சென்னைப் பெருநகர்த் தொடர் வண்டிப் (Chennai Metro Rail) பாதை கட்டப்படத் தொடங்கியதில் இருந்து பல விபத்துகள் நேர்ந்து உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 5 பேர்கள் விபத்துகளில் சிக்கி மரணம் அடைந்து உள்ளனர். காயம் பட்டவர்களின் எண்ணிக்கையைக் கண்டு பிடித்தால், அப்படிக் கண்டு பிடிப்பவர்களுக்கு உலகின் மிகச் சிறந்த பல்கலைக் கழகத்தில் இருந்து முனைவர் (Doctorate) பட்டம் வழங்கலாம் என்ற அளவுக்கு, அச்செய்திகள் முற்றிலும் மறைக்கப்படுகின்றன. அப்படி மறைக்கப்பட முடியாத இடங்களில் அதிக வெளிச்சம் படாமல் பாதுகாக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட விபத்து ஒன்று 21.8.2015 அன்று மாலை 7 மணி அளவில் கிண்டி அருகில் நடந்து உள்ளது. இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த ரவி என்பவரும் ரமேஷ் என்பவரும் லீ மெரிடியன் (Lee Meridian) ஹோட்டலைக் கடக்கும் போது அவர்கள் மீது கனமான இரும்புக் கம்பி ஒன்று விழுந்து உள்ளது. அந்த இடத்தை அவர்கள் “ஒரு வினாடிக்குப் பின் கடந்து இருந்தால் அந்த இடத்திலேயே மரணம் அடைந்து இருப்போம்” என்று அவர்கள் கூறினார்கள். ஒரு வினாடிக்கு முன் சென்றதால் மரணத்தில் இருந்து தப்பி, ஒருவர் கையிலும் இன்னொருவர் நெஞ்சிலும் காயங்களுடன் உயிர் தப்பினர்.
பெருநகர்த் தொடர் வண்டிப் பாதைக் கட்டுமானம் தொடர்பாக நடந்த விபத்துகளை எல்லாம் கவனித்தால், அவை மிக மிகக் கவனமான கவனக் குறைவால் ஏற்பட்டு உள்ளன என்று தெரிகிறது.
அது என்ன கவனமான கவனக் குறைவு? அதுவும் மிக மிகக் கவனமான கவனக் குறைவு என்று வியப்படைகிறீர்களா? பெருநகர்த் தொடர் வண்டிப் பாதை கட்டப்படத் தொடங்கியதில் இருந்து நடந்த விபத்துகளைக் கவனித்துப் பார்த்தால், அவை அனைத்தும் கட்டுமானப் பணியின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சரிவர எடுக்காமையால் தான் என்று தெளிவாக விளங்கும். அதுவும் ஒரே மாதிரியான – அதாவது சரியான பிடிப்பு இல்லாமல் கழன்று விழுவதால் ஏற்படும் – விபத்துகளே தொடர்ந்து நடப்பது தெரிகிறது. கட்டுமானத் தொழிலைப் பெறுத்த மட்டில் இது போன்ற விபத்துகள் நடைபெறவே முடியாதபடி பார்த்துக் கொள்ளும் அளவிற்குத் தொழில் நுட்பம் வெகுவாக வளர்ச்சி அடைந்து உள்ளது. அப்படி இருக்கும் போது கவனக் குறைவால் இவ்விபத்து நடைபெறுகிறது என்பதே, அதில் ஈடுபடும் ஒப்பந்தக்காரர் (Contractor) கட்டுமானத் தொழிலுக்குச் சற்றும் தகுதியற்றவர் என்பதையே மெய்ப்பிக்கிறது. அப்படியும் ஒரு தடவை நடந்தால் அது ஏதோ கவனக் குறைவால் நடந்தது என்று வலிந்து நினைக்கலாம். ஆனால் தொடர்ந்து அதே மாதிரியான விபத்துகள் நடந்தால், அதைக் கவனக் குறைவு என்று எப்படி நினைக்க முடியும்?
கட்டுமானப் பணியை ஏற்று இருக்கும் முதலாளிகளைப் பொறுத்த மட்டில், தாங்கள் செய்த முதலீட்டுக்கு “உரிய” இலாபம் தேடுவதில் தான் முழுக் கவனம் உள்ளது. விபத்துகள் நேரா வண்ணம்பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கக் கோரிஅவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றாலும். அதனால் செலவினங்கள் ஏற்பட்டு இலாப விகிதம் குறைந்து விடும் என்பதற்காக, அவர்கள் தட்டிக் கழித்து விடுகிறார்கள்; வற்புறுத்திச் சொன்னால் கோபம் அடைகிறார்கள்; மேலும் வற்புறுத்தினால் ளெிப்படையாகவே மறுத்து விடுகிறார்கள். தேவைப்பட்டால் ஒப்புக் கொண்ட ஒப்பந்தத்தை இரத்து செய்து விட்டு ஓடி விடுவதாக மிரட்டுகிறார்கள். மொத்தத்தில் முதலாளிகளைப் பொறுத்த மட்டில், மக்களின் உயிர் வாழ்க்கையை விட இலாபம் ஈட்டுவது தான் முக்கியமாக இருக்கிறது எனலாம் என்றால் அப்படியும் சொல்ல முடியவில்லை. ஏனெனில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான செலவினங்களைச் செய்த பிறகும் இலாபம் கிடைக்கும் படியாகத் தான் திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன. முதலாளிகளுக்கு இலாபம் எனதை விட அதிக இலாபம், அதைவிட அதிக இலாபம் என்பதில் தான் கவனம் எல்லாம் உள்ளது. ஆகவே பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கவனமாக, கவனிக்க மறுக்கிறார்கள்.
சரி! முதலாளிகள் கிடக்கட்டும்; அவர்கள் அப்படித் தான். அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது? பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான செலவினங்களை முதலாளிகள் செய்ய மறுத்தால், அதைவிடப் பன்மடங்கு செலவு ஆகக் கூடிய வகையில் தண்டம் விதிப்பதற்கான விதிகளை ஏன் இயற்றவில்லை?
அரசு அப்படிப்பட்ட விதிகளை இயற்ற வேண்டும் என்று மக்கள் ஏன் போராடுவது இல்லை?