Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளின் ராம் குழுவும் நாடுகடந்த தமிழீழமும் விடுக்கும் மாவீரர் அறிக்கைகள் – மகிந்த பாசிசத்தை மறந்தவர்கள்.

இலங்கை பேரினவாத பாசிச அரசாங்கம் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பை நிகழ்த்திவருகின்ற வரலாற்றின் இக்காட்டான இன்றைய காலப்பகுதியில் புலிகள் இயக்கத்தின் மிக முக்கிய தினமான மாவீரர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒடுக்கப்பட்ட தேசிய இனம் ஒன்றின் எழுச்சி நாளாகவன்றி மதப் பண்பாட்டு வைபவமாகக் நிகழ்த்தப்படும் இந்த வைபவத்தில் இரண்டு முக்கிய அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ஒரு புறத்தில் இலங்கையிலிருந்து ராம் என்பவர் தலைமையிலான புலிகளின் பிரிவினரும் அதேவேளை நாடுகடந்த தமீழீழ அரசும் தமது சார்பில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை அரசியலில் ஒவ்வொரு அங்கத்தையும் தீர்மானிக்கும் நிலையிலுள்ள மகிந்த ராஜபக்சவும், பசில் ராஜபக்சவும் தமிழ்ப் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்படுவதில் தவறில்லை என்றும், தமிழ்ப் பிரதேசங்கள் இராணுவ மயப்படுத்தப்படுதல் தவறில்லை என்றும் வெளிப்படையாகவே கூறுகின்ற அனாதரவான சூழலிலை நோக்கி ஈழத் தமிழர்கள் நகர்த்தப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் பின்பலமாகத் திகழும் இந்திய அரசு இலங்கையில் தமது வியாபாரத்தை விரிவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இனப்படுகொலையில் பின்னணியிலிருந்த இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கை சென்ற போது மீள்குடியேற்றம் குறித்து மூச்சுக்கூட விடவில்லை. உலகத்தின் குறுகிய மூலையில் வாழ்கின்ற தமிழ்ப் பேசும் மக்கள் கூட்டம் தனிமைப்படுத்தப்பட்டு துவம்சம் செய்யப்படுகின்றது. உலகம் மௌனமாய் அழிந்து போவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

உலகத்தை வென்றெடுக்க நாடுகடந்த தமிழீழமோ அல்லது இலங்கையிலிருந்து இன்னும் புலிகளாக வாழ்வதாகக் கூறும் குழுவினரோ இன்றைக்கு வரை கடுகளவுகூட முயன்றதில்லை. புலிகளின் முக்கிய தினமாகக் கருதப்படும் மாவீரர் தினத்தில் கூட இலங்கை அரசின் இனச் சுத்திகரிப்பைக் கண்டனம் செய்து தமது அறிக்கைகளில் எதனையும் குறிப்பிடவில்லை. ராம் குழுவினர் அரச வலைக்குள் வீழ்ந்திருப்பதாகச் சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. கே.பியின் முன்முயற்சியால் உருவாக்கப்ப்பட்ட நாடுகடந்த தமிழீழம் மற்றொரு மாயையைக் கட்டமைத்து வரும் நிலையில் இவர்கள் இரு பகுதியினரும் ஒரு பொது புள்ளியில் இணைகிறார்கள். இனப்படுகொலை நிகழ்த்திய, மக்கள் விரோத இலங்கை அரசிற்கு எதிரான மென்மையான போக்கு என்பதே அவர்களை இணைக்கும் இடைவெட்டுப் புள்ளி. மக்கள் திட்டமிட்டுக் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் சூழல் சமரசத்திற்கான காலகட்டமல்ல. இலங்கை அரசின் போர்க்குற்றத்தையும்,

இனச்சுத்திகரிப்பையும், இனப்படுகொலையையும், சர்வாதிகாரத்தையும், பாசிசத்தையும் உலகிற்குச் சொல்லவும், இலஙகை இந்திய அரசுகளுக்கு அழுத்தங்களை வழங்கவும் அவசியமான காலகட்டத்தில் வாழ்கிறோம். இந்த இரு குழுக்களதும் அறிக்கைகள் கீழே தரப்படுகின்றன.

புலிகளின் ராம் குழுவினரின் அறிக்கை:

நாடுகடந்த தமிழீழ அறிக்கை:

மாவீரர் நினைவுகள் ஏந்திய, மாவீரர்கள், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அமைச்சின் செயற்திட்டங்கள்: மாவீர் குடும்பநலன் அறக்கட்டளை. மாவீரர் நினைவில்லம். இணையவழி மாவீரர் துயிலும் இல்லம்.

தமிழீழ தேச விடுதலைக்காய்த் தம்மினிய உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு இன்றைய மாவீரர் நாளில் முதற்கண் எமது வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணித்தவர்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எமது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது. அந்த மாவீரர் நினைவுகளைப் பேணிய வண்ணம் மாவீரர்களதும் முன்னாள் போராளிகளதும் குடும்பங்களின் நலன் பேணும் நோக்கினைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர்கள், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அமைச்சின் சார்பில் பின்வரும் திட்டப் பரிந்துரைகளை இப்புனித தினத்தில் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

1. மாவீரர்கள், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அறக்கட்டளை

மாவீரர்களதும் முன்னாள் போராளிகளதும் குடும்ப நலன்களைப் பேணும் நோக்குடன் இக் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு, கல்வி மேம்பாடு, சமூக மேம்பாடு ஆகியவற்றை நோக்காகக் கொண்டு அறக் கட்டளை ஒன்றினை உருவாக்கி, இவ் அறக்கட்டளையின் ஊடாக மாவீரர்களதும் முன்னாள் போராளிகளதும் குடும்ப நலன்களைப் பேணும் நடவடிக்கைகளை மேற்கொள்வதென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இம் முடிவினை நடைமுறைப்படுத்தும் பொறுப்பினைக் கையேற்றுள்ள மாவீரர்கள், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அமைச்சு, அதற்கான செயற்பாடுகளை இன்றைய மாவீரர்நாளில் இருந்து ஆரம்பிக்கிறது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக அறக்கட்டளையின் வடிவம், செயற்பாட்டு முறைகள் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டங்களை நடாத்தவும், அதன் தொடர்ச்சியாக அறக்கட்டளையினைச் சட்டரீதியாக உருவாக்கி செயற்பாடுகளை முன்னெடுக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் மக்களுக்கு அறியத் தரப்படும்.

2. மாவீரர் நினைவில்லம்

எமது தமிழீழத் தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களையும் நினைவுச் சின்னங்களையும் சிதைத்துத்துவம்சம் செய்து மானுடத்திற்கு எதிரான குற்றங்களை சிறிலங்கா அரசு புரிந்திருக்கிறது. நாகரீக உலகம் வெட்கித் தலைகுனியும் வகையில் சிறிலங்கா அரசு புரிந்திருக்கும் இவ் அநாகரீகச் செயற்பாடுகள் மாவீரர்கள் என்ற தியாகக் குறியீடு தமிழீழ மக்கள் மத்தியில் தமிழீழம் என்ற இலட்சியத்தீயினை சுடரச் செய்து கொண்டிருக்கும் என்ற சிங்களத்தின் அச்சத்தின் வெளிப்பாடாகவும் பார்க்கப்;படக்கூடியது.

ஈழத் தமிழ் மக்கள் இன்று ஒரு நாடு கடந்த தேசமாக உருவெடுத்திருக்கிறார்கள். எமது இலட்சியத்தீயினை சிறிலங்கா அரசு தனது இராணுவ இரும்புச் சப்பாத்துக்களால் நசுக்கி விடமுடியாது. இதனை குறியீட்டு வடிவில் உணர்த்தும் வகையிலும், எமது மாவீரர்களை நாம் நெஞ்சிலிருத்தி நினைவுகூரவும், அவர்களது வரலாறுகளை நிலையாய்ப் பதிவு செய்யவும், மாவீர்கள் தொடர்பான கல்வி மற்றும் ஆய்வுகளைச் செய்யும் எமது அடுத்த தலைமுறையினருக்கும் அனைத்துலக சமூகத்தினருக்கும் வழிகாட்டுதல்களை வழங்கவும் வழிசமைக்கும் வகையிலும் மாவீரர் நினைவில்லம் ஒன்றினை தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடு ஒன்றிலோ அல்லது பலவற்றிலோ அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இம் முடிவினை நடமுறைப்படுத்தும் பொறுப்பினையும் மாவீரர்கள், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அமைச்சு கையேற்றுள்ளது. இவ் நினைவில்லம் அமைப்பது தொடர்பான சில ஆரம்பக் கலந்துரையாடல்களை நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். இவ் விடயம் தொடர்பான மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளை நாம் மக்களுக்கு விரைவில் அறியத் தருவோம்.

3. இணையவழி மாவீரர் துயிலும் இல்லம்

மாவீரர் துயிலும் இல்லங்களை சிறிலங்கா அரசு துவம்சம் செய்துள்ள நிலையில் மாவீரர் நினைவுகளை நமது நெஞ்சங்களில் நிலையாய் இருத்த வழிசெய்யும் வகையில் மாவீரருக்கான துயிலும் இல்லம் ஒன்றினை இணையத்தில் உருவாக்கி, தமிழீழ இலட்சியத்துக்காகத் தமது இனிய உயிர்களை ஈகம் செய்த ஒவ்வொரு மாவீரருக்கும் நாம் சுடர் ஏற்றி வணக்கம் செய்யக்கூடிய ஏற்பாட்டினை ஈழம்வெப் என்ற இணையத்தின் ஊடாக சில தேசப்பற்றாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 2004 ஆம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த 17,500 க்கும் மேற்பட்ட மாவீரர்களது துயிலிடங்கள் இதுவரை இவ் இணையவழி மாவீரர் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஏனைய மாவீரர்களது விபரங்களும் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கான துயிலிடங்களை அமைக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இம் முயற்சியினை மேற்கொண்டு வருபவர்களுடன் இணைந்து இவ் இணையவழி மாவீரர் துயிலும் இல்லத்தை முழுiமைப்படுத்திப் பராமரிக்கும் பொறுப்பினையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துள்ளது. இம் முயற்சியும் மாவீரர்கள், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அமைச்சின் ஊடாக ஒருங்கிணைக்கப்படும். சேகரிக்கப்பட்டுள்ள மாவீரர்களுக்கான துயிலிடங்களை விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு மாவீரர்களது விபரங்களைச் சேகரிக்கும் பணியும் தொடரர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் eelamweb.com என்ற இணையத்தள முகவரிக்கூடாக இணைய மாவீரர் இல்லத்துக்கு வருகை தந்து மாவீரர்களுக்கான சுடர் வணக்கத்தை செலுத்தலாம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேற்குறிப்பிடப்பட்ட செயற்திட்டங்களை நாம் வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்கு இத் திட்டங்களில் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களது பங்குபற்றலும், ஆதரவும் இன்றியமையாதவை. இத் திட்டங்களில் தங்களை இணைத்துச் செயற்படுவதற்கு தமிழ் மக்கள் அனைவரையும் முன்வருமாறும், ஆர்வமுள்ள அனைவரையும் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் இத் தருணத்தில் வேண்டிக் கொள்கிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர்கள், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அமைச்சகத்துடன் தாங்கள் தொடர்பு கொள்ளுவதற்கான மின்னஞ்சல் முகவரி: wfecm@tgte.org

தமது குருதியாலும் மூச்சாலும் தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்தை உரைத்து நின்ற நமது மாவீரர்களின் நினைவுகளை நெஞ்சில் சுமந்து அவர்கள் இலட்சியம் ஈடேற நாம் ஒன்றுபட்டு செயலாற்ற உறுதி கொள்வோம்! உருத்திரபதி சேகர்

மாவீரர்கள், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அமைச்சர் -நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.

Exit mobile version