Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பெரியார் பிறந்த நாளான செப்,17 சமூக நீதி நாள் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தின் சிந்தனை, அரசியல் பரப்பில் இன்று வரை செல்வாக்குச் செலுத்தி வரும் தந்தை பெரியார்  பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாளை சமூக நீதி  நாளாக அறிவித்திருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள். இது திராவிட இயக்க, தமிழ் தேசிய ஆர்வலர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெரியார் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாலும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாலும் கொண்டாடப்படுகிறார். காரணம் அதிகாரமற்று இருந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடினார். கடவுள் மறுப்பு என்பது அடிப்படை கொள்கையாக இருந்த போதும் பெரியார் வழிபாட்டு உரிமைக்காக தீரமிக்க பல போராட்டங்களை முன்னெடுத்தார். பார்ப்பன எதிர்ப்பை கடவுள் மறுப்பின் அடி இழையாகக் கொண்டு பிற்படுத்தப்பட்டவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளிட்ட உரிமைகளுக்காக போராடினார்.

இந்திய அரசியல் சாசனம் முதன்முதலாக திருத்தப்பட காரணம் பெரியாரின் இட ஒதுக்கீடு போராட்டம்தான் அதனால்தான் அவரை தமிழ்நாட்டு மக்கள் தந்தை பெரியார் என்கிறார்கள்.

திராவிர இயக்கம் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து நாற்பது ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் இதுவரை பெரியாருக்கு இத்தனை பெரிய கௌரவம் வழங்கப்படவில்லை. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று 110-வது விதியின் கீழ்  இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்,

“ முதிய வயதான 95 வயதிலும் போராடினார் பெரியார். பெரியார் நடத்திய போராட்டங்களை எவரும் காப்பியடித்து விட முடியாது.அவர் நடத்திய போராட்டங்களைப் பற்றி பேசினால் 10 நாட்கள் பேச வேண்டும். பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதியை ஆண்டு தோறும் சமூக நீதி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடும்”  என்று அறிவித்தார்.

இதனை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் மேஜையைத் தட்டி வரவேற்றனர்.பாஜக இதை எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இதை வரவேற்றுள்ளார்.

திராவிட இயக்க கொள்கைகளும், பெரியாரும் இனவாத தமிழ் வெறியர்களாலும், பார்ப்பனர்களாலும், இந்துத்துவ சக்திகளாலும் தாக்கப்பட்டு வரும் இக்காலத்தில் இந்த அறிவிப்பு பெரியார் இயக்கங்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும்.

Exit mobile version