Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகள் சரணடைவதற்கு இடைத் தரகுப் பணியாற்றுமாறு கெஞ்சினர் : Marie Colvin

அது விரக்தி நிறைந்த இறுதித் தொலைபேசி அழைப்பு ஆனால் இன்னும் சில மணி நேரங்களில் இறந்து போகப் போகிற ஒரு மனிதனின் குரலாக ஒலிக்கவில்லை. புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான பாலசிங்கம் நடேசனுக்கு தப்புவதற்கு வேறு வழி இருந்ததாகத் தெரியவில்லை.

“நாம் எமது ஆயுதங்களைக் கீழே போடுகிறோம்”, புலிகளின் இறுதிக் கட்டுப்பாட்டுப் பகுதியான இலங்கையின் வடகிழக்குக் கரயோரப்பகுதியும், சிறிய பற்றைக் காட்டுப் பகுதியுமான இடத்திலிருந்து சற்றலைற் தொலை பேசியூடாக எனக்குக் கூறினார்.

இயந்திரத் துப்பாக்கிகள் பின்னணியில் ஒலிக்க அவர் அமைதியாகத் தொடர்ந்தார், ” பிரித்தானிய அரசிடமிருந்தும், ஒபாமா நிர்வாகத்திடமிருந்தும், பாதுகாப்பிற்கான உத்தரவாதம் தேடுகிறோம், ஏதாவது பாதுகாப்பு உத்தரவாதம் உள்ளதா?”

புலிகளுக்கும் இலங்கையின் சிங்களப் பெரும்பான்மையினருக்கும் இடையிலான 26 வருட உள்நாட்டு யுத்தத்தில் மிகவும் ஆபத்தான நேரப்பகுதியாக, வெற்றிக்களிப்பில் இருக்கும் இலங்கை இராணுவத்திடம் சரணடைவதே அமையும் என அவர் நன்கு அறிந்திருந்தார்.

எட்டு வருடங்களின் முன்பு, போராளிகளின் எல்லைக்குள் கடத்தப்பட்ட பின்னர், எனக்கு சீவரத்தினம் புலித்தேவன் என்ற புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பளர் மற்றும் நடேசன் ஆகியோரை நன்கு தெரியும்.
அப்போது புலிகள் இலங்கைத் தீவின் மூன்றில் ஒரு பகுதியைத் தமது கட்டுப்பாட்டுள் வைத்திருந்தனர். இப்போது இந்த இரண்டு மனிதர்களும் எஞ்சியிருந்த 300 போராளிகளதும் அவர்களது குடும்பங்களதும் உயிரைப் பாதுகாக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்; அவர்களில் பெரும்பாலானோர் காயமடைந்திருந்தனர். பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவர்களுடன் சாரமாரியான விமானக் குண்டுகளுக்கு மத்தியில் பதுங்கு குழிகளில் இருந்தனர்.

புலிகளின் இறுதி நிலப்பரப்பை நெருங்கிக் கொண்டிருந்த வெற்றிகரமான இறுதி இராணுவ நடவடிக்கை கட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கும் புலிகளின் தலைமைக்கும் நடுவராகப் பல நாட்கள் பணியாற்றினேன்.
ஐக்கிய நாடுகளுக்கு மூன்று விடயங்களைத் தெளிவுபடுத்துமாறு நடேசன் வேண்டிக்கொண்டார்.
1. அவர்கள் ஆயுதங்களைக் கைவிடுவதாகவும்.
2. அமரிக்காவிடமிருந்தும் பிரித்தானியாவிடமிருந்தும் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் வேண்டும் என்றும்,
3. தமிழ் மக்களுடைய உரிமையை உத்தரவாதப்படுத்தும், அரசியல் தீர்விற்கு இலங்கை அரசு உத்தரவாதமளிக்க வேண்டும்.
உயர்மட்ட அமரிக்க மற்றும் பிரித்தானிய அதிகாரிகளூடாக இலங்கையிலிருந்த விஷேட தூதுக்குழுவிலிருந்த விஜய் நம்பியார் என்ற ஐ.நா பொதுச் செயலரின் தலமை அதிகாரியுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டேன்.

சரணடைவதற்கான புலிகளின் நிபந்தனைகளை அவருக்குத் தெரியப்படுத்தினேன். அதை அவர் இலங்கை அரசாங்கத்திற்குக் கூறிவதாக எனக்குத் தெரிவித்தார்.

அமைதியான முடிபிற்கு பிரச்சனைகள் நகரும் நிலை தென்பட்டது.

நேடமுள்ள போதெல்லாம், பதுங்கு குழியிலிருந்து தனது புன்னகை நிறைந்த ஒளிப்படங்களை புலித் தேவன் அனுப்பிவைக்கத் தவறவில்லை.
கடந்த ஞாயிறன்று இரவு எப்படியோ இராணுவம் உள்னுளைந்து விட்டது. படங்கள் வருவதும், அரசியல் கோரிக்கைகளும் நின்றுபோயின. நடேச சரணடைவு என்ற வார்த்தையப் பிரயோகிப்பதை நிராகரித்துவிட்டார் ஆனால் அதுதான் அவர் செய்ய எண்ணியது. புலிகளின் பாதுகாப்பிற்காக நம்பியாரும் அந்த இடத்தில் பிரசன்னமாயிருக்க வேண்டுமென்று நடேசன் விரும்பினார்.

மறுபடி ஐ.நா வின் 24 மணிநேர கட்டுப்பாட்டகம் கொழும்பிலிருந்த நம்பியாருடன் என்னைத் தொடர்புபடுத்தியது. அப்போது திங்கள் அதிகாலை 5:30. நான் அவரை உறக்கத்திலிருந்து எழுப்பினேன்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டதாக அவருக்குத் தெரியப்படுத்தினேன். நடேசனும் புலித்தேவனும் எந்தப் பிரச்சனையுமின்றி சரணடையலாம் என்று இலங்கை ஜனாதிபதி தனக்கு உறுதியளித்ததாக எனக்குத் தெரிவித்தார். அத்துட அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் வெள்ளைக் கொடியை எந்திய வாறு வெளியேற வேண்டும் என்பது தான் என்றார்.

சரணடையும் நிகழ்விற்குச் சாட்சியாக நம்பியார் வடக்கிற்குச் செல்லத் தேவையில்லையா என்று கேள்வியெழுப்பினேன். அவர் அதற்கு இல்லை ஜனாதிபதியின் உறுதி மொழி போதுமானது என்றார்.
லண்டனில் அது பின்னிரவு நேரம். நான் நடேசனின் சற்றலைற் தொலை பேசிக்குத் தொடர்புகொள்ள முயற்சித்தேன், பலனளிக்கவில்லை. அதனால் தெனாபிரிக்காவிலுள்ள புலிகளின் தொடர்பு ஒன்றை அழைத்து வெள்ளைக் கொடியை உயர்த்தியவாறு சரணடையுமாறு நம்பியார் கூறியதைத் தெரிவித்தேன்.

அதிகாலை 5 மணியளவில் புலிகளின் தென்கிழக்கு ஆசிய நாடொன்றிலிருந்து இன்னொரு தொடர்பாளரின் தொலை பேசியழைப்பால் விழித்துக்கொண்டேன். அவருக்கும் நடேசனைத் தொடர்பு கொண்டிருக்க முடியவில்லை. “அவர்கள் எல்லோரும் இறந்து விட்டார்கள்”, “எல்லம் முடிந்து விட்டது என்று எண்ணுகிறேன்” என்றார் அவர்.

அதே நாள் மாலை இலங்கை இராணுவம் அவர்களது உடல்களை காட்டியது. சரணடைவிற்கு என்ன நடந்தது?
நடேசன் அதே ஞாயிறு இரவு சந்திரா நேரு என்ற இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினரையும் தொடர்பு கொண்டதாக பின்னதாகத் தெரிந்து கொண்டேன். அவர் உடனடியாக ராஜபக்ஷவைத் தொடர்பு கொண்டிருந்தார்.
ஜனாதிபதி நேரடியாகவே நடேசனுக்கும் அவரது குடும்பத்திற்கும் முழு பாதுகாப்பை உறுதிப் படுத்துவதாகக் கூறியதாகவும், நடேசன் அவருடன் 300 பேர் உள்ளதாகவும் சிலர் காயமடைந்த நிலையில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அத்துடன் அவர் ஜனாதிபதிக்கு தானே நேரில் சென்று சரணடைவை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
அதற்கு ராஜபக்ஷ “எமது இராணுவம் மிகுந்த கட்டுப்பாடு உடையதும் பண்பாடுடைதுமானது, நீங்கள் அங்கு செல்ல வேண்டிய எந்த அவசியமுமில்லை. நீங்கள் போர்க்களத்திற்குப் போவது உங்களது உயிருக்கு ஆபத்தானது.” என்று தெரிவித்தார்.
பின்னதாக, பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் சகோதரர், ” அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள், செய்யவேண்டியதெல்லாம் வெள்ளைக் கொடியை உயரே பிடித்துக்கொண்டு செல்லவேண்டும்,” என்று கூறியதுடன், சரணடைவதற்கான பாதையையும் தெரிவித்தார் என்று சந்திர நேரு தெரிவித்தார்.

திங்கள் காலை 6.20 இற்கு சந்திர நேரு நடேசனுடன் தொடர்பை ஏற்படுத்துவதில் வெற்றிகண்டார். எப்போதுமிலாதவாறு துப்பாக்கிச் சத்தம் காதைப்பிழந்தது.
“நாங்கள் தயார்” நடேசன் கூறினார். மேலும் ” நான் வெள்ளைக் கொடியுடன் வெளியே போகப் போகிறேன்” என்றார்.

“நன்றாக வெள்ளைக் கொடியை உயர்த்திச் செல்லவும். அவர்களுக்கு அது தெரியவேண்டும், நான் இன்று மாலை உங்களைச் சந்திக்கிறேன்” என்று சந்திட நேரு சொன்னார்.

கொலைக் களத்திலிருந்து தப்பிய ஒரு தமிழர் என்ன நடந்தது என்று விபரித்தார். ஆண்களும் பெண்களுமாக 12 பேர்வரையிலான குழுவுடன் நடேசனும், புலித்தேவனும் இராணுவத்தின் எல்லைப் பகுதிக்குள் வெள்ளைக் கொடியுடன் நுளைந்தனர், இயந்திரத் துப்பாக்கிகளால் இராணுவம் அவர்களை நோக்கிச் சுட ஆரம்பித்தது என்று ஒரு உதவிப் பணியாளரிடம் அவர் தெரிவித்தார்.
சிங்களப் பெண்ணான நடேசனின் மனைவி சிங்களத்தில் ” அவர் சரணடைகிறார், நீங்கள் சுடுகிறீர்கள்” என்று சிங்களத்தில் உரக்கக் குரலிட்டார். அந்தப் பெண்ணும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதைத் தெரிவித்தவர் அந்தக் குழுவில் சென்ற அனைவரும் கொல்லப்பட்டனர் என்றார். இப்போது உயிருக்குப் பயந்து மறைந்து வாழ்கிறார். மகிந்த மற்றும் அவரது தம்பியால் மிரட்டப்பட்ட சந்திர நேரு இப்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

சில நாட்களாக, இலங்கையில் ஐ.நா தூதுக் குழுவின் பாத்திரம் தொடர்பாகப் பல கேள்விகள் எழுகின்றன. இவரது சகோதரரான சதீஸ் நம்பியார் 2002 இலிருந்து இலங்கை இராணுவத்தின் சம்ப்பளம் பெறும் ஆலோசகர். இவர் இலங்கை இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிற்கு எழுதிய கடிதமொன்றில், “பெரிய இராணுவத் தலைவருக்குரிய தகைமையை வெளிப்படுத்தியிருகிறீர்கள்” என்று கூறியுள்ளார்.

பிரித்தானிய சண்டே டைம்ஸ் பத்திரிகையிலிருந்து : 24.05.2009

மொழியாக்கம் : இனியொரு

Exit mobile version