முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி 30 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருப்பவர் பேரறிவாளன். அவருக்கு உடல் நலப் பிரச்சனைகள் இருந்த காரணத்தால் அவருக்கு தமிழக அரசு 30 நாட்கள் பரோல் வழங்கியது.
மே 28-ஆம் தேதி பரோல் விடுப்பிற்காக சிறையில் இருந்து வந்தார். இன்றோடு அவரது பரோல் முடிவடைந்த நிலையில் காவல்துறையினர் அவரை வீட்டில் இருந்து அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்தனர். அதன் படி மதியம் வாக்கில் அவர் வீட்டில் இருந்து சிறைத்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். வாகனம் பாதி வழி சென்ற போது அவருக்கு தமிழக அரசு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கிய செய்தி சிறைத்துறை அதிகாரிகளுக்கு வந்தமையால் பாதிவழியில் வாகனம் திருப்பப்பட்டு அவர் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர் சிகிச்சைகள் நடைபெற்று வருவதால் அவருக்கு பரோல் தேவைப்படுகிறது. என்பதால் மருத்துவச் சான்றிதழ்கள் அடிப்படையில் பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள் மேலும் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அவருக்கு பரோல் வழங்கியுள்ளது.