இனப்படுகொலை அரசின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் இந்த அறிக்கையைப் பிரதானப்படுத்தி அரச சார்பு புலியெதிர்ப்பு ஊடகங்கள் தமது பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டன. இதனை முன்வைத்தே தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டம் நியாயமற்றது என இவர்கள் பாசிச அரசின் அடியாட்கள் போல தமது அரசியலை ஆரம்பித்துவிட்டனர். முள்ளிவாய்க்கால் அழிப்பின் பின்னர் மக்கள் பற்றுள்ள ஒரு சிலராவது புலிகளின் அரசியல் தவறுகளைச் சுய விமர்சனம் – விமர்சனம் செய்து புதிய அரசியல் வழிமுறைகளைப் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை நோக்கி முன்வைத்திருந்தால் இன்று அரச அடியாட் படைகளின் சுய நிர்ணய உரிமைக்கு எதிராக இலங்கை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்திர்க்க்க முடியாது.
நாங்கள் எங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்கிறோம் ஆனால் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் தொடரும் என மக்கள் நலன் சார்ந்து சொல்வதற்கு 30 வருடம் போராத்தில் ஒரு புலியாவது எஞ்சவில்லை.
புலி ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர் கொலைகளே நடக்கவில்லை என்றும் மறுபகுதியினர் இன்னும் கொலைகளை நியாயப்படுத்தியும் வருகின்றனர். அரச உளவாளிகளின் கொலைகளை இன்னொரு தளத்தில் விவாதித்தாலும் புலிகளி போராட்ட வழிமுறைக்கு மாற்றை முன்வைத்தவர்களும் அழிவுகள் குறித்து எச்சரித்தவர்களும் போராடுவதற்கான ஜனநாயகம் கோரிப் போராடியவர்களும் தேடித்தேடிக் கொலைசெய்யப்பட்டதைக் கூட இவர்கள் சுய விமர்சனம் செய்து கொள்ள மறுத்து, அழிந்துபோன அதே வழிமுறைகளோடு மக்கள் மத்தியில் தேசிய வியாபாரம் செய்கிறார்கள்.
புலி ஆதரவாளர்களான பிழைப்புவாதிகள் மக்கள் நலன் குறித்துச் சிந்திப்பதில்லை. அவர்கள் தமது தேசிய வியாபாரத்தில் தீவிரமாக உள்ளனர்.
பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த நபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு இவ்வாறு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கல்கிஸ்ஸை பொலிஸ் வலய பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவில் பணியாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணம் 2005.04.20 அன்று நள்ளிரவு 12 மணிக்கு கல்கிஸ்ஸை ஹோட்டலில் வைத்து புலிகள் இயக்கத்தினால் கடத்திச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
வெள்ளை வேனில் சிலாபம் நோக்கி கடத்திச் செல்லப்பட்ட ஜெயரட்ணம் படகு மூலம் மன்னாருக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின் விடத்தல் தீவிலிருந்து கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஜெயரட்ணம் அடைக்கப்பட்டிருந்த சிறையில் இராணுவ கப்ரன் ஒருவரும் புலிகளுக்கு எதிராக செயற்பட்ட நபர்களும் புலிகள் இயக்கத்தில் தவறிழைத்த நபர்களும் தங்க வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 30 பேர் 2006 மே மாதம் கைகளுக்கு விலங்கிட்ட வண்ணம் லொறிகளில் எற்றப்பட்டு ஒட்டுசுட்டான் காட்டில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டனர்.
அத்தோடு 2006 ஜூலை மாதம் குறித்த சிறையிலிருந்த 50 பேர் லொறியிலும் றோசா பஸ்ஸிலும் அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இராணுவ கப்ரன் விஸ்வமடு தொட்டியடி பிரதேசத்தில் சிறை வைக்கப்பட்டு 2009ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இந்த கொலைகளுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கொலை தொடர்பிலும் கொலை செய்யப்பட்ட நபர்கள் மற்றும் இடம் தொடர்பிலும் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நீதவான் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.