இந்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி உத்தரபிரதேச எல்லையில் அமைந்துள்ள காசிப்பூர் பகுதியில் போராடும் விவசாயிகளை இரவோடு இரவாக இடத்தை காலி செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் அறுவுறுத்தியுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் போராட்டம் வெடித்த போது உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூரிலும் போராட்டங்கள் வெடித்தது. டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே வெடித்தது. இப்போது அரசு இந்த போராட்டத்தை முடிக்க எண்ணுவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், விவசாயிகளும் போராட்டத்தை முடிக்க மாட்டோம் என அறிவித்துள்ளார்கள்.
“டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வெடித்த வன்முறைக்குள் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. காசிப்பூர் பகுதியில் போராட்டம் எவ்வித வன்முறைகளும் இன்றி அமைதியாகவே நடந்தது. அவர்கள் போராட்டத்தை முடித்து வைக்க நினைக்கிறார்கள். இதுதான் உத்தரபிரதேச அரசின் உண்மையான முகம்” என பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்தார்.
டெல்லியை ஒட்டிய பகுதிகளிலும் காசிப்பூர் பகுதியிலும் இணையம், செல்போன் சேவைகள், மின்சாரம் தண்ணீர் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், போரட்டத்தை நடத்தும் பெரிய அமைப்புகள் இதுவரை அரசின் மிரட்டலுக்கு பணியவில்லை.
காசிப்பூரில் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க உள்ளூர் ரவுடிகளும் களமிரக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளதால் பெரும் பதட்டம் அப்பகுதியில் நிலவி வருகிறது.