Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகள் மீதான தடை நீக்க உத்தரவின் பின்புலம்

ltteதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்த வேளையில் தவறான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன என்றும் அதன் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள தடை தவறானது என்றும் ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளைப் பின்பற்றி வேறு காரணங்களை முன்வைக்காது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை தவறானது என்றும் இது நடைமுறை சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அத்தீர்ப்பு தெரிவிக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட வேண்டிய அமைப்பா இல்லையா என்பதை ஆராயாமல் ஏனைய நாடுகளின் முடிவைப் பின்பற்றி ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த முடிவில் சட்டச்சிக்கல்கள் உள்ளதால் மட்டுமே இத்தடை நீக்கத்தை ஐரோப்பிய நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. வெறுமனே சட்டம் சார்ந்த பிரச்சனையாகவே இம் முடிவை நீதிமன்றம் முன்வைத்துள்ளது.

2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புலிகள் மீதான் இத் தடை ஊடக மற்றும் இன்டர்நெட் தகவல்களை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டிருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐரோப்பிய நீதி மன்றம் மேலும் தெரிவித்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தடைவிதிக்கப்பட வேண்டிய அமைப்பா இல்லையா என்பதை முன்வைக்கும் பணி நீதிமன்றத்தைச் சார்ந்ததல்ல.

ஆக, மூன்று மாத அவகாசத்தினுள் ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைவிதிப்பதற்கான காரணத்தை முன்வைக்க வேண்டும் என்றும் அதுவரை தடை செல்லுபடியற்றது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மூன்று மாத காலம் வரை தடை செல்லுபடியற்றதாகும். அதன் பின்னர் தடை செய்வதற்குரிய புதிய காரணங்களை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்தால் தடை நீடிக்கும்.

புலிகள் அமைப்பு மட்டுமல்ல ஒரு அரசியல் இயக்கத்தைத் தடைசெய்வதென்பது, அவ்வியக்கத்தின் போராட்டத்திற்கான அரசியல் காரணங்களையும் தடைசெய்வதாகும். இந்த வகையில் புலிகளின் மீதான தடை அரசியல் உள் நோக்கங்களை கொண்டதும் நியாயமற்றதுமாகும். ஆயினும் புலிகளின் இன்றைய அடையாளம் தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து செல்வதற்கான உரிமையைக் கேள்விக்குள்ளாக்க்கும் நிலையிலுள்ளது என்ற அடிப்படையிலிருந்தே இதன் தீர்ப்பின் அரசியல் ஆராயப்பட வேண்டும்.

புலிகள் என்ற அடையாளம் இன்று அடிடாஸ், நைக், ப்ராடா போன்ற பல்தேசிய வர்த்த நிறுவனங்களுக்கு உரித்தான வியாபார அடையாளங்களைப் போல புலம் பெயர் நாடுகளில் காணப்படுகிறது. அதனைப் பயன்படுத்தி மல்ரி  பில்லியன் வியாபாரம் உலகம் முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்தியாவில் புலிகள் தடைசெய்யப்பட்டிருந்தாலும் புலிகளின் சின்னங்களோ, பிரபாகரனோ தடை செய்யப்படவில்லை. ஒசாமா பின்லாடனின் படத்தை இந்தியத் தெருக்களில் கொண்டுசெல்லும் ஒருவர் சிறைப்பிடிக்கப்படுவார். அதே காராணங்களுக்காக இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட புலிகளின் தலைவரின் படத்துடன் அரசியல் கட்சி நடத்தினால் அது தடைக்கு உள்ளாகாது. இவற்றிற்குரிய காரணம் இன்று புலிகளின் இருப்பு  பல்தேசிய வியாபார அமைப்பாக மாறிவிட்டது. வியாபாரிகள், மொள்ளைமாரிகள் முடிச்சவிக்கிகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் போன்ற அனைத்துத் தரப்பிற்கும் பயன்படும் அடையாளமாகவும் அமைப்பாகவும் புலிகள் சார்ந்த அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தடையை நீக்கவும் புலிகளை மீண்டும் மீட்சி பெறச் செய்யவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதுவுத சங்கடமும் கிடையாது.

புலிகள் மட்டுமல்ல சுய நிர்ணைய உரிமை கோரிப் போராடிய அனைத்து இயக்கங்களும் இந்திய அரசு அல்லது மேற்கு ஏகாதிபத்தியங்கள் சார்ந்த அரசியலையே முன்வைத்தன. புலிகள் எப்போதும் ஐரோப்பிய நாடுகளோடு முரண்பட்டதில்லை. மறுபக்கத்தில் மேற்கு ஏகாதிபத்தியங்களால் இலங்கை அரசிற்கு எதிரான அழுத்தக் குழுக்கள் போன்று கையாளப்பட்ட புலிகள் அதற்கான தேவை அற்றுப்போன போது அழிக்கப்பட்டனர்.

தேவையானபோது புலிகளை வளர்த்து தேவையற்ற போது புலிகளை மக்களோடு சேர்த்து அழித்த ஐரோப்பிய – அமெரிக்க நாடுகளின் கடந்த கால வரலாற்றை மறந்துவிட்டு தீர்ப்பு என்பது நியாயம் கிடைத்ததற்கான ஆரம்பம் என்று கூறுவது பொய். தீர்ப்பின் உள் நோக்கத்தையும் பின்புலத்தையும் புரிந்து கொள்வது அவசியமானதாகும்.

கடந்தவாரம் கிளிநொச்சிக்குச் சென்ற மகிந்த ராஜபக்ச புலிகள் மீட்சி பெறுவதால் தான் தொடர்ந்து அதிகாரத்தில் நிலைக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இப்போது புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்பட்டமை மகிந்த ராஜபக்ச ஆட்சியில் நீடிப்பதற்கான நியாயமாகச் சிங்கள மக்களுக்குச் சொல்லப்படும்.

எதிர்க்கட்சியான யூ.என்.பி மற்றும் சந்திரிக்கா பிரிவினர் ஐரோப்பிய நாடுகள் சிங்களவர்களுக்கு எதிரானவை அல்ல ஆனால் மகிந்த ராஜபக்சவிற்கு எதிரானது என்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இப்பிரச்சாரம் ஒரு வகையில் சிங்கள மக்களால் உள்வாங்கப்பட்டிருந்தது. இன்று மகிந்த ராஜபக்சவும் பரிவரங்களும் ஐரோப்பிய நாடுகள் நாட்டைத் துண்டாட முனைகின்றன எனவும் சிங்கள மக்களுக்கு அவை எதிரானவை எனவும் பிரச்சாரம் மேற்கொள்ள உதவிசெய்யும். எதிர்க்கட்சிகள் பலவீனமடைய மகிந்த ராஜபக்ச தனிக்க்காட்டு ராஜாவாக இன்னும் சில வருடங்களுக்கு உலாவருவார்.

அண்மையில் கே.பி இன் நெர்டோ அமைப்பில் பணிபுரியும் உதயன் என்பவர் ஜேர்மனிக்குச் சென்றிருந்த போது புலம் பெயர் நாடுகளில் புலிகள் வாழ்ந்தால் மட்டுமே தாங்கள் இலங்கையில் அரசியல் ரீதியாகப் பலமடையாலாம் எனத் தெரிவித்திருந்தார்.

ஆக, புலிகளின் இருப்பும் மீட்சியும் தடை நீக்க நாடகமும் மகிந்தவை இன்னும் நீண்டகாலத்திற்கு ஆட்சியில் நீடிக்க உதவி புரியும்.

தான் கொள்ளையடித்து தனது குடும்பத்தைச் சொர்க்கபுரியில் வாழவைப்பதற்காக மகிந்த ராஜபக்ச யாருடனும் இணையத் தயாரான கொள்கையற்ற குரூரமானவர். இவ்வாறான கொள்ளைக்காரனை மிரட்டிப் பணியவைப்பதற்கு ஐரோப்பிய நாடுகளிடம் போர்க்குற்ற ஆதாரங்கள் தாராளமாகக் கையிருப்பிலுள்ளன. இதனால் இலங்கையில் மகிந்தவின் ஆட்சி ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரையில் பொன் முட்டை போடும் வாத்து.

இதனால் புலிகளைத் தனது கட்டுப்பாட்டினுள் மீட்டெடுத்து மகிந்தவை வாழவைப்பது ஐரோப்பிய அரசுகளுக்குத் தேவையானதே.

இன்று புலம்பெயர் நாடுகளில் இளைஞர்கள் மத்தியிலும், தேசிய விடுதலைப் போராட்டங்களோடு தொடர்புடையவர்கள் மத்தியிலும், பல்தேசிய நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் எதிரான குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன. இவற்றை ஒடுக்குவதற்கு ஏகாதிபத்திய அரசு சார்பான அமைப்புக்களைத் தொடர்ந்து தமிழ்த் தலைமைகளாகப் பேண ஐரோப்பிய நாடுகள் முயல்கின்றன. ஏகாதிபத்திய எதிர்ப்பு புரட்சிகர சிந்தனை கொண்ட குழுக்கள் தோன்றுவதை விட புலிகளின் இருப்பு ஐரோப்பிய நாடுகளுக்குத் சார்பான ஒன்றாகவே இன்று அமையும்.

சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழிக்கவும், தமிழ்ப்பேசும் மக்களின் அழிவிலிருந்து தனது ஆதிக்கத்தை நிலைனிறுத்தவும், தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தை ஏகாதிபத்திய சார்பானதாக்கிச் சிதைக்கவும் ஐரோப்பிய நாடுகளுக்குப் புலிகள் தேவை. மகிந்த அரசு அதிகாரத்தில் நீடிப்பதற்குப் புலிகள் தேவை. புலம்பெயர் வியாபாரிகள் தமது வியாபாரத்தை இலாபகரமாக நடத்தப் புலிகள் தேவை.

ஆக, மூன்று மாதக் காலகெடுவின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் புலிகளின் மீதான தடையை நீக்க வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

Exit mobile version