அண்ணாசாலையில் ஜெமினி மேம்பாலத்துக்கு கீழே குதிரையை அடக்குகிற சிலை ஒன்று இருக்கும் அதில் கிண்டியில் நடந்து கொண்டிருந்த குதிரைப் பந்தயத்தை தடை செய்ததன் நினைவாக எழுப்பப்பட்ட சிலை என்றிருக்கும்
நண்பர்களே , கிண்டியிலே இப்போதும் குதிரைப் பந்தயம் நடக்கிறது, ஏராளமான ஏழைகள் இன்னமும் இந்த சூதாட்டத்தில் வருவாயை இழந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படியானால் இந்தச் சிலையின் நினைவை நான் எபப்டி எடுத்துக் கொள்வது. இபப்டித்தான் சென்னை முழுக்க இப்போது சிலைகள் நிறுவப்பட்டிருக்கிறது அது தமிழர்களின் பாரம்பரீய கலைவடிவங்களை பறைசாற்றுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் தமிழர்களின் சென்னை வாழ்க்கை என்பது சுகமானதாக இல்லை. சிலைகளுக்கு கிடைக்கிற இடம் ஒரு சாதாரண ஏழைத் தமிழனுக்கு இல்லை. அவர்கள் கூவக்கரையோரங்களில் வாழ்கிறார்கள். மெரீனா கடற்கரையை அழகுபடுத்தும் சிலைகள் நம் கண்ணுக்குத் தெரிகிற அதே வேளையில் கடலோரங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு பல கிலோ மீட்டர்களுக்கு அப்பால் வீசப்பட்டிருக்கும் பட்டினப்பாக்கம் மீனவர்களின் கதை நமக்குத் தெரிவதில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை எளிய மனிதர்கள் ஒண்டிக் கொள்ள சென்னையில் ஒரு இடம் இருந்தது. வேலையில்லாத காலங்களில் கூட யாரோ ஒரு நண்பனின் அறையைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது. இன்று வேலை தேடிவரும் கிராமத்து இளைஞர்களுக்கு மலிவான விலையில் அறைகள் இல்லை. உருவாகி வளர்ந்த ஐடி துறை இளைஞர்களுக்கு வீடு கொடுப்பதும் அவர்களின் வாழ்வும்தான் இன்றைய சென்னையில் பேச்சுலர்ஸ் லைப்ஃ என்றாகிப் போனது. வேலையில்லாமல் ஒரு நாள் கூட வாழமுடியாத நிலைக்கு சென்னை மாறிவர இந்தப் பத்தாண்டுகளில் சென்னையைச் சுற்றி கொண்டு குவிக்கப்பட்ட தனியார் மூலதனமே காரணம். நகரம் என்னமோ தமிழனின் நகரமாகத்தான் இருக்கிறது. வாழ்கிறவர்கள் என்னவோ பணக்கார தமிழர்களாகவே வாழ்கிறார்கள். அல்லது செல்வந்தர்களான மார்வாடிகளாகவே இருக்கிறார்கள்.
ராஜராஜனுக்கு சிலைவைப்பதில் தொடங்கியது இந்த கலாசாராம். ஆனால் இந்த மன்னர்கள்தானே விவசாய நிலங்களைச் சுற்றி கோவிலை அமைத்து கோவிலைச் சுற்றியிருந்த விவசாய நிலங்களை கோவில் அர்ச்சகர்கள் என்னும் பார்ப்பனர்களுக்குக் கொடுத்தது. சேரி என்றும் குடியானவர்களின் தெருவென்றும் பிரித்து வைத்தது. ஆதிக்கசாதி அரசியலில் நுட்பமான உருவகம்தான் தமிழ் மன்னர்கள். மக்களின் விவசாய நிலங்களை எடுத்து உழைப்புக்கும் நிலத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லாத ஒரு கூட்டத்திடம் கொடுத்த மரபின் தொடர்ச்சியே இந்த சிலைகளின் மூலம் இவர்களை தமிழ் மக்களின் நெஞ்சில் நிறுத்துவது. திருவள்ளுவரை மன்னரைப் போல மதிப்பீடு செய்ய முடியாவிட்டாலும் அதன் வரிகளில் ஆங்காங்கே பெண்கள் மீதான மட்டகரமான பார்வையும், மூடத்தனமான கருத்துக்கள் இருப்பதையும் மறுக்க முடியாது ஆனாலும் இன்றைய மறுகாலனியாதிக்க சூழலில் திருவள்ளுவர் தேவைப்படுகிறார். ஆனால் திருவள்ளுவரை வைத்தோ, சர்வக்ஞரை வைத்தோ கர்நாடக, தமிழக உறவுகள் சிறந்த நிலையில் இருக்கிறது என்பதை கட்டியெழுப்பும் முயர்ச்சிக்கிடையில் தமிழக முதல்வர் கருணாநிதி பேசத் தவிர்க்கும் விஷயங்கள் குறித்த தந்திரங்கள் ஏராளமாக இருக்கிறது.
காவிரி, ஓகேனக்கல் இரண்டுமே பல லட்சம் விவாயிகள் தொடர்பான பிரச்சனை. கர்நாடக அரசு இந்த இரண்டு விஷயங்களிலும் தமிழக மக்களின் நீராதார உரிமையை இந்திய அரசியல் சாசனத்திற்கு முரணான வகையிலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான வகையிலும் தடுத்து வைத்துள்ளது. ஓகேனக்கல் கூட்டுக் குடி நீர் திட்டம் அறிவிக்கப்பட்ட வேகத்தில் கிடப்பில் போடப்பட்டது இந்த சிலை திறபிற்காகத்தான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. வரும் மாதங்களில் காவிரி தண்ணீர் வேண்டி தமிழகத்தில் கோரிக்கை எழும் சூழலில் அது வழக்கம் போல இரு மாநிலங்களிலும் பதட்டமாக மாறிவிடுவதற்கு முன்னரே சிலைகளைத் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு அவசரம் காட்டி பணிகளை முடுக்கி விட்டதாகவும் அரசு மட்டத்திலேயே தகவல்கள் கசிகிற சூழலில் பெங்காளூருவில் 18-ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடந்த திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டிருக்கிறது. அதற்பு பிரதிஉபகாரமாக சர்வக்ஞரின் சிலை சென்னையில் நேற்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இரு மாநில முதலவர்களுமே இதை இரு மாநில மக்களின் சகோதரத்துவத்தின் வெளிப்பாடு என்று புழங்காகிதப்பட்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். பொதுவாக தமிழகத் தமிழர்களை இனவாதிகளாகவும், தமிழ் சாவனிஸ்டுகளாகவும் சித்தரிப்பது வட இந்திய ஆங்கில ஊடகங்களின் பழக்கம். அப்பழக்கம் உண்மையில் இந்து ராமின் சிந்தனையே. ஆனால் மற்றெல்லா இந்திய மாநில மக்களை விடவும் தமிழ் மக்கள் சகிப்புத் தன்மையும் பிரரை ஏற்றுக் கொள்கிற பண்பும் கொண்டவர்கள். ஒவ்வொரு முறை காவிரி பிரச்சனை எழும் போதும் கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது கடைகள் கொழுத்தப்பட்டு அங்கிருந்து துரத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அப்படி ஒரு போதும் தமிழ் மக்கள் இன்னொரு இன மக்களிடம் நடந்து கொண்டதில்லை. ஆனாலும் தொடர்ந்து இவர்கள் தமிழ் மக்கள் மீது இன வெறி முத்திரை குத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதெல்லாம் ஒரு புறமிருக்க கடந்த ஏழாம் தியதி காவிரி டெல்டா பாசனத்திற்காக திறப்பதாக இருந்த தண்ணீர் இன்று வரை திறக்கப்படவில்லை. மேட்டூர் அணையின் நீர்மட்டம் பாசனத்திற்கு திறந்து விடுகிற அளவுக்கு நிரம்பவில்லை என்பது பொதுப்பணித்துறை அதிகாரிகளின் தகவல். ஆனால் கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையோ அதன் முழுக் கொள்ளளவை எட்டி ததும்பி நிற்கிறது. நியாயமாக உச்சநீதிமன்றம் 2007-ல் வழங்கிய இறுதித் தீர்ப்பின் படி இந்த மாதத்தில் தமிழகத்துக்கு 419- டி,.எம்.சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டுருக்க வேண்டும். ஆனால் குறுவைச் சாகுபடிக்காக விவாசாயிகள் தண்ணீரை எதிர்ப்பார்த்துக் காத்துக் கிடக்கும் போது அண்ணனும் தம்பியும் சொல்கிறார்கள் இரு மாநில பிரச்சனைகளையும் சகோதர உணர்வோடு பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். இவர்கள் எப்போது பேசி எப்போது கடைமடைக்கு தண்ணீர் வருவது. உண்மையில் காவிரி நடுவர் மன்றம் என்ற ஒரு அமைப்பே தஞ்சை விவாசாரிகளின் வாழ்வுரிமையை பறிக்கக் காரணமாக இருந்தது. அவர்கள்தான் டெல்டா விவசாயிகளின் பாசனப் பரப்பைக் குறைத்தார்கள். கர்நாடகாவில் பாசனப்பகுதியை அதிகப்படுத்தினார்கள். ஒரு மாநில முதல்வராக இருந்து செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத் தவறுகிற கருணாநிதி கடைசியாக ஒன்றைச் சொல்வார். அதவாது தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை. அதனால்தான் எல்லமே கெட்டுப் போனது என்பார். சரி ஒற்றுமையாக வருகிறோம் ஏதாவது செய்கிறீர்களா? என்று கேட்டால் கூடிப் பேசி கடிதம் எழுதுவோம் என்பார். சரி கடிதம் எழுதினால் பிரச்சனை தீருமா என்றால் … இல்லை கடிதம் எழுதுவோம் என்பார். அவர் எழுதுவார் எழுதிக்கொண்டே இருப்பார். எதுவும் நடக்காது ஆனால் எல்லாம் நடந்து விட்டமாதிரி ஒரு தோற்றம் இருக்கும். அவருக்கு பாராட்டு விழாக்களும் நடக்கும்.