கிழக்கு மாகாணம் தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த காற்றுடன் கூடிய மழையின் காரணமாகப் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. அரைநூற்றாண்டுக்குப் பின்னர் வட கீழ் பருவ மழை மிக உக்கிரமாகப் பெய்து வருகிறது. பெய்து வரும் கன மழை மற்றும் வெள்ளத்தினால் 8 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சுமார் 70 ஆயிரம் பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறி தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.
கிழக்கு மாகாணத்திலுள்ள பல பாடசாலைகள் இன்று மூடப்பட்டுள்ளன. ஆயினும் தற்போதைய செய்திகளின் படி கிழக்கு மாகாணப் பாடசாலைகளை 5 தினங்களுக்கு மூடத் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. நான்கு இலட்சம் பேர்; மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இயல்பு வாழ்க்கை முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. சுமார் ஒன்றரை இலட்சம் பேர் இடம் பெயர்ந்து பொது இடங்களிலும் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளார்கள்.
குளங்களின் நீர் மட்டம் அதிகரித்த நிலையில் அவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு வாவியின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளது. குளங்கள், வாவிகளுக்கு அருகில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பல நாட்களாகவே படுவான்கரைப் பிரதேசத்தில் பல கிராமங்களும் வீதிகளும் வெள்ளத்தில் முழ்கியிருக்கின்றன. இதன் காரணமாக நகரப்பகுதிகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இம்மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் போக்கு வரத்திற்கு இயந்திரப் படகுச் சேவைகள் நடாத்தப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ள கிராம மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
மட்டக்களப்பு – கொழும்பு புகையிரத சேவை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வீசிய பலத்த காற்றினால் கூரைகள் தூக்கியெறியப்பட்டுள்ளன.
பெருமளவு வயல் நிலங்கள் பல நாட்களாக வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன். மழை காரணமாக தினசரி கூலி வேலை செய்து பிழைப்பு நடாத்திய மக்கள் தொழில் மற்றும் வருமானத்தை இழந்து போயுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் நேற்றிரவு மட்டும் சராசரியாக 200 மி.மீ மழை பெய்திருப்பதுடன் அக்கரைப்பற்றில் 215 மி.மீ மழை பெய்திருக்கிறது. கன மழையினால் அம்பாறையில் மூன்றரை இலட்சம் பேர் மோசமகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட 25 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் நூற்றுக்கணக்கான முகாம்களில் தற்காலிகமாக தங்கியிருக்கிறார்கள். வீடு இடிந்து விழுந்து ஒருவர் பலியாகியுள்ளார். வீதிகளில் வெள்ளம் பாய்வதால் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. கல்முனை – அம்பாறை வீதிப் போக்குரவத்தும் அக்கரைப்பற்று – பொத்துவில் வீதிப் போக்குரவத்தும் தடைப்பட்டுள்ளது. அதே வேளை பல பாடசாலைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கடல் கொந்தளிப்பினால் மீன் பிடித் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
திருகோணமலையில் பெருமளவிலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மூதூர் பிரதேசத்திலுள்ள சகல கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இடம் பெயர்ந்து இதுவரை மீளக்குடியேற முயடிhத மக்கள் தங்கியிருந்த நலன்புரி நிலையங்கள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மின்னல் தாக்கத்தினாலும் இருவர் உயிரிழந்திருக்கிறார்கள்.
மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவினால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கண்டியில் ஏற்பட்ட மண்சரிவினால் 7 பேர் உயிரிழந்திருப்துடன் 5 பேர் காயமடைந்துள்ளார்கள். பதுளையில் ஏற்பட்ட மண்சரிவில் இரு பிள்ளைகள் உயிருடன் புதையுண்டிருக்கிறார்கள பசறைப் பகுதியும் வீசிய மினி சூறாவளி மற்றும் கன மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணப் பாடசாலைகள் இன்று மூடப்பட்டுள்ளன. ஆயினும் மழை தொடரும் நிலையில் மேலும் சில தினங்களிற்கு இப் பாடசாலைகளும்; மூடப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆயினும் அரசாங்கம் நிவாரணம் வழங்குவதில் போதிய அக்கறை காட்டவில்லை எனவும் நிவாரணம் வழங்கக் கூடிய நிறுவனங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளால் போதிய நிவாரணங்களை வழங்க முடியாதிருப்பதாகவும் தெரிய வருகிறது. பல பகுதிகளிலிமிருந்தும் நிவாரண உதவிகளை வழங்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முதியவர்களும் குழந்தைகளும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நாட்டில் நிலவும் மிக மோசமான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பாக அரசாங்கம் போதிய அக்கறை காட்டவில்லை என்ற நிலையில் நிலைமை மேலும் மோசமடையும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.