பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டையும் பௌத்தத்தையும் பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றிய மகிந்த ராஜபக்சவை சர்வதேச நாடுகள் தண்டிக்க முற்படுகின்றன என்றும் எதிர்வரும் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு மக்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் பெருகிவரும் வறுமை, பொருளாதாரப் பிரச்சனை, பல்தேசிய வியாபாரச் சுரண்டலால் வாழ்வாதாரங்களை இழக்கும் மக்களின் நிலை, வீங்கிவளர்ந்த இராணுவம் ஆகியவற்றால் உள்நாட்டுப் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாத மகிந்த ராஜபக்ச அரசு சிங்கள மக்களிடமிருந்து அனுதாபத்தை வேட்டியாடி வருகிறது.
கடந்த நான்கு வருடங்களாக மனித உரிமைக்காகத் தண்டிக்கப் போகிறார்கள் காப்பாற்றுங்கள் என்று சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தி அதனை வாக்குகளாக மாற்றி வருகிறது.
மிகக் கடுமையான தீர்மானத்தை இதுவரைக்கும் சந்தித்துள்ள நாடுகளில் ஒன்றான இஸ்ரேல் அரபு நாடுகளுக்கு எதிரான சோவனிசத்தைக் கூட மகிந்தவைப் போன்றே தமது நாடு மீதான அன்னியத் தாக்குதல் என்று வளர்த்துக்கொண்டன. மறுபக்கத்தில் அமெரிக்காவும் ஐரோப்பாவுமே இஸ்ரேலின் மிக நெருங்கிய நண்பர்கள். இஸ்ரேலைப் பாதுகாப்பதற்காக அரபு நாடுகள் மீது அமெரிக்கா தலைமயிலான படைகள் யுத்தங்களைக்க்கூடக் கட்டவிழ்த்துவிட்டிருக்கின்றன.
இலங்கைக்கான இஸ்ரேலியத் தூதர் பிரேரணை தங்களுக்கு எதிராகவும் கொண்டுவரப்பட்டதுதான் அஞ்சத் தேவையில்லை என ஆறுதல் தெரிவித்திருக்கிறார். ஆக, மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் என்பதை ராஜபக்ச அரசு தன்னைத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்கிறது.
மறுபுறத்தில் புலம் பெயர் அரசியல் தலைமைகள் தீர்மானத்தையும் அது குறித்த விவாதங்களையும் தமக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்கின்றன.
மகிந்த ராஜபக்சை அரசைத் தமது எஜமானர்களான ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் தண்டிக்கப்போகின்றன என்றும் அதற்கு தாமே காரணம் என்றும் அவர்கள் தமது அரசியலை நடத்த ஆரம்பித்துவிட்டனர்.
குழந்தைகளையும், பெண்களையும், முதியோரையும் சாரிசாரியாக மகிந்த அரசோடு இணைந்து அழித்துப்போட்டுவிட்டு இப்போது மக்களின் வாழ்நிலங்களை அபகரித்தும், பேரினவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியும் இனச்சுத்திகரிப்புச் செய்யும் கொலக்கார அரசுகளின் நோக்கம் மகிந்த அரசைத் தண்டிப்பதல்ல என்பதைக் கூறுவதற்கு யாரும் இல்லை.