பெற்றோல் விலை உயர்வைக் கண்டித்து விஜயகாந்த் அறிக்கை:
மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் 16 முறை பெட்ரோல் விலையை உயர்த்தியதால், சுமார் ரூ.44 ஆக இருந்த பெட்ரோல் விலை இன்று ரூ.79 என்ற அளவில் 80 சதவீதம் உயர்ந்துள்ளது. விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வினை, மத்திய அரசு கட்டுப்படுத்த தவறியது. இதனால் ஏற்கனவே மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தன் பங்கிற்கு மாநில அரசு பால் விலை, பஸ் கட்டணம், மின் கட்டணம் போன்றவற்றை கடுமையாக உயர்த்தியுள்ளது.
இந்த செயல் நம்பிக்கையோடு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்த பொதுமக்களின் முதுகில் குத்தியதாகத்தான் நான் கருதுகிறேன். இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இல்லையென்றால் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் மீது விதித்துள்ள அளவுக்கு அதிகமான வரியை குறைப்பதன் மூலம் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும். ‘’உரலுக்கு ஒரு புறம் இடி என்றால், மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி’’ என்பார்கள்.
அது போல தமிழக மக்களுக்கு மத்திய அரசும், மாநில் அரசும் மாறி மாறி வரிகள் மூலமும் மற்றும் விலை ஏற்றத்தின் மூலமும் பாடாய் படுத்துகிறார்கள். ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் பெட்ரோல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை
என்றால் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.