Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மக்களை முகாம்களில் அடைத்து வைத்திருப்பது நியாயமானதே! : அரச ஆதரவு புலம்பெயர் தமிழர் குழு

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப்பேரவலத்தை நிகழ்த்தும் இலங்கை அரசை நியாயப்படுத்தும் புலம் பெயர் தமிழர்கள் நோயல் நடேசன் (அவுஸ்ரேலியா),டாக்டர். ராஜசிங்கம் நரேந்திரன்( மத்திய கிழக்கு),திருமதி. ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்(ஐக்கிய இராட்சியம்),மனோரஞ்சன் செல்லையா(கனடா),ராஜரட்ணம் சிவநாதன் (அவுஸ்ரேலியா)

ஆகியோர் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள அறிக்கையை இலங்கை அரச சார்பு ஊடகங்கள் முக்கியத்துவப்படுத்தி வெளியிட்டுள்ளன. புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் இலங்கை அரசு தனது வேலைகளை தீவிரப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ள வேளையில் இனப்படுகொலையை நியாயப்படுத்தும் இவ்வறிக்கையின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளதால் இதன் தமிழாக்கத்தை வெளியிடுகிறோம்.

2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எம்மால் இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்ட விஜயத்தை அடுத்து, இலங்கை இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் ஏற்பட்டிருக்கின்ற முன்னேற்றங்களைக் கண்டறிதல் மற்றும் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்த இலங்கை நிலவரங்களை மதிப்பிடுதல் ஆகிய நோக்கிலேயே இலங்கைக்கான எமது அண்மைய ( ஜூலை 2009) விஜயம் அமைந்திருந்தது. அரசாங்க சிரேஸ்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பௌத்த மதகுருமார், கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஐ.நா அதிகாரிகள் ஆகியோரை இந்த விஜயத்தின் போது நாங்கள் சந்தித்தோம். செட்டிக்குளத்தில் இருக்கின்ற இடம்பெயர்ந்தொருக்கான முகாம், அம்பேபுஸ்ஸவில் உள்ள புனர்வாழ்வு நிலையம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு செல்ல எங்களுக்கு அரசாங்கம் வாய்ப்பளித்திருந்தது.

இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களின் நிலைமைகள் முழுமையானவை என்று விபரிக்கப்பட முடியாவிட்டாலும், அங்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை நாங்கள் பார்த்தோம். இந்த முகாம்கள் தற்காலிகமானவை என்று வலியுறுத்துகின்ற ஐ. நா நிறுவனங்கள், அங்குள்ள வதிவிட மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் அதே தன்மை கொண்டவை என்று அழுத்திக் கூறுகின்றன. எப்படியிருந்த போதிலும், இலங்கை அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட குடியிருப்புகள் மற்றும் மலசல கூடங்கள், ஐ.நா அமைப்புக்களால் நிர்மாணிக்கப்பட்டவற்றைப் பார்க்கிலும் சிறப்பானவையாகவும், சீதோஷ்ணநிலைக்கு பொருத்தமானவையாகவும் இருந்ததை அவதானிக்க முடிந்தது. ஐ.நா நிறுவனங்கள் ஒருவேளை ‘’தற்காலிகம்’’ என்ற பதத்துக்கான அவர்களது வரைவிலக்கணக்கத்துக்கு அமைய செயற்பட்டிருக்கலாம். அத்துடன், குடியிருப்புக்களை நிர்மாணிப்பதற்கு அவர்கள் பயன்படுத்துகின்ற கட்டுமானப் பொருட்களும் உலகெங்கிலும் அவர்கள் தரங்களுக்கு அமைய பயன்படுத்தப்பட்டிருக்கலாம். பள்ளிக்கூடங்கள், கோயில்கள், கடைகள், வங்கிகள், வாசிக அறைகள் மற்றும் மருத்துவ நிலையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு செயற்படு சமூகமாக இடம்பெயர்ந்தோர் முகாம்கள் மாறியிருக்கின்றன. இந்த முகாம்களில் எஞ்சியிருக்கின்ற மட்டுப்பாடுகள், பெரும்பாலும் அவை தற்காலிகமானவை என்ற அடிப்படையில் இருந்தே எழுந்திருக்கின்றன. முகாம்களை சுற்றவரவுள்ள முட்கம்பிகள் இன்னமும் அப்படியே இருக்கின்றன. மருத்துவ காரணங்களுக்காக வவுனியா மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டால் அன்றி, முகாம்களில் இருக்கின்ற இடம்பெயர்ந்தோர், அவற்றுக்கு வெளியே சென்று, வர அனுமதியில்லை. இந்த வெளியே சென்று வருவதற்கான கட்டுப்பாடுகள் குறித்து அங்கு தங்கியிருப்போரிடம் இருந்து எந்தவிதமான புகார்களும் எங்களுக்கு கூறப்படவில்லை. அகதிகளுக்கான பாதுகாப்பு குறித்த கரிசனைகள் இன்னமும் முக்கியமானவையாகவே இருக்கின்றன. அத்துடன் கட்டுப்பாடுகள் அங்கிருப்போரைப் பொறுத்தவரை ஏற்கக்கூடியவையே.

போர் முனையில் மரணவாசலுக்கு சென்று வந்தமை மற்றும் ஏனைய பயங்கரமான அனுபவங்களுக்குப் பிறகு இங்கு ஒரு பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவே அங்குள்ளவர்கள் நின்மதியடைவதாக, அவர்களுடன் கலந்துரையாடியதில் இருந்து தெரியவந்தது. குடும்பங்கள் பிரிந்திருப்பது மற்றும் காணாமல் போன தமது உறவினர்களின் நிலைமை ஆகியவை குறித்தே அவர்கள் பெரும் கவலை கொண்டிருக்கிறார்கள். போர் முனையில் ஆயுத பிரயோகங்களால் உயிரிழந்த அல்லது அங்கிருந்து தப்ப முயற்சித்தபோது விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட தமது உறவுகளின் நினைவுகளால் பலர் இன்னமும் கண்ணீர் சிந்துகிறார்கள். விடுதலைப்புலிகள் தமது இளம் பிள்ளைகளை எவ்வாறு கொடுரமாக படைக்கு ஆட்சேர்த்தார்கள் அல்லது அவர்களிடம் இருந்து பிள்ளைகளை பாதுகாப்பதற்கு தாம் எவ்வாறு முயற்சித்தோம் என்பது பற்றிய நெஞ்சைப் பிழியும் பல கதைகளை அவர்களிடம் இருந்து நாங்கள் கேட்டோம். தப்பிச் சென்ற இடங்களில் கள்ளச் சந்தையில் விடுதலைப்புலிகள் அத்தியாவசிய உணவுப்பொருட்களை பெருத்த விலைக்கு விற்றதையும் மற்றும் அளவுக்கு அதிகமாக பொருட்களை அவர்கள் சேர்த்து வைத்திருந்ததையும் மிகுந்த விசனத்துடன் அவர்கள் அடிக்கடி கூறினார்கள். நான்காம் கட்ட ஈழப் போரின் போது விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் குறித்து எங்களுடன் பேசிய அங்கிருக்கின்ற மக்கள் மிகுந்த விசனம் காண்பித்தனர். கண்ணை மூடிக்கொண்டு விடுதலைப்புலிகளை ஆதரித்ததற்காக புலம்பெயர் தமிழர்கள் மீதும் அவர்கள் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தனர்.

அளவுக்கு அதிகமான எண்ணிக்கையிலான மரணங்கள், நோய்கள் மற்றும் பாலியல் வல்லுறவு போன்ற வன்செயல் சம்பவங்கள் குறித்த தகவல்கள் குறித்து முகாம்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுடனும், அங்கு தங்கியிருப்பவர்களுடனும் கலந்துரையாடப்பட்டது. சராசரியான தினசரி மரணங்கள் ஐ.நாவினால் நிர்ணயிக்கப்பட்ட, ஏற்கக்கூடிய நியமங்களுக்குள் இருந்ததுடன், இறப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்களாகவும் இருந்தனர். முகாம்களுக்கு வந்தடைந்தவர்கள் மிகவும் விரக்திமிகு சூழ்நிலையிலேயே வந்திருந்தார்கள் என்ற யதார்த்தமும் மற்றும் அவர்களது மிகவும் மோசமான உடல்நிலையும், வயதானவர்களின் மரணங்களில் பெரும்பங்காற்றியிருக்கலாம். கடற்கரையில் குளிகளில் இருந்து தாம் நீர் அருந்தியதாக அங்கிருந்தவர்கள் கூறினார்கள். அதே கடற்கரைகள்தான் அவர்களுக்கு மலசல கூடங்களாகவும் பயன்பட்டன. போரின் இறுதிக்கட்டத்தில் அவர்கள் அருந்திய குடிநீரும் மற்றும் அவர்கள் வாழ்ந்த சன நெருக்கடி மிக்க சுகாதாரமற்ற நிலைமைகளும் முகாம்களில் தற்போது காணப்படும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு காரணமாகியிருப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. மூளைக்காய்ச்சல் மற்றும் ஏனைய கொடிய நோய்கள் பற்றி முகாம்களில் எந்தவிதமான பதிவுகளும் கிடையாது.

மீள் குடியேற்ற நடவடிக்கைகள் வார காலத்துக்குள் ஆரம்பித்து வேகமாக நடைபெறும் என்று மூத்த அமைச்சர்களும், அதிகாரிகளும் எதிர்பார்க்கிறார்கள். நிலக்கண்ணி புதைக்கப்பட்ட இடங்கள் ஆபத்தில்லாதவை என்று ஐ.நாவால் சான்று வழங்கப்பட வேண்டும், அதன் பின்னரே மீள்குடியேற்றத்தை ஆரம்பிக்க முடியும். நிலக்கண்ணிகளை அகற்றும் நடவடிக்கைகள் இலங்கை இராணுவப்படைகள், ஐ.நாவினர் மற்றும் இந்திய இராணுவம் ஆகியவற்றின் பங்களிப்புடன் நடக்கின்றன. ஏ9 மற்றும் 35 ஆகியவற்றுக்கு மேற்கே உள்ள பகுதிகள் மற்றும் வவுனியாவைச் சுற்றவரவுள்ள கிராமங்களில் பெரும்பாலும் நிலக்கண்ணி அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடிப்படை உட்கட்டுமானங்களை மீளக்கட்டுவதற்கான பணிகள் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ அவர்களின் மேற்பார்வையில் நடக்கின்றன. என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான விபரமான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அது எமக்கு காண்பிக்கப்பட்டது. யாழ் குடா நாட்டில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு சில வாரங்களில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். இடம்பெயர்ந்தவர்களில் வயதானவர்களை அவர்களது உறவினர்களிடம் மீள குடியேற்றும் நடவடிக்கையின் ஒரு கட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இருந்தபோதிலும் மீள்குடியேற்றுவதற்கு அடையாளம் காணப்பட்ட சில வயதானவர்களின் உறவினர்கள் அவர்களை ஏற்க முன்வரவில்லை.

தமது சொந்த வீடுகள், கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு திரும்புவதற்கான ஆர்வம் இடம்பெயர்ந்தோர் மத்தியில் பலமாக காணப்படுகின்றது. இருந்தபோதிலும், அது விரைவாக நடக்க வேண்டும் என்பதற்கான தென்படக் கூடிய கோரிக்கைகள் இல்லை. ஏனென்றால், போரினால் ஏற்பட்ட பேரழிவு, மற்றும் நிலக்கண்ணிகள் மற்றும் விடுதலைப்புலிகள் விட்டுச் சென்ற ஆயுதங்கள் ஆகியவற்றினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து இடம்பெயர்ந்தவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எதிர்ப்புணர்வு மற்றும் எதிர் நடவடிக்கைகளை தவிர்க்கும் நோக்கில், முடிந்தவரை விரைவாக, இந்த இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த அரசாங்கம் திடசங்கர்ப்பம் பூண வேண்டும்.

அம்பேபுஸ்ஸ இளம் போராளிகளின் புனர்வாழ்வு முகாமுக்கான எமது விஜயத்தின்போது, விடுதலைப்புலிகளினால், சிறார்கள் கடத்தப்பட்டதுடன் தொடர்புடையை பேரனர்த்தத்தின் ஆழத்தை அறிய முடிந்தது. 11 வயது வரையிலான இளைய சிறார்களும், சிறுமிகளும் இந்த முகாமில் இருக்கிறார்கள். பல சிறுமிகள் இந்த முகாமில்தான் பூப்பெய்துகிறார்கள். வேறு சிலர் கர்ப்பிணிகளாக இருக்கிறார்கள். சிலரது விடயத்தில் குழந்தைகளின் தந்தைகளின் அடையாளம் தெரிந்திருக்கிறது. வேறு சிலவற்றைப் பொறுத்தவரை அது தெரியவில்லை(இதே மாதிரியான ஒரு பிரச்சினை இடம்பெயர்ந்தோர் முகாம்களிலும் இருக்கின்றது). முன்னாள் போராளிகளான சிறார்களில் பெரும்பாலானோர் புத்திக்கூர்மை மிக்கவர்களாகவும், தமக்கு நேர்ந்த இடரின் தார்ப்பரியத்தை புரிந்துகொள்ளும் தகமையுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். விடுதலைப்புலிகள் மீதும், தம்மால் புரிந்துகொள்ள முடியாத காரணத்தைக் கொண்ட ஒரு போரில் தாம் இழுத்து விடப்பட்ட விதம் குறித்தும் விமர்சனங்களை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். இந்த முகாமின் நிலைமை மிகவும் சாதகமானதாகவும், மறுவார்வு நடவடிக்கைகளுக்கு ஏற்புடையதாகவும் இருந்ததை நாம் பார்த்தோம்.

எதிர்கால சந்ததியின் தேவைக்காக இந்த சிறார் போராளிகளின் கதைகளை விஞ்ஞான பூர்வமாகவும் மற்றும் உள்ளதை உள்ளபடியும் பதிவு செய்வதற்கான முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை. எதிர்கால சந்ததிக்கான கதைகள் என்ற அளவில் மாத்திரமில்லாமல், சமூகவியல், உளயியல், மருத்துவம், நோயியல், இலக்கியம், சினிமா மற்றும் நாடகம் ஆகியவற்றுக்காகவும், ஆய்வுகளைச் செய்வதற்கான ஒரு தங்கச் சுரங்கம் இந்த இடம்பெயர்ந்தோருக்கான முகாம்கள். துரதிர்ஸ்ட வசமாக இலங்கையில் உள்ள கல்விமான்களும், பல்கலைக்கழகங்களும் இந்த விடயத்தில் இன்னமும் விழித்துக்கொள்ளவில்லை.

இடம்பெயர்ந்தோர் விவகாரம், அவர்கள் குறித்த தகவல்களை எட்டுவதற்கான போதுமான வழிகள் இன்மை, முகாம்கள், மீள்குடியேற்றத் திட்டங்கள் மற்றும் அவற்றுக்கான கால அட்டவணை, மற்றும் மீள் கட்டுமான நடவடிக்கைகள் ஆகியவற்றை கையாள்வதற்கான தகைமையுடைய மைய அதிகார நிர்வாகம் போதுமான அளவு இல்லாமை அடுத்த பின்னடைவான விடயமாக உள்ளது. இட்டம்பெயர்ந்தோர் மற்றும் அவர்கள் தொடர்பான விடயங்கள் குறித்து நம்பகத்தன்மை மிகுந்த இணையத்தளம் ஒன்று அவசர நடவடிக்கையாக ஏற்படுத்தப்படுவது பரிந்துரைக்கத்தக்கது.

கிழக்குக்கான விஜயத்தின் மூலம், மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண அரசாங்கம் ஆகியவை சம்பந்தபட்ட பல்வேறு விவகாரங்கள் காரணமாக, அங்கு மாகாண சபை இன்னமும் சரியாக செயற்படமுடியாமல் இருப்பதை காணக்கூடியதாக இருந்தது. இது, 13 வது அரசியலமைப்புத் திருத்தமும், மாகாண சபை முறைமையும் தமது அடிப்படை தேவைகளை திருப்தி செய்யும் என்பது தொடர்பிலான பல தமிழர்களின் எதிர்பார்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதன் பலனாக, போர்ப் பகுதியில் வழமை நிலைமை திரும்புவதற்கு முன்னதாக மாகாணசபை தேர்தல்களை நடத்துவதில் காண்பிக்கப்பட்ட ஆர்வமும் கேள்விக்கு உள்ளாக்கப்படலாம். அரசாங்கம் மிகுந்த சிரத்தையுடன், கிழக்கு மாகாணத்தை முடிந்தவரை செயற்திறன் மிக்கதாக செயற்பட வைத்து, அங்கு மனித மற்றும் ஏனைய வளங்கள் தொடர்பான குறைகள் ஏதும் இருப்பின், அவற்றை செயற்திறன் மிக்க வகையில் செயற்படும் நோக்கில் வழிகாட்டுவது அவசியமாகும்.இந்த முக்கியமான தருணத்தில் தமிழர்களுக்கு மீள் உறுதிகளை வழங்குவதற்கான வழியில் இந்த நடவடிக்கை இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியிருக்கும். தமது சொந்த லாபங்கள் மற்றும் திட்டங்களுக்காக கிழக்கு மாகாண நிலைமைகளை துஸ்பிரயோகம் செய்ய விளையும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கண்டறியப்பட்டு, உரிய வழியில் கையாளப்பட வேண்டும்.

யாழ் குடாவுக்கான விஜயமும், அங்கு மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களும், கிழக்கை விட நல்ல நிலைமைகள் இருப்பதை காண்பித்தன. மாநகர சபைக்கான தேர்தல் பிரச்சாரங்கள் அமைதியாக இருந்ததுடன், அவ்வாறே தென்பட்டன. இந்தத் தேர்தலின் முடிவுகள் மக்கள் கருத்தை அறிவதற்கான ஒரு புள்ளியாக இருக்கலாம். குடாநாட்டின் சனத்தொகை கடுமையாக சுருங்கியுள்ளது. சமூக படிமங்களும் கடுமையான மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன. தமிழ் அரசியலில் இந்த மாற்றங்கள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்றைய நிலையில் எந்த வகையான தலைமைத்துவம் உகந்தது, தமிழர்களின் அரசியல் எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பவை குறித்து இன்னமும் குழப்பங்கள் தெளிவுபடாத நிலை இருக்கின்ற போதிலும், உள்ளூர் மட்டத்தில் ஒரு செயற்படு அரசியல் தலைமைத்துவ குறைவு மிகவும் அதிகமாக தென்படுகிறது.

இலங்கையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்களின் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, அதேவகையான அமைப்புக்களை வெவ்வேறு நாடுகளில் ஏற்படுத்தி அவற்றினூடாக, புலம்பெயர் தமிழர்களுடன் இணைப்பை ஏற்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, மீள் கட்டுமானம் மற்றும் இலங்கை மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய தேச நிர்மாணத்தை இலக்காகக் கொண்டு, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள, பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகியவற்றில், பங்களிப்பதற்காக அரசாங்கத்தின் ஆலோசனையுடன், இலங்கையில் உள்ள இதற்கான அனைத்தின மக்களின் அமைப்பு ஒரு ‘’நம்பிக்கை நிதியத்தை’’ உருவாக்கும். இத்தகைய அமைப்பை உருவாக்குவது மற்றும் இலங்கையில் நம்பிக்கை நிதியத்தை உருவாக்குவது ஆகியவற்றை முன்னெடுப்பதற்காக ஒரு இடைக்கால குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினர் பிரச்சினைகளுக்கு ஏற்புடைய தீர்வு ஒன்றை காண்பதற்கான ஆர்வத்தை, நாம் சந்தித்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், பௌத்த மதகுருமார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பலமாக காணக்கூடியதாக இருந்தது. தற்போது அங்கிருக்கின்ற சூழ்நிலை தமிழர்களாலும், தேசிய அரசினாலும் தவற விடப்படக் கூடாத வாய்ப்புகளுக்கான ஒரு சாரளமாக இருக்கின்றது. தமது கோரிக்கைகள் யதார்த்தமானவையாக இருக்குமாறு தமிழர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். பல முனைகளிலும் தற்போதைய யதார்த்தங்களை கருத்தில் கொண்டு, தாம் மக்களாக, இலங்கை நாட்டின் ஒரு முக்கிய அம்சமாக மற்றும் தமது விவகாரங்களை தாமே நிர்வகிக்கும் நியாயமான அதிகாரங்களை பயன்படுத்தக் கூடியவர்களாக மீட்சி பெற அனுமதிக்கும் திசையில் தமது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். எமது அவதானங்கள், பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களை பொதுமக்கள் முன்பாக கொண்டு செல்லும் வகையில், பல வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் எமது குழு கலந்துகொண்டது.

கையொப்பம்

நோயல் நடேசன் (அவுஸ்ரேலியா)
டாக்டர். ராஜசிங்கம் நரேந்திரன்( மத்திய கிழக்கு)
திருமதி. ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்(ஐக்கிய இராட்சியம்)
மனோரஞ்சன் செல்லையா(கனடா)
ராஜரட்ணம் சிவநாதன் (அவுஸ்ரேலியா)
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=59396

தொடர்பான ஆக்கங்கள்:புலம்பெயர் நாடுகளில் இலங்கை அரச பயங்கரவாத வலைப்பின்னலும் மாற்று அரசியலுக்கான முன்நிபந்தனையும்

Exit mobile version