இலங்கை இந்திய அரச ஆதரவாளர்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக்கொண்டிருக்க அதிகாரவர்கத்தின் எதிர்ப்பாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
இந்திய அரச பயங்கரவாதம் மூவரைத் தமிழ் நாட்டின் இதயப்பகுதியில் அடைத்து வைத்துத் தூக்குத்தண்டனை வழங்கி சாகடித்தே தீருவோம் என இரத்தம் தோய்ந்த கரங்களோடு காத்திருக்கும் வேளையில் இந்திய அரசை கடுமையான தொனியில் அம்பலப்படுத்திப் புலம் பெயர் நாடுகளில் இருந்து ஒரே ஒரு துண்டுப் பிரசுரம் தான் வெளியானது. வேறு பிரசுரங்கள் ஏதும் மக்கள் மத்தியில் இவ்வளவு தீவிரமாக இந்திய அரசைக் கண்டித்து வெளியாகவில்லை. புதிய திசைகள் என்ற அமைப்பு சார்பில் வெளியான துண்டுப்பிரசுரம் இது.
பிரசுரத்தின் முழுமையும் இனியொரு தமிழ்வின் ஆகிய இணையங்களில் வெளியாகியிருந்தன.
http://www.tamilwin.com/view.
இந்த நிலையில் இத் துண்டுப் பிரசுரத்தை வினியோகித்தவர்களைச் சிலர் தாக்க முற்பட்டிருக்கிறார்கள்.
மிரட்டியவர்கள் துண்டுப் பிரசுரத்தைப் பறிமுதல் செய்துள்ளார்கள். வினியோகித்தவரை தாக்க முற்படும் வேளையில் அருகில் காவலுக்கு நின்ற பிரித்தானியப் போலிசால் தாக்க முற்பட்டவர் தடுக்கப்படுள்ளார்.
யாரிவர்கள்?
இந்திய அரசின் ஆதரவாளர்களா? ‘ரோ’ என்ற இந்திய அரச உளவு நிறுவனத்தின் கையாட்களா?? இலங்கை அரச ஆதரவாளர்களா??? கோதாபயவினதும் அம்சாவினதும் அடியாட்களா????
புதிய திசைகள் செயற்பாட்டாளர்களைத் துண்டுப் பிரசுரம் வெளியிடும் போது தாக்க முற்பட்டவர்கள் மேற்குறித்த யாருமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால், அவர்களைத் தூண்டிவிட்டவர்கள் நிச்சயமாக இலங்கை இந்திய அரசுகளதோ அல்லது அவர்களின் உளவாளிகளதோ முகவர்களாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் நிறையவே உண்டு.
“தனிமனித படுகொலைகள் அதுவும் பட்டியல் இட்டு படுகொலை செய்வது என்பதை போராட்ட வழிமுறையாக கொண்ட போராட்ட குழுக்களால் தலைமை தாங்கப் பட்டு இறுதியில் சுய அழிவும், மக்களின் பேரழிவையும் சந்தித்த மக்கள் கூட்டம் தான் நாங்கள். தனிமனித அழிப்பு எமது சமூகத்திற்கு எந்த சரியான மாற்றத்தையும் தந்ததில்லை அதற்கு மாறாக எம்மத்தியில் இருந்த பல தேவையான சக்திகளை அழித்ததுடன் எதிர்தரப்பில் மீண்டும் மீண்டும் மிக மோசமான சக்திகளால் அவை பிரதியிடப் பட்டுக்கொண்டிருக்கிறது.” என்ற வசனங்கள் மனதைப் புண்படுத்தியதாகவே தாக்க முற்பட்டவர்கள் தமது நியாயத்தை முன்வைத்தனர். பி.ரி.எப் அமைப்பச் சார்ந்த ஸ்கந்ததேவா உட்பட பலர் இவர்களைத் தடுக்க முயன்ற போதும் அவர்கள் யாரையும் பொருட்படுத்தும் மனோ நிலையில் இருந்திருக்கவில்லை.
புலம் பெயர் நாடுகளில் ஒன்றுமறியா தேசியப் பற்று மிக்க அப்பாவிகளை, புலி ஆதரவாளர்களை, பிரபாகரனைப் பூஜிக்கும் பக்தர்களை நிறையவே காண்கின்றோம். இவர்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் இலங்கை இந்திய அரசுகளின் உளவாளிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இவர்களைத் தூண்டிவிட்டு, உருவேற்றி அரசுக்கு எதிரான போராட்டங்களையும் கருத்துக்களையும் திசை திருப்புகின்றனர்.
முப்பது வருடப் போராட்டமும் அதன் கோரமான அழிவும் ஆயிரம் புரட்சிக் காரர்களை உருவாக்கவ்ல்லை. பல்லாயிரம் அப்பாவிகளையும், சில அரசியல் வியாபாரிகளையும் கொண்ட ஊனமுற்ற சமூகம் ஒன்றை உருவாக்கியிர்ய்க்கின்றது. பேரினவாதத்திற்கு எதிரான சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டுமாயின் அங்கவீனமான சமூகம் புதிய அரசியல் வழிமுறையை நோக்கி வென்றெடுக்க்பபட வேண்டும்.
புதிய திசைகள் இந்தியத் தூதரகத்தின் முன்னால் நடந்த(30.08.2011)
ஆர்ப்பாட்டத்தில் துண்டுப் பிரசுரம் வினியோகித்த போது அவற்றைப் பறிமுதல் செய்து தாக்க வந்தவர்களிடன் பேசியபோது அவர்களுக்கு துண்டுப்பிரசுரத்தின் உள்ளடக்கமே தெரிந்திருக்கவில்லை.
இலங்கை அரசிற்கு எதிராகவும் அதிகார வர்க்கத்திற்கு எதிராகவும் போராடும் உரிமைக்காக எம்மவர்கள் மத்தியிலேயே நாம் போராட வேண்டிய நிலையில் உள்ளோம்.
புலம் பெயர் நாடுகளில் பல்வேறு நோக்கங்களுக்காக மக்களின் அவலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு அரசியலின் பின்புலத்திலும் அதற்கே உரித்தான வர்க்க நலன்களும் அடையாளங்களும் காணப்படுகின்றன. தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தில் மிகப்பெரும் அரசியல் வெற்றிடத்தைக் காண்கிறோம். தமது சமூக இருப்பைப் பேணிக்கொள்வதற்கும் அதற்கான சமூக அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் அதனை மேலும் மெருகேற்றி வளர்த்துக்கொள்ளவும் முளைவிடுகின்ற பலர் இந்த அரசியல் வெற்றிடத்தைப் பிரதியிட முனைகின்றனர். நீண்ட கற்றலும் அதற்கான அரசியல் நடைமுறையும் உலகின் அத்தனை போராட்ட சூழலும் வேண்டி நிற்கும் இன்றைய தேவையாகும். எதிரிகள் ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்கிறார்கள். அதற்கான நடைமுறை வடிவங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். மக்கள் போராட்டங்களைத் திசை திருப்பி சமூகத்தைச் சீரழிக்கிறார்கள். அந்தச் சீர்குலைவில் தமது வெற்றியை நிலைநாட்டிக்கொள்கிறார்கள்.
இவற்றிற்கெல்லாம் எதிரான அரசியல் உருவாக்கப்பட வேண்டும். அறுபது வருட அழிவிற்கு எதிரான ஒற்றைப்பரிமாண வலது சாரித் தீவரவதச் சிந்னையே ஒவ்வோர் சமூக அரசியல் அங்கத்திலும் மேலோங்கியிருக்கின்றது. இவற்றிற்கு எதிரான தீவிரமான அரசியல் போராட்டம் சிந்தனைத் தளத்திலும் செயற்பாட்டுத் தளத்திலும் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கான ஒன்றிணைவின் அவசியம் முன்னணிச் சக்திகளால் உணரப்பட வேண்டும்.
இவ்வாறான வன்முறைகளை அரசியல் நிதானத்துடன் பகுத்தறிவதும் புதிய திசைவழியைப் வகுத்துக் கொள்வதும் சமூகப்பற்று மிக்க ஒவ்வொருவரதும் கடமை.