ஒன்று இரண்டல்ல 300000 அப்பாவித்தமிழர்கள் மிருகங்கள் போலப் பணயம் வைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ் பேசும் மனிதர்கள் என்ற ஒரே காரணத்திற்காக மக்கள் என்ற வரையறைக்குள் உட்படுத்தத் தயாராக இல்லாத சிறீலங்காவின் மகிந்த குடும்ப அரசு, குருதி தோய்ந்த கோர முகங்களோடு சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் குதூகலித்திருக்கிறது. மறு புறத்தில் இன்னும் வீராவேச வசனங்களோடு, மக்களைப் பற்றியே சிந்திக்காத தமிழீழ விடுதலைப் புலிகள்.
பிரபாகரன் தனது பரிவரங்களோடு தப்பிவிட, எஞ்சியிருக்கும் புலிகள் 3 லட்சம் மக்களின் மத்தியிலிருந்து “தமிழீழ தாகத்திற்காக” துப்பாகிப் பிரயோகம் செய்கிறார்கள். மகிந்த அரசு தனது பாதுகாப் வலையங்களுக்கு அப்பாவிகளை அழைத்துக் குண்டு மழை பொழிகிறது. சந்தேகமானவர்களைச் சமாதியாக்கிவிடுகிறது. குழந்தைகள் முதியவர்கள், கற்பிணிகள், நோயாளிகள் என்று எந்த வரை முறையும் கிடையாது. தமிழ் பேசும் மக்கள் என்பதே கொலைக்கான அளவுகோலாக்கப்பட்டுள்ளது.
ஆக, மகிந்த குடும்ப பாசிசம், மக்கள் பாதுகாப்புப் பிரதேசங்களை நோக்கி இடம்பெயர்வதை விரும்புவதாயில்லை. புலிகளின் நிலையும் இதே தான். மக்களோ பலமிழந்து பரிதவிக்கும் அனாதைகள். இது தான் வன்னியின் மரணச் சமன்பாடு.
இந்த மரணச் சமன்பாட்டின் சமநிலையைக் குலைக்கும் கருவிகளாக மட்டுமே மக்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். இதே சமன்பாடு தான் இன்று சூடு பிடித்திருக்கும் அரசியல் வியாபாரத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய அரசில் வாதிகளாட்டும், மகிந்த குடும்ப அரசின் அரவணைப்பில் சுகம் கண்டுகொண்டிருக்கும் முன்நாள் விடுதலை இயக்கங்களாகட்டும், புலிகளின் பாசிப் பசிக்கு தீனி போடும் துணை அமைப்புக்களாகட்டும், எல்லாவற்றிற்குமே புலிகளுக்கும் அரசிற்கும் தேவைப்படுகிற இதே சமன்பாடு தான் தேவைப்படுகிறது. மக்களின் குருதி சுமந்த கோர முகத்தோடு தம்மை மக்களின் தலைவர்களெனப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் இவர்களெல்லாம் எந்த சமரசத்திற்கும் அப்பால் அம்பலப்படுத்தப் படவேண்டும். சாகடிக்கப்படும் அப்பாவி மக்களின் பேரால் நடத்தப்படும் அரசியல் அம்பலப்படுத்தப் படுவதனூடாகவே மக்களின் எதிரிகள் இனம்காணப்படுவர். மக்களின் எதிரிகள் இனம்காணப்பட்டாலே சாவின் விழிம்பில் வைக்கப்பட்டு அரசியல் வியாபாரத்திற்காகப் பயன்படுத்தப்படும் மக்களின் அழிவு ஒரளவேனும் குறைக்கப்படும்.
இன்றைய துயர்படர்ந்த சூழலில் போருக்குள் சிக்கித்தவிக்கும் 3 லட்சம் மக்களின் மனித அவலத்தில் தீர்மானகரமான பாத்திரம் வகிக்கவல்ல ஐந்து பிரதான சக்திகளைக் குறிப்பிடலாம்.
1. இலங்கை அரசும் அதன் ஆதரவாளர்களும்.
இலங்கையின் மகிந்த குடும்ப அரசின் ஆதரவு சக்திகள் இரண்டு பிரதான வகைக்குள் உள்படுத்தப்படலாம்.
– அரசின் எதேச்சதிகாரப் போக்கில் அதிர்ப்திகொள்பவர்களாகக் காட்டிகொண்டாலும், புலிகளை அழிக்கும் நோக்கத்திற்காக அரசுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்ற கருத்தை
– நிபந்தனையின்றி அரசிற்கு ஆதரவளிக்கும் பாசிச பேரினவாதப் போக்குடையவர்கள்.
இந்த இருபகுதியினருமே ஏதாவது ஒருவகையில் மக்களின் அழிவிலிருந்து அதுவும் அப்பாவிப் பொதுமக்களினது குழந்தைகளினதும் சாம்பல் மேட்டிலிருந்து ஜனநாயகப் பூக்கள் மலரும் என கோழைத் தனமாகப் பிரச்சாரம் செய்யும், மனித விழுமியங்களைக் குழிதோண்டிப் புதைகுழிக்குள் அனுப்பிவிட்டு போரை ரசித்துக் கொள்ளும் குரூரம் மிக்கவர்கள்.
“ஜனநாயகத்திற்கான” போரில் அழிவுகள் தவிர்க்க முடியாது என்று புலிகள் சொன்னதையும், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானில் அமரிக்கா சொன்னதையும், ஜேர்மனியில் ஹிட்லர் சொன்னதையும், போலந்தில் ரஷ்யா சொன்னதையும் மறுபடி மறுபடி உச்சாடனம் செய்யும் மனித நேயமற்ற பாசிசத்தின் அடிவருடிகள் இவர்கள். எல்லா மனித விரோத கொடுங்கோலர்களிடமும் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன “அழிவு தவிர்க்க முடியாதது” என்ற அதே வார்த்தைகளைத் தான் இவர்களும் உச்சரிக்கிறார்கள்.
சொந்த மக்களின் அழிவைத் தவிர்க்க வேண்டுமென்று அரசு எண்ணியிருந்தால் சர்வதேசங்கள் மலிந்துகிடக்கும் மனிதாபிமான அமைப்புக்களின் மேற்பார்வையுடன் மக்கள் தஞ்சமடைவதற்கான ஒரு பகுதியை இவர்களால் ஏன் ஏற்படுத்திக் கொடுக்கமுடியாது.
மக்கள் இழப்பின்றி யுத்தம் நடாத்துவதாகப் பொய் சொல்லும் மகிந்த குடும்பமும் இவ்வாறான நடைமுறைகள் பற்றிப் பேசிக் கொள்ளாதது வியப்புகுரியதல்லவென்றாலும், இவர்களின் அடிவருடிகளான முன்நாள் இடது சாரிகளும், தேசிய வாதிகளும் கூட இதுபற்றிச் சிந்திப்பது கூடக்க்கிடையாது. அவர்கள் செய்வதெல்லாம் ஒன்றுதான் மகிந்த குடும்பத்தின் இனப்படுகொலையை நியாயப்படுத்துவது மட்டுமே!
போரின் நடுவில் அகப்படுப் போயிருக்கும் மக்களை விடுவிப்பதை விட சிறுகச் சிறுகக் கொன்றொழித்து தனது கோரமான “வீரத்தை” நிலை நாட்டிக்கொள்ளவே மகிந்த குடும்பம் விரும்புகிறது.
ஆக, மகிந்த குடும்ப பாசிச அரசும், அதன் அடிவருடிகளும் வெளிப்படையாகவோ மறுதலையாகவோ போரை விரும்புகிறார்கள். சிறையுன்டிருக்கும் 3 லட்சம் மக்களைப் பற்றி எந்தக் கவலையுமற்ற இந்த விஷ வேர்கள் மொத்த உலகத்திற்குமே ஆபத்தானவை.
மகிந்த குடும்ப அரசு மக்கள் மீது பற்றிருந்தால் இரண்டு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க முடியும்.
1. இலங்கையிலோ சர்வதேச அளவிலோ எந்த எதிர்ப்புமற்ற இன்றைய சூழல் அரசிற்குச் சாதாகமாக அமைந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் பய உணர்வைப் போக்கும் வகையில் அரசியற் தீர்வொன்றை முன் மொழிந்திருக்க முடியும். எந்த எதிர்ப்புமின்றியே இது நிறைவேற்றப்பட்டிருக்கும். இவ்வாறு நடந்திருந்தால் தமிழ் மக்கள் அரசை நோக்கியும், அரச கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கியும் அலையாகப் படையெடுத்திருப்பார்கள்.
2. மேற்குறித்த அரசியற் தீர்வெல்லாம் மகிந்த அரசிற்கு அதிக பழுவைக் கொடுக்கும் என்று ஒரு “பேச்சுக்கு வைத்துக்கொண்டால்” இவர்கள் போரற்ற பாதுகாப்புப் பகுதியொன்றை சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களின் கண்காணிப்பின் கிழ் ஏன் உருவாக்கியிருக்க முடியாது? இவ்வாறான ஒரு பாதுகாப்பு வலையத்துள் மக்கள் அரச கொலைகாரர்கள் மீதான சந்தேகமின்றி இடம் பெயர்ந்திருக்க முடியும்.
இரண்டாவதாகக் கூறப்பட்ட உடனடி மனிதாபிமான நடவடிக்கையான “பாதுகாப்பு வலையம்” என்பது உருவாக்கப்பட்டால்,
1. மக்கள் இடம் பெயர்ந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவே வாய்ப்புகள் அதிகமாகும்.
2. இடம் பெயர எத்தனிக்கும் மக்கள் கூட்டம் புலிகளால் தடுக்கப்பட்டால், அல்லது கொலைசெய்யப்பட்டால், புலிகள் அதன் புலம் பெயர் ஆதரவுசக்திகளுக்கு மத்தியிலும் தமிழ் நாட்டிலும் அம்பலப்படுத்தப்படுவார்கள். இதன் பின்னர் அரசிற்கு “ஏகோபித்த” தர்மீக ஆதரவு கிடைக்கும்.
மக்கள் மீது எந்தப் பற்றுமற்ற மகிந்த குடும்ப்பப் பாசிசம் இதையெல்லாம் கருத்திற்கொள்ளப் போவதில்லை. இவர்கள் போர் நிறுத்தப் படுவதையும் மக்கள் அழிவிலிருந்து மீள்வதையும் எப்போதுமே விரும்பாதவர்கள். தமிழ் பேசும் மக்களின் அழிவு மட்டும் தான் மேலும் ஒரு நீண்ட காலத்திற்கு இவர்களின் இருப்பை உறுதிப்படுத்தும்.
போர் நிறுத்தப்பட்டால்,அல்லது புலிகள் எதிரியாக இல்லாமலாக்கப்பட்டால்,
1. மகிந்த குடும்பம் மக்கள் மத்தியில் “கதாநாயகர்களாக” உலாவர முடியாது. ஒற்றைத் திசையில் பயணிக்கும் இவர்களின் பாசிசம் தொலைதூரச் சிங்களைக் கிராமங்கள் வரை தனது விஷ வேர்களை வியாபித்திருக்கிறது. இன்னுமொரு நீண்ட காலத்திற்கு இந்தப் பேரின வாதத்தை நிராகரித்து சிங்கள பெரும்பான்மையினம் வாழ முடியாது.
2. இலங்கையின் பொருளாதாம் இன்று பெருந்தோட்டத் தொழிற்துறை, விவசாயம உடை உற்பத்தித் துறை அல்லது உல்லாசப்பயணத்துறை என்பவற்றையும் தவிர . மத்திய கிழக்கு வேலைவாய்ப்பும் இராணுவத்துறையுமே இன்று முன்னணியில் என ஆசிய அபிவிருத்து வங்கி கூறுகிறது.
போர் உடனடியாக நிறுத்தப்படுமானால் உச்சமடைப் போகும் வேலையில்லாத் திண்டாட்டத்தை நிவர்த்திசெய்ய இலங்கை பாசிச அரசிடம் எந்த மாற்றுத்திட்டமும் கிடையாது. போர் ஒன்றே இவைகளுக்கான மாற்று.
3. போர் நிறுத்தப்பட்டால் ஏற்படப்போகும் பொருளாதார நெருக்கடியும், வேலையின்மையும், சிங்கள மக்கள் மத்தியிலிருந்து போராட்டங்களையும் கிளர்ச்சிகளையும் உருவாக்கும். இவ்வாறான கிளர்ச்சிகளை எதிர்கொள்ள மக்களின் ஆதரவுடன் கட்டியெழுப்பப்பட்ட பாசிச அரசிற்கு எந்த மாற்றுத் திட்டத்தையும் உடனடியாக முன்வைக்க முடியாது.
ஆக, சிறீலங்கா பாசிஸ்டுக்கள் போரை நிரந்தரமாக நிறுத்தப்போவதில்லை. முடக்கப்பட்டுள்ள புலிகளுடனான யுத்தத்தை மேலும் சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் “தேசப்பற்றின்” பெயரால் இழுத்தடுக்கும் நிலையே காணப்படுகிறது. இதற்காக இலங்கை தேசத்தை அன்னிய சக்திகளுக்கு அடகுவைத்துக் கொண்டிருக்கும் மகிந்த குடும்பம் மக்களின் ஓலக்குரலிலேயே வாழ்கை நடாத்திக்கொண்டிருக்கிறது.
இறுதியாக சிறீலங்கா பாசிச, பேரின வாத அரசாங்கமானது வன்னியில் முடக்கப்பட்டிருக்கும் அப்பாவிப் பொதுமக்கள் மீது எந்தக கரிசனையும் கொள்ளப்போவதில்லை.
2. இரண்டாவது பிரதான சக்திகள் பாசிச அரசின் அனுசரணையில் இயங்கும் ஏனைய தமிழ்க் கட்சிகள்.
ஈழம், ஜனநாயகம், தமிழர் என்றெல்லாம் தமது பெயரில் தமிழ் பேசும் மக்களின் நலன்களைத் தாங்கி நிற்கும் இக்கட்சிகள் இதுவரை கொல்லப்பட்ட மக்களுக்காக இரங்கல் அறிக்கைகூட வெளியிட்டது கிடையாது. இதன் உச்சக்கட்டமாக ஆனந்தசங்கரி என்ற சந்தர்ப்பவாதி , அரசின் படுகொலைகளை நியாயம் கற்பித்து அறிக்கை வெளியிடும் அளவிற்கு அருவருப்பான சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன. டக்ளஸ் தேவானந்தாவின் குழுவான ஈ.பி.டி.பி என்பது மகிந்த பாசிச அரசின் அங்கமாகவிருந்து அரசின அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் துணைபோவதனூடாக, நிபந்தனையின்றி பாசிசத்தை வளர்த்தெடுத்த இரத்தம் தோய்ந்த கரங்களோடு இன்னும் உலாவருகிறது. 80 களின் ஆரம்பத்தில் ஆக்ரோஷமான தேசியவாதக் கருத்துக்களோடு ஆயிரக்கணக்கில் இளைஞ்ர்களைப் பலிகொடுத்த ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்ற அரசியற்கட்சிகள் கொல்லப்படும் மக்களைப் பற்றி மூச்சுக்கூட விடாமல் அடுத்த தேர்தலுக்காக மகிந்த குடும்பத்தின் வாசற்படிகளில் தவம் கிடக்கின்றன.
முல்லைத்தீவில் மரணத்துள் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் இவர்களின் எதிர்கால வாக்காளார்கள் என்றவது சிந்தித்தது கிடையாது. எந்தக் குறிப்பான அரசியலுமற்ற இவர்களுக்காக புலம் பெயர் தேசங்களில் முளைத்திருக்கும் “ஜனநாயக” மீட்பாளர்களாவது மக்களைப் பற்றிச் சிந்திப்பார்களா என்ற ஆதங்கம் நம் ஒவ்வொருவர் மத்தியிலும் உண்டு.
2. இந்திய அரசு
புலிகளுக்கும் மகிந்த குடும்ப அரசிற்கும் இடையேயான போரில் இந்தியாவின் அனுசரணையும், ஆசீர்வாதமும் இல்லாமல் இலங்கையரசு ஒரு துரும்பைக்கூட நகர்த்தியிருக்க முடியாது. இலங்கை அரசிற்கு இராணுவ உதவிகள் வழங்குவதிலிருந்து அதன் இனப் படுகொலைகளுக்கு ஜனநாயக முலாமிட்டு ஒட்டுமொத்த சர்வதேசத்தையும் இலங்கையரசின் பக்கம் இழுத்து வைத்திருப்பது வரை இந்தியா தான் திட்டமிடுகிறது. மேற்கில் தோல்வியடைந்து போன உலக மயமாதலும், நவ தாராளவாதமும் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தவல்ல ஒரு வர்த்தக குழாமை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் தான் அரசை ஆட்டுவிக்கும் ஆண்டவர்கள். இவர்களின் நலனுக்காகத் தெற்காசியாவில் தேவைப்பட்ட சாக்கடைதான் இலங்கைத் தீவு. இஸ்ரேலின்
சூழலையும் சமூகத்தையும் சீரழிக்கும் கழிவாலையாக சிறீ லங்கா மாற்றப்பட்டாலும் மகிந்தவின் “தேச பக்தியால்” உருவான பாசிசம் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான உணர்வை மட்டுமே கொண்டிருக்கும். ஒரு குறித்த நீண்ட காலத்திற்கு மகிந்த குடும்ப பாசிசம், இந்தியவின் நலன்களுக்கு உட்பட்டதாக மட்டுமல்ல ஏதுவானதாகவும் அமையும். இது தவிர, கடந்த வருடம்(2007) இந்திய நக்சல் பாரிப் போராட்டங்களில் நூற்றுக்கணக்கில் பொலீசார் உயிரிழந்துள்ளனர். பொருளாதாரச் சமநிலையின்மையும், மக்களின் எதிர்ப்புணர்வும் எழுற்சிகளும் இவ்வமைப்புக்களை முனெப்போது இல்லாதவாறு பலமான அமைப்புகளாக மாற்றியுள்ளன. இவ்வமபுகளுகெதிரான இந்திய அரசின் எதிர் நடவடிக்கைகள்க்கு இலங்கை என்பது ஒரு சிறந்த ஆய்வு கூடமும் பயிற்சித் தளமும் மட்டுமல்ல அதற்கான எதிர்கால இராணுவத்தளமாகக் கூடச் செயற்படலாம்.
நவதாராள வாதத்தின் பின்னான ஏகாதிபத்திய அதிகார மையம் என்பது அதன் தெற்காசியப் பங்காளார்களான இந்திய முதலாளிகளையும் இணைத்துக்கொண்டு புதிய பரந்துபட்ட தளத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயல்கிறது. சர்வதேச அரசியல் உறவுகள் மாற்றமடைந்து இந்தியப் பங்காளர்களுடன் அமரிக்க ஏகாதிபத்திய அணி தன்னைப் பங்குபோட்டுக் கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளையும் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. இந்தியாவைச் சுற்றியிருக்கும் நாடுகளை மிரட்டி வந்த இந்திய மேலாதிக்கத்திற்கு எந்த எதிர்வினையையும் அமரிக்க அணியின் பக்கத்திலிருந்து அண்மைக்காலங்களில் எதிர்பார்க்க முடியாது.
ஏகாதிபத்திய உள்முரண்பாடுகள் சிறிய சலசலப்புகளை ஏற்படுத்தினாலும் உலகம் முழுவதும் மூதலாளித்துவ அதிகாரத்திற்கெதிரான போராட்டங்களை எதிர்பார்க்கின்ற இன்றைய சூழலில் இந்தியா தனிக்காட்டு ராஜாதான்.
ஆக, மகிந்த பாசிசத்தின் அச்சாணியான இந்திய அரசானது மரணத்தின் வாசலில் காத்திருக்கும் மூன்று லடசம் அப்பாவிகள் பற்றிக் கிஞ்சித்தும் அக்கறை கொள்ளப் போவதில்லை.
மேலும் இலங்கை அரச பாசிசத்தை ஒரு குறித்த நீண்ட காலத்திற்கு வலுப்படுத்துதலும் தெற்காசியாவில் இந்தியாவின் பிராந்திய ஏகாதிபத்தியத் தன்மையை நிலைநாட்டும்.
3. புலிகளும் அதன் ஆதரவுத் தளமும்.
வெறுமனே தேசியம் என்ற அரசியற்களத்தில் பரந்துபட்ட மக்களின் ஒருங்கிணையும் உணர்வுகளுக்கும் பாசிசத்திற்கும் இடையில் ஒருவகையான உறவு நிலை பேணப்படுகிறது. அதுவும் ஏற்றுமதி செய்யப்பட்ட சந்தையை மையமாகக் கொண்டு உருவான செயற்கையான
இது தான் புலிகளின் வரலாறாகும். ஏகாதிபத்தியங்களாலும், இந்தியாவாலும் பாசிசமாக ஊக்குவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள், தம்மாலான எல்லா வழிகளிலும் மகிந்த குடும்ப பாசிசத்தை வளர்த்து விட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் தேசியப்பற்றாளர்களும், இடதுசாரிகளும், அப்பாவிகளும் புலிகளால் துவம்சம் செய்யப்பட்டிருகிறார்கள் . மிக அதிகளவிலான அரசியல் படுகொலைகளை நிறைவேற்றிய ஒரே அமைப்பு புலிகள் தான்.
80 களின் ஆரம்பத்தில் இவர்களின் மக்களில் தங்கியிராத போராட்டமானது, திடீர் இராணுவ வளர்ச்சிகளால் மக்களை நம்பாத போராட்டமாகவும், எதேச்சதிகாரமும், ஏனைய தேசிய இனங்கள் மீதான வெறுப்புணர்வை முன் நிறுத்தும் வன்முறையாகவும் வளர்ந்தது. இதன் பின் விளைவைப் புரிந்துகொள்ளாத அப்பாவிப் பொதுமக்களின் ஆதரவு காணப்பட்டதால் இது பாசிசமாக உருவானது. மாற்று இயக்கப் போராளிகளைப் புலிகள் உயிருடன் நெருப்பில் எரித்த காட்சியைக் கண்ட பின்னரும் மக்கள் ஆதரவுடன் தனது பாசிசத்தை விரிவுபடுத்துவதில் வெற்றிகண்ட புலிகள்தான் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தேசியத்தின் பேரால் சீரழித்த முழுப் பொறுப்பாளிகள். மொத்த சமூகத்திற்கும் எதிராகச் செயற்படும் புலிகளின் சமூக விரோதச் செயல்கள் இலங்கையில் மட்டுமல்ல தெற்காசியாவிலேயே போராட்டங்கள் மீதான வெறுப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிடுக்கிறது. இன்று புலிகளைக் காரணம் காட்டியே மகிந்த குடும்பம் தனது பாசிசத்தை வளர்த்துக்கொள்ளும் அளவிற்கு புலிகள் அரசியற் கோழைகளாக இருந்திருக்கிறார்கள்.
புலிகளின் தொடர்ச்சியான இருப்பு என்பது மக்கள் விரோதிகளின் தொடர்ச்சியான இருப்பாகும். புதிய போராட்ட சக்திகளின் வரவிற்குத் தடைக்கற்களாகும். எனவே மகிந்த அரசின் மரணச் சமன்பாட்டிற்கு ஆதாரமானதாகும்.
3 லட்சம் அப்பாவிகள் பணயக்கைதிகளாக்கியிருக்கும் புலிகள் மக்களில் பற்றிருந்தால், சர்வதேச ஊடகங்களில் வீராவேசத்துடன் வெற்றி முழக்கம் செய்வதற்குப் பதிலாக, மக்களின் பாதுகாப்பு வலையத்தை உருவாக்குவதற்கான கோரிக்கையை இவ்வூடகங்களூடாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்களைக் கோரியிருக்க முடியும். ஆனால் புலிகளின் பாதுகாப்பு மக்களின் உயிர்கள் தான். மக்களுக்காகப் போராடப் புறப்பட்டவர்கள் இன்று மக்களைப் பணயம்வைத்து தமக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
30 நீண்ட வருடங்களாக தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்குமுறைகெதிரான போராட்டத்தைச் சிதைத்துச் சின்னாபினப்படுத்தியது போதாதென்று இலங்கைக்கு வெளியில் ஆர்ப்பரித்தெழும் தமிழ் பேசும் மக்களின் தன்னியல்பான போராட்டங்களிலும் மூக்கை நுளைத்து அவற்றையெல்லாம் சிதைத்து அர்த்தமிழந்தவையாக்கிவிடுகிறார்கள். புலிகள் தமது வாழ் நாளை நீடித்துக்கொள்ளும் ஒவ்வொரு கணமும் அரசைப் பலப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். புலிகளைச் சுட்டிக்காட்டியே தமிழ் மக்களை மட்டுமல்ல, சிங்கள மக்கள் மத்தியிலிருந்து வரும் எதிர்ப்புக் குரல்களையும் அரச பாசிசம் அடக்கிவிடும். அரசிற்கெதிரான போராட்டத்திற்கு இடது சாரிகளதும், ஜனநாயக சக்திகளதும் வரவிற்குப் புலிகள் இடம் விட்டு விலகிக்கொள்ளவேண்டும். வன்னியில் சாவின் விழிம்பில் அகப்பட்டிருக்கும் மக்களை சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களின் துணையுடன் விடுவிக்கவேண்டும்.
80 களிலிருந்து மக்களின் எல்லா இயல்பன எழுற்சிகளிற்கும் ஏற்புடைய தத்துவார்த்தத் தலைமை வழங்கத் தவறியதன் பின்னணியில் தான் புலிகள் பாசிசமாக வளர்ச்சியடைந்தனர். 83 இல் சிறீ லங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட இனப்படுகொலைகளின் பின்னதாக ஏற்பட்ட மக்கள் எழுற்சி ஏற்படுத்திய தலைமைக்கான வெற்றிடத்தை புலிகளும் ஏனய இயக்கங்களும் எந்தவித அரசியலுமின்றி எழுமாறாக நிரப்பியதன் பக்கவிளைவே இன்றைய புலிகள். புலிகளைச் சுட்டிக்காட்டியே இன அழிப்பு நடைபெறுகிறது. புலிகளைச் சுட்டிக்காட்டியே உலகெங்கிலுமுள்ள அரசுகளுகெதிரான அழுத்தங்கள் மழுங்கடிக்கப்படுகின்றன. புலிகளைக் காரணம் காட்டியே அரசின் சர்வாதிகாரமும் பாசிசமும் நியாயப்படுத்தப்படுகிறது.
புலிகள் என்ற அமைப்பு மட்டுமல்ல அவர்களின் தவறுகளும் அவர்கள் வளர்த்து விட்ட பாசிச, மேலாதிக்கச் சிந்தனைப் போக்கும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.
5. புலம் பெயர்ந்த தமிழ் பேசும் மக்கள்.
மற்றுமொரு ஆனால் முக்கியமான தீர்மானகரமான சக்தியாக புலம்பெயர்ந்த தமிழ் பேசும் மக்கள் கருதப்படலாம். இலங்கையின் எல்லைக்குள் எந்தக் குடிமகனும் அரச பாசிசத்திற்கெதிராகச் சிந்திக்கக் கூட முடியாத குரூரம் மிக்க சூழலில், புலத்திற்கு வெளியே வாழும் மக்களின் பாத்திரம் எந்த அரசியல் இலாப நோக்குமின்றி வன்னி மக்களை விடுவிக்கும் அழுத்தத்தைக் கொடுக்க முடியும்.
மேற்குலக அரசுகளின் மனிதாபிமான, ஜனநாயக முகமூடியைக் கிழித்தெறிந்து அவர்களை அம்பலப்படுத்துவதனூடாக அழுத்தங்களைப் பிரயோகிக்கவல்ல இவ்வாறான புலம் பெயர் தமிழர்களின் ஒருங்கிணைந்த போராட்டங்கள் அரசியல் இலாப நோக்கற்றவையாகும். மக்களைச் சார்ந்தவையாகும். மக்கள் நலனில் அக்கறையுள்ளவையாகும். எந்த சுயநல நோக்குமின்றி 100 000 மக்கள் இங்கிலாந்து தெருக்களில் இறங்கிப் போர்குரல் எழுப்பியது ஒரு வரலாற்று நிகழ்வாகும். தொலைவில், புலத்தில் மரணத்துள் வாழும் தாம் சார்ந்த மக்களுக்காக புலம்பெயர் மக்கள் நடாத்துகின்ற போராட்டங்கள் உணர்வு பூர்வமான அரசியல் நிகழ்வுகளாகும்.
இவையே தீர்மானிக்கும் சக்திவாய்ந்த அரசியல் நிகழ்வுகளாக உருவாகவேவேண்டுமானால் இவ்வாறான போராட்டங்கள் புலிகளால் தமது சொந்த நலனுக்காகப் பயன்படுத்தபப்டுவது தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறான மக்களின் தன்னிலை எழுற்சிகளுக்குத் தலைமை
இன்நிலையில் புலம் பெயர் தமிழர்களும், இடது சாரிகளும், ஜனநாயக வாதிகளும், புலிகளற்ற போராட்டங்களையும், புலிகளற்ற ஜனநாயகத் தலைமைகளையும், மக்களின் நலன்கருதிச் சிந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
6. இந்தியத் தமிழ்மக்கள்
இந்தியத் தமிழ் மக்களின் இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்கள் மீதான அனுதாப உணர்வும், இயல்பாகவே அவர்களிடமுள்ள ஜனநாயகப் பண்பும் மகிந்த குடும்பத்தின் தமிழினப் படுகொலைகளிற்கெதிராக ஆக்ரோஷத்துடன் கிளர்ந்தெழ உந்தியிருக்கிறது. வரலாறு அறியப்படாத காலத்திலேயே சங்கப் பலகையில் அமர்ந்து மன்னர்களையே வழி நடத்திய பாரம்பரியத்தில் வளர்ந்த திராவிடர்கள், தமது தெற்கு மூலையில் தாம் பேசும் தமிழ் மொழி பேசுகின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அழிக்கப்படும் கோரத்தை நீண்ட காலத்திற்குச் சகித்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.
இவர்கள் நடாத்திய பகிஷ்கரிப்புகள் தமிழகத்தின் கடிகாரங்களை நிறுத்தியிருக்கிறது. விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புக்களெல்லாம் இவர்களின் மண்ணில் நடாத்திய மக்கள் விரோதச் செயல்களையெல்லாம் மறந்து இலங்கைத்தமிழ் மக்களுக்காக தன்னலமற்ற தன்னிச்சையாக நடாத்தும் போராட்டங்கள் வரலாற்றில் பதியப்படும். தமிழர்கள் என்றால் மக்கள்! விடுதலைப் புலிகளல்ல என்று உலகுக்கு எடுத்துக்கூறி அப்பாவி மக்கள் விடுதலைப் புலிகளைச் சாக்காக முவைத்து அழித்தொழிக்கப்படுகிறார்கள் என்று உரக்ககக் குரல் கொடுக்கும் தமிழக மக்களுக்கு உலகெங்கும் வாழும் ஜனநாயக வாதிகள் நன்றி சொல்வார்கள்.
இந்த மக்களின் தன்நலமற்ற போராட்டங்களும் தமிழ் நாட்டின் அரசியல் வாதிகளால் வெளிப்படையாகவே தமது அரசியல் வியாபாரத்திற்காகப் பயன்பட்டு அர்த்தமிழந்து போய்விடும் நிலைவரக்கூடாது. பதவிக்காகவும் வாக்குச் சேகரிப்புக்காகவும் மக்களின் போராட்டங்களைக் காட்டிக்கொடுக்கும் கருணானிதி குடும்பத்தினர், ராம்தாஸ் குடும்பத்தினர் போன்றோர் அம்பலப்படுத்தப்பட வேண்டும். சாகும் வரை உண்ணாவிரதமிருந்து செத்துப் போய்க்கொண்டிருக்கும் மக்களின் மீது வாக்குச் சேகரிக்கும் திருமாவளவன் போன்றோரின் போலித்தனங்கள் தோலுரிக்கப்பட வேண்டும். வை.கோ, நெடுமாறன் போன்றோர் அப்பாவி மக்களுக்கான போராட்டத்தை புலிகளுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தல் நிறுத்தப்பட வேண்டும்.
போராட்டங்களை அர்த்தப்படுத்தல்..
மக்களால் மக்களுக்காக நடாத்தப்படும் போராட்டங்களாக இறுதியான இரண்டு பிரதான சக்திகள் இனம் காணப்படுகின்றன.
1.புலம் பெயர்ந்த தமிழ் பேசும் மக்கள்
2.இந்தியத் தமிழ் மக்கள்.
1.புலம் பெயர்ந்த தமிழ் பேசும் மக்கள்
புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் பல்வேறு அரசியற் சார்புநிலை உடைய குழுக்கள் இயங்கிவருகின்றன.
– சிறீ லங்கா அரசு சார்ந்து புலிகளை அழித்தலே பிரதான முரண்பாடென்று கூறும் குழுக்கள்.
90 களுக்குப் பின்னர் பல்வேறு இடது சாரிப் போக்குடையவர்களினதும் தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு மத்தியிலும் பேரின வாத அரசுகளைச் சார்ந்து இயங்கும் இவர்கள், புலிகளே பிரதான எதிரி என்ற கோஷத்தை முன் வைக்கின்றனர்.
கிழகுப் பிரிவினை, சாதீயப் போராட்டங்கள், புலியெதிர்ப்பு என்ற பல்வேறு முகங்களைக்கொண்ட இவர்கள், மக்களின் உணர்வு பூர்வமான போராட்டங்களில் நம்பிக்கையற்ற, “கிங் மேக்கர்” களாக வரித்துக்கொள்ளும் இலங்கையின் பாரம்பரிய படித்த மேல்தட்டு சிந்தனை முறையை உயர்த்திப் பிடிப்பவர்கள். தன்னார்வ அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள், சிறீ லங்காவின் பேரினவாத அரசியற்கட்சிகள் ஆகியவற்றுடன் நெருங்கிய உறவு கொண்டுள்ள இவர்கள் புலிகளைப் போலவே மக்களின் நம்பிக்கையற்ற, “சதுரங்க” அரசியலூடாக சாதிக்க நினைப்பவர்கள். புலிகளைப் போலவே மக்களுக்கான போராட்டங்கள் என்று தலையங்கமிட்டுக்கொண்டாலும் இறுதியில் பாசிசம் சார்ந்த மக்கள் விரோத சிந்தனைப் போக்கையும், இயக்கத்தையும் வளத்தெடுப்பதிலேயே இவர்களின் நடவடிக்கைகள் நகர்ந்து செல்லும்.
புலிகளுக்கு எதிரானவர்கள் அனைவருமே அரச பாசிசத்திற்கு ஆதரவானவர்கள் என்ற கருத்தை புலம்பெயர் ஜனநாயக சக்திகள் மத்தியில் 90 களின் நடுப்பகுதியிலிருந்து விதைத்த இவர்கள், அரசிற்கு எதிரான தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரே எதிர்ப்புச் சக்தி புலிகள் என்ற சிந்தனைப் போக்கை உருவாக்கியதனூடாக, புலிகளை மீறி அரசிற்கெதிரான போராட்டங்கள் இல்லை என்ற சிந்தனை போக்கு புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் வளரவும் உதவிவர்கள். இவர்கள் சார் இணையத்தளங்களும், அமைப்புக்களும் புலிகளின் ஆதரவுத் தளத்தை விரிவு படுத்தவும், அரச பாசிசத்தை வளர்த்தெடுக்கவும் ஆற்றிய பங்கு வரலாற்றுத் துரோகமாகும். கடந்த ஒரு தாசாப்தமாக பல்வேறு ஜனநாயக சக்திகள் இவர்களின் அபாயம் தொடர்பாக விமர்சித்து வந்த போடும் , இன்று வரை இந்தப் போக்கை முழுமையாக மாற்றிக் கொள்ளவில்லை.
சதுரங்க அரசியலும், அடையாள அரசியலும், வன்முறையும் இன்றுவரை தொடர்கிறது.
இவ்வாறான சக்திகளின் ஆதரவுத் தளம் சிறியதானாலும் ஆபத்து நிறைந்தது.
– புலிகள் சார்ந்த அமைப்புக்கள்.
புலிகளின் அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் நிபந்தனையின்றி ஆதரவு வழங்கும் இவ்வகையினரின் அமைப்புக்கள் புலிகளின் புலம்பெயர் பினாமிகளாகவே அமைகின்றன. புலியெதிர்ப்பு – அரச ஆதார்வுச் சக்திகளால் ஏற்படுத்தப்பட்ட “அரச ஆதரவு” நிலைப்பாட்டைச் சரிவரப் பயன்படுத்திக்கொண்ட இவர்கள் மக்களின் நலன்கள் சார்ந்தன்றி புலிகளின் நலன்கள் சார்ந்த நடவடிக்கைகளூடாக மக்கள் விரோதிகளாகக் இனம் காணப்படுகின்றனர். ஒரு லட்சம் மக்கள் இலண்டன் தெருக்களில் நடாத்திய உணச்சிபூர்வமான போராட்டத்தின் இறுதியில், புலிகளே தங்களின் ஏகப்பிரதினிதிகள் என்று சர்வதேச ஊடகங்களுக்கு அறிவித்து மக்களின் போராட்டத்தைப் புலிகளின் போராட்டமாக கொச்சப்படுத்தி அர்த்தமிழக்கச் செய்தது இவ்வமைப்புக்களின் “தாத்தாவான்” பிரித்தானிய தமிழ் போரம் (BTF) என்ற புலிகளின் பினாமி அமைப்பு.
அத்தனை தமிழ் பேசும் மக்களின் போராட்டத்தைப் புலிகளின் போராட்டமாகக் காட்ட “தமிழீழ” கோஷ்ங்களுடன் தெருவுக்கு வந்து மக்களோடு மக்ககளாகக் கலந்துகொண்ட இவ்வமைப்பினர், தமிழ் பேசும் மக்கள் எல்லாரும் புலிகள் தான் என்ற மகிந்தவின் மரணச் சமன்பாட்டின் ஆதாரத்தையே நியாயப்படுத்தியவர்கள் இந்தப்பாதகர்கள்.
மக்கள் மீது பற்றற்ற இவர்களால் சீரழிக்கப்பட்ட மக்கள் போராட்டமானது, பிரித்தானிய ஜனநாயக வாதிகளாலும், மனிதாபிமானிகளாலும் கண்டுகொள்ளப்படவில்லை.
மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்ல இவ்வாறான போராட்டங்கள் ஐரோப்பாவெங்கிலும், கனடாவிலும் நடைபெற்ற போதிலும் இவற்றை வலுவிழக்கச் செய்தவர்கள் இந்தப்புலி ஆதரவுசக்திகளே.
புலிகளின் பாசிசச் சிந்தனை முறையை நிபந்தனையின்றி ஆதரிக்கும் இவர்கள் இன்று மட்டுமல்ல எதிர்காலத்திலும் அபாயகரமானவர்களே.
2.இந்தியத் தமிழ் மக்கள்.
இன்று வரைக்கும் இந்தியத் தமிழ் மக்களின் பரந்துபட்ட ஜனநாயகப்போராட்டஙகளைப் பிரதி
– மக்களின் வாக்கு எண்ணிக்கையைக் கோரிநிற்கும் வலது சாரிக்கட்சிகள்.
கருணாநிதி, வை.கோ, நெடுமாறன், ராம்தாஸ் உள்ளிட திருமாவளவன் வரை தேர்தலுக்காகவும் பதவிக்காகவும் அப்பாவித்தமிழர்களின் அவலங்களைப் உபயோகப்படுத்திக் கொள்ளும் அருவருப்பை தமிழக மக்கள் உணர ஆரம்பித்துவிட்டனர். சிறீ லங்கா அரசின் இனப்படுகொலைகளின் பின்னணியில் இந்திய அரசின் அரசியல் பொருளாதார நலன்கள் புதைந்திருப்பதைத் தெரிந்து வைத்திருக்கும் கருணாநிதியின் அரசியல் வியாபாரமோ, சிறீ லங்கா அரசின் பாசிசத்திற்கு தார்மீக நியாயம் வழங்கும் வை.கோ வின் கூட்டோ, இலங்கையின் திறந்தவெளிச் சிறைச் சாலையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளாக்கப்பட்டிருக்கும் அப்பாவித் தமிழர்களை விடுதலை செய்யாது. மாறாக மகிந்த குடும்பத்தின் பாசிசத்தை உச்சத்தை நோக்கி வளர்த்தெடுக்கும்.
– சந்தர்ப்பவாத இடதுசாரிகள்.
தேர்தலுக்காகவும், வாக்கு வேட்டைக்காகவும் அனைத்துச் சந்தர்ப்பவாதக் கூட்டுக்களையும் முன்வைக்கும் இக்கட்சிகள், தொழிலாளர்களின் தன்னிச்சையான போராட்டங்களைக் கூட தமது வாக்கு எண்ணிக்கையை உயர்த்துவதற்காகப் பயன் படுத்திக் கொண்டன. இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் மீதான இன அழிப்பை முன்வைத்து எஞ்சியிருக்கும் தமிழர்களின் வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்காக இலங்கை அரச சார் சக்திகளுடனும் கூட்டுச் சேர்ந்து கொள்ளும் இவர்களும் மக்களை நம்பத்தயாராகவில்லாத சந்தர்ப்பவாதப் போக்கையே முன்வைக்கின்றனர்.
மகிந்தவின் மரணச் சமன்பாட்டிற்கெதிரான தமிழ் பேசும் புலம்பெயர் மக்களினதும் தமிழ் நாட்டு மக்களினதும் போராட்டங்கள் அர்த்தமிழந்து போய்விடக்கூடாது. அவை பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் நாட்டில் மக்கள் மீது பற்றுக்கொண்ட மக்களில் நம்பிக்கையுள்ள ஜனநாயக வாதிகளும், கம்யூனிஸ்டுக்களும் இருக்கிறார்கள். இப்போராட்டங்களைத் தமிழ் உணர்ர்வு சார்ந்த போராட்டங்களாக மட்டுமல்லாது வாக்குக்கட்சிகளையும் சந்தர்ப்பவாதிகளையும் அம்பலப்படுத்தும் பரந்து பட்ட மக்களின் போராட்டமாக முன்னெடுக்கவேண்டும். மொத்த ஜனநாயகத்திற்கான போராட்டமாக உருவெடுக்கக்கூடிய இப்போராட்டமானது சிறையுண்டு போயிருக்கும் 3 லட்சம் தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம் என்ற நிலைக்கும் அப்பாற் செல்லும். இதே வேளை புலம்பெயர் தேசத்தில் மக்களின் விடுதலைகாக மகிந்த குடும்பத்தின் சர்வாதிகாரத்திற்கெதிரான போராட்டம் புலிகளை நிராகரித்து முன்னெடுக்கப்பட வேண்டும். புலிகளும், அரசும், மக்கள் விரோதிகளும் அம்பலப்பட்டு நிற்கிறார்கள், மக்கள்மீது அக்க்றை கொண்ட அனைத்து சக்திகளதும் அவசரமான ஒன்றிணைவானது புலம்பெயர் மக்களை ஒன்றிணைக்கும். புலிகளின் தலைமைக்கு மாற்றான அரச பாசிசத்திற்கு எதிரான மக்களின் தலைமை தமிழ் நாட்டு மக்கள் சக்தியின் ஆதரவுட உருவாவதற்கான ஆரம்பப்புள்ளியாகக் கூட இது அமையலாம்.