Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

‘பொன் மணி’ உங்கள் மகளின் கதையாகலாம் : தம்பி ஐயா தேவதாஸ்

14.3அது 1976ஆம் ஆண்டு. இலங்கையில் ஒரு தமிழ் இளைஞரிடம் சிறு தொகைப்பணம் இருந்தது. மூன்று இலட்சம் ரூபா அளவு பணம் அது. அந்த இளைஞர் கொழும்பில் ஒரு ஹோட்டல் கட்டலாமா என்று எண்ணிக் கொண்டிருந்தார். இவருக்கு ஒரு மைத்துனர் இருந்தார். அவர் புகழ்பெற்ற எழுத்தாளர், வானொலி அறிவிப்பாளர், பெயர் பெற்ற விளம்பர நிர்வாகி, இவருக்கும் தமிழ்ப் படம் தயாரிக்க வேண்டுமென்று நீண்ட நாள் ஆசை.

இளைஞரும் மைத்துனரும் ஒருநாள் சந்தித்துக் கொண்டார்கள். மைத்துனர் ஒரு தமிழ்ப்படம் தயாரிக்கலாம் என்று ‘ஐடியா’ கொடுத்தார். இளைஞருக்கும் ஆசை வந்துவிட்டது. சர்வதேசத் தரத்துக்கு ஒரு தமிழ்ப் படம் தயாரித்தால் அதை வெளிநாடுகளுக்கு விற்றே அதிக பணமும் புகழும் பெறலாம் என்று ஆசைப்பட்டார் இளைஞர்.

ஒரு தரமான தமிழ்ப்படம் தயாரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு இருவரும் வந்தார்கள். அந்த இளைஞரின் பெயர்தான் காவலூர் ராஜதுரை. அவர்கள் இருவரும் தயாரித்த படத்தின் பெயர்தான் ‘பொன்மணி’

டைரக்டராக பத்திராஜா தெரிவு செய்யப்பட்டார். சிங்களத் திரையுலகில் சிறந்த ஒளிப்பதிவாளராக விளங்கிய டொனால்ட் கருணாரட்ண ஒளிப்பதிவாளராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

படைப்பாற்றல் திறமை உள்ளவர்களை நடிகர்களாகத் தெரிவுசெய்யலாம் என்று இயக்குநரும் காவலூர் ராஜதுரையும் முடிவு செய்தார்கள். முதலில் திருமதி. சர்வமங்களம் கைலாசபதி தெரிவு செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து பல அறிஞர்களும் நடிக்க ஒப்புக்கொண்டார்கள்.

மருத்துவத் துறையில் புகழ்பெற்ற டொக்டர் சிவஞானசுந்தரம் (நந்தி), மின் பொறியியலாளர் திருநாவுக்கரசு, வித்யோதய பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் திருமதி பவானி திருநாவுக்கரசு, ஓய்வுபெற்ற மாவட்ட நீதவான் எஸ். யோகநாதன், ஓய்வுபெற்ற மாநகரசபை ஆணையாளர் எல்.ஆர். அழகரெத்தினம், முன்னாள் நகர சபை அங்கத்தவர் மன்மதராயர், தகவல் திணைக்களத்தைச் சேர்ந்த செல்வி. கமலா தம்பிராஜா, யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி சித்திரலேகா, மௌனகுரு, எம்.எஸ். பத்மநாதன், எம். சண்முகலிங்கம், ஆர். ராஜசிங்கம், எஸ். ரமேஸியஸ், ராஜேஸ் கதிரவேல், லடிஸ் வீரமணி ஆகியோர் நடிகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

அரசாங்க ஊழியரான கே. பாலசந்திரன் கதாநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் ஊதியமின்றி நடித்துத் தருவதாக ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டார். இதற்கு முன் ‘சுமதி எங்கே’, ‘நான் உங்கள் தோழன்’ போன்ற படங்களில் நடித்திருந்த சுபாஷினி இப்படத்தில் கதாநாயகியாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

‘பொன்மணி’யின் ஆரம்ப விழா 22.8.76இல் கொழும்பில் திரைப்படக் கூட்டுத்தாபனத் தலைவர் ஆர். பியசேனாவின் தலைமையில் நடைபெற்றது. முதலாவது படப்பிடிப்பு யாழ்ப்பாணம் முனியப்பர் கோயிலில் நடைபெற்றது. தொடர்ந்து காரைநகர், பாஷையூர், மண்ணாத்தலைதீவு, பண்ணைக்கடல், நாச்சிமார் கோயில் ஆகிய இடங்களில் இடம்பெற்றது. படப்பிடிப்பு அரைவாசி முடிந்துவிட்டது. கதாநாயகன் பிரச்சினை கொடுக்க ஆரம்பித்தார். படத்தை அரைவாசியில் நிறுத்திவிடுவோமா என்ற எண்ணம்கூட ராஜதுரைக்கு ஏற்பட்டதாம். ‘ஒருசதமும் ஊதியமாக வேண்டாம் என்று சொன்ன கதாநாயகன் 5000 ரூபா பெற்றுக்கொண்ட பின்பே படத்தை முடித்துக்கொடுத்தார். படத்தின் தயாரிப்பு நிர்வாகி பிரபல விளம்பர வாக்கியமொன்றை எழுதியிருந்தார்…. ‘உங்கள் மகளின் கதையாகலாம்’ என்பதே அவ்விளம்பர வாக்கியம்.

ஒரு யாழ்ப்பாண இந்துக் குடும்பத்தில் கடைசிப் பெண் பொன்மணி. திருமணப் பருவம் வந்தபோது தன் அக்காவின் திருமணம் எப்போது நிறைவேறும் என்று காத்திருந்தாள். இவள் தாழ்ந்த குலக் கிறிஸ்தவனைக் காதலித்தாள். குடும்பத்தவருக்கும் தன் சொந்த, எதிர்காலத்துக்கும் இடையில் அவள் ஒரு முடிவு எடுக்கவேண்டியிருந்தது. அவள் தன் காதலனுடன் ஓடிவிடுகிறாள். இவர்களுக்குக் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் திருமணம் நடைபெறுகிறது. பொன்மணிக்கு ஏற்கனவே பேசிய ஒருவனின் கையாளால் அவள் சுடப்படுகிறாள். பிரேத ஊர்வலத்துடன் கதை முடிகிறது. இதுதான் பொன்மணி திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.

எம். றொக்சாமி இசை அமைத்த பாடல்கள் சிறந்து விளங்கின. கமலினி செல்வராஜன், இயற்றிய பாடல் ஒன்று பெண்களின் மன உணர்வை வெளிக்காட்டுவதாக அமைந்திருந்தது. அதை சக்திதேவி குருநாதபிள்ளை உருக்கமாகப் பாடியிருந்தார்.

எடுக்கும் இளம் தோளில் மணமாலையே
மிடுக்கு நடைபோடத் தடைபோடுமே
மன்னவன் வருவான் மையல்தருவான்
வருமெனில் வராதோ நாணமே

ஒருநாள் வாழ்வின் திருநாள் சுவைநாள்
காதல் சுகநாள் இரவு இனிக்கும் திருநாள்
வருமெனில் வராதோ நாணமே

முழவோ தாளம் பொழிய
குழலோ கீதம் பிழிய
நிலா தேன்தரும் நாள்
வருமெனில் வராதோ நாணமே

தோழி கேலி மொழிய
சுற்றல் ஆசி சொரிய
கனா பலித்திடும் நாள்
வருமெனில் வராதோ நாணமே.

இதுவே அந்தப் பாடலின் வரிகள். மற்றப் பாடல்களைச் சில்லையூர் செல்வராஜன் எழுதியிருந்தார். அவற்றில் பின்வரும் பாடல் கருத்துச் செறிவுடன் விளங்கியது.

‘பாதையில் எத்தனை ராதைகள் பேதைகள்
பார்த்திருப்பார் கண்ணனை காத்திருப்பார்
காதலினால் அல்ல கண்ணனிலே உள்ள
போதையினாலல்ல

உண்டிடத் தீனியும் மேனிமூடிட
ஒரு முழம் சேலையும் தந்துவிட்ட
ஒரு நொண்டியும் கண்ணனே’

என்று அமைந்தது அந்தப் பாடல்.

எஸ்.கே. பரராஜசிங்கமும் ஜெகதேவியும் பாடிய இன்னுமொரு பாடலும் இனிமையாக விளங்கியது.

‘வானில் கலகலவென இருபறவைகள் திரியுது
மேலில் தழுவிய கொடிமலர் குறுநகை புரியுது
தேன் நிலவினிலே ஒன்றாகுவோம்
சிங்காரத் தெய்வீகப் பண்பாடுவோம்’ என்று

ஆரம்பமாகிறது அந்தப் பாடல். மற்றப் பாடல்களை ரஜனி, ராகினி, சாந்தி, ஜனதா ஆகியோர் பாடினர்.

பெரும் விளம்பரத்தோடு திரையிடப்பட்ட பொன்மணி, திரைகளில் ஒரு வாரம் மட்டுமே காட்சியளித்தது. ஆனாலும், வேறு எந்த இலங்கைத் தமிழ்ப் படங்களுக்கும் இல்லாத அளவுக்குப் பலர் விமர்சனம் எழுதினர். அவைகள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளிவந்தன.

தினகரனில் (15.04.77) எச்.எம்.பி. மொஹிதீன் இப் படத்தைப்பற்றிச் சிறு குறிப்பு எழுதினார். ‘பிரபல தமிழ் எழுத்தாளர் காவலூர் ராஜதுரையின் கதையாக்கத்தில் உருவான, அதிகம் பிரபல்யப்படுத்தப்பட்ட ‘பொன்மணி’ இப்பொழுது திரையிடப்பட்டிருக்கிறது. ஏனோ இப்படத்துக்குக் கூட்டத்தைக் காணவில்லை. இயக்குநர் பரீட்சியம் மிக்கவர். ஒளிப்பதிவாளரும் திறமைசாலியே. எழுத்தாளரும் நல்லவரே. நடிகர்களோ சமுதாயத்தின் உயர்மட்டப் பெரியவர்கள். இத்தனைபேரும் கூட்டுமொத்தமாகத் தலைபோட்டும் கூட்டம் வராததை புதுமையைத் தருகிறது. நானும் படத்தைப் பார்த்தேன். பொறுமையோடு பார்க்கமுடிந்தது. ரசிக்கமுடியவில்லை….’ என்று தன் எண்ணத்தை எழுதினார்.

அப்பொழுது யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப் பகுதித் தலைவராகப் பேராசிரியர் சுச்சரித்த கம்லத் கடமையாற்றினார். அவரும் ‘பொன்மணி’ பற்றி சிங்களப் பத்திரிகையில் (தினமின) விமர்சனம் எழுதினார். நான் அந்தக் கட்டுரையை மொழிபெயர்த்தேன். அது தினகரனில் வெளியாகியது.

‘……தமிழ்மக்கள் மத்தியில் வாழ்ந்து வருபவரும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும் சிறந்த நெறியாளருமான தர்மசேன பத்திராஜா பொன்மணியை நெறிப்படுத்தியுள்ளார். சாதி, சீதனப் பிரச்சினைகள் பற்றிக் கதை பின்னப்பட்டுள்ளது…… ரசிகர்களின் இதயங்களை ஊடறுத்துச் சென்று அறிவுக் கண்களை, இளையவர்களின் பிரச்சினைகளை நோக்கித் திரும்பும் வண்ணம் படம் அமைந்துள்ளது. ஆனாலும், இப்படம் தோல்வி அடைந்ததற்குக் காரணம் என்ன?

முதலாளித்துவ அமைப்பினால் வேண்டுமென்றே புகுத்தப்பட்ட வர்க்க முரண்பாடுகள் இதன் தோல்விக்கு இன்னுமொரு காரணமாகும். ……தியேட்டர் உரிமையாளர்களே இரசிகர்களைத் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். இன்னும் சிலர் வேண்டுமென்றே விளம்பரம் செய்யாமல் விட்டிருக்கிறார்கள்….. தமிழ் ரசிகர்களின் தென்னிந்திய சினிமா மோகமே இதன் தோல்விக்குக் காரணமாகும். தர்மசேன பத்திராஜா தமிழ் ரசிகர்களை அந்த மாயலோகத்திலிருந்து பிரித்து அவர்கள் வாழுகின்ற உண்மை உலகம் இதுதான் என்று காட்டினார்.

‘….. தென் இலங்கையில் எழுச்சிபெறும் கலை, வியாபார ரீதியான தோல்விகளைப் பொருட்படுத்தாதது போல வடக்கிலும் இந்த நிலை உயர்ந்து செல்லவேண்டும்’ என்று அமைந்திருந்தது அந்த விமர்சனம்.

கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி ‘பொன்மணி’ பற்றி தினகரனில் (24.04.77) நீண்ட விமர்சனம் எழுதினார்.

‘இலங்கைத் திரைப்பட வரலாற்றில் பொன்மணி, தென்னிந்தியத் திரைப்பட அமைப்பிலிருந்து வேறுபடும் முதல் முயற்சியாகும். தொழில்நுட்ப அழகியல் அம்சங்களைக் காத்திரமான முறையில் அறிந்து உணர்த்தும் உள்ளூர்க் கலைஞர்கள், எழுத்தாளர்களின் இணைப்பு முயற்சியால் தோன்றியது இப் படம். ஆனாலும், இதன் தோல்வி காத்திரமாக ஆய்வு செய்யப்படுவது அத்தியாவசியமாகும்.

…..பொன்மணி, சாதாரண தமிழ்ப் படங்களைவிட வேறுபாடானது. கதாபாத்திரங்களின் வாழ்க்கையை மிதமிஞ்சி சிருங்காரப்படுத்தாமலும், மிகையுணர்ச்சி படக்காட்டாமல் யதார்த்தமாக இயங்கக்கூடியளவு உள்ளவாறே காட்டியுள்ளார் பத்திராஜா.

….. கதை அமைப்பைப் பொறுத்தவரை முக்கியப் பாத்திரங்கள் கணேசும் தாயுமே. இப் பாத்திரங்கள் மீது முழு அவதானமும் விழுந்துள்ளமைக்குக் காரணம், இப் பாத்திரங்களில் நடித்த சண்முகலிங்கம், பவானி திருநாவுக்கரசு ஆகியோரது நடிப்பேயாகும்.

…யாழ்ப்பாண இந்துத் தமிழ்க் குடும்பத் தலைவியின் ஏக்கங்களையும், தாபங்களையும் வெகு இயல்பாகப் பவானி திருநாவுக்கரசு பிரதிபலித்துள்ளார்….

‘…. பாடல்களில் ‘பாதையில் எத்தனை ராதைகள்’ வெற்றியீட்டியுள்ளது. கதையின் செல்நெறியை விளக்க அப் பாடல் ஆதாரமாக அமைக்கப்பட்டுள்ளது. ‘வானில் கலகலவென’ என்னும் பாடலில் ஒலிப்பதிவின் தெளிவின்மை காரணமாக பரராஜசிங்கத்தின் திறமை வீணடிக்கப்பட்டுள்ளது. றொக்சாமியின் திறமை, பாடல்களுக்கான மெட்டமைவுடன் வரையறை பெற்றுவிடுகிறது…… பொன்மணி ஜனரஞ்சகப் படமாகவும் இல்லாது, இலக்கணச் சுத்தமான, யதார்த்தப் படமாகவும் இல்லாது நிற்கிறது…’ என்று எழுதினார்.

விமர்சகர் கே.எஸ். சிவகுமாரன் ‘டெயிலிமிரர்’, ‘தினகரன்’ போன்ற பத்திரிகைகளில் விமர்சனம் எழுதினார்.

‘…..முழுப்படத்திலும், சுமார் 60 வசனங்களையே பாத்திரங்கள் பேசுகின்றன. துரதிஷ்டவசமாக அந்த வசனங்கள் தர்க்கரீதியாக அமையவில்லை. இரண்டு பாத்திரங்கள் பேசும்போதுகூட இடைவெளி அதிகம். சில பாத்திரங்கள் புத்தகத் தமிழ் பேசுகின்றன. சில பாத்திரங்கள் கொச்சைத் தமிழ் பேசுகின்றன. நடிப்புதான் இல்லாவிட்டாலும் குரல் அமைப்பில்கூட கவனம் செலுத்தப்படவில்லை. ….. படத்தை முழுமையாக ரசிப்பதற்குத் தடையாக இருப்பவை, படத்தின் மந்தகதியும் நாடகத் தன்மையுமாகும்.

….. இப்படத்தின் சிறப்பான அம்சம் இசையாகும். செல்வராஜனின் பாடல்கள் தனிச்சிறப்பானவை…. படத்தின் முக்கியச் செய்தி என்ன? என்னைப் பொறுத்தவரை அங்கு செய்தியைக் காண முடியவில்லை’ என்று எழுதினார்.

தினகரனில் (2.6.77) விமர்சனம் எழுதிய இன்னுமொருவர் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ஏ. நுஃமான்.

‘…..இலங்கையில் இதுவரை வெளிவந்த வேறு எந்தத் தமிழ்ப்படம் பற்றியும் இத்தகைய காத்திரமான விமர்சனங்கள் வெளிவரவில்லை. இந்த உண்மை ஒன்றே ‘பொன்மணி’ மற்றப் படங்களிலிருந்து வேறுபடுகிறது என்பதற்கு நல்ல உதாரணம். ‘பொன்மணி’யின் கதை, நடிப்பு, படப்பிடிப்பு, இசை அமைப்பு, படத்தொகுப்பு போன்றவற்றில் உள்ள குறைபாடுகளே தோல்விக்குக்காரணம் என்று கூறுவதற்கில்லை. தென்னிந்தியத் தமிழ்ப் படங்களே நமது படங்களின் தோல்விக்கான அடிப்படைக் காரணங்களாகும்.’ என்று அவர் குறிப்பிட்டார்.

இரா. சிவச்சந்திரனும் தினகரனில் (5.5.77) விமர்சனம் எழுதினார். ‘காவலூர் ராஜதுரையின் ‘பொன்மணி’ திரையிடப்பட்டு ஒரு வார காலத்துக்குள்ளேயே மறைந்து விட்டமை இலங்கைச் சினிமா அபிமானிகளுக்கு மனத்தாங்கலான சம்பவமே… பத்திராஜா சினிமாவில் புகழ்பெற்றவர். அப்படிப்பட்டவர் இங்கே ஏன் தவறிழைத்தார் என்று விளங்கவில்லை. மொழி விளங்காமை, யாழ்ப்பாணத்து சமுதாய அமைப்பையும் இயக்கங்களையும் முறையாகப் புரிந்துகொள்ளாமை போன்றவையே தோல்விக்கு முக்கியக் காரணம்போல் தோன்றுகிறது…. டொக்டர் நந்தியின் தோற்றம் நடிப்பு வசன உச்சரிப்பு என்பன இயல்பாக அமைந்துள்ளன….’ என்று எழுதினார்.

வீரகேசரியில் (10.4.77) ‘மண்மகள்’ விமர்சனம் எழுதினார். யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் வாழ்க்கை, கலை, கலாசாரம், பழக்கவழக்கம் ஆகியவற்றைப் படம் பிடித்துக் காட்டுகிறது பொன்மணி… சிறந்த கேரள, வங்காளப் படங்களைப் போல் சிறப்பு அம்சங்களுடன் இப்படம் விளங்குகிறது’ என்று அவர் புகழ்ந்து எழுதினார்.

இப்படி எல்லாம் பெரிய விமர்சனங்கள் கிடைத்த ‘பொன்மணி’ திரையிடப்பட்ட எல்லாத் தியேட்டர்களிலும் எண்ணி எட்டு நாட்களே நின்று பிடித்தது.

பொன்மணியின் பொறுப்பாளர் காவலூர் ராஜதுரை என்ன சொன்னார் தெரியுமா? ‘தயாரிப்பாளர் என்னை நம்பிப் பணத்தைத் தந்தார். நான் இயக்குநரை நம்பிப் பணத்தையும் கதையையும் கொடுத்தேன். நடிகர்கள் இயக்குநரின் புகழுக்குப் பயந்து சொன்னதைச் செய்தார்கள். இதனால் படம் இந்த நிலைக்கு வந்தது’ என்று சொன்னார்.

1978ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘பொன்மணி’ பத்திரிகையாளர்களுக்குப் போட்டுக் காண்பிக்கப்பட்டது. அப்பொழுது பிரபல்யமான சினிமாச் சஞ்சிகையான ‘பொம்மையும்’ விமர்சனம் எழுதியது.

‘…… காதல் திருமணத்தை வலியுறுத்தும் இப் படம் இலங்கையில் பெரும் சர்ச்சைக்கு உட்பட்டது. பல பத்திரிகைகளில் ‘பொன்மணி’ பற்றிய விவாதப் பத்திகள் வெளியாயின. இலங்கையின் இயற்கை எழிலில் தயாரிக்கப்பட்ட இப் படம் இலங்கையின் திரைப்பட வளர்ச்சியில் ஒரு மைல்கல். ராஜ்குமார் பிலிம் சார்பில் பத்திராஜா இயக்கிய இப் படத்தின் கதை வசனத்தை எழுதியவர் இலங்கை வானொலியில் பணியாற்றும் காவலூர் ராஜதுரை’ என்று சுருக்கமாக எழுதியது.

சென்னையிலிருந்து வெளிவரும் ‘தினமணிக்கதிர்’ என்னும் சஞ்சிகையும் (27.1.78) விமர்சனம் எழுதியது.

‘இலங்கையிலிருந்து சர்வதேச திரைப்பட விழாவுக்கு வந்திருக்கும் தமிழ்படம் ‘பொன்மணி’ ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரி ஒருவரின் மகள் பொன்மணி, வீட்டை விட்டு ஓடி ஒரு மீனவனை மணந்து கொள்கின்ற கதை. கதாநாயகியாக நடித்திருக்கு சுபாஷினி நமது ஊர் தமிழ்ப்படக் கதாநாயகியைப் போல கவர்ச்சியாக இல்லை என்றாலும் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். கதாநாயகனின் பெயர் பாலச்சந்திரன். சாதாரண சட்டையைப் போட்டுக்கொண்டு படம் முழுவதும் அதுவே போதும் என்று திருப்தி அடைந்திருக்கும் பரம சாது. நமக்குத் திருப்தி-கண்ணுக்குக் குளிர்ச்சியான இயற்கைக் காட்சிகள். திருப்தியில்லாதது பேசும் தமிழ்.

அதாவது கேரளீய சிங்களம், பாதிப் படத்துக்கு மேல், உட்கார்ந்திருக்க முடியவில்லை’ என்று தினமணி கதிர் எழுதியது. இதில் ‘கேரளீய சிங்களம்’ என்றால் என்ன என்று பலருக்கும் புரியவில்லை.

‘பொன்மணி’ இலங்கையில் அதிக தினங்கள் ஓடாவிட்டாலும், அதீத பெயர் பெற்றுவிட்டது. அதனால், அப்படத்தை மீண்டும் சுருக்கி எடிட் செய்திருந்தார் காவலூர் ராஜதுரை.

இலங்கைத் தொலைக்காட்சியில் (ரூபாவாஹினியில்) முதன் முதலில் காட்டப்பட்ட இலங்கைத் தமிழ்ப்படம் ‘பொன்மணி’ தான். 9.5.84இல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. பொன்மணியை இரண்டாவது முறையும் (21.3.85) ஒளிபரப்பினார்கள்.

அப்பொழுது வெளி வந்து கொண்டிருந்த ‘சிந்தாமணி’யில் ‘சஞ்சயன்’ பின்வருமாறு எழுதினார். ‘இலங்கைப் படமான’ பொன்மணியைப் பார்க்கும் வாய்ப்பு 21.3.85 இல் ரூபவாஹினி ரசிகர்களுக்குக் கிடைத்தது. இலங்கைப் படந்தானே என்று முன்பு சலித்துக்கொண்டவர்கள் கூட, பின்பு ‘பரவாயில்லை படம் நன்றாகவே இருக்கிறது’ என்று கூறக் கேட்டபோது ஈழத்துத் தமிழ் ரசிகர்களின் ரசனையில் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை உணரமுடிகிறது. இப்படம் பல வருடங்களுக்கு முன் இலங்கையில் தயாரிக்கப்பட்டது. வெளிப்புறக் காட்சிகள் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்டன. தென்னிந்தியப் படங்களின் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த கால கட்டத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட துணிகர முயற்சி. தொழில் நுட்பத் துறையில் முன்னேறியிருந்த தமிழ்நாட்டுப் படங்களின் முன்னே அன்று ‘பொன்மணி’ எடுபடவில்லை.

….தமிழ்நாட்டுப் பாரதிராஜா, பாக்கியராஜாக்கள் தரும் இப்போதைய பாணியை என்றோ ‘பொன்மணி’ மூலம் தந்துவிட்டார் ஈழத்துப் பத்திராஜா…. தமிழகத்திலிருந்து புதுமைப் படைப்புகள் என்று இங்கு வரும் திரைப்படங்களைப் பார்க்கும்பொழுது இப்படங்களுக்கெல்லாம் முன்னோடி ‘பொன்மணி’ என்றே சொல்லவேண்டும்.

….அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஜாதி, மதம் இரண்டையுமே காதலுக்காக அறுத்தெறிந்து வெற்றிபெறும் இளம் ஜோடியைக் கண்டோம். ‘பொன்மணி’யிலோ ஜாதி, மத வெறிக்குப் பொன்மணி பலியாவதன் மூலம் ஜாதி, மத வெறியர்கள் வெற்றிபெறுவதைக் கண்டோம்…’

இவ்வாறு ‘பொன்மணி’யின் மையக் கருத்து அமைந்திருந்தது. எது எப்படியாயினும் இப்படியான புதுமைப்படைப்பு உருவாகக் காரணமாயிருந்த காவலூர் ராஜதுரையும் முத்தையா ராஜசிங்கமும் பாராட்டுக்குரியவர்களே.

‘பொன்மணி’ திரைப்படம் பின்பு பல வெளிநாடுகளின் காண்பிக்கப்பட்டது. வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் அப் படத்தை விருப்பத்துடன் பார்த்து வருகின்றனர்.

– தம்பி ஐயா தேவதாஸ்,
இலங்கை

https://inioru.com/1975-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE-2/

Exit mobile version