Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பெருமழைக்கான பிரார்த்தனைகளுடன்… : எஸ். ஹமீத்

fire

இன்னும் எரிகிறது நெருப்பு…
போதாதைக்குப் பெருங் காற்று வேறு;
தீக் கங்குகள்
எட்டுத் திசைகளிலும் எழுந்து பறக்கின்றன

*பற்ற வைத்தவன் தூரத்தில்
பத்திரமாய் ஒரு மாளிகைக்குள்;
பாழும் நெருப்புக்கது தெரிந்துதான்
பற்றி எரிகிறது…!

*தொடங்கியவன் அவன்
தொடங்குவதற்கும்
தொடர்வதற்கும்
உதவியது காற்று!

*எல்லாவற்றையும் எரித்துவிடும்
பொல்லாத ஆவேசம் நெருப்புக்கு;
காற்று நன்றாகவே
போட்டுக் கொடுத்தது..!

*பைத்தியக்கார நெருப்புக்குப்
பச்சை மரங்கள் கூடப்
பலியாகிக் கொண்டிருக்கின்றன
நேற்றந்தப் பசுங் கிளைகளைத் தழுவிய
அதே காற்றின் உபயத்தில்..!

*காட்டிக் கொடுத்தலே
தொழிலாயான பின்னர்
காற்றுக்கு
வளர்ந்த மரமென்ன
வளரும் செடியென்ன…?

*ஒரு கட்டத்தில்
நெருப்புக் களைத்துத் தணிந்தது..
சற்றே ஓய்வு கொண்டிருந்த
காற்றுக்கது பொறுக்கவில்லை..

*விட்டேனா பார் என்று வேகமாய்ச்
சுழன்றடித்தது காற்று; மீண்டும்
கனன்றெரிந்தது நெருப்பு!

*காற்றைத் தோற்றுவித்த
மரங்கள் கருகின அவற்றில் பூத்த
சுதந்திர மலர்களோடு…!

*ஒரு பெருமழைக்கான
பிரார்த்தனைகளுடன்
எஞ்சிய மரங்களும்
ஏனைய உயிர்களும்…!

Exit mobile version