றை ஆயுதங்களாகவே நோக்குகின்றேன் என்கின்றார். ஏனெனில் அவரின் செயற்பாடுகள் அனைத்துமே வர்க்க கட்டமைப்பினை தகர்த்துவதற்கான ஆயுதங்களாகவே காணப்படுகின்றன மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளையின் கவிதைகளும் மக்கள் வாழ்வியலை மாற்றுவதற்கான ஆயுதங்களாகவே காணப்படுகின்றன பூக்குமேயந்த-புண்ணிய நாள்தனில்-ஆக்கம்புரிந்தவர்-அமைதி-இழந்தவர்-மூச்சிலேசுதந்திரத்-திருகலந்திடுமே மூச்சிலே விடுதலைச் சுகம்மலர்ந்திடுமே என்னும் வரிகள் மலையக தோட்டத் தொழிலாளர் தம் துயரங்களுக்கு முடிவு வெகு தொலைவில் இல்லை என்று கூறுவதாகவே காணப்படுகின்றது.

கண்ணப்பன் வேல்சிங்கம் வேலுப்பிள்ளை எனும் இயற் பெயர் கொண்ட இவர் வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் பிறந்து மலையக மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்தவர் என்றால் மிகையாகாது. ஆழப்புதைந்த தேயிலைச் செடியின் அடியில் புதைந்த அப்பனின்,  சிதை மேல் ஏழைமகனும் ஏறி மிதித்து இங்கெவர் வாழவோ தன்னுயிர் தருவான் என்னும் கவி வரிகளை படிக்கும் போது மனித நேயம் கொண்ட எவருக்கும் மேனி சிலிர்க்காதிருக்காது.

 இந்த கவிதையினை ஆங்கிலத்தில் சி.வி எழுதியது மலை வாழ் மக்கள் படும் துன்பங்களை, எம்மை அடிமைப்படுத்தி கொண்டு வந்த ஆங்கிலேயர்கள் மாத்திரம் அன்றி எம்மால் நன்மையடைந்து கொண்டு பிழைக்க வந்த கூலிகள் என்று சிறுமையோடு நோக்குபவர்களுக்கும் உழைப்பின் பெறுமதியை உணர்த்த வேண்டும் என்பதற்காகவேயாகும் .

சி.வியின் படைப்புகளை நோக்கும் போது இவர் புகழுக்காகவும் விருதுகளுக்காகவும் பட்டங்களுக்காகவும் பதவிகளுக்காகவும் இலக்கியம் படைக்க வில்லை மக்களின் உள்ள ஆதங்கங்களை இலக்கியம் எனும் வாகனத்திலேற்றி உலகிற்கு அடையாளப்படுத்தியவராவார்.

 

வியர்வை வடித்து
கூலியாய் உழைத்து
வெறுமையுள் நலிந்து
வீழுவது எல்லாம்
துயரக்கதையினும்
துன்பக்கதை.அதைத்
தொனிக்குதேபேரிகைத்(தப்பொலி)
துடிஒலிக்குமுறல்

ஏன்ற வரிகளின் மூலமாக அன்றைய மலையக மக்களின் வாழ்க்கை நிலையினை மனதுக்குள் பார்க்கக் கூடியதான அனுபவத்தினைகாட்டி நிற்பதாக அமைகின்றது.

இலக்கியங்கள் தோன்றுவதற்கு சிவி வாழ்ந்த காலத்தின் அரசியல் நெருக்கடிகளும்.அந்நெருக்கடிகளின் காரணத்தால் அவர்கள் முகம் கொடுத்த கொடுமைகளையுமே தனது படைப்புகளின் அடிநாதமாக கொண்டு படைக்கப்பட்டிருப்பதனை காணலாம்.

மக்கள் போராட்டங்களை தலைமைதாங்கி நடத்துவதிலும் இதன்பயனாக அரச யந்திரம் கட்டவிழ்த்து விடும் கொடுமைகளுக்கும் முகம் கொடுத்த சி.வி 1949 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மலையக தமிழ் மக்களுக்கு எதிரான பிரஜா உரிமை சட்டத்தினை எதிர்த்து 1952 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சத்தியா கிரக போராட்டத்தினை தலைமை தாங்கி நடத்திய முக்கிய தலைவர்களில் ஒருவராக அடையளப்படுத்ததப் படுகின்றார்.

 மக்கள் பங்கெடுக்கும் போராட்டங்களின் போது இன்றைய படைப்பாளிகள் ( மலையக) வெறும் பார்வையாளர்களாகவும் .கொச்சைத்தனமான விமர்சனங்களை முன் வைப்பவர்களாகவும் மாத்திரமே தங்களின் பங்களிப்பினை செய்துள்ளனர் என்பது பட்டறிவு. பிரஜா உரிமை சட்டத்தின் விளைவாக மலையக மக்கள் அடைந்த சொல்லொனா துயரங்களை உலகிற்கு காட்டிய-காட்டும் கண்ணாடியாக தேயிலைத் தோட்டத்திலே நூலின் கவிதைகள் அமைந்திருக்கின்றன.இந்த கவிதைகள் மக்களின் உயிர் மூச்சாக மக்களின் வேதனைகளை அனைவரையும் உணரச் செய்யும் மக்கள் கலைப்படைப்பாகவும்,ஏங்கும் மக்களின் இதய ஓலியாகவும் காணப்பட்டதென்றால் மிகையாகாது.

புழுதி படுக்கையில்-புதைந்த என் மக்களை-போற்றும் இரங்கற்-புகல் மொழி இல்லை-புரிந்தவர் நினைவுநாள்-பகருவர் இல்லை. எனும் வரிகளின் மூலம் உழைப்பு உறிஞ்சப்பட்ட பின் சக்கையாக எறியப்பட்ட மலையக தொழிலாளர்களின் ஏக்கங்கள் அடையாளப்படுத்தப் படுகின்றது.

1883-1930 காலங்களின் புரட்சிக்கவிஞன் மாயாகோவ்ஸ்கியின் ‘‘call to account’’ என்னும்கவிதையின்

The drum of war thunders and thunders.
It calls: thrust iron in to the living.
From every country
Slave after slave
 

என்னும் கவிதைவரிகளை ஞாபகம ஊட்டும் வகையில் சிவியின் பின் வரும் வரிகளும் காணப்படுகின்றன.

and so the tom-toms throb-That for hundred years-In fetterd darkness held….. தப்பொலி கொட்டட்டும் தப்பொலி கொட்டட்டும் நூறாண்டு காலமாய் நுழைந்த இவ்விருட்டை வேரோடழிக்க என்னும் வரிகள் ஞாபகமூட்டி நிற்கின்றன தன்னை மக்கள் இலக்கிய வாதியாய் அடையாளப்படுத்திய சி.வி மக்களுக்காக மக்களுடன் மக்களின் தேவையறிந்து வாழ்ந்தவர் எனும் பெறுமையினை அடைகின்றார்.

 வேலுப்பிள்ளையின் படைப்புகளை வெறுமனே இலக்கியங்களாக மட்டும் நோக்காது அவற்றில் பொதிந்திருக்கும் வர்க்க விடுதலைக்கான வேட்கையானது நிச்சயம் அவதானிக்கவேண்டிய விடயமாகும்.

I SING OF LANKAS MEN / BORN OF THE PADDY FIELD/THE PATANAS /THE TEA AND RUBBER LAND/YES THE MEN I LOVE என்ற வரிகளை நோக்கும் போது சிவி மலையக மக்களுக்காகன இலக்கியங்களை மாத்திரம் படைக்க வில்லை அனைத்து உழைக்கும் மக்களுக்காகவும் குரல் கொடுத்தவர் என்ற பெயரையும் பெறுகின்றார்.

திரு சக்திபாலைய்யா.மலையான் ஆகியோர் சி.வியின் கவிதைகளை தமிழாக்கம் செய்துள்ளமை பாராட்டப்பட வேண்டிய விடயமாகும் இந்த முயற்சியில் இதற்கு முன்னும் தற்பொழுதும் பலர் ஈடுபட்டு வருவது சி;வியின் இலக்கிய ஆளுமையினை புதிய தலைமுறையினருக்கு அனுபவிக்க சந்தர்ப்பத்தினை வழங்குவதாக காணப்படுகின்றது இவை மக்கள் இலக்கியங்கள் மாண்புடையவை என்பதற்கு அடையாளமாகவும் காணப்படுகின்றது.சி.வியின் ஆங்கில மொழி மூலமானகவிதைகளில் காணப்படும் இதயத்தினை வலிக்கச்செய்யும் உணர்ச்சியினை வழங்கக்கூடியதான எளிமையான மொழிபெயர்ப்புக்கள் மிக நிதானமாக செய்யப்பட வேண்டும்.

In Ceylons Tea Garden  புத்தகத்தினை நவீன வடிவில் வழங்கிய பாக்கியா பதிப்பகத்தாருக்கும் நண்பர் திலகருக்கும் நன்றிகூற வேண்டியது மலையக இலக்கிய நேயர்களின் கடப்பாடாகும்.காலத்தால் அழியா படைப்புகளை தந்துள்ள சி.வேலுப்பிள்ளை பேராசிரியர் கைலாசபதியின் நேசத்திற்கு பாத்திரமானவர் என்பது பெருமைப்பட வேண்டிய விடயமாகும்.

மலையக மக்கள் கண்ட இலக்கிய படைப்பாளிகளில் போற்றத்தக்க படைப்பாளி சிவி என்றால் மிகையாகாது 1950களில் படைக்கப்பட்ட இலக்கியங்கள் இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்தக் கூடியதான காத்திரமான படைப்புகளாக இருக்கின்றது.

Exit mobile version