ஆம் என்கிறார் யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தின் முக்கிய பொறுப்பிற்கு தன்னை நியமிக்கக் கோரும் ரட்ணஜீவன் ஹூல். ஒக்ஸ்போர்ட் யூனியனின் மகிந்த ராஜபக்சவைப் பேச அனுமதி மறுத்தமை கருத்துச் சுதந்திர மறுப்பாகும் என்கிறார். ஒக்ஸ்போர்ட் யூனியன் கருத்துச் சுதந்திரத்தை நிறுவத் தவறிவிட்டது என்கிறார். முன்னதாக கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவில் சார்சியமளித்த பேராசிரியர் ஹூல், டக்களஸ் தேவானந்தா ஜனாதிபதி ஆகியோரைப் பாராட்டியிருந்தார்.
வடகிழக்கு இலங்கைப் புலனாய்வுத்துறையின் ஆட்சிக்குள் இருக்கிறது என்கிறது ஜே.வி,பி. மகிந்த ராஜபக்ச அப்படி இருப்பதெல்லாம் நியாயமானது தான் என்கிறார். இனச்சுத்திகரிப்பையும் திட்டமிட்ட குடியேற்றங்களையும் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தின் பெயரால் நியாயப்படுத்துகிறது இலங்கை அரசு. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் சாட்சியின்றிக் கொல்லப்பட்ட அப்பாவிகளின் இரத்தவாடையை இன்னமும் சுவாசிக்க முடிகிறது.
இவை அனைத்தையும் மீறி பாழாய்ப்போன தனது துணைவேந்தர் பதவிக்காக மகிந்த ராஜபக்சவிற்கு கருத்துச் சுதந்திரம் கோருகிறார் ரட்ணஜீவன் ஹூல்.
ஒக்ஸ்போர்ட் உரை நிறுத்தப்பட்டதான சிங்கள் தமிழ் இனவாதச் சக்திகளை வலிமைபெறச் செய்யும் என்று மேலும் சிலாகிக்கிறார் அவர். திட்டமிட்ட குடியேற்றங்கள், திடீரென முளைக்கும் பௌத்த விகாரைகள், காணாமல் போகும் மனித உரிமையாளர்கள் – பத்திரிகையாளர்கள், கொல்லபடும் கைதிகள், பௌத்த சிங்கள் இனவெறி உரைகள் இப்படி அனைத்தும் இனவாதத்தைத் தூண்டுவது பேராசிரியர் ஹூலுக்குத் தெரியாமல் போனது அவமானம். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராவதற்காக இலங்கையின் ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் நலன்களை அடகுவைத்திருக்கிறார்.
ஏற்கனவே ஊழல் சகதிக்குள் அமிழ்ந்திருக்கும் பல்கலைக்கழத்தின் எதிர்காலம் துயர்படிந்தாகவே காணப்படுகிறது. மறுபடி மறுபடி வியாபாரிகள் தமது சொந்த நலன்களுக்காக மக்களின் நலன்களை விற்பனைசெய்கிறார்கள்.