Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பூக்கோவின் ஆன்மீக அரசியல் : யமுனா ராஜேந்திரன்

{vidavee id=”10939″ w=”320″ }

Click to play

 

தத்துவம் சார்ந்த தமது தொலை நோக்கின் அடிப்படையிலும், நிலவிய சமூகத்தில் தாம் பெற்ற அதிருப்தியின் அடிப்படையிலும் தத்துவவாதிகள் பல சமங்களில் சீரழிந்த சமூகத் திட்டங்களுக்கும் அரசியலுக்கும் விமர்சனமற்றுத் தமது ஆதரவை வழங்கியிருக்கிறார்கள்.  காட்டுமிராண்டித்தனமானதும் ஒடுக்குமுறைத்தன்மை கொண்டதுமான அரசியல் திட்டங்களுக்குத் தமது ஆதரவை வழங்கிய இலக்கியவாதிகளும் இருந்தே வருகிறார்கள். 

முன்னதற்;கு நாசிக்கட்சியின் உறுப்பினர் அட்டை கொண்டவராகவே இருந்த மார்டின் ஹைடேக்கரையும், ஈரானியப் புரட்சியை நிபந்தனையின்றி ஆதரித்துப் போற்றிய பிரெஞ்சுத் தத்துவவாதி மிசேல் பூக்கோலையும் நாம் குறிப்பிட முடியும். பின்னதற்கு சைனிங்பாத் கொரில்லாக்களை அழித்தொழிப்பதற்காக மட்டுமல்ல முழு இலத்தீனமெரிக்காவிலும் ஆயுதப் புரட்சிகளுக்கு முடிவுகட்டவென ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட பெருவின் ‘பெரிய’ இலக்கியவாதியான மரியா வர்கஸ் லோசாவையும், தனது இந்திய விஜயத்தின் போது பாரதிய ஜனாதாக் கட்சியின் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று அவர்களது இஸ்லாமிய விரோத அரசியலுக்கு நேரடியாகத் தார்மீக ஆதரவைத் தெரிவித்துவிட்டு, மேற்கு சென்ற இலக்கிய நோபல் பரிசாளரான வி.எஸ்.நைபாலையும் நாம் குறிப்பிட முடியும். 

சில சமயங்களில் தர்க்கபூர்வமாக இவர்கள் தமது ஆதரவு நிலைபாட்டை முன்வைக்கிறார்கள். ‘பாரதிய ஜனதாக் கட்சியின் திட்டம் நூற்றாண்டு கால இஸ்லாமிய படையெடுப்பிற்கும் ஆதிக்கத்திற்;கும் எதிரான ஒரு கலாச்சார மீட்சித் திட்டம்’ என நைபால் குறிப்பிடுகிறார். ‘பெருவில் மட்டுமல்ல எங்கேயும் கொடுங்கோலர்களுக்கு எதிரான வன்முறையிலான தாக்குதல் திட்டத்தைத் தான ஆதரிப்;பேன்’ என அமெரி;க்காவின் ஈராக் மீதான யுத்தத்தை முழு மனதுடன் ஆதரித்துப் பேசுகிறார் மரியா வார்கஸ் லோசா. 

மறுமலர்ச்சியுக மதிப்பீடுகளின் மீது சந்தேகத்தையும் கிறித்தவத்தின் மீது கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்து மீட்சிபெற்ற மனிதனாக ஆவதற்கு ‘அதிமனிதனாவதுதான்’ முக்கியம் எனும் அடிப்படையில் பிரெடிரிக் நீட்;ஷேவை அடியொற்றி நாசிக் கட்சியின் உறுப்பினராகவும் ஆகிறார் மார்டின் ஹைடேக்கர். 

நவீனத்துவ சமூகமும் சரி, அதன் பெயரில் தோன்றிய முதலாளித்துவ தாரளவாத அரசியல் அமைப்பும், கம்யூனிஸ சமூக அமைப்பும் சரி, ‘மனிதனது உடலையும் ஆன்மாவையும் கட்டுப்படுத்தும் தன்டணை வழங்கும் சமூகங்கள்’; என வரையறுத்த மிசேல் பூக்கோ, இந்த நவீனத்துவ ஒழுங்கிற்கு மாற்றாக ஈரானியப் புரட்சியில் ஆன்மீக ஈடேற்றத்தைக் காண்கிறார். ‘அரசியல் ஆன்மீகத்தன்மை பெறவேண்டும்’ என்கிற அறைகூவலையும் உலகின் முன் அவர் வைக்கிறார். அப்படியான ‘ஆன்மிகத்தன்மை பெற்ற அரசியல் காலங்கடந்தும், அதே வேளை காலம் தோறும் மாற்றம் கொண்டிருப்பதமான ஒரு அமைப்பையுயும் அதனுள் விடுதலை பெற்ற மனிதனையும் உருவாக்கும்’ எனவும் கனவு கான்கிறார் அவர். 

ஜோர்ஜ் புஸ்ஸின் அமெரிக்க சமூகம் கிறித்தவ அடிப்படைவாதத்தை அரசியல் அதிகாரத்தின் பகுதியாக ஆக்கிக்கொண்டிக்கிற காலம் இது. இந்துத்துவ பாசிசம் இந்து ஆன்மீகத்தைத் தனது அரசியல் திட்டத்தின் பகுதியாகக் கொண்டிருக்கிற காலம் இது. இஸ்லாமிய அடிப்படை அறநெறிகளை தனது அரசியல் அதிகாரத்தின் பகுதியாகக் கொண்டிருந்த ஆப்கான் ஒரு காட்டுமிராண்டிக் காலாச்சாரத்தை நமது கண்முன்பு விட்டுச் சென்றிருக்கும் காலம் இது.

இவ்வகையில் ‘நவீPனத்துவ ஒழுங்குக்கு எதிராகப்’ பேசிய மிசேல் பூக்கோவினது ஈரானியப் புரட்சியின் பாலான உற்சாகமும் எதிர்வுகூறலும் எந்த வகையிலான மெய்மையை நமக்கு வழங்கியிருக்கிறது எனப் பார்ப்பது சுவாரசியமான தேடலாக இருக்கும்
எழுபதுகளின்; இறுதியில் நிகழ்ந்த ஈரானியப் புரட்சியானது இதுவரைத்திய புரட்சிகள் – முதலாளித்துவ, சோசலிச, தேசியப் புரட்சிகள் அனைத்தினின்;றும் ‘விலகி நின்ற தனித்த தன்மையினாலும(singularity),வித்தியாசப் பண்பினாலும;(difference)அரசியல் ஆன்மீகத்தை(political spirituality)உலகில் விதைக்கும், முற்றிலும் புதியதொரு சமூகத்தை அது உலகில் படைக்கும்’ என எதிர்வு கூறினார் பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்களில் ஒருவரான மிசேல் பூக்கோ. நவீனத்துவம் முன்வைத்த கண்கானிப்பு மற்றும் கட்டுப்படுத்தும்(survielence and control)
சமூகத்திற்கு மாற்றாக விடுதலை பெற்ற ஒரு மனிதனை ஈரானியப் புரட்சி உருவாக்கும் என அவர் கருதினார். அவரது தரிசனம் ;அவர் 1984 ஆம் ஆண்டு மரணமுறும் முன்பாகவே அவரது வாழ்காலத்திலேயே பொய்யாகிப் போனது.

பூக்கோ முன்வைத்த அரசியல் ஆன்மீகம் பாசிசத்தின் முழுக்கூறுகளையும் கொண்டிருக்கிறது என்பதற்குச் சாட்சியமாக இஸ்லாமிய ஆன்மீக அரசியலும், இந்து ஆன்மீக அரசியலும் ஆகியிருக்கிறது.

இஸ்லாமிய மத ஒழுங்குகளையும் அரசு அதிகாரத்தையும் இணைக்கும் ஒரு அரசியல் அமைப்புக்கு மிகச் சரியான சாட்சியமாக இருப்பது ஈரானியப் புரட்சியாகும். அரசியல் இஸ்லாம் இயக்கம் தொடர்பான மார்க்சியர்களதும், தாராளவாதிகளதும் பெண்ணிலைவாதிகளதும் கலைஞர்களதும் அனுபவங்களையும் படிப்பினைகளையும் தொகுத்துக் கொள்வதற்குமான மிகப்பொறுத்தமான வரலாற்றுச் சாட்சியாக இருப்பதும் ஈரானியப் புரட்சிதான்.

மாரக்சியர்கள் பேசிவரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு, தாராளவாதிகளும் கலைஞர்களும் பேசிவரும் தனிநபர் படைப்புச் சுதந்திரம், ஜனநாயகம், பெண்ணிலைவாதிகள் பேசிவரும் தேர்வுச் சுதந்திரம் போன்ற இருபத்தியொன்றாம் நூற்றாண்டினதும் முக்கியமான விவாதங்களை உரசிப் பார்த்துக் கொள்வதற்கான அவசியமான ஒரு தருணம் ஈரானியப் புரட்சி;. அது மட்டுமன்று பி;ன்நவீனத்துவவாதிகள் பேசிவந்திருக்கும், அதிகாரம் மற்றும் அறிவு குறித்த விமர்சனங்கள், வித்தியாசம்;, தனித்தன்மை மற்றும் பாலறுவுச் சுதந்திரம் போன்ற அனைத்தையும் அரசியல் இஸ்லாமிய நடைமுறைகளுடன் சோதித்துக் கொள்வதற்கான ஒரு நடைமுறைச்; சான்றாக ஈரானியப் பரட்சி திகழ்கிறது.

இன்றைய உலக நிலைமையில் ஈரானியப் புரடசியை முன்வைத்து மார்சியத்துக்கும் இஸ்லாமிய அரசியலுக்கும் இடையிலான உறவுகளையும் முரண்களையும் கூட நாம் மிகத் துல்லியமாக வரையறுத்துவிட முடியும்.

ஈரானியப் புரட்சி முடிந்து இருபத்தி ஐந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்ட பின்னாலும் அங்கு தாராளவாதிகள் வலுவாகக் காலூன்ற முடியவில்லை. சுயாதீனம், சுதந்திரம், முன்னேற்றம. போன்ற கோசங்களை அடிப்படையாக முன்வைத்து வாகைசூடிய ஈரானியப் புரட்சி வெற்றி பெற்ற இரண்டே ஆண்டுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதமாக ஆகியது. புரட்சியில் பங்கு பற்றிய மார்க்சியர்கள், ஈரானிய கம்யூனிஸ்ட் கட்சியான டூடே கட்சியினர், பெடாயின் மக்கள் இயக்கத்தினர், ஒன்றினைந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தினர், தாராளவாதிகள், கலைஞர்கள், பெண்ணிலைவாதிகள் என பத்தாயிரக் கணக்கானவர்கள் புரட்சியின் பின்நாட்களில் அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டார்கள். அவர்தம் பத்திரிக்கை அலுவலகங்கள், படைப்புகள் எரிக்கப்பட்டன.

பெண்ணிலைவாதிகள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் ஆயுதப் படைகளின் அனுசரணையுடனும்; பானிசாதரின் ஆசியுடனும் கொல்லப்பட்டார்கள.; பெண் விடுதலை இயக்கங்களும் மாணவர் இயக்கங்களும் தொழிற்சங்க இயக்கமும் நிரமூலமாக்கப்பட்டன. புரட்சியின் வாக்குறுதிகள் அனைத்தும் இழிந்து போயின.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியென்பது சமவேளையில் பிற்போக்குத்தனமும் மானுட எதிர்ப்பும் கொண்டதாக அமையமுடியும் என்பதற்கான மிகச்சரியான வரலாற்றுச் சான்றாக ஈரானியப் புரட்சி இருக்கிறது.

ஈரானியப் புரட்சியின் சாதக பாதகங்கள் குறித்து விவாதங்கள் மேற்கிலும் தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது. அரசியல் இஸ்லாம(political islam)தொடர்பாக எகிப்;தியரான ஸமிர் அமின் போன்ற மத்தியக் கிழக்கு மார்க்சியர்களின் வரையறை, அது ஒரு எதிர்ப்புரட்சி சீரழிவு இயக்கம்; எனபதாகவே இருக்கிறது.

மாற்றுக் கருத்துக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் கலைஞனின் சுதந்திரத்திற்கும் பெண் விடுதலைக்கும் மிகப் பெரிய சவாலாகவே அரசியல் இஸ்லாம் இருந்து வந்திருக்கிறது என்பதனையே அவர்கள் மெய்ப்பிக்கிறார்கள்.; இந்நிலைபாட்டில் தாராளவாதியான பாலஸ்தீன அறிஞர் எட்வர்ட் சைத்திற்கோ, மேற்கில் வாழும் பாகிஸ்தானிய மாரக்சியரான தாரிக் அலிக்கோ அல்லது தாராளவாத இஸ்லாமியரான ஜியாவுதின் சர்தாருக்கோ முரண்பட்ட கருத்துக்கள் இல்லை.

ஆனால், பின்நவீனத்துவவாதிகளும்; கலாச்சாரச் சார்புவாதிகளும் அரசியல் இஸ்லாம் குறித்த அணுகுமுறைகளைத் தொடர்ந்து குழப்பியே வருகிறார்கள். இவர்களுக்கெல்லாம் ஆதர்சமாக இருப்பவர் பிரெஞ்சுத் தத்துவவாதியான மிசேல் பூக்கோ ஆவார்.

ஈரான் புரட்சியை அன்றைய சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்துமே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஆக்கபூர்வமான புரட்சி என வரையறை செய்தன. வெகுமக்கள் எழுச்சியுடன் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மையுடன் நடந்த இந்தப் புரட்சி ‘முதலாளித்துவமற்ற பாதை நோக்கிச் செல்லும்’ எனவும் அவர்கள் வரையறை செய்தார்கள். வளர்ந்துவரும் அரசியல் இஸ்லாம்; தமக்கு எதிராகத் திரும்பும் என்ற அவதானத்தை அவர்கள் பெற்றிருக்கவில்லை.

தமக்கிடையிலான கட்சிக் கருத்தியலை தாண்டி(party ideology)எதிரிக்கு மாற்றான பொதுத் திட்டத்தினை உருவாக்கக் கூடிய தகைமையினை, அவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்ட ஸ்டாலினிய, டிராட்ஸ்க்கிய, மாவோயிச வித்தியாசங்களைத் தாண்டி அவர்களால் செல்ல முடியவில்லை. பெண்ணிலைவாதிகளும் தமது குழுசார்ந்த தாராளவாத, மாரக்சிய,தீவிர பெண்ணிலைவாத்திற்கு அப்பால் பொதுவான போராட்டத்துக்கான திட்டங்களை அவாவியிருக்கவில்லை.

மத அடிப்படைவாதிகள் தமது அதிகாரத்தை மையப்படுத்திக் கொண்ட அதே போதில், மார்க்சியர்களும் தாராளவாதிகளும் பெண்ணிலைவாதிகளும் தமக்கிடையிலான கருத்தியல்களால் பிளவுண்டு போயிருந்தார்கள். தம்மில் ஒரு சிலர்; தனிமைப்படுத்தப்பட்டுத் தாக்கப்பட்டபோது, இவர்கள் கருத்தியலின் பெயரில் மௌனம் காத்தனர்.

முதலில் பெண்ணிலைவாதிகளையும் பிற்பாடு தாராளவாதிகளையும் இறுதியில் மார்க்சியர்களையும் இதனால் மிகச்சுலபமாக அரசியல் இஸ்லாமியர்கள் அழித்தொழிக்க முடிந்தது. தாராளவாதிகள் மீதும் பெண்ணிலைவாதிகள் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்ட அதே காலத்தில் எகாதிபத்திய எதிர்ப்பு எனும் ஒரே காரணத்துக்காக சோவியத் யூனியனால் வழிநடத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியான டூடே கட்சி அரசியல் இஸ்லாம் ஆட்சியாளர்களை ஆதரித்து நின்றது. பிற்பாடு அவர்களும் அழித்தொழிக்கப்பட்டார்கள். ஜனநாயகம், தனிநபர் சுதந்திரம், மனித உரிமைகள், பொதுவான விடுதலை தொடர்பான ஒற்றுமை போன்ற அனைத்தையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற கோசத்தின் கீழ் சமரசப்படுத்திக் கொண்டார்கள்.

புரட்சியின் பின் பெண்கள் கட்டாயம் முழு உடலையும் மூடும் முக்காடு அணிய வேண்டும் என கொமேனியின் அரசு சட்டம் கொண்டு வந்தபோது 50000 பெண்கள் டெஹ்ரான் நகரில் அதனை எதிர்த்து ஆரப்பாட்டம் நடத்திய வேளையில் இஸ்லாமியக் குடியரசுக்காக ஆதரவாக நின்றார்கள் டூடே கட்சியினர்.

அதற்கான விலையையும் அவர்கள் வெகு விரைவிலேயே கொடுத்தார்கள்.

தாராளவாதிகளும் அரசியல் குழப்பத்திலேயே இருந்தார்கள். அரசியல் தலையீட்டாளர்களுக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் நிலைபாடு எடுப்பதற்கு அவர்களுக்குச் சிரமமாகவே இருந்தது. மறுமலர்ச்சியுக கோட்பாடுகள் சார்ந்த நவீனத்துவம் தொடர்பான பிரெஞ்சுத் தத்துவவாதிகளின் விமர்சனம், சோசலிச எதேச்சாதிகாரம், முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சாரம் தொடர்பான பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்களின் விமர்சனம் போன்றன ஈரானியப் புரட்சி தொடர்பாக கல்வியாளர்களிடமும் அறிவாளிகளிடமும் நிலைபாடு எடுப்பதில் தடுமாற்றத்தையே உண்டு பண்ணியிருந்தன.

அதுவரை நடந்த புரட்சிகள் அனைத்தும் அக்டோபர் புரட்சியை அடியொற்றியவையாக, மார்க்சியத்தை அடியொற்றியவையாக இருந்தன. கலாச்சாரப் புரட்சியின் அத்துமீறல்கள் அப்போதுதன் உலக அளவில் அறித் துவங்கியருந்தன.. நவீனத்துவத் திட்டம் பற்றி மிகப் பெரிய நடைமுறை சந்தேகங்கள் சோவியத், சீனப் புரட்சிகளை முன்வைத்தும், பாசிசம், தேசியம் போன்றவற்றை முன்வைத்தும் ஏற்பட்டிருந்தன. மறுமலர்ச்சிக்காலம் தோற்றுவித்த சமூக அமைப்பு சிந்தனையையும் உடலையும(a system which controls thought and body)கட்டுப்படுத்தும் அமைப்பு என்பதனை பூக்கோ முன்வைத்தார்.

எல்லையற்று விரிந்திருக்கும் அதிகாரம், அதிகாரமாக ஆகியிருக்கும் அறிவு போன்றவற்றுக்கும் அப்பால், காரண காரியப் பார்வைக்கும் அப்பால் தேடிச்செல்லும் அறிவுத்துறைப் போக்காக பூக்கோவின் பாலியல் மற்றும் சிறை அமைப்பு குறித்த ஆய்வுகள் வெளிப்பட்டன.

நவீனத்துவத்திற்கு முந்திய ரோம-கிரேக்கப் பண்பாட்டிலும், வட ஆப்ரிக்கப் பண்பாட்டிலும் ஆண்சமப்பாலுறவுக் கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தமையை பூக்கோ கோட்பாட்டளவிலும் நடைமுறையிலும் முன்வைத்தார். மனித விடுதலை ஆன்மீகத் தன்மையற்ற ஸ்டாலினிய, பாசிச அரசியல் முறைமைகளுக்கு மாற்றாக ஒரு கோட்பாட்டையும் அரசியல் அமைப்பையும் அவாவிக் கொண்டிருந்த ஒரு தருணத்தில் ஈரானியப் புரட்சி தொடங்கியது.

‘அசல்;தன்மை’ என்பதனை பூக்கோ எப்போதுமே காரண காரியத்தைச் தாண்டிச்செல்லும் தருணம், மரணத்தின் விளிம்பில் ஆபத்தான தருணத்தில் நிகழும் போக்குகள் போன்றவற்றிலேயே கண்டார். இஸ்லாமிய மதத்தின் அடிப்படையில் ஒரு நாகரீகத்தையும் ஒரு வாழ்முறையையும(islam as a civilisation and a way of life)கண்ட பூக்கோ நவீனத்துவத்தின்; காரண காரிய அறிவை மீறிச் செல்லும் மாயப்பண்பும் ஆன்மிகத்தன்மையும் கொண்ட (mythical and spirtual) ஒரு தனித்த புரட்சியாக, ( singular revolution), தமது உயிரையும் தமது கற்பனாவுலகுக்குக் கொடுக்கத் துணிந்த இஸ்லாமிய அடிப்படையவாதிகளின் தீரம் (martyrdom) அவரது தத்துவப்பார்வைக்கு மிகவும் உவப்பானதாக இருந்தது.

அசல்தன்மை (authenticity) தொடர்பான பூக்கோவின் எண்ணங்கள் எப்போதுமே மரணத்தோடும், காரணகாரியத்தை மீறும் பண்போடும் -near death and exploring rationality- பிணைக்கப்பட்டிருந்தன என்கிறார் அவரது வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஜேம்ஸ் மில்லர். இந்தத் தன்மை சிருஸ்டிகரமான புதியதொரு கோட்பாட்டு நிலைக்கும் வாழ்நிலைக்கும் அரசியலுக்கும் அறத்தின் அடிப்படையிலான ஒரு சமூகத்துக்கும் மனிதர்களை இட்டுச்செல்லும் என பூக்கோ நம்பினார்.

இதன் பொருட்டு ஈரானியப் புரட்சிக்கும், அரசியல் இஸ்லாம் இயக்கத்துக்கும், அயதுல்லா கோமெனிக்கும் தனது நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி;னார் பூக்கோ. ஈரானியப் புரட்சியின் தன்மைகள் குறித்த அனைத்து விதமான விமர்சனங்களையும் மறுத்தார் பூக்கோ. அத்தோடு ‘தான் எப்போதுமே விவாதங்களில் நம்பிக்யைற்றவன். இப்போதும் தான் விவாதிக்க விரும்பவில்லை’ என்றே தனது ஈரான் ஆதரவு நிலைபாட்டுக்கு விளக்கமும் சொன்னார் பூக்கோ.

2

படைப்பாளி என்பவன் யார்? (Who is an author : rainbow : 1984) எனும் தனது கட்டுரையில், பொதுவாக ‘எழுத்தாளன் என்பவனை நம் சமூகத்தில் செறிவும் ஒன்றினைவும் கொண்ட எழுத்தாளனாகவே நாம் முன்வைக்க விரும்புகிறோம். எழுத்தாளனும் தனது பிம்பங்களைக் கட்டமைப்பதற்காகவே பிரச்சினைக்குரிய தனது முன்னைய எழுத்துக்களைத் தவிர்த்துவிட்டு தேர்ந்தெடுத்த வகையிலேயே தன்னை முன்வைத்து;கொள்ள விழைகிறான். ஆகவே எழுத்தாளன் பற்;றிய அவன் பற்றிய என்றென்றைக்குமான ஆக்கபூர்வமான சித்திரத்தையே இதன் வழி கட்டமைக்க எழுத்தாளனும்; முனைகிறான். இவ்வகையில் அவனது முரண்கள் மற்றும் ஓர்மையற்ற தருணங்கள் போன்றவற்றை நாம் தவிர்த்து விடுகிறோம், அவ்வகையில் படைப்பாளன் என்;பவனை ஒருமை கலைந்தவனான அல்லாது முன்;வைக்கிறோம்’ என்கிறார் பூக்கோ.

இவ்வகையில் எழுத்தாளன் குறித்த ஒரு புனித ஒருங்கினைந்த பிம்பம் கட்டமைப்பப்படுகிறது என்பதனையும் அவர் விவரிக்கிறார் ஆனால் யதாரத்தம் அவ்வாறனதல்ல என்பதனையும் அவர் குறிப்பிடுகிறார். அவரது சித்தரிப்பிற்கு பூக்கோவே ஆட்பட்ட தருணம்தான் ஈரானியப் புரட்சி தொடர்பான அவரது கருத்துக்கள் தொகுக்கப்பட்ட தருணமும் என்று சொல்ல வேண்டும்.

ஈரான் புரட்சி தொடர்பாக பிரெஞ்சு மொழியல்லாமல் பிற மொழிகளில் பூக்கோவின் கட்டுரைகள், மொத்தமாக பதினைந்து கட்டுரைகள், 2005 வரையிலும் முழுமையாகப் மொழிபெயர்க்கப்படவோ தொகுக்கப்படவோ இல்லை. அவரது தொகுப்பு நூல்களில் ஈரான் குறித்து வெளியாகியிருப்;பது ஓரேயொரு கட்டுரை மட்டும்தான். இதுவன்றி 1978-79 ஆம் ஆண்டுகளில் பூக்கோவின் கருத்துக்கள் பிரான்சிலும் இத்தாலியிலும் வெளியானபோது, அதற்கு எதிர்விணையாற்றியவர்களின் கருத்துக்களும்; விவாதங்களும் பிற மொழிகளில்; வெளியாகவோ தொகுக்கப்படவோ இல்லை.

பூக்கோவின் ஈரான் ஆதரவு எழுத்துக்களைத் தொடர்ந்து, டெஹ்ரானில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் 50,000 பெண்களின் ஆரப்பாட்ட ஊர்வலத்தின் மீது தாக்குதல் தெர்டுத்த சம்பவம் நிகழ்ந்தது. ஸீமன் தீபூவா, மார்க்சியரான மாக்சிம் ரோடின்சன் போன்றவர்கள் ஈரான் ஒரு பாசிச நாடாக ஆவதற்கான சாத்தியங்கள் தென்படுவதாக அறிவித்தார்கள்.

பூக்கோ இந்த விவாதங்கள் அனைத்திலும் கருத்துச் சொல்வதினின்று தப்பிப்பவராகவே இருந்தார்.

2001 செப்டம்பர் தாக்குதலை ஒட்டியும், ஒஸாமா பின்லாடன் முன் வைக்கும் உலக தழுவிய இஸ்லாமிய சமூக எதிர்வு கூறலை ஒட்டியும், ஈரானில் பாலுறுவு மீறல் குற்றங்களுக்காகப் பெண்கள் கல்லால் அடித்துக்கொலை செய்யப்படும்; நடைமுறை தொடர்ந்து இருந்து வரும் நிலையில், இடதுசாரிகளும் தாராளவாதிகளும் அரசியல் இஸ்லாம் தொடர்பாக ஒரு குழப்பமான அரசியல் நிலைபாட்டில் இருப்பதாலும், இந்த விவாதங்களைத் தொகுப்பதின் நோக்கம் கருதி,; ஜனட் ஆப்ரே எனும் ஈரானியப் பெண்ணிலைவாதியும்;, கெவின் ஆன்டர்சன் எனும் இடதுசாரிக் கோட்பாட்டாளரும் இணைந்து எழுதிய ஈரானியப் புரட்சியும் பூக்கோவின் எழுத்துக்களும் குறித்து ஒரு முழுமையான நூல் (Focault, Gender, and the Iranian Revolution: The Seductions of Islamism : 2005) வெளியாகியிருக்கிறது. பூக்கோவின் ஈரான் குறித்த 15 கட்டுரைகளiயும் அதற்கு எதிர்விணையாற்றிய ஸீமன் தீபூவா, மாக்சிம் ரோடின்சன் போன்றவர்களது கட்டுரைகளைக் கொண்டதாகவும் விரிவான பதிப்பாக இந்நூல் வெளியாகியிருக்கிறது.

பூக்கோவின் ஈரான் குறித்த 15 கட்டுரைகளiயும் அதற்கு எதிர்விணையாற்றிய ஸீமன் தீபூவா, மாக்சிம் ரோடின்சன் போன்றவர்களது கட்டுரைகளைக் கொண்டதாகவும் விரிவான பதிப்பாக இந்நூல் வெளியாகியிருக்கிறது.

பூக்கோ குறித்த இரு முக்கியமான அவதானங்களை இந்த நூல் முன்வைத்திருக்கிறது.

முதலாவதாக, நவீனத்துவத்தின் ‘கட்டுப்படுத்தும்’ அவப் பக்கங்களை மட்டுமே பார்க்கும் பூக்கோ, ஏன் அதனது ‘ஆக்க விளைவை'(promising impulses)பார்க்க மறுக்கிறார் என அவரைப் பார்த்துக் ஹேபர்மாஸ் கேட்டதை மறுபடி நமக்கு ஞாபகமூட்டுமாறு இந்த நூல் வெளியாகியிருக்கிறது.

இரண்டாவதாக, ‘அதிகாரத்தின் எல்லையற்ற தன்மை’யையும் நவீனத்துவம் உருவாக்கிய அறிவின் ‘கட்டுப்படுத்தும் தன்மை’யை மட்டுமே பேசி வந்த பூக்கோ, 1984 இல் அவர் மரணமுறும் தருவாயில் ‘அறம்’ என்கிற மூன்றாம் அம்சத்தையும்; தனது அறிவுத் தேட்டத்தின் பகுதியாகக்கொண்டது, ஈரானிய அனுபவங்கள் தொடர்பான தனது தவற்றினைத் தனது இறுதிக்காலத்தில் அவர் உணர்ந்ததனால்தானோ என்கிற அவதானத்தையும் இந்த நூல் நமக்குத் தோற்றுவிக்கிறது.

ஈரானியப் புரட்சி குறித்த தனது கட்டுரைகளில், ஈரானியப் புரட்சியானது பெண்களின் உரிமைகளை உத்தவரவாதப்படுத்தும், சிறுபான்மையினர் உரிமைகளை அது பாதுகாக்கும், ஆண் சமப்பாலுறவை அச்சமூகம் அனுமதிக்கும், ஜனநாயகத்தையும் தனிநபர் உரிமையையும், மனித உரிமைகளையும் அங்கீகரிக்கும் என்றெல்லாம் திட்டவட்டமாக பூக்கோ எழுதியிருக்கிறார்.

பூக்கோவின் நம்பிக்கைகள்; அனைத்தும் அவரது வாழ்காலத்திலேயே பொய்த்துப் போனது. ‘மதகுருக்கள் அரசில் அங்கம் பெறமாட்டார்கள்’ என அவர் குறிப்பிட்டார். அது முற்ற முழுதாகப் பொய்யாகிப் போனது. இன்றளவிலும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தையே ஈரானியப் புரட்சியானது தோற்றுவித்திருக்கிறது. அரசியல் இஸ்லாம் ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய இரண்டு நாடுகளாக ஆப்கானிஸ்தானும் ஈரானும் இருக்கிறது. இந்த இரண்டு நாடுகளுமே பெண்களின் மீதான மட்டுமீறிய அடக்குமுறையை ஏவிய நாடுகளாகவே இருக்கிறது.

ஈரானியப் புரட்சியை ஒரு ‘தனித்த புரட்சி’ என்று பாரப்பதற்கான பூக்கோவின் ஆதாரமான காரணம்தான என்ன?

ஈரானியப் புரட்சி நடந்த தருணத்தின்போது ஐரோப்பாவில் பூக்கோவுக்கு எற்பட்டிருந்த கருத்தியல் ரீதியான அங்கீகரிப்பையும் நாம் முன்பாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. அன்றைய நிலையில் பூக்கோ மேற்கத்திய சமூகச் சூழலில் சிறையைமைப்பு, பைத்தியநிலை, பாலியல்பு(prision madness and sexuality) தொடர்பாக நூல்களை வெளியிட்டிருந்தார். அவரது மிகப் புகழ் பெற்ற நூலான ஓழுங்கும் தண்டனையும் (discipline and punishment ) எனும் நூலின் வழி ஐரோப்பிய அரசியல் ஒழுங்கான தாராளவாத சமூகத்தை அவர் ஒழுங்குபடுத்தும் சமூகம் எனக் குறிப்பிட்டார். தாராளவாத சமூகமானது ‘உடல் அளவில் குறைந்தபட்சமாகத் தோன்றுகிற தண்டனைகளை வழங்கினாலும் கூட, பாரிய அளவில் மிக அதீதமான பாதிப்புகளை மனிதனுக்கு ஏற்படுத்துகிற தண்டனைகளையே அதுகொண்டிருக்கிறது’ என அவர் குறிப்பிட்டார்.

நவீனத்துவத்திற்கு எதிரான அவரது எதிர்-சொல்முறையில் நவீனத்துவ நிறுவனங்களானது நம்மை விடுவிப்பதாகத் தோன்றினாலும் அவைகள் நம்மை உள்ளார்ந்த வகையில் அடிமைப்படுத்தவே செய்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேற்கத்திய வகையிலான தாராளவாத சமூக அமைப்பின் திட்டங்களோடும், அமெரிக்க ஏகாதிபத்தியப் பொருளியல் திட்டங்களோடும் ஆட்சி நடத்திய மன்னர் ஷாவுக்கு எதிராகவே ஈரானில் புரட்சிகர நடவடிக்கைள் தொடங்கியிருந்த காலம் அது. 1978 ஆம் ஆண்டு மன்னர் ஷாவின் ஆயுதபோலீஸ் அடக்குமுறைக்கு எதிராக நாடெங்கும் கலவரங்கள் துவங்கியபோது மிகப் பரந்த அளவிலான ஒரு ஐக்கிய அமைப்புதான் அந்தக் கலவரங்களில் ஈடுபட்டது. கம்யூனிஸ்ட்டுகள், இடதுசாரி மாணவர் அமைப்பினர்;, மதச்சார்பற்ற தேசியவாதிகள்,சோசலிஸ்ட்டுகள் மற்றும் இஸ்லாமியவாதிகள் போன்றவர்களே இந்தக் கலவரங்களில் பங்கேற்றனர்.

இஸ்லாமியவாதிகள் அன்றைய நிலையில் பிரான்ஸில் அயலிலிருந்த அயதுல்லா கொமேனியினால் வழி நடத்தப்பட்டனர். 1978 ஆம் ஆண்டு இறுதியில் இந்த எதிர்நடவடிக்கையில் பலம் வாய்ந்;தவர்களாக இஸ்லாமியவாதிகள் ஆகினார்கள். ஷாவின் ஆட்சி வீழ்ந்ததையடுத்து 1979 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் திகதி கொமேனி ஈரானுக்கு வந்து அதிகாரத்தை ஏற்றுக் கொண்டார். இந்தச் சமய்த்தில் ஈரான் சென்ற பூக்கோ, கம்யூனிஸ்ட்டுகளை மிக நக்கலாகக் மதிப்பிட்டார். ‘இஸ்லாமியவாதிகளைப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரத்திற்கு வரலாம் என மாரக்சியர்கள் நம்புகிறார்கள். மாறாக இஸ்லாமியவாதிகள்தான் கறாரான ஒன்றுபடுத்தப்பட்ட கூட்;டுணர்வைக் (perfectly unified collective will) கொண்டிருப்பதாக’ பூக்கோ குறிப்பிட்டார். ‘மதத்தை மறுபடியும் அரசியலில் வைப்பவர்களாகவும் அவர்களே இருக்கிறார்கள்’ எனவும் பூக்கோ குறிப்பிட்டார்.

‘மதச்சார்பற்ற கருத்தியல்களின்; சரிவினாலும்; அதில் விளைந்த ஏமாற்றத்தினாலும்; புதிய முறைமைக்காக ஏங்கிக் கொண்டிருந்த மேற்குக்குப் பிறிதொரு அரசியல் தரிசனம் (யழெவாநச pழடவைiஉயட iஅயபiயெவழைn) போல ஈரானியப் புரட்சி தோன்றியிருக்கிறது’ என அவர் குறிப்பிட்டார்.

தொழில்துறை முதலாளித்துவமானது மிகக் கொடுமையான, மிகக் காட்டுமிராண்டித்தனமான, மிகச் சுயநலமான, அதிநேர்மையற்ற அடக்குமுறை சமூகம் என பூக்கோ குறிப்பிட்டார். அரசியல் சிந்தனை எனும் அளவில் கம்யூனிசத்தின் தோல்வியானது பூஜ்ய நிலையில் இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார். ரஸ்ய சீன சமூகங்கள் குறித்த அவரது அதிருப்தி, உடலையும் சிந்தனையையும்; கட்டுப்படுத்தும மேற்கத்திய சமூகத்தின்; நிறுவனங்கள் தொடர்பான அவரது கடுமையான விமர்சனம், கிரேக்க சமூகத்தில் நிலவிய சமப்பாலுறவு வழிபாடு தொடர்பான அவரது போற்றுதலுணர்வு, குரோம்வெல்லின் மதப் போராளிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பாலான அவரது ஈர்ப்பு போன்றன தனது மீட்சிக்கான புதிய தளமாக ஈரானியப் புரட்சியைக் கண்டது.

ஒரு புதிய நாகரிகம், ஒரு புதிய வாழ்க்கைப் பாதை அவர்களிடம் இருப்பதாகவும் அவர் பகர்ந்தார். இஸ்லாமிய ஆப்ரிக்க சமூகங்களில் அவர் அனுபவம் கொண்ட சமப்பபாலுறவு நடவடிக்கைகள், ஒரு சமப்பாலுறவாளராக இஸ்லாமிய சமூகத்தின் மீதான அவரது மாயைக்கு ஒரு காரணமாகவும் அமைந்தது. மாவோ, ஸ்டாலின் போன்றவர்கள் குறித்துக் கடுமையாக விமர்சனங்களை வைத்த அவர் கொமேனியின் அடக்குமுறை அரசு குறித்த விமர்சனங்களில் இருந்து தப்பிக்கொள்ளவே முயன்று வந்திருக்கிறார்.

வித்தியாசங்களையே எங்கும் கண்டு வித்தியாசங்களைக் கொண்டாடியபடி வந்த ஒரு தத்துவவாதி, ஈரானியப் புரட்சியில் வித்தியாசங்களற்று எங்கெங்கும் ஒருமையையே கண்டவராக ஆகிப்போனார் என இது பற்றிக் குறிப்பிடுகிறார் பர்து பல்கலைக் கழகத்தின் அரசியல்துறைப் பேராசியரியான ஆன்டர்ஸன்.

1978 ஆம் ஆண்டு சட்ட முறைமையின் மீதான ஈரானியர்களின் அவநம்பிக்கையைப் போற்றிய மிசல் பூக்கோ, 1979 ஆம் ஆண்டு பெண்கள், சிறுபான்மையினர் பாலான சட்டபூர்வமான உரிமைகளை மதிக்குமாறு கொமேனியின் பிரதமரான பெசார்கானுக்கு கடிதம் எழுதினார்.

பூக்கோ தனது அரசியல் தரிசனத்தில் கொண்டிருக்காத முக்கியமான அம்சம் இதுதான் : : தீவிர இஸ்லாமிய அல்லது அரசியல் இஸ்லாம் என்பதற்கு எல்லா நிலப்பரப்புகளிலும் ஒரு பொதுவான அம்சம் இருக்கிறது. அது பெண்களுக்கு விரேதமாகவே இருக்கிறது. அது அதிகாரவர்க்க நடைமுறைகளையே கொண்டிருக்கிறது. பிற மதங்கள் நம்பிக்கைகள் குறித்து அது சகிப்புத் தன்மையற்றதாகவே இருக்கிறது. ஸவுதி அரேபியா, ஈரான், ஆப்கானிஸ்தான், எகிப்து போன்ற எல்லா நாடுகளிலும் அதுதான் நடைமறையாக இருந்திருக்கிறது.

எகிபத்தின் சகோதரத்துவ இஸ்லாம் (muslim brotherhood) ஆனாலும் அல்லது தலிபான் ஆனாலும் அரசியல் இஸ்லாம் ஒரு அமைப்பாகத் தன்னைத் திரட்டிக்கொள்ளும்போது அது அடிப்படைவாதமாகவே சீரழந்திருக்கிறது என்பதுதான் வரலாறாக இருக்கிறது.

3
பூக்கோ இஸ்லாமிய நம்பிக்கைக்கு, குறிப்பாக ஈரான் மீதான அதி நம்பிக்கைக்கு ஆதாரமான அவரது படிப்பைப் புரிந்து கொள்வது நல்லது.
ஈரானில் பிறந்த பிரெஞ்சுக் கல்வி பயின்ற இஸ்லாமியச் சமூகவியலாளரான அலி சாரியாத்தியின் கருத்துக்களை அவ்வாறே ஏற்றுகொண்டிருந்தவராகவே பூக்கோ இருந்தார் என ஜெனட் ஆப்ரே குறிப்பிடுகிறார்.
தியாகியாகி மரணமுறுவதுதான் (martyrdom) விமோசனத்திற்கான பாதை (path to salvation) என்பதை வலியறுத்தியவர் அலி சாரியாத்தி. சியா பிரிவு இஸ்லாமியரின் வாழ்க்கை முறையானதுதான் வரலாற்று ரீதியிலான எதிர்ப்பு மத இயக்கம் (resistant religious movement) என்பதுதான் அவரது பார்வையாக அமைந்தது. 17 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இந்த மத இயக்கமானது தொடர்ந்து அதிகார வர்க்கத்தவருக்கு, உதவி வருவதாகவே இருக்கிறது என்பதனை பூக்கோ காணாது மறந்து விட்டார்.
ஈரானியர்கள் எதைத்தான் கனவு காண்கிறார்கள்? ( what are the iranians dreaming about? : 1978) எனும் தனது கட்டுரையில் ஈரானில் பெரும்பான்மையினராக உள்ள சியா வகுப்பினர் அவர்களது அரசியல் தலைமையரான கொமேனி வழியினர் குறித்து பல்வேறு நம்பிக்கைகளை வெளியிடுகிறார் பூக்கோ. ஈரானிய அரசில் மதக்குருமார்களது அதிகாரமோ கட்டுப்பாடோ இருக்காது என அவர் குறிப்பிடுகிறார. கொமேனியைச் சுற்றிலும் பல்வேறு மனிதஉரிமைக் குழுக்களின் பிரதிநிதகள் சூழந்திருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார். சியா நம்பிக்கையில்; பலவேறு ஆக்கபூர்வமான கூறுகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

சியா நம்பிக்கையின்படி கடைசி தீர்க்கதரிசியோடு அனைத்தும் மூடுண்டதாகவோ செய்திகள் என்பது முடிவுபெற்றுவிட்டதாகவோ இல்லை. முகமதுவுக்குப் பிற்பாடான வேறுவிதமான செய்திகள் சொல்லப்படும். முடிவுறாத இமாம்களின் செய்திகள், அவர்களது சொற்களின் வழி, அவர்களது உதாரணத்தின் வழி, அவர்களது தியாக மரணத்தின் வழி, ஓரு ஒளிதாங்கி எப்போதும் ஒன்றேயானதாக, எப்போதும் மாறியதாக இருக்கும்; உள்ளார்ந்த விதியை ஒளிரச்செய்யும் வெளிச்சம் இதுதான் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
சியா நம்பிக்கையைப் பொறுத்து இமாமினது அதிகாரம் தவிர அனைத்து அதிகாரங்களும் கெடுதலானது என்று சொல்லப்படுகிறது. ( It is often said that for Shiaism, all power is bad if it is not the power of the Imam) ஆனால் நிலைமை சிக்கலானது. இமாமான அயதுல்லா கொமேனிக்கு மட்டுமே ஈரானிய இஸ்லாமியர்கள் காத்திருக்கவில்லை.அவர்கள் அருகில் நிறைய மனித உரிமையாளர்களும இருக்கிறார்கள் என்கிறார் பூக்கோ.

மதத்திற்கும் அரசியல் அதிகாரத்திற்கும், மனித உரிமைகளின் உத்தரவாதத்திற்கும் இருக்கும் முரண்பாட்டைத் தன்னளவில் பூக்கோ தீர்தத்துக் கொள்ள இக்கட்டுரையில் முனைகிறார். முகமது கடைசி தீர்க்கதரிசியெனில் அதற்குப் பிற்பாடும் இமாம்களின் வேறுபட்ட செய்திகள் மாறிவரும் நிலைமைக்கு ஏற்ப இருக்கும் என்கிறார் அவர். அரசில் மதவாதிகளின் அதிகாரமும் இருக்காது என்கிறார். அப்படியே இமாமின் அதிகாரம் அரசில் இருந்தாலும் மனித உரிமையாளர்களின் கோரிக்ககைள் இமாம் செவி மடுப்பார் என்;கிறார். ஆன்மீக அரசியல் நிறைவேற்றம் என்பது இப்படித்தான் பூக்கோவுக்கு விமோசனத்தைத் தருகிறது.
‘சியா’ எனும் சொல் ‘சியாதிஅலி’ எனும் பெயரிலான சியாவின் கட்சி என வழங்கப் பெறுவதின் சுறுக்கப்பட்ட வடிவமாகும். கி.பி 661 இல் அலியின் மரணத்தின்பின் அவரது ஆதரவாளர்களால் ஏற்படுத்தப்பட்டதே இந்த நம்பிக்கையாகும்.அலி தீர்க்கதரிசி முகமதுவின் தத்துச் சகோதரர் எனவும் திர்Pக்கதரிசியின் செல்ல மகளான பாதிமாவின் கணவராகவும் அறியப்பட்டவர். தீரக்கதரிசியின் பிரியத்திற்குரிய பேரன்களானவர்களின் தந்தை எனவும் அறிப்பட்டவர் அலி.

முகமது பிரதிநிதித்துவப்படுத்தியவற்றின், போராடியவற்றின் பாதுகாவலனாகவும், மிகச்சரியாகப் பின்பற்றுபவராகவும் கருதப்பட்டவர் சியாதி அலி. முகமதுவின் குடும்ப சொந்தம் கொண்டவர் என்பதால் இவருக்கு அந்த தகைமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் முகமதுவின் மனiவியான ஆயிஷா சியாதி அலியன் பாத்திரத்தை ஒப்புக்கொண்டவரில்லை. கி.பி. 656 இல் நடந்த ஆயிஷா அலி இடையிலான யுத்தத்தின் பின் தோல்வியுற்ற ஆயிஷா பொது வாழ்விலிருந்து ஒதுங்கிக்கொள்கிறார். அலியின் மரணத்தின்பின் அவரது பாத்திரம் அவரது புதல்வர்களான ஹஸனுக்கும் குசைனுக்கும் அளிக்கப்படுகிறது. இவர்கள் உமையாத் குல அதிகாரத்தினரை எதிர்த்துப் போராடியவர்களாக இருந்தார்கள். பொதுவாக உமையாத் வழித்தோன்றல்களின் ஊழலையும் அடக்குமுறையையும் எதிர்த்துப் போராடியவர்களாகவே இவர்கள் அறியப்படுகிறார்கள். உமையாத் வழித்தோன்றல்கள் முகமதுவின் போதனையகளிலிருந்து பிறழ்ந்தவர்கள் என்றும் ஊழலில் திளைத்தவர்கள் என்றுமே அறியப்படுகிறார்கள்.

கொடுங்கோன்மையையும் ஊழலையும் வீழ்த்தி ஒரு நல்ல அரசை வழங்கக் கூடியவர்களாக இருப்பவர்கள் முகமதுவின் உரித்துள்ள சொந்தங்களாகவே இருப்பார்கள் எனவும், அதன்படி ஆட்சியை ஏற்பவர்கள் சியாவினராகவே இருப்பார்கள் என்பதும் சியா வழி வந்தவர்களின் நம்பிக்கை. அவர்களது நம்பிக்கையின்படி முகமதுவின் வழித்தோன்றல்கள் மெஹதி என அழைக்கப் பெறுகிறார்கள். அவ்வாறான மெஹதிகள்; சொந்தவகையிலும் நேரடியாகவும் கடவுளால் வழி நடத்தப்டுகிறார்கள் என அவர்கள் நம்புகிறார்கள். அந்த வகையில் மெஹதி தான் இஸ்லாமி குறித்த தீர்க்கதரிசனங்களைக் கொண்டவராகிறார்.

அடிப்படையான குரானது பனுவல் மற்றும் பிற விடயங்களில் பிற இஸ்லாமியப் பிரிவுகளின் நமபிக்கைகளைப் பகிர்ந்துகொள்ளும் சியாதியர்கள் ஒரே ஒரு விடயத்தில் மட்டுமே முக்கியமாக மாறுபடுகிறார்கள். இமாம் வழிப்பட்ட வழிகாட்டுதல்களை அவர்கள் விரும்புகிறார்கள் என்பதுதான் அந்தச் செய்தி. அனைத்தையம் வழிகாட்டுபவராக, அரசியல் அதிகாரத்தையும் கட்டுப்படுத்தும் அறநெறியும் ஆன்மீகப் பண்பும் கொண்டவராக இறைவனின் நேரடியானவராக அவர் இருக்கிறார் என்பதுதான் அவர்களது பிரதான நம்பிக்கையாகும்.

காலிப்கள் மற்றும் இமாம்கள் தொடர்பான இருவேறுபட்ட பார்வைகளே சன்னி முஸ்லீம்களையும் சியா முஸ்லீம்களையும் பிரிக்கிறது. காலிப்களை தற்காலிகத் தலைவர்கள் எனவும் இமாமை வெறுமனே வழிபாட்டுத் தலைவர் எனவுமே சன்னிகள் கருதுகிறார்கள். சியாவினரைப் பொறுத்தளவில் வரலாற்றுரீதியலான காலிப்கள் வெறுமனே காபந்துத் தலைவர்கள்தான் எனவும் மாறாக உரித்துள்ளவர்களும் நிஜமான தலைவர்களாகவும் இருக்க வேண்டியவர்கள் முகமதுவின் குடும்ப வழிவந்தவர்;களான இமாம்கள்தான் என்பதும் அவர்களது பார்வை.

இமாம் கோட்பாடு அலியுடன் துவங்குகிறது. அலி; நான்காவது காலிப்பாகவும் முதலாவது இமாமாகவும் ஆரம்பம் கொள்கிறார். இமாம்கள் அலியின் வழித்தோன்றல்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். வரலாற்றின் பலதருணஙகளில் இமாம் தற்காலிகமாக அரசியல் அதிகாரத்தையும் வகிக்கிறவராக இருக்கிறார.; ஆனால் வழமையாக இமாம் என்பவர் அரசியலுக்கு வெளியாளாகவே இருக்கிறவர். இவர் எப்போதுமே ஆன்மீகம் மற்றும் மதத்தினது பாதுகாவலராக இருக்கிறவர். இவர் தீரக்கதரிசி முகமதுவுக்கு இணiயானவர் அல்ல. ஏனெனில் அல்லாவினது போதனைகள் பெறப்பட்டவர் முகமது. ஆனால் வியாக்யானங்கள் என்பது வெறுமனே படிப்பு சார்ந்தது மட்டுமல்ல அதனோடு புனிதமான வழிகாட்டுதலும் தொடர்பானது. ஆகவே தற்காலிகமான அதிகாரம் என்பதும் ஆன்மிகம் என்பதும் சன்னி நம்பிக்கையாளர்களைப் போல பிளவுண்டது அல்ல. மாறாக சியாவினருக்கு இரண்டும் ஒன்றேயானது.

கிறித்தவமும் ஓரு வகையில் இதே நோக்கைத்தான்; அடிப்படையில் கொண்டிருக்கிறது. இதன் வழியேதான் நவீனத்துவம் என்பதே திருச்சபைக்கும் அரசியல்; சுதந்திரத்திற்குப்; போராடியவர்களுக்கும் இடையிலான போராட்டமாக அமைந்தது. இவ்வாறாகத் தோன்றிய நவீனத்துவ நிறுவனங்கiளின் எதிர்மறைப் பக்கங்களை மட்டுமே பாரத்தவராக பூக்கோ இருந்ததால்தான், அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைக்கக் கூடியதான ஒரு தர்க்க முறைiமையை மறுமலர்ச்சிக் கால மதப்பீடுகளின் போதாமைகளுக்கு எதிரான புதியவகையிலன சமூக மாற்றம் நோக்கியது என வரையறை செய்கிறார்.

அரசியல் அதிகாரம் மற்றும் ஆன்மிக ஆட்சி போன்றவற்றை சமனாகக் கருதுவதானால்தான் சியா இஸ்லாமானது எப்போதுமே எதிர்ப்பு சார்ந்ததும் கீழநிலை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இயக்கமாகவும்; அறியப்படுகிறது. இத்தகைய நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் மாற்றம் வேண்டும் ஈரானியப் புரட்சியானது அந்த மக்களிடமிருந்தே தோன்றிய வராற்றுக் கலாச்சார அடிப்படை கொண்டது என பூக்கோ குறிப்பிடுகிறார்.

மனித உரிiயாளர்களை அருகில் கொண்டிருக்கும் இமாம் ஆன அயதுல்லா கொமேனி நவீனத்துவ ஒழுங்கை வலிறுத்தும் ஷாவின் அதிகாரத்திற்கு சாவுமணியடித்து புதிய வகையிலான ஆன்மீகப் பரவலை அரசியல் அதிகாரத்திற்குள் கொணர்வார் எனக் கனவு காண்கிறார் பூக்கோ.

கிறித்தவத்தின் அதிகாரம் ஆன்மீகம் குறித்த நிலைபாடு அதனது ஆரம்ப நாட்களில் இப்படியானது இல்லை. ரோமானிய ஆட்சியதிகாரத்துடன் பிணைக்கப்பட்ட வகையிலேயே கிறித்தவ மதம் என்பது இருந்தது. கிறித்தவம் போலவே துன்புறுதலும் தியாகமரணம் எய்துவதும் சியாவினரதும் இலட்சியமாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சியாதி அலியின் மகனான குசைன் அனi;றய ஆட்சியாளனான யாசித்தை எதிரத்துப் போராடிய யுத்தத்தில் களப்பலியாகிறார். அதிகாரத்தையும் ஊழலையும் எதிர்த்துப் போராடிய அவர் மரணமுற்ற நாளை சியா நம்பிக்கைனயினர் ஆண்டுதோறும் கொண்டாடுகின்றனர்.

கிபி 680 ஆம் ஆண்டு ஈராக்கிலுள்ள கர்பாலா எனும் இடத்தில் நடந்த சண்டையில் குசைன் மரணமுற்றதால் ஆண்டு தோறும் கர்பாலாவில் இந்த நாளை சியா இனத்தினர் கொண்டாடுகின்றனர். சாட்டையால் அடித்தும் கத்தியினால் கீறியும் இரத்தத்தைத் தமது உடலிலிருந்து பெருக்குவதன் மூலம் தியாக மறவர்க்கான தமது காணிக்கையை சியா நம்பி;க்கையார்கள் செலுத்துகிறார்கள். சதாம் குசைனின் ஆட்சிக் காலத்தில் இந்தச் சடங்கு தடை செய்யப்பட்டிருந்தது என்பது இங்குநினைவு கூரத்தக்கது.பூக்கோவின் அனைத்து நம்பிக்கைகளுமே பி;ன்வந்த நாட்களில் பொய்த்துப் போனது என்பது வரலாறாக இருக்கிறது.
அரசியலை ஆன்மீகத்துடன் இணைத்த கிறித்தவ அடிப்படைவாதிகள் போலவே இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் மனித உரிமைகளுக்கு எதிராகவே பரிணாமம் பெற்றார்கள் என்பதுவே வரலாறாக இருக்கிறது. பூக்கோவின் நம்பிக்கைகள் பொய்த்துப்போனவை குறித்து அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய இரு அறிஞர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
இஸ்லாமியப் புரட்சியில் பூக்கோவின் உற்சாகம் மரணமும் தியாகமும் குறித்த அவரது நம்பிக்கையால் உந்தப்பட்டதெனத் தெரிவிக்கிறார் ஜேம்ஸ் மில்லர். பூக்கோவின் ஈரானியப் புரட்சி பற்றிய பதிவுகள் பின்வந்த நாட்களில் அவரது தவறான வாசிப்பு என மெய்ப்பிக்கப்பட்டிருப்பதாக டேவிட் மேசி குறிப்பிடுகிறார்.

1979 ஆம் ஆண்டு மார்ச மாதம் சர்வதேசியப் பெண்கள் தினத்தின்போது ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பெண்களும் மார்க்சியர்களும் கலந்துகொண்ட ஒருமிகப் பெரிய ஆரப்பாட்டம் நடைபெற்றது. பெண்கள் மீளவும் முழு உடலையும் மூடுமாறான அங்கி அணிவது கொமெனியின் அரசினால் கட்டாயச் சட்டமாக ஆக்கப்பட்டதனை எதிர்தது 50,000 பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் மீது புதிதாக உருவாக்கப்பட்ட ஹிசுபுல்லா அல்லது கடவுளின் கட்சி எனும் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
இடதுசாரிகள் ஆரப்பாட்டம் நடத்திக்; கொண்டிருந்த பெண்களைச் சுற்றி நின்று அவர்களுக்;குப் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தனர். பெண்களின் மீதான தாக்குதலைக் கண்டித்து பிரெஞ்சுப் பெண்ணிலைவாதியான ஸீமன் தி பூவா ஒரு அறிக்கை வெளியிட்டார.; ஈரானியப் பெண்களின் உரிமைக்காக சரவதேசியக் குழவொன்றைத் தாம் அமைத்திருப்பதாக மார்ச் 19 ஆம் திகதியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார். தொடர்ந்து மார்ச் 24 ஆம் திகதி பூக்கோவைக் கண்டித்து ‘தத்துவவாதிகள் என்னதான் கனவு காண(what are the philosophers dreaming? : 1979) எனும் கட்டுரையை ‘லா மார்டின்’ எனும் இடதுசாரிப் பத்திரிக்கையில் கிளாயோ மற்றும் ழாக் பிராய்லி எனும் இரு பிரெஞ்சுப் பெண்ணிலைவாதிகள் எழுதினர்.

கொமேனியின் ஆட்சியில் விசாரணையற்ற முறையில் சமப்பாலுறவாளரகள் கொல்லப்பட சட்டமியற்றப்பட்டுள்ளது. திருடர்களும் முறையற்ற பாலுறவுகொண்ட பெண்களும் கல்லெறிந்;து கொல்லப்படலாம் எனச் சட்டமியற்றப்பட்டுள்ளது. ‘கட்டுப்படுத்தும் மற்றும் தண்டனை வழங்கும் ஆன்மீகம்’ இது என அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இரண்டு நாட்கள் கழித்து பூக்கோ இதற்கு எதிர்;விணையாற்றினார.;
அது கேள்விக்கான பதிலாக அமையவில்லை. மாறாக தப்பித்தலாகவே அமைந்தது. ;எனது வாழ்நாள் முழுவதும் நான் விவாதங்களில் ஈடுபட்டதில்லை. இப்போது என்னை விவாத்தில் இறங்கச் சொல்கிறார்கள். அப்படி நான் செய்யப்போவதில்லை. எனது தவறுகளை ஓப்புக்கொள்ள வேண்டும் என என்னைக் கோருகிறார்கள். சிந்திப்பதைக் கட்டுப்படுத்தும் வேளையை இதன் வழிகட்டுரையாளர்கள் செய்கிறார்கள்;’ என்பதோடு பூக்கோ தனது எதிர்விணையை மட்டுப்படுத்திக் கொண்டார்.

இந்தத் தருணத்தில் ஈரான் குறித்த பூக்கோவின் நீண்ட நேர்காணல் கொண்ட ‘ஈரான் : ஆன்மாவற்ற உலகின் ஆன்மா ( iran : spirit in a spiritless world :1979)
எனும் பெயரிலான புத்தகம் ஒன்று வெளியாகியது. கிளார் பிரெய்ரி மற்றும் பியரே பிளாஞ்செட் எனும் இருவர் அந்தப் புத்தகத்தை தொகுத்திருந்தனர். இந்தப் புத்தகம் மார்ச் மாதம் நடைபெற்ற பெண்களின் ஆர்ப்பாட்டத்தின் பின் வெளியாகியது.
‘பகாய்’ நம்பி;க்கையாளர்கள், மீதான தாக்குதல்கள் சிறுபான்மையின குர்திஸ் மக்களின் மீதான தாக்குதல்கள், சமப்பாலுறவாளர்கள் கொல்லப்பட்டமை போன்றவற்றின் பின் இந்தப் புத்தகம வெளியாகியது. ஈரானியப் புரட்சி குறித்த அவநடத்தைகள் வெளியாகியிருந்த காலத்தில் அதைக் குறித்த எந்தத் தகவலுமே இல்லாத இந்தப் புத்தகம் அந்தக் காலத்தில் வெளியாகியது அபத்தத்தின் உச்சமாகவே இருந்திருக்கும்.

இந்த நேர்முகத்தில் மதத்தினது முக்கியத்துவம் குறித்து பூக்கோ அழுத்தமாகப் பேசுகிறார். ‘கருத்தியலை விடவும் ஆழமானது மதம்’ என்கிறார் பூக்கோ. ‘சியா நம்பிக்கையானது ஈரானிய வரலாற்றின் பகுதியாக பல நூற்றாண்டுகளாக இருக்கிறது. நடந்திருக்கும் ஈரானியப் புரட்சியானது அதனது சொற்களஞ்சியம், அதனது சடங்குகள், காலமற்ற அதனது நாடகீயம், போன்றவற்றின் இடையிலிருந்து முகிழ்த்த நிகழ்வாக இருக்கிறது. அந்தப் புரட்சியானது அந்தக் கலாச்சார்த்தில் வேர்கொண்டதாக இருக்கிறது. மார்க்சிய, லெனினிய, மாவோயிசப் புரட்சிகளினின்று தனித்துவம் கொண்டதாக, ஆன்மீகத்தளம் கொண்டதாக அந்தப் புரட்சி இருக்கிறது’ என அவர் அந்த நேர்முகத்தில் கூறுகிறார்.
‘தாக்குதலினதும் தியாகத்தினதும் (a religion of combat and sacrifice) மதம் சியா மதம்’ என அவர் குறிப்பிடுகிறார்.
‘முரண்பாடுகளை மூடிமறைத்து இல்லாதாகக் காட்டுகிற நவீன கருத்தியல்களின்றும் வேறுபட்டதாக, ஒன்றினைந்த வரலாற்றுக் கலாச்சார கருத்தாடலாக இருக்கும் சியாயிசம் முரண்பாடுகளை மேவிச்சென்று ஒரு புதிய ஆன்மிகக் கலாச்சாரத்தைத் தரும்’ என அவர் அதில் கூறுகிறார்.
சீனத்தில் நிகழ்ந்த கலாச்சாரப் புரட்சி குறித்த தமது அனுபவங்களிலிருந்து பேட்டியாளர்கள் முன்வைக்கும் கேள்விகளையும் பூக்கோ புறக்கணித்து விடுகிறார். கலாச்சாரப் புரட்சியென்பது மக்களின் ஒரு பிரிவினருக்கும் பிற பகுதியினருக்கும் இடையில் நிகழ்ந்த மோதல் என்கிறார் அவர். அதாவது, கட்சியிலிருந்த சில பகுதியினருக்கும் பிற பகுதியினருக்கும் இடையில்; நடந்த மோதல் என்கிறார். ஆனால், ஈரானைப் பொறுத்த அளவில் ‘வேறுபட்ட பகுதிகளுக்குள் மோதல் என்பதோ போராட்டம் என்பதோ இல்லை’ என்;கிறார்.
ஈரான் புரட்சியினது அழகும் பலமும் என்று பூக்கோ குறிப்பிடுவது இதைத்தான் : முழு மக்களுக்கும் போலீசினது ஆயுதங்களுக்கும் இடையிலானததுதான் அந்த முரண்பாடு என்கிறார் அவர்.
சமூகப் பொருளாதார தளத்தில் ஈரானிய மக்களுக்கிடையில் வித்தியாசங்களோ போராட்டங்களோ இல்லை எனப் பூக்கோ குறிப்பிடுகிறார். ஈரானியப் புரட்சியினுள் உள்ள ஒரேயொரு முரண்பாடு என அவர் யூதவெறுப்பையும்; ஈரானிய தேசியத்தினையும் அவர் குறிப்பிடுகிறார். அமெரிக்கர்களின் மீது மட்டுமல்ல பிற வெளிநாட்டவர் மீதும் ஆப்கானியிர்கள்; உள்பட அவர்களுக்குப் பகையுணர்வு இருக்கிறது என்பதனையும் பூக்கோ பிற்பாடு ஒப்புக் கொள்கிறார்.
ஈரானியர்களிடம் ஓன்றுபட்ட உணர்வும் மாற்றம் வேண்டும் எனும் கடப்பாடும் இருக்கிறது எனக் குறிப்பிடும் பூக்கோ, இந்த இரட்டைக் கடப்பாடு; அவர்களது மரபு, இனவெறி, தேசியம், மூடுண்ட தன்மை போனறவற்றில் அடிப்படை கொண்டதாகவும இருக்கிறது எனவும் அவர் குறிப்பிடுகிறார். இந்த ஒரே ஒரு இடத்தில்தான் ஈரானியப் புரட்சியில் நிறுவனம் சார்ந்த இனவெறியும் தேசியமும் மூடுண்ட தன்மையும் (institutions that carry a charge of chauvinism, nationalism, exclusiveness, that have a very powerful attraction for individuals ) இருப்பதாக பூக்கோ ஒப்புக்கொள்கிறார்.
1978 ஆம் ஆண்டு அடிப்படைவாதிகளால் தான் மிரட்டப்பட்ட சம்பவத்தை பிராய்ரி குறிப்பிட்ட போதும், ஈரானியப் பெண்;களின் மீதான ஒடுக்குமுறை குறித்து பூக்கோ எங்குமே பேசுவதில்லை.
இந்த நேர்முகத்தின் மிகப் பெரும் ‘சேதாரமான’ கருத்துக்கள் இரண்டாக அமைகிறது. முதலாவதாக, மிகுந்த ஒருபக்கச் சார்புடன் ஈரானியப் புரட்சியின் ஒன்றிணைந்த தன்மையையும் தனித்த தன்மையையும் பூக்கோ வலியுறுத்திக் கொண்டேயிருக்கிறார். இரண்டாவதாக, பெண்களின் மீதானதும் பிற இனத்தவர் மீதானதும் சமப்பாலுறவாளர்கள் மீதுமான தாக்குதல்கள் குறித்து பூக்கோ எதுவுமே பேசுவதில்லை.
பிற்பாடாக, 1980 முதல் 1984 இல் அவர் இறக்கும் வரை ஈரான் குறித்து எந்த அபிப்பிராயங்களையுத் அவர் சொல்வதில்லை.
ஈரானியப் புரட்சியானது அரசியல் இஸ்லாமியர்களுக்கு ஓரு மிகமோசமான முன்னுதாரணத்தையே வழங்கியிருக்கிறது. அல்ஜீரியா,எகிப்து, சூடான் ஆப்கானிஸ்தான் என அனைத்து நாடுகளிலும் சீரழிந்த ஒரு சமூகத் திட்டத்தையே அது கொண்டிருந்தது. மார்க்சியத்தின் பெயரால் நிகழ்ந்த அனர்த்தங்களைப் பேசிக் கொண்டிருப்பவர்கள், மத அடிப்படைவாதத்தின் பின் விமர்சனமற்று கைகட்டி நின்றது பிறதொரு வகை அடிப்படைவாதமின்றி வேறில்லை.
பூக்கோவின் ஈரான் தொடர்பான விவாதங்கள் பிரான்சில் உக்கிரமாக நடந்து கொணடிருந்த வேளையில் பழமைக்குத்; திரும்புதல் அல்லது அடிப்படைகளுக்குத் திரும்புதல் எனும் கலாச்சார மீட்புவாதம் தொடர்பாக மாரக்சியரும் இஸ்லாமிய வரலாற்றாசிரியருமான மாக்சிம் ரோடின்சன் சொல்லியிருந்தது மிகப் இச்சூழலில் மிகப் பொறுத்தமானதொரு கூற்றாக அமைகிறது. மாக்சம் ரோடின்சன் 1963 ஆம் ஆண்டு தீர்க்கதரிசி முகமது பற்றி மிக விரவான ஆய்வின் அடிப்படையில் அவரது வாழ்க்கை வரலாற்றை எழதியவராவார். முதலாளித்துத்திற்கும் இஸ்லாமிய நாடுகளில் வறியவர்களின் எழுச்சிக்கும் இடையிலான தர்க்கம் குறித்த ஆய்வு நூல் ஒன்றினையும் ( capitalism and islam: 1966) எழுதியிருக்கிறார் மாக்சிம் ரோடின்சன். ஈரானியப் புரட்சியின் எதிர்காலம் குறித்து மாக்சிம் ரோடின்சன்; இவ்வாறு பதிவு செய்கிறார் :
அடிப்படைவாத்திற்குக் கூட, திருடர்களின் கைகள் என்பது வெட்டப்பட வேண்டும்;, பெண்களின் சொத்துரிமை என்பது பாதியாகக் குறைக்கப்பட வேண்டும். மதவாதிகள் விரும்புகிறபடி மரபுக்குத் திரும்புவது என்றால், திராட்சை ரசம் குடிப்பவருக்குக் கசையடி கொடுப்பதும், முறைசாரா பாலுறவு கொண்டவருக்கு கசையடி கொடுப்பதும் அல்லது கல்லால் அடிப்பதும் தவிரக்கமுடியாததாகவே இருக்கும்.

வரலாற்று ரீதியில் மகிமைப்படுத்தப்பட்ட, எனக்கு எதிரானவன் ‘கடவுளின் எதிரி’;;; என்று சொல்வதனை விடவும் சுலபமானதோ அல்லது அதி ஆபத்தானதோ வேறொன்று இல்லை.

பல நூற்றாண்டுகளிலான பொது அனுபவங்களின் அடிப்படையிலிருந்து பார்க்கும்போது, வரலாற்றின் விதிகளால் சரிபார்க்கப்பட்ட ஒரு அனுபவத்தை மீண்டும் ஞாபகப்படுத்திப் பார்ப்பதென்பது அதிர்ச்சியளிக்கத்தக்கதாக இருக்கிறது, நல்ஒழுக்க நோக்கங்கள், கடவுளினால் ஆசீர்வதிக்கப்பட்டதாக இருக்கிறதோ இல்லையோ, இந்த நோக்கங்கள் அரசுகளின் நடைமுறைக் கொள்கைகளை தீர்மானிப்பதற்கானதாக ஆவதென்பது மிகப் பலவீனமான அடிப்படையாகவே இருக்கும்.

ஈரானுக்குக் காத்திருப்பதானது விடுதலை அல்ல, மாறாக அரைவாசித் தொன்மைப்; (semi archaic ) பாசிசமேயாகும். (Maxim Rodinson: the awakening of Islamic fundamentalism? : Le monde : December 1978)

4

வித்தியாசத்தின் பெயரி;ல்; உடலையும் சிந்தனையையும் கண்காணிக்கும், கட்டுப்படுத்தும், தண்டனை வழங்கும் நவீன சமூகத்திற்கு மாற்றாக ஆன்மீகத்தையும் அரசியலையும் இணைத்த பூக்கோவின் கனவு பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனது.

ஆன்மிகத்தையும் அரசியல் அதிகாரத்தையும் இணைக்கும் எந்தச் சமூக முறைமையும் பாசிச அதிகாரத்தோடுதான் தொடர்பு கொண்டிருக்கிறது. ஈரானிய அரசியல் இஸ்லாம், அமெரிக்க குடியரசுக்கட்சியின் திட்டம், பிஜேபியின் இந்துத்துவம் போன்றன அரசியல் வாழ்வில் ஆன்மீகத்தைப் பரப்புவதனைத்தான் பேசின. ஆன்மீகம் அரசியல் அதிகாரத்தின் பகுதியாவது பற்றித்;தான் பேசின. இவை அனைத்துமே அந்தந்த நாடுகளில் அடிப்படைவாத சமூக அமைப்பைத் தோற்றுவிப்பதனைதான் தமது நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.

இயேசுவின் இறுதி நாட்கள் பற்றிய மெல்கிப்சனின் (The passion of Christ) ஹாலிவுட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடிப்படைவாத கிறித்தவத் தேவாலயங்கள் இயேசு கிறஸ்து பற்றிய திரைப்படங்களைத் தாமே தயாரிக்கின்றன. அமெரிக்காவெங்கிலும் தேவாலயங்களுடன் இணநை;திருக்கிற டால்பி ஸ்டீரியொ ஒலி அமைப்புகளுடனான 3500 திரையரங்குகளில் இனி அவர்கள் தமது படங்;களைத் திரையிடப் போகிறார்கள். இந்தத் தருணத்தில் மெல்கிப்ஸன் இலாபம் கருதி தனது திரைப்படத்தை இதே கிறித்தவ தேவாலயங்களின் ஒப்புதலுடன்தான் உலகெங்கும் திரையிட்டார் என்பதனையும், திரைப்படம் நேரடியாகவே தேவாலயத் திரையரங்குகளில் திரையிடப்பட்டன என்பதனையும் ஞாபகம் கொள்ள வேண்டும். ஹாலிவுட்டை மட்டுமல்ல அமெரிக்க அரசியல் அதிகாரத்தையும் வெகு சீக்கிரமே தமது வளாகங்களுக்குள் கிறித்தவ அடிப்படைவாதிகள் கொணரும்; நாட்கள் வெகுதூரத்திலி;ல்லை.

ஆன்மிகமும் மதமும் குறித்த லெனினியப் பார்வைதான் இந்த வேளையிலும் பொறுத்தமான பார்வையாக இருக்க முடியும்.

ஆன்மீகம் என்பது தனிநபரின் பிரதேசத்தில் நிகழ வேண்டிய பிரச்சினை. அரசியல் அதிகாரத்தின் பிரச்சினையாகவோ அரசியல்; நிறுவனத்தின் பிரச்சினையாகவோ அது இருக்க முடியாது.

அரசியல் அதிகாரத்தையும்; ஆன்மீகத்தையும் இணைத்த மத்தியகால திருச்சபைகளின்; வரலாறு மாறுபட்ட கருத்துக்களை ஒடுக்கியதாகவும், பெண்களின் பங்கெடுப்பையும் ஆற்றலையும்; கேவலமாக அச்சுறுத்தி வந்ததாகவுமே இருந்திருக்கிறது. மாற்றுக்கருத்தாளர்களை விசமிட்டுக் கொண்றதாகவுமே இருக்கிறது. டான் பிரவுனின் புனைவும் திரைப்படமும் ( the davinci code: 2006) உலகெங்கும் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வும் அதற்கு எதிரான திருச்சபைகள் மற்றும் இசுலாமிய அமைப்புகளின் கண்டனமும் அதனையே ஞாபகமூட்டுகின்றது. அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்த நம்காலத்தின் கிறித்தவ அடிப்படைவாதமாக ஜோர்ஜ் புஸ் வகை அடிப்படைவாதம் பிறிதொரு சிலுவைப்போர் எனும் வகையில் மாற்று நம்பிக்கையாளர்களின் நிலங்களில் நரைவேட்டையாடிக் கொண்டிருக்கிறது.

அரசியலையும் ஆன்;மீகத்தையும் இணைத்த ஆப்கானிய தலிபான் அதிகாரம் நம்காலத்தின் காட்டுமிராண்டித்தனத்திற்கான சாட்சியமாக இருக்கிறது.

கலாச்சாரச் சார்புவாதமும் வித்தியாசமும் முன்வைப்பவர்கள் மிகப்பெரும் வரலாற்றுக் குருட்டுத்தனங்களை முன்வைப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

ஸ்டாலினிய அத்துமீறல்களையும்; மாவோயிச கலாச்சாரப் புரட்சி அத்துமீறல்களையும்; கடுமையாகச் சாடிய மிசேல் பூக்கோ, எந்தவிதமான அரசியல் தரிசனமும் விமர்சனப் பாங்குமின்றி கொடுங்கோன்மையாக ஆகிய ஈரானியப் புரட்சியை ஆதரித்து நின்றதன் மூலம் ஒரு மிக மோசமான முன்னுதாரணத்தை வழங்கியிருக்கிறார். நவீனத்துவத்தின் தவறுகளையும்; எதிர்மறைகளையும் மட்டுமே பார்த்ததாக இருந்த அவரது அரசியல் பார்வையே இத்தகைய அவரது நிலைபாட்டுக்கான அடிப்படையாகும்.

அதிருப்தியான ஒரு சமூகத்திற்கான மாற்று என்பதை ஸ்தூலமாகவும் மறுபரிசீலனையின் ஊடாகவும் வைக்க வேண்டியது கலைஞர்களதும் தத்துவவாதிகளதும் பொறுப்புணர்வு சாரந்ததாகும். அத்தகைய ஸ்தூலமான மாற்றை, அரசியல் அதிகாரத்தின் பகுதியாக ஆன்மிகத்தை வைப்பதன் வழி நிச்சயமாகவே எட்டமுடியாது என்பதை;ததான் வரலாற்று ஆதாரங்கள் மெய்ப்பித்திருக்கிறது.

மிசல் பூக்கோவின் கருத்துக்கள் பற்றிப் பேசவரும் பிரித்தானிய தத்துவாசிரியரான ஜொனாதன் ரீ, மிசல் பூக்கோவுடன் நடந்த சந்திப்பின் போது, தனது எழுத்துக்கள் எவ்வாறு பாரக்கப்பட வேண்டும் என்பதனைக் குறித்து அவரிடம் சொல்லியிருப்பதை அவர் பதிவு செய்திருக்கிறார்.

‘எல்லாம் தெரிந்த கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான எதிர்விணையாகவே எனது எழுத்துககள் பார்க்கப்பட வேண்டும்’ என அப்போது குறிப்பிடுகிறார் மிசேல் பூக்கோ. ஈரான் தொடர்பான அவரது பல கட்டுரைகளில் மாரக்சியர்களின்பாலான அவரது எள்ளல் உணர்வையும், அவர்களது எதிர்வுகளை துச்சமெனத் தள்ளுவதையும், பூக்கோ அவர்களது வரலாற்றை மறுக்கும் தன்மையினையும் ஒருவர் சாதாரணமாகவே பாரக்கவியலும்.

தாராளவாதச் சமூகமும் சரி, இதுவரைத்திய கம்யூனிச சமூகங்களின் படிப்பிணைகளும் சரி, இரண்டு சமூக அமைப்புகளுமே கட்டுப்படுத்தும் சமூகங்களாக கண்காணிப்புச் சமூகங்களாகவே இருந்திருக்கின்றன என்பதனை நாம் மெய்யாகவே ஒப்புக்கொள்ளவே வேண்டும். சிறுபான்மையின மக்களை நிராகரித்த சமூகங்களாக, சமப்பாலுறவாளர்களை நிராகரித்த சமூகங்களாக அவை இருந்தன என்பதிலும் சந்தேகமில்லை.

ஆனால், தாராளவாத சமூகங்கள் வழங்கியேயிராத சமூகஉத்திரவாதம், வேலை ஒரு அடிப்படை உரிமை எனும் சட்டம், கல்வி ஒரு அடிப்படை உரிமை எனும் சட்டம், வீடு அடிப்படை உரிமை எனும் சட்டம் போன்றவற்றை பிரபஞ்சமயமாக்கியது கம்யூனிச நாடுகளின் சாதனை என்பதை எவரும் மறுக்க முடியாது. அக்டோபர் புரட்சி என்பது இல்லையானால் காலனியாதிக்க எதிரப்பு தேசிய விடுதலை என்பதும் இல்லை.

மனித உரிமைகள் குறித்த அக்கறைகளை சிறை அமைப்புகள் குறித்த அக்கறைகளை மாரக்சியர்கள் கொண்டிருக்கவில்லை என்பது ஒரு பகுதி உண்மைதான். ஏனெனில், சிறை அமைப்பின் கொடூரம் குறித்து தமது அனுபவங்களின் அடிப்படையில் அவர்கள்தான் அதிகமும் எழுதி வைத்திருக்கிறார்கள். சிறைகளுக்குள் அடிப்படை உரிமைகளைக்; கோரியவர்களாக பல்வேறு சமயங்களில் அவர்களே இருந்திருக்கிறார்கள். கிராம்ஸி, ஜூலியஸ் பூசிக், ஹோசி மின் என இதற்கான சான்றுகள் உள்ளன.

இந்திய தமிழக அனுபவத்தை எடுத்துக்கொண்டால் கூட, சிறை அமைப்பிலும் கைதிகளை நடத்தும் விதத்திலும் மாற்றங்களை உருவாக்க வேண்டிப் போராடியவர்களாக கம்யூனிஸ்ட்டுகள் இருந்திருக்கிறார்கள். சி.ஏ.பாலன்,கே.பாலதண்டாயுதம், தோழர் தியாகு போன்றவர்களின் சிறைக்குறிப்புகள் இதனைப் பதிவு செய்திருக்கின்றன.

தமிழ்ச் சூழலிலான பூக்கோவினைப் பற்றிய வாசிப்பென்பது இவ்வாறாகத்தான் அமைய முடியும். பூக்கோவின் அரசியல் ஆன்மீகத்தையும் அவரது கம்யூனிஸ வெறுப்பு அரசியலையும் நாம் முற்றிலும் நிராகரித்து விடவே வேண்டியிருக்கிறது.

அவரது சிறை, பைத்தியநிலை, பாலியல்பு போன்றவை குறித்த எழுத்துக்கள நமது சூழலில் நிறைய வெளிச்சங்களைத் தரமுடியும். இவைகள் சார்ந்த முதலாளித்துவ நிறுவனங்கள் குறித்த விமர்;கராக அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நமக்கு நிறைய உண்டு.

ஒரு சமூகக் கோட்பாட்டாளராக (social theorsit) நவீனத்துவ ஓழுங்கிற்கு மாற்றாக அவர் முன்வைக்கும் ஆன்மீக அரசியலை (spirtual politics) முற்றிலும் நிராகரித்து விடுவதே எதிர்கால சமூகத்திற்கு நன்மை பயப்பதாக இருக்கும்.

ஆதாரங்கள்:
1.The Seductions of Islamism : Revisiting Foucault and the Iranian Revolution : New Politics : Summer 2004.

2.Foucault, Gender, and the Iranian Revolution: The Seductions of Islamism : university of Chicago Press : 2005.

Exit mobile version