மக்கள் அதிகம் நிறைந்திருந்த பகுதிகளில் இந்த குண்டுவெடிப்புகளை தீவிரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர். மக்களை பீதிக்குள்ளாக்கும் நோக்கிலேயே இந்த வெடிகுண்டுச் சம்பவத்தை தீவிரவாதிகள் நிகழ்த்தியுள்ளதாக கருதப்படுகிறது.
தேனா வங்கி அருகே ஒரு குண்டு வெடித்துள்ளது. பால் கந்தர்வ் தியேட்டர் அருகே ஒரு குண்டும், ஜங்ளி மகராஜ் சாலையில் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் அருகே ஒரு குண்டும், இன்னொரு இடத்திலும் குண்டுகள் வெடித்தன. நான்காவது குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.
இரவு 7.30 மணி முதல் 7.45 மணிக்குள்ளாக நான்கு குண்டுகளும் வெடித்துள்ளன.இந்த குண்டுவெடிப்புகள் அனைத்துமே ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் நடந்துள்ளன. இதில் யாரும் உயிரிழக்கவில்லை. 2 பேர் காயமடைந்ததாக மகாராஷ்டிர மாநில டிஜிபி தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு டெல்லி மற்றும் மும்பையிலிருந்து தேசிய புலனாய்வு ஏஜென்சியின் அதிகாரிகள் விரைந்துள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடங்களை முற்றுகையிட்டு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
வெடிகுண்டுச் சம்பவங்கள் குறித்து புனே போலீஸ் கமிஷனர் குலப் ராவ் பாட்டீல் கூறுகையில், இதுதீவிரவாத சம்பவம் போலத் தெரியவில்லை. உள்ளூர் விஷமிகள்தான் பீதியை ஏற்படுத்துவதற்காக இதைச் செய்துள்ளதாக சந்தேகிக்கிறோம். எந்த தீவிரவாத அமைப்பும் இதற்கு பொறுப்பேற்பதாக அறிவிக்கவில்லை. குப்பைத் தொட்டியிலும், சைக்கிள் கேரியரிலும் குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன என அவர் தெரிவித்துள்ளார்.