Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பெரியாரை பரப்புவதே ஒரே தீர்வு!

கோவையில் உள்ள பெரும்பான்மை சமூகமான கவுண்டர் சமூகத்தினர் பலரும் இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., மற்றும் சில இந்து அமைப்புக்களில் உள்ளனர் என்பது உண்மைதான். அ.தி.மு.க வெற்றிக்கு அவர்களுக்கும் பங்கு உண்டு என்பது உண்மைதான். ஆனால் அது மட்டுமே காரணமா?

இல்லை ஏனென்றால் கவுண்டர் சமூகத்தை சேர்ந்த சில தி.மு.க வேட்பாளர்களும் தோற்கடிக்கப்பட்டுள்ளர்.

அதுமட்டுமில்லாமல் அ.தி.மு.க வெற்றிக்கு மற்றொரு பெரும்பான்மை சமூகமான அருந்ததியர்களும் ஒரு காரணம் தான். அம்மக்களிடமும் அ.தி.மு.க பிரிக்க முடியாததாகவே உள்ளது. இன்னும் இரட்டை இலையை கண்டால் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டு போட்டுவிட்டு வந்துவிடுவார்கள். போதிய விழிப்புணர்வு அம்மக்களிடையே இல்லை.

அம்மக்கள் பெற்ற 3 சதவீத இட ஒதுக்கீட்டீன் முக்கிய காரணமான தோழர் அதியமான் அவர்கள் (இந்த வரலாறு கூட அம்மக்கள் பலருக்கும் தெரியாது) கிட்டத்தட்ட 23.94 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்படுகிறார் மற்ற பகுதிகளைவிட இது கொஞ்சம் அதிகம். அதுவும் தனித்தொகுதியில்.

தி.மு.க-வை பற்றிய பல மூடநம்பிக்கையை இங்கே அதிகம். ஆனால் அதையும் தாண்டி இன்று தி.மு.க அதிக சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. பல இடங்களில் வாக்கு வித்தியாசம் என்பது வெறும் 5 சதவீதத்திற்கும் குறைவு தான். இதற்கு காரணம் ‘B’ டீம்கள்.

பா.ஜ.க., அ.தி.மு.க வெற்றி பெற்றதற்கு அவர்களின் ‘B’ டீமான நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யமும் தான்.

கிட்டத்தட்ட அவர்கள் கோவை பகுதிகளில் பிரித்த ஓட்டு சதவீதம் மட்டும் 5 முதல் 20 சதவீதத்திற்கும் அதிகம் ஆகும். கோவை தெற்கு தொகுதியில் கமல் போட்டியிடவில்லையென்றால் பா.ஜ.க வெற்றி பெற்றிருக்காது.

இவர்களுக்கு வாக்களித்த பலரும் புதிய இளைஞர்களே. குறிப்பாக சீமான் எந்த அருந்திய சமூகத்தை தமிழர் இல்லை தெலுங்கர் என்று ஒதுக்கி வைக்கின்றாரோ அவர்களே சீமானுக்கு வாக்களித்துள்ளனர். புது இளைஞர்கள் பலருக்கும் அரசியல் தெரியாது. பெரியாரை தெரியாது. திராவிடர் இயக்க வரலாறும் கொள்கையும் தெரியாது.

புதிய இளைஞர்களை நமதாக்க வேண்டும். எனக்கு நெருக்கமான பல நண்பர்களும் எங்கள் பகுதியில் பல இளைஞர்களும் தி.மு.க-விற்கே வாக்களித்தனர் காரணம் அவர்களுக்கு பெரியாரை கொஞ்சம் தெரியும். திராவிடர் இயக்க வரலாறும் சாதனைகளும் கொஞ்சம் தெரியும். இன எதிரியான பார்ப்பனர்களை பற்றியும் தெரியும்.

இதுவே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை எந்த சிக்கலும் இல்லாம் எடுக்க வைத்தது. ஆகவே தான் பெரியாரையும் திராவிடர் இயக்கக் கொள்கைகளையும், சாதனைகளையும், வரலாற்றையும் அதிக அளவில் இந்த பகுதிகளில் கொண்டு போய் சேர்க்க வேண்டி உள்ளது. உண்மையான எதிரி யார் என்று அடையாளங்காட்ட வேண்டி உள்ளது.

இதுவே வரும் காலங்களில் சரியான முடிவுகளை கொடுக்கும். அது தான் இந்த பகுதிகளில் பரவியுள்ள சாதிய மதவாத அமைப்புகளுக்கு ஒரு முடிவாக இருக்கும்.

பெரியாரை பரப்புவது தான் ஒரே தீர்வு. இந்த 5 ஆண்டுகளில் அதுவே முக்கிய பணியாக இருக்க வேண்டும்.

ஆனால் மற்றொரு சிக்கல் இருக்கிறது. நானும் பெரியாரிஸ்ட் தான். நானும் கருப்புச் சட்டைத் தான். என்று சொல்லிக்கொள்ளும் கோடைகால இயக்கம் அ.தி.மு.க – தி.மு.க ஒன்னு. காங்கிரஸ் – பி.ஜே.பி ஒன்னு என்று சொல்லிக்கொண்டு அவர்களை கொஞ்சம், இவர்களை கொஞ்சம் ஆதரிப்போம் ஆனால் தி.மு.க-வை மட்டும் ஆதரிக்க மாட்டோம் என்கிற நிலைபாட்டை எடுத்தனர் என்பதை கடந்த தேர்தலில் பார்த்தோம்.

இந்த அரசியல் நிலைபாடே தவறானது. அவர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ஏனென்றால் அவர்கள் சீமானை விட ஆபத்தானவர்கள்.

ஆபத்துகளை வரும் முன் காத்து பெரியாரை கொண்டுபோய் சேர்ப்போம் கொங்கு மண்டலத்தை நமதாக்குவோம்.

நன்றி:  Vimal Prakash Gvp

Exit mobile version