அஸ்கிரிய, மல்வத்து, அமரபுர, ராமஞ்ய ஆகிய பௌத்த பீடங்களை சேர்ந்த மாநாயக்கர்கள் கடிதம் மூலம் இந்த கோரிக்கை விடுத்துள்ளனர். ஆத்திரத்தை ஆத்திரத்தால் தீர்க்க முடியாது என புத்த பகவான் போதித்துள்ளதை பின்பற்றி, பயங்கரவாத்தை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுத்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுடன் காணப்படும் கோபதாபங்களை கைவிடுங்கள்.
பயங்கரவாத யுத்தம் நடைபெற்ற காலத்தில் பௌத்த பிக்குகளை கொலை செய்து, தலதா மாளிகை, ஸ்ரீமஹாபோதி உள்ளிட்ட விகாரைகளை அழித்து, நாட்டை இரண்டாக பிரிப்பதற்காக பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுட்டு, இராணுவத்தினர் உள்ளிட்ட பொதுமக்களின் உயிர்களை பலிகொண்டு பயங்கரமான பயங்கரவாதிகளாக கருதப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) பிள்ளையான் என்ற சந்திரகாந்தன் போன்றவர்கள் தற்போது அரசாங்கத்தினால் அரவணைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு, அமைச்சு பதவிகளை வழங்கி பாதுகாப்பு வழங்க முடிந்தது போல், நாட்டின் ஐக்கியம், இறையாண்மை மற்றும் மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்காக உயிரை பணயம் வைத்து பிறந்த நாட்டுக்காக அளப்பரிய சேவையாற்றிய சரத் பொன்சேக்கா உள்ளிட்டோரை ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தியேனும் சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிடுத்து, அவர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகிந்த எதிர்ப்புப் போராட்டமானது பௌத்த பிக்குகளின் தலைமையிலான இனவாதப் போராட்டமாக மாறும் அபாயம் உள்ளது.
36 வருடங்கள் நாட்டைச் சூழ்ந்திருந்த பிரிவினை வாத அபாயத்திலிருந்து நாட்டைப்பாதுகாத்த கதாநாயகன் சரத் பொன்சேகா எனக் குறிப்பிடும் இந்த அறிக்கையில் பேரினவாதம் இழையோடுவதை அவதானிக்க முடிகிறது. மகிந்த பாசிசத்தைக் கூட பௌத்த சிங்கள பேரினவாத அடிப்படையில் அணுகும் அபாயம் எதிர்கொள்ளப்பட வேண்டும்.