Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பொதுவேட்பாளராக பொன்சேகா; புதுடில்லிக்கு விருப்பமேயில்லை:ரணிலிடம் நேரடியாகக் கூறப்பட்டது!

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்துவது தொடர்பில் தனது ஐயப்பாட்டினை இந்தியா, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாகத் தெரியப்படுத் தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் கடந்த வாரம் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டி ருந்த வேளை இலங்கையின் அரசியல் நிலைவரம், ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவிற்கு அரசியல் ரீதியாகச் சவால் விடக்கூடியவர் யார் என்பன போன்ற விடயங்களை ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆராய்ந்த இந்தியத்தலைவர்கள், சரத் பொன்சேகா குறித்த தமது சந்தேகங்களையும் சுட்டிக்காட்டியுள்ளனர் எனக் கூறப்பட்டது.

இது தொடர்பாக மேலும் தெரிய வருபவை வருமாறு:

கடந்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நிறுத்தப்படுவது குறித்துக் கேட்டறிந்துள்ள இந்தியத் தலைவர்களும், அதிகாரிகளும் இது குறித்த தமது ஐயப்பாடுகளையும் ரணிலிடம் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவைப் பொது வேட்பாளராக நிறுத்துவது குறித்த தமது கவலையை உத்தியோகப்பற்றற்ற விதத்தில் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரிவித்துள்ளனர். என்ன உத்தரவாதம் என்று கேட்டனர்., சரத் பொன்சேகா தேர்தலில் வெற்றிபெற்றால் தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்றும் அவர்கள் ரணிலிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாகிஸ்தானில் இராணுவம் பல தடவை ஆட்சியைக் கைப்பற்றியமை போன்று தனது தென்பகுதி அயல் நாடான இலங்கையிலும் நடைபெறலாம் என்ற அச்சமே சரத் பொன்சேகாவைப் பொது வேட்பாளராக நிறுத்துவதை இந்தியா கவலையுடன் பார்ப்பதற்கான காரணமாகவுள்ளது. எனினும், ரணில் விக்கிரசிங்க நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் பதிலளித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் தனது புதிய எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு இந்தியாவின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த வேளையிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா கூட்டுப்படைகளின் சிரேஷ்ட தளபதிப் பதவியை இராஜிநாமாச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
புதுடில்லிக்கான விஜயத்திற்கு இந்திய அரசின் அனுமதியை எதிர்பார்த்து இலங்கை அரசுக் குழுவினர் காத்திருக்கும் ஒரு சூழ்நிலையிலேயே, எதிர்க்கட்சித் தலைவரின் இந்திய விஜயம் இடம் பெற்றுள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் குறித்து அனைத்துத் தலைவர்களும் கவலை தெரிவித்தனர். கடந்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அங்கு சந்தித்த அனைத்துத் தலைவர்களும் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் நிலை குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர். ரணில் விக்கிரமசிங்க தாம் உருவாக்கியுள்ள புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி, இடம் பெயர்ந்தவர்கள் தொடர்பான கூட்டு செயற்றிட்டமொன்றை முன்வைக்கும் எனப் புதுடில்லிக்குப் பதிலளித்துள்ளார். இப்படி மேலும் கூறப்பட்டது.

Exit mobile version