Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகள் அழிக்கப்படுவார்களா ? :அ.திரு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியென்பதும், ராஜபக்ஷ அரசின் எழுற்சியென்பதும், உலகமயமாதலின் தோல்வியின் பின்னதான புதிய உலக ஒழுங்கமைப்பும் இலங்கை இனப்பிரச்சனையைப் புதிய பரிமாணத்தை நோக்கி நகர்த்தியுள்ளது. புலிகளை வெற்றி கொள்வது என்ற பெயரில் சாட்சியின்றி அரச படைகளல் அழித்தொழிக்கப்பட்ட வன்னி மக்களின் துயரம் உயிரை உறைய வைக்கும் அதே வேளை, போராட்டம் என்ற தலையங்கத்தில் சொந்த மக்களையே கொன்றொழித்த புலிகளின் கொடூரம் போராட்டங்களின் மீதே மக்களுக்குள் நீண்ட கால வெறுப்பை விதைத்திருக்கிறது.

புலிகளின் பலம் மக்கள் அல்ல. வெறும் துப்பாக்கிக் குண்டுகள் மட்டும் தான். துப்பாக்கிக் குண்டுகள் தீர்ந்து போனால் அதற்கான மறுவிநியோகம் வரை புலிகள் இல்லை. அப்போது புலிகளுக்குப் புல்லுப் பசிக்க ஆரம்பித்துவிடும். செ.பத்மநாதன் என்று பெயரை வைத்துக்கொண்டிருக்கும் புலிகளின் சர்வதேசியப் பிரதினிதி இப்படித்தான் இலங்கை அரசிடமும்  அமரிக்கவிடமும் பிச்சை கேட்கிறார்.

ஆனால் இவரின் அறிக்கைகுப் பின்னால் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளதையும் யாரும் மறந்து போய்விட முடியாது.

ஜீ 11 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜோர்டானிய ராஜ்யத்திற்குச் சென்ற இலங்கை ஜனாதிபதியும், பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான மகிந்த ராஜபக்ஷ தனது விஜயத்தை அவசர அவசரமாக முடித்துக்கொண்டு இலங்கை திரும்பினார். 

இவர் அவசர அவசரமாக   இலங்கை திரும்பியது தொடர்பாகப் பல ஊகங்கள் வெளிவந்தன. குறிப்பாக நாட்டுமக்களுக்கு வெற்றிச் செய்தியை அறிவிக்கவே மகிந்த  இலங்கை வந்து இறங்கியதாக காட்டுத் தீ போல செய்தி பரவ ஆரம்பித்தது. தலை நகரம் குதூகலித்தது. தேசியக் கொடியும் பௌத்த கொடியும் காணுமிடமெல்லம் பறக்கவாரம்பித்தன. தெருக்களில் சிங்கள மக்கள் நடனமாடினர். பட்டாசுக்களின் சத்தம் வன்னிக் கொலைத் துப்பாகிகளை நினைவு படுத்தியது.

ஆனால் மகிந்த நாட்டு மக்களுக்கு எந்தச் செய்தியும் உத்தியோக பூர்வமாக வெளியிடவில்லை. இது மேலும் புதிய ஊகங்களைத் தோற்றுவித்தது.”இன்னமும் வன்னி யுத்தம் முடிவடையவில்லை”, “கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் இறந்த உடல்களை அகற்றக் கால அவகாசம் எடுத்துக்கொள்ளப் படுகிறது”, “புலித் தலைவர்களைத் இராணுவம் தேடிக்கொண்டிருக்கிறது” போன்ற பல ஊகங்கள் வெளியிடப்பட்டன.

ஊகங்கள் ஊகங்களாக இருக்க, திரை மறைவில் பல காய் நகர்த்தல்கள் இடம்பெறலாயின.

15.05.2009 அன்று வன்னி மக்களுக்கு உதவுவதற்காக அமரிக்கக் கடற்படை தயாராக இருப்பதாக அறிக்கை வெளிவந்த அதே வேளை அட்மிரல் ஜே கீர்ரிங் இந்தியாவிற்கு வந்தடந்தார். இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஸ் மேத்தாவின் அழைப்பை ஏற்று இந்தியா சென்ற கீட்டிங், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரை சந்தித்தார்.

இவரது அறிக்கை வெளியான மறு நாளே, இலங்கை ஊடகத்துறை அமைச்ச்ர் லக்ஷ்மன் யாப்ப சிறிலங்கா அரசாங்கம் உத்தியோக பூர்வமாக கோரிக்கை விடுக்காமல் அமெரிக்கா இராணுவ உதவியை வழங்க முடியாது, எந்தவொரு வெளிநாட்டின் இராணுவ உதவியும் எமக்கு தேவையில்லை என்று தெரிவித்தார்.

அட்மிரல் திமோதி கீட்ரிங் ஆசிய நாடுகளின் பாதுகாப்புட் தொடர்பாக, குறிப்பாக சீனா தொடர்பான விவகாரங்களில் நிபுணத்துவம் மிக்கவர்.  ஒரு மாதங்களுக்கு முன்னர் வெளியான பத்திரிகையில் சீனாவினுடைய இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடற்படை விஸ்தரிப்புத் தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ளார். சீனாவின் கடற்படை நடவடிக்கைகள் தொடர்பாக பென்டகன் கவலையடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.

இதே வேளை ஹம்பாந்தோட்டையில்  சீன அரசு 1 பில்லியன் டொலர் பெறுமதியான துறைமுகமொன்றை நிர்மாணித்துக் கொண்டிருக்கிறது.சவுதி அரேபியா எண்ணை வினியோகத்தைப் பாதுகப்பதற்கும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தைக் காவல் செய்வதற்கும் சுற்றிவரும் சீனக்க்டற்படைக்கு இத்துறைமுகமானது, எரிபொருள் நிரப்பும் தரிப்பிடமாகவும் தங்குமிடமாகவும் பயன்படும்.

2007 பங்குனி மாதம் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இத்துறை முகத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நாளிலிருந்து, புலிகளை வெற்றி கொள்வதற்கான ஆயுத மற்றும் இராஜதந்திர உதவிகளை சீன அரசு இலங்கை அரசிற்கு வழங்கிவருகிறது.

பங்களாதேஷின் சிட்டாகோங் துறைமுகத்தையும், பர்மாவின் சிர்வீ துறைமுகத்தையும் நிர்மாணிக்கும் அல்லது புனரமைக்கும் சீனாவின் “முத்துமாலை” (“string of pearls”) தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாகவே இந்திய மற்றும் அமரிக்க இராணுவத் திட்டமிடலாளார்கள் கருதுகின்றனர்.
சீனாவின் இவ்விராணுவ நகர்வானது, 2006ம் ஆண்டு பென்டகன் வான்படை அதிகாரியான கேணல் கிறிஸ்தோபர் ஜே.பெர்சன் என்பவரால் உருவரை செய்யப்பட்டது. இதே ஆண்டு நவம்பர் மாதத்தில், அமரிக்காவின் இணை படைக் கட்டளையகத்தின் அறிக்கையிலும் இது குறிப்பிடப்பட்டது.

இந்த முத்துமாலை திட்டம் தொடர்பாக பல தடவை எச்சரிக்கை தெரிவித்திருக்கும் திமோதி கீர்டிங், அமரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள தென்னிந்தயக் கடற்பகுதியில் சீனா தலையிடுகிறது என்றும் விசனம் தெரிவித்திருக்கிறார்.

மூன்று மாதங்களின் முன்னர் இலங்கை வந்திருந்த இதே கடற்பட அதிகாரி, போர் முடிகிறது என இலங்கை அரசு அறிவித அதே வேளையில் இந்தியாவில் அந்நாட்டின் பாதுகாப்புச் செயலரைச் சந்தித்திருக்கிறார்.

மக்கள் அழிக்கப்படுவது தொடர்பாக எந்த அக்கறையும் கொண்டதாக அமரிக்க்க அரசிற்கு வரலாறில்லை. ஆயிர்க்கணக்கில்  அப்பாவிகள் கொல்லப்படும் போது மௌனமாயிருந்த அமரிக்க அரசு, சீன அரசின் “முத்துமாலை” இனால் துயர்கொண்டே இலங்கையில் அக்கறை கொள்ள ஆரம்பித்தது.

போர் முடிவதாக மகிந்த அரசு கணக்குப் போட்டிருந்த வேளையில் இலங்கைக்குள் புதிய சர்வதேச யுத்தம் ஆரம்பித்திருக்கிறது.

16ம் திகதி மகிந்த ராஜபக்ஷ இலங்கை விமானத்தள சீமேந்தை முத்தமிட்ட சற்று நேரத்தின் பின்னர் சீன அரசால் வழங்கப்பட்டு அகதிகளுக்கான கூடாரங்களைப் பெற்றுக்கொள்ளவும் அவற்றைக் கொண்டுவந்திருந்த சீன அதிகாரிகளை வரவேற்கவும் பசில் ராஜபக்ஷ விமானத்தளத்திற்கு வந்து சேர்ந்தார். இந்த சீனர்கள் வெறுமனே கூடாரம் கொண்டுவந்த ஊழியர்கள் மட்டும்தானா அல்லது இலங்கை அரசிற்கு யுத்த முடிபிலான அழுத்தங்களைக் கையாள ஆலோசனை வழங்கவந்த அதிகாரிகளா என்பது தெற்காசிய அரசியல் வட்டாரத்தில் இப்போது பேசுபொருள்.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்தியாவைச் சுற்றிவர கடற்படைத் தளங்களை நிறுவும் அதன் வரலாற்று எதிரி சீனாவின் பிடியிலிருந்து இலங்கையைவிடுவிப்பதும், இலங்கையின் ஹம்பாந்தோட்டையிலிருக்கும் துறைமுகத்திற்கு எதிரான இராணுவத் தந்திரோபாயத்தை செயற்படுத்துவதுமே பிரதான  நோக்கு. அமரிக்காவின் பங்களியாக 90 களுக்குப் பின்னரே மாறிப்போன இந்தியா இன்று அமரிக்காவுடன் பல இராணுவத்திட்டங்களில் கைகோர்த்துள்ளது.

இலங்கையில் சார்க் மாநாட்டிற்கு சற்று முன்னதாக இலங்கை தொடர்பாக அறிக்கை விடுத்த பாதுகாப்பு ஆலோசகர், மன்மோகன் சிங் அரசு பொருளாதாரத்தில் கவனம் செலுத்திய அதே வேகத்தில் பிராந்தியப் பாதுகாப்பில் கவனம் செலுத்தத் தவறிவிட்டது என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதே வேளை இந்த அறிக்கையின் தார்ப்பரியத்தைப் புரிந்துகொண்ட இலங்கை அரசோ, இந்தியா தமக்குப் புலிகளை அழிப்பதற்கான போதிய ஆயுதங்களை வாழங்காமையே சீனாவின் உதவியை நாடவேண்டிய நிலைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறியிருந்தது.

இதன் பின்னர் தாராளமாக இலங்கை அரசிற்கு ஆயுதத் தளபாடங்களையும், இராணுவ உதவியையும் வழங்கிய இந்திய அரசு, மக்களை அழிக்கும் யுத்ததில் கணிசமான பங்கு வகித்திருந்தது.

இதற்காக பல பொருளாதார ஒப்பந்தங்களை இந்திய அரசு இலங்கையுடன் ஏற்படுத்திக் கொண்ட போதிலும், சீனாவுடனான உறவில் இலங்கை அரசைப் பொறுத்தவரை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
இதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உண்டு.
1. இந்திய அரசின் இலங்கையைக்  கட்டுப்படுத்துவதற்கான துருப்புச் சீட்டு தமிழர்கள் பிரச்சனையும் புலிகளும்.
2. சீன அரசின் நிபந்தனையற்ற ஆதரவு.
இலங்கை அரசின் இந்த நிலைப்பாட்டால் விசனமடைந்த அமரிக்க அரசோ, போர் ஆரம்பித்துப் பல மாதங்களாகக் கண்ணை மூடிக்கொண்டிருந்துவிட்டு, திடீரென விழித்தெழிந்து இலங்கை மனித உரிமை மீறுகிறது எனக் குரல் கொடுத்தது.
கடந்த வாரம் பிரித்தானியா தனது பங்கிற்கு மகிந்த அரசு போர்க் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என மகிந்த அரசை மிரட்டியது.

இந்தச் சர்வதேச மிரட்டல்கள் கொலைக் கரங்களோடு அரசியல் நடத்தும் மகிந்த அரசிற்கு நேரடியாகவே இலங்கை வந்த நாராயணன் மூலம்  தெரிவிக்கப்பட மகிந்த  திடீரென இலங்கை வந்தார். இலங்கை வந்த சீன அதிகாரிகள் மகிந்த அரசிற்கு இராஜ தந்திர ஆலோசனைகள் வழங்குகின்றனர்.

அமரிக்கக் கடற்படை அதிகாரி இன்னமும் இந்தியாவிலேயே இருக்க யுத்தம் ஒரு சதுர கிலோமீட்டர் பகுதிக்குள் நிறுத்தப்பட, புலிகள் “அமரிக்கா கேட்டுக் கொண்டதற்கு இணங்க” ஆயுதங்களை ஒப்ப்டைக்கத் தயாராகின்றனர்.

புலிகள் அழிந்து போனால் இந்தியாவிற்கு இலங்கையை மிரட்ட துருப்புச் சீட்டுக்கிடைகாது. சீன அரசு பணத்தை வாரி வழங்க இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கை இந்தியாவிற்கும் அமரிகாவிற்கும் எதிரான இன்னொரு நாடாக உருவாகும். 

ஆக, புலிகள் முற்றாகா அழிவதை இந்தியா விரும்பாத நிலையில், சீனா தொடர்பாக அமரிக்கா இலங்கை மீது ஆத்திரமடைந்துள்ள நிலையில், இலங்கை அரசின் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்பவற்றை ஆதாரம் காட்டி அமரிக்க அணி இலங்கை அரசை மிரட்டிய நிலையில் குழம்பிப் போன மகிந்த ராஜபக்ஷ தந்து பயணத்தை முடித்துக் கொண்டு விமான நிலையத்தை முத்தமிட்டார்.
எதிர்வரும் செவ்வாயன்று  நாட்டு மக்களுக்கு யுத்த வெற்றியை அறிவிப்பதாகக் கூடும் மகிந்த அரசு  ஒரு சதுர கிலோமீட்டருக்குள் புலிகளைப் பாதுகாப்பாக வைத்துள்ளது.

இந்த அரசியல் சூழலை ஓரளவு புரிந்து கொண்ட புலிகள் அமரிக்க அணியின் காலடியில் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒரே நோக்கில் தடாலென விழுந்து ஒபாமாவைக் காப்பாளனாக வரித்துக் கொண்டனர்.

மக்கள் மீது எந்த அக்கறையுமற்ற இந்திய, சீன, அமரிக்க அதிகார வர்க்கங்களின் சதுரங்க விளையாட்டு என்பது தான் ராஜபக்ஷக்களின் கையில் கொலைக் கருவிகளைக் கொடுத்து உலாவ வீடிருக்கிறது.

வரும் இரண்டு நாட்களுக்குள் திணறிப் போயுள்ள மகிந்த அரசு, எவ்வாறு அமரிக்க, இந்திய, சீன அரசுகளைத் திருப்திப் படுத்தப் போகிறது என்பதின் அடிப்படையிலேயே புலிகளின் வாழ்வும் சாவும்!

-அ.திரு – கொழும்பு

Exit mobile version