சொத்துக் குவிப்பு என்று அழைக்கப்படும் மக்களின் பணத்தைக் கொள்ளையிட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நிதிமன்றத்தில் சசிகலா இன்று ஆஜரானார். மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த முதன்மையான இந்திய அரசியல் வாதிகளுள் ஜெயலலிதாவும் ஒருவர். ஜெயலலிதாவும் அவரது ஆயுட்கால நண்பியுமான சசிகலாவும் ஆண்டுக்கணக்காக இந்த வழக்கைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தனர்.
பயன்படுத்தாத ஆவணங்களை மீண்டும் வழங்க கோரும் சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்த புதிய நீதிபதி பாலகிருஷ்ணா, விசாரணையை வரும் 19ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். அன்றைய தினம் சசிகலாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சசிகலா, சுதாகரன் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்று ஆஜராகாமல் இருந்தால், பிடிவாரண்ட் அளிக்கப்படும் என நீதிபதி பாலகிருஷ்ணா விடுத்த எச்சரிக்கையை அடுத்து சசிகலா இன்று காலை 10 மணியளவில் ஆஜரானார்.
இந்த வழக்கில் பயன்படுத்தாத ஆவணங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் ஏற்கனவே இந்த நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பயன்படுத்தாத ஆவணங்களை மீண்டும் வழங்கப்பட மாட்டாது என்று கூறி தள்ளுபடி செய்துவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை 19ந் தேதி அன்று ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார். ஏற்கனவே 632 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள சசிகலா, எஞ்சி உள்ள கேள்விகளுக்கு 19ந் தேதி அன்று பதில் அளிக்க வேண்டும். இதனையடுத்து அடுத்த சொத்துக்குவிப்பு வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.