முன்னை நாள் புலி ஆதரவு “தேசியவாதிகள்” பலர் கே.பி என்ற அரச உளவாளியின் வலைக்குள் விழுந்திருப்பது தெரிந்ததே. மகிந்த ராஜபக்சவைப் அரசைப் போர்க்குற்றவாளிகளாக பிரகடனப்படுத்துவது எவ்வாறு என்று கடந்த வருடம் (29 Sept 2009) பிரித்தானியாவில் பொதுக்கூட்டம் ஒன்றை ஒழுங்குசெய்த சார்ல்ஸ் அன்டனிதாஸ் இப்போது கே.பியின் பிரதான ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு மாதங்களாகப் போர்க்குற்ர வழக்குகளைப் பதிவுசெய்வதாக புனையப்பட்ட விம்பத்தை பிரித்தானியாவில் ஏற்படுத்தியிருந்த இந்த அமைப்புக்கள் மகிந்த ராஜபக்சவும் அவருடன் பிரித்தானியா வந்திருந்த இராணுவத் தளபதிகளும் நாடுசென்றடையும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆக, இந்தக் கால தாமத்தின் பின்னணியில் இலங்கை-இந்திய அரசுகளின் உளவுத்துறை செயற்பட்டிருக்கலாமா என்ற சந்தேகம் பரவலாக நிலவுகிறது.
தவிர, புலம் பெயர் நாடுகளில் நடைபெறும் அரச எதிர்ப்புப் போராட்டங்கள் புலிகளின் ஆதரவாளர்களின் போராட்டமே என இலங்கை அரசு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. பல மனித உரிமைக் குற்றச்சாட்டுக்கள் உட்பட போர்க்குற்றங்களுக்கு உட்பட்டிருக்கும் புலிகள் (ஆதரவாளர்கள்) என்று கருதப்படுவோரின் போராட்டங்களில் உலகின் மனித உரிமை வாதிகளும் ஜனநாயக சக்திகளும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. இந்த வகையில் புலம் பெயர் தமிழர்களின் போராட்டத்தை வெளியுலகிலிருந்து பிரித்துத் தனிமைப்படுத்துவதில் இலங்கை அரசு குறித்த வெற்றியைக் கண்டுள்ளது என்பதை மறுக்கமுடியாது.
இவை அனைத்தையும் தெரிந்து கொண்டபின்னரும் மக்களின் உணர்ச்சிபூர்வமான போராட்டங்களில் புலி ஆதரவுப் போராட்டங்களாக அடையாளப்படுத்தும் வகையில் ஒரு சிறுகுழுவினர் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட கொடிகளை வழங்குவதன் பின்னணி என்ன என்பதும் பரவலாகப் பேசப்படுகின்ற ஒன்று.
ராஜபக்சவின் பிரித்தானிய வருகையின் போது நடைபெற்ற இரண்டு போராட்டங்களின் போதும் திட்டமிட்ட வகையில் ஒரு குழுவினர் புலி இலச்சனை பொறிக்கப்பட்ட கொடிகளை வினியோகிப்பதைப் பலர் கண்ணுற்றிருக்கின்றனர். இவர்கள் இலங்கை அரசின் நோக்கத்திற்குத் துணைபோகின்றனர் என்பது பல தடவைகள் கூறப்பட்ட போதும் கொடிகள் நிறுத்தப்படுவதாக இல்லை. கொடிகளை வினியோகிப்பவர்கள் தமது அறியாமையினால் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா அல்லது இதுவும் இலங்கை அரசின் திட்டமிட்ட செயலா என பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன.
இவை அனைத்தையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதும் இலங்கை அரசிற்கு எதிரான மக்களின் உணர்வுகளை எவ்வாறு அழிவுப் பாதையிலிருந்து மீட்பது என்பதும் உடனடியாகச் எதிர்கொள்ளப்பட வேண்டிய சிக்கலான திட்டமிடலாக சமூக உணர்வுகொண்ட அனைவர் முன்னும் காணப்படுகிறது.