Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகள் கலைக்கப்பட்டால்….. : ஆதித்யன்

சற்றே ஆழப் பார்ப்போமானால், சிறீ லங்கா அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்தம் என்பது, வெறுமனே இரண்டு பாசிச அமைப்புக்களிடையேயான போர் என்ற நிலையைத் தாண்டி, குறித்த இந்த இரண்டு அமைப்புக்களும் இணைந்த நிராயுத பாணிகளான மக்களுக்கெதிரான யுத்தமாகவே வெளிப்படுகிறது. இந்த இரண்டையும் சுற்றி வினையாற்றும் தனிமனிதர்கள், குழுக்கள், கட்சிகள், அமைப்புக்கள் என்று அப்பாவி மக்களின் அவலத்திலும் அழிவிலும் தமது சொந்த இருபிற்காக அரசியல் வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் ஒட்டுமொத்த மக்களையும், அது தமிழ் பேசும் சிறுபான்மையினராகட்டும், சிங்கள பெரும்பான்மையினராகட்டும், வன்முறைக் கலாச்சாரத்திற்குப் பழக்கப்படுத்திவிட்ட இந்த இரண்டு பாசிச அமைப்புக்களும், ஒற்றைத் திசையிலேயே தம்மை நகர்த்திக் கொள்கின்றன. இதற்கு எதிரானவர்கள் சமூகத்திலிருந்து அன்னியமாக்கப்பட்டு, சமூக விரோதிகளாகவும், தேசத் துரோகிகளாகவும், குற்றவாளிகளாகவும் குறியிடப்பட்டு வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அவர்கள் மீதான வன்முறையும் நியாயப்படுத்தப்படுகின்றது. சமூக அங்கீகாரமாக்கப்படுகின்றது. இதுதான் சுந்தரத்திலிருந்து, ரஜனி திரணகம உள்பட, லசந்த விக்கிரமதுங்க வரை கொலைசெய்யப்பட்ட சமூகத்தின் முன்னோடிகளின் அழிப்பிற்குப் பின்னாலுள்ள சூத்திரமாகும். இது இன்று அப்பாவி மக்கள் வரை விரிவாக்கப்படுகிறது. அப்பாவிகளின் மரண ஓலத்திற்கு மத்தியில் புலிகளை அழிப்பதாக தன்னை நியாயப்படுத்திக் கொள்ளும், மகிந்த குடும்ப அரச பயங்கரவாதம் ஒருபுறத்திலும், மக்களின் இரத்த வெள்ளத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளமுயலும் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற அதிகார வெறிகொண்ட தனிமனிதனைச் சுற்றியிருக்கும் புலிகள் மறுபுறத்திலும் அழிவிற்காக தம்மாலான அனைத்து சக்திகளையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அரசின் பாசிச அதிகாரத்துவம், ஒருபுறத்தில் ஒவ்வொரு பெரும்பாயின மனிதனையும், தற்காலிகமாகவேனும், அதன் சிந்தனைத்துவத்தின் அங்கமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. இதன் தவிர்க்கமுடியாத பகுதியாக இலங்கை இராணுவமயப்படுத்தப்பட்டு இந்த இராணுவப் பொருளாதாரத்தில் இலங்கைக் கிராமங்கள் பொருளாதார ரீதியாகத் தங்கியிருக்கும் நிலை உருவாகியுள்ளது. பல சிங்களக் கிராமங்களில் யுத்தம் என்பது வாழ்வாதாரப் பிரச்சனையாக மாறிவிட்டது. அதுவும் தமது சொந்தச் சகோதரர்களான தமிழ் பேசும் மக்களின் அழிவிற்கான யுத்தம்.
சிறீலங்கா மகிந்த குடும்பம், புலிகளிற்கெதிரான யுத்தம் நடாத்திக் கொண்டிருப்பதாக தனது சொந்த அரசியற் சட்ட வரம்புகளை வகுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அது புலிகளை அழிப்பதற்கான யுத்தம் நடாத்தவில்லை என்பது தர்க்கரீதியான உண்மையாகும்.
1. புலிகளைக் சுட்டிக்காட்டியே வளரும் அரச பாசிசத்தில் வளர்ச்சியில் நிலைகொண்டிருக்கும் மகிந்த குடும்ப அரசு, புலிகளின் அழியும் பட்சத்தில் நிலைகொள்ள முடியாது.
2. இராணுவத்தை மையமாகக் கொண்டு வளரும் இலங்கைப் பொருளாதாரம், இராணுவத்தின் இருப்புத் தேவையற்ற பட்சத்தில் சிக்கலுக்குள்ளாகும்.
தவிரவும், இவ்விரு காரணிகளும் தான் புலிகளுக்கெதிரான யுத்தம் என்ற போர்வையில் அப்பாவி மக்களை அழிக்கவும் பயன்படுகிறது.
உண்மையாகவே புலிகளின் அழிவில் தான் தனது அரசியலின் இருப்பை உத்தரவாதம் செய்துகொள்ள வேண்டுமென்று மகிந்த குடும்ப அரசு கருதியிருக்குமானால், தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைக்களுக்கான அரசியல் தீர்வை அது முன்வைத்திருக்கும், அதுவும் மகிந்த என்கிற பாசிஸ்ட், தேசிய வீரனாக, சிங்கள மக்கள் மத்தியில் ஓஹோவென்று கொடிகட்டிப்பறக்கும் இந்தசந்தர்ப்பத்திலாவது அதை நடத்திக் காட்டியிருக்க முடியும்.
சர்வதேசச் சூழலை லாவகமாகக் கையாழும் திறன் கொண்ட மகிந்த அரசிற்கு, புலிகள் போன்ற அமைப்புகள் உருவானதற்கான அடிப்படை என்பது தெரியாதவொன்றல்ல. தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக உரிமைகள் பறிக்கப்பட்டபோது, படிப்படியாக எழுந்த போராட்டங்களின் விளைவுதான், புலிகள் அமைப்பும் என்பதை அரசியற் கற்றுக்குட்டி கூட ஏற்றுக்கொள்ளும்.
இந்த சூழலில், மகிந்தவிற்குத் தேவைப்பட்டது போர் மட்டுமே தவிர, புலிகளின் ஒட்டுமொத்த அழிவல்ல.
புலிகளைக் காரணம் காட்டியே இலங்கை மக்களை ஒட்டச் சுரண்டும் வரை மகிந்த அரசு வாழ்ந்து கொண்டிருக்கும்.
மறு புறத்தில், உலகத்தின் மிகவும் பணபலம் கொண்ட அமைப்பான புலிகள், ஆயிரக்கணக்கான மக்களின் குரூரமான மரணத்தின் மத்தியில், தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர், புலிகள் போராட்டம் என்ற போர்வையில் ஏற்படுத்திய அனர்த்தங்களும் அழிவுகளும் ஏராளம். ஒரு சில இராணுவச் சிப்பாய்களின் அழிவிற்காக, நூற்றாண்டுகள் பழமையான, முல்லைத்தீவின் பொருளாதாரத்தின் ஆதாரமான கல்மடுக் குளத்தைத் தகர்த்தபோது, கொண்டாடிக் குதூகலித்த அருவருப்பான பாசிசத்தை வளர்த்து வைத்திருக்கும் புலிகள், மக்களைப் பற்றி எப்போதுமே சிந்திததில்லை. மறு புறத்தில் மக்களின் அழிவிலிருந்தே புலிகளின் அரசியல் கட்டியெழுப்பப்படுகிறது. இன்னும் ” நாங்கள் தோற்கவில்லை” என்று மார் தட்டிக்கொள்ளும் புலிகளின் அரசியற் பொறுப்பாளர் நடேசன், செத்துப் போன அப்பாவிகளுக்காக கண்துடைப்புக்காகவேனும் கண்ணீர் வடிக்கவில்லை.
“புலிகள் பின் வாங்குவதும் மறுபடி வருவதும் வழமை” என்று சமாதனம் வேறு சொல்லித்தரும் நடேசனுக்கு, அவர்கள் “பின்வாங்கும் போதும் மறுபடி வரும்போதும்” கொசுக்கள் போன்று கொன்றூ குவிக்கப்படும் மக்களைப் பற்றி எந்தத் துயரமுமில்லை.
உலகெங்கும் தனது வியாபார சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பியுள்ள தெற்காசியக் கோடீஸ்வரர்களுள் ஒருவரான பிரபாகரனுக்குத் தேவை தனது அதிகாரம் மட்டுமே.
ஆக, அரசிற்குப் யுத்தம் தேவை. அதற்குப் புலிகள் தேவை. புலிகளுக்கு மக்கள் தேவையில்லை அதனால் யுத்தம் பற்றி அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.
இன்றைய அரசியற் பகைப்புலைத்தில் புலிகள் என்ற அமைப்பு தன்னைக் கலைத்துக் கொண்டு, தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுமாயின், அரசாங்கம் யுத்தம் செய்வதற்கான காரணம் வலுவிழந்ததாகிவிடும். அழிக்கப்படும் தமிழ் மக்களை எந்த வகையிலும் பாதுகாக்க முடியாத,மக்களை நம்பாத புலிகள் அமைபுக் கலைக்கப்படுமாயின், அரசாங்கம் தனது இராணுவத்தை வைத்திருப்பதற்கான காரணத்தைச் சிங்கள மக்கள் மத்தியில் முன் வைக்க முடியாது. யுத்தம் நிறுத்த்தப்பட்டு அழிந்து சாம்பாலாகிக் கொண்டிருக்கும் எமது குழந்தைகளும், இளைஞ்ர்களும், முதியோரும், பெண்களும் தற்காலிகமாகவேனும் அழிவின் விழிம்பிலிருந்து காப்பாற்றப்படுவர்.

புலிகளோடு இணைந்து, தேர்தல் வேட்டைக்காக மக்களின் அவலக் குரல்களின் மத்தியில் காத்திருக்கும் EPDP,EPRLF,PLOT,TELO,TNA… போன்ற அனைத்துக் கட்சிகளும் தம்மைக் கலைத்துக் கொண்டால் மகிந்த குடும்ப பாசிசத்திற்கெதிரான மக்கள் சக்தி புதிய உத்வேகத்துடன் முன்னெழும்.

Exit mobile version