நான் விடுதலைப் புலிகளதும் இலங்கை அரசாங்கத்தினதும் போர்க்குற்றங்கள் குறித்துப் பேசியிருக்கிறேன். போரின் இறுதி நான்கு மாதங்கள் தொடர்பான ஆவணங்களையே நான் தயாரித்திருந்தேன். அந்த நான்கு மாதத்தில் நடைபெற்ற அனைத்து சம்பவங்களையும் பரிசீலித்திருக்கிறேன். தற்கொலைப் போராளிகளையும், குழந்தைப் போராளிகளையும் கொண்டிருந்த குற்றவாளிகளாக அவர்களைக் காட்டியிருக்கிறேன். புலிகள் அப்பாவிப் பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தியதான காட்சிகளும், புலிகள் எப்படி அரசியல் வாதிகளைக் கொலைசெய்ய முயற்சிசெய்தார்கள் என்பதும், மரதன் பந்தயம் ஒன்றின் போது தற்கொலைக் குண்தாரி ஒரு அரசியல்வாதியைக் கொலைசெய்வதற்காகக் குண்டு வெடிக்கவைத்ததையும் அப்பாவிப் பொதுமக்கள் கொலைசெய்யப்பட்டதையும் காட்சிப்படுத்தியிருந்தேன்.
உண்மை என்னவென்றால் இரண்டுபகுதியும் போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளனவாயினும் பெரும்பாலான பொதுமக்கள் அரச படைகளாலேயே கொல்லப்பட்டனர், இது இலகுவானது. புலிகளின் போர்க்குற்றங்களுக்கு முன்னால் அரசாங்கம் ஒளித்துக்கொள்ள முடியாது. புலிகளின் போர்க்குற்றங்கள் அரசாங்கத்தின் குற்றங்களை நியாயப்படுத்தாது.
இவ்வாறு மக்ரே குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இனப்படுகொலை அரசிற்கு மட்டுமல்ல புலியெதிர்பாளர்களுக்கும் கூட மக்ரே முகத்தில் அறைந்து பதில் சொல்யிருக்கிறார். இலங்கை அரசின் இனக்கொலை குறித்தும் போர்க்குற்றங்கள் குறித்தும் பேசும் போதெல்லாம் புலிகள் இழைத்த போர்க்குறங்களையும் படுகொலைகளையும் ஆதாரம்காட்டி இலங்கை அரசைக் காப்பாற்ற முனையும் இவர்கள் இலங்கை அரசை புலிகளின் குற்றங்களுக்குப் பின்னால் மறைக்க முயல்கின்றனர். மறுபுறத்தில் புலிகள் போர்க்குற்றங்கள் எதனையும் இழைக்காத புனிதர்கள் என்று அதன் தலைமையைக் காப்பாற்ற முனையும் பலர் இலங்கை அரசு மறைந்துகொள்வதற்கு வழியேற்படுத்திக்கொடுக்கிறார்கள்.