Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளின் பின்னர்? : சபா நாவலன்

“எனது குடும்பத்தில் பாதிப்பேர் கண்முன்னாலேயே இலங்கை இராணுவத்தின் குண்டுத்தாக்குதலுக்குப் பலியாகிவிட்டனர், காயப்பட்ட மீதிப்பேரோடு வீடுவளவுகளைத் துறந்து சிங்கள ஆமிக்காரனுக்கு அடிமையாக அடைக்கப்பட்டிருக்கிறோம், தமிழீழம் வருகிறது என்று சொல்லிச் சொல்லியே ஆயிரக்கணக்கில் உயிர்ப்பலி கொடுத்த விடுதலைப்புலிகள் மக்களை பணயமாக வைத்து தங்களைக் காப்பாற்ற முனைகிறார்கள். இனி நான் வாழ் நாள் முழுவதும் சிங்கள இராணுவத்திற்க்குப் அடிமையாக இந்த முகாமினுள்ளேயே மடிந்து போவேனோ என்ற எதிர்காலத்தை நினைக்கப் பயங்கரமாக உள்ளது”
– இது இலங்கைப் பேரினவாத அரசின் அகதிச் சிறைக்குள் வாழுகின்ற ஒருவரின் வாக்குமூலம் மட்டுமல்ல, பெரும்பாலானவர்களின் மனநிலை.
“எனது தாய் தந்தையர் போராளிகளுடன் இணைந்து செத்துப் போய்விட்டார்கள். உறவினர்களை எனக்குத் தெரியாது. மக்களைப் பணயமாக வைத்து தம்மைக் காப்பாற்றிக் கொண்ட போராளிகளை மன்னிக்க முடியாது. அரச இராணுவத்திற்க்கு அடிமையாக இங்கேயே மடிந்து போவேனா என்பதை எண்ணிப்பார்க்கும் போது வாழவே விருப்பின்றிப் போகிறது” (On the war in greece : Reginald Leeper :1950).
– கிரேக்க சிவில் யுத்தம் என அழைக்கப்பட்ட சோவியத் சார்பு கிரேக்கக் கம்யுனிஸ்ட் கட்சியின் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரச முகாம்களில் வாழ்ந்த இளைஞனின் வாக்குமூலம்.

தமிழ் பேசு மக்களும் மேற்கின் சதிகளும்

தமிழைப் பேச்சுமொழியாகக் கொண்ட ஒரே காரணத்திற்காக, தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த பேரின வாத இலங்கை அரசுகளால், அடக்கியாளப்பட்ட தமிழ்ப் பேசும் சிறுபான்மையின மக்கள் அரச பயங்கரவாததிற்கெதிராக ஆயுதமேந்தும் நிலைக்குத் தள்ளப்படதும், பிரித்தானிய ஆதரவுபெற்ற எதேச்சதிகார அரசிற்கெதிராக கிரேக்கத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆயுதமேந்தியதும் இரண்டு முற்றிலும் வேறுபட்ட அரசியல் சமூகப் பகைப்புலங்களைச் சார்ந்தவையாயினும், மேற்கின் “ஜனநாயகமும், மனிதாபிமானமும்” அன்றும் இன்றும் ஒரே வகையான அரசியல் பண்பையே வெளிப்படுத்தி நிற்கின்றன.
மேற்கத்தைய ஆதிக்கம் அதனது எல்லைக்குள்ளேயே தனது அதிகாரத்தை நிலைநாட்ட மேற்கொண்ட முதலாவது ஆக்கிரமிப்பு என வர்ணிக்கப்படும் கிரேக்க சோவியத் சார்ப்புக் கம்யுனிஸ்ட் கட்சியின் போராட்டமானது, 1946 இலிருந்து 1948 வரை அதன் உச்ச நிலையை அடைந்திருந்தது.
வலது சாரி அமரிக்க பிரித்தானிய அரச சார்புக் குழுக்களின் பயங்கரவாதத் தாக்குதல்களைச் சமாளிக்க 5 ஆயிரம் போராளிகளை கிரேக்கத்தின் பெலோபொனேஸ் சார்ந்த விவசாயப்பகுதிகளில் இணைத்துக் கொண்ட சோவியத் கமியூனிஸ்ட்டுக்கள், பல விவசாயக் கிராமங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்தியிருந்தனர்.
கிராமங்களில் போராளிகள் நிலைகொண்டிருந்த போதும், தம்க்கான வினியோகங்களைக் கோரிய போதும், கிராம வாசிகளில் பலர் தவிர்க்க வியலாத நிலையில் உதவிகளை வழங்கியதாகக் கூறும் டி.குளோஸ் என்ற ஆய்வாளர் கிராம மக்களின் மறுதலையான ஆதரவை கம்யூனிஸ்டுக்கள் பெற்றிருந்ததாகவும் கூறுகிறார். (The Greek Civil War: D.Close : 1995).
மறுபடி தேசிய ராணுவம் என்றழைக்கப்பட்ட அரச படைகள் இப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டபோது, சந்தேகத்தின் பெயரில் பல அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டும், திறந்தவெளிச் சிறைகளில் பல ஆண்டுகள் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டும், நாடுகடத்தப்பட்டும் சித்திரவதைக் குட்படுத்தப்பட்டனர்.
அமரிக்க பிரித்தானிய சார்பு அரசு போராளிகள் ஆதரவுக் கிராமங்களைச் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தின, பல நாட்கள் உணவின்றிப் பட்டினி நிலைக்கு உட்படுத்தப்பட்ட கிராம மக்கள் அரச பகுதிகளை நோக்கி வெளியேற முற்பட்ட போது போராளிக்குழுக்களால் தடுக்கப்பட்டனர். இதையே அரச படைகள் தமது நடவடிக்கைகளை நியாயம் கற்பிப்பதற்குப் பயன்படுத்திக்கொண்டு தமது அனைத்து அடக்குமுறைகளுக்கும் போராளிக் குழுக்களே காரணம் என அனைத்து உலகிற்கும் பிரச்சாரம் மேற்கொண்டன.
 “NAM: the true story of Vietnam” என்ற ஆவணத் தொகுப்பில் C.I.A இன் உயர் நிலை அதிகாரிகள் பலர், சோவியத் சார்புக் கம்யுனிஸ்ட் கட்சியிக்கு எதிரான போராட்டத்தை மட்டுமல்ல எதிர்வரும் கால கட்டத்தில் எல்லா வகையான போராட்டங்களுக்கும் எதிரானமனோ நிலையொன்றையும் உளவியல் ரீதியான தாக்கத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் தாமே இந்த நடவடிக்கைகளைத் திட்டமிட்டதாகவும் கூறுகின்றனர்.
அப்பாவிப் பொதுமக்களின் அனைத்துப் பிரிவினரையும் போராளிகளே தடுத்து வைத்திருக்கிறார்கள் என்ற பிரச்சாரத்தை மேற்கொள்வதனூடாகவும், அதற்கான உள்ளகச் சூழ்நிலையை உருவாக்குவதனூடாகவும் பொதுமக்களை போராளிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேற்றும் மிகவும் சக்திமிக்க தந்திரோபாயத்தைப் பிரயோகித்ததாகக் கூறும் இவ்வதிகாரிகள் இதே வகையான தந்திரோபாயத்தையே கொரிய யுத்தத்தின் போதுப் பயன்படுத்தியதாகவும் ஒப்புதல் வழங்குகின்றனர்.

மேற்கின் அரச ஆதரவு

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டெவிட் மிலிபாண்ட் மற்றும் கோசோவா நாட்டின் ஐக்கிய நாடுகளின் பிரதினிதியாகச் செயற்பட்டவரும், முன் நாள் பிரன்ன்சுக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும், ஈராக் மீதான அமரிக்க ஆக்கிரமிப்பை வெளிப்படையாக ஆதரித்தவருமான இன்றைய பிரன்ஞ்சு வலதுசாரிக் கட்சியின் வெளிவிவகார அமைச்சருமான மருத்துவர் பேர்னார் குஷ்னேர், ஆகியோர் இணைந்து புலிகள் மக்களை விடுவிக்க வேண்டுமென்றும், ஆயுதங்களைக் கைவிட வேண்டுமென்றும், ராஜபக்ஷவின் போர்நிறுத்ததைப் பாராட்டியும் 16/04/2009. அறிக்கை வெளியிட்டனர். (PTI 06-04-2009).
இதனை இலங்கையின் அனைத்து ஊடகங்களும் சற்று மிகைப் படுத்தியே பிரச்சாரம் மேற்கொள்ள மறுபுறத்தில் அரச சார்பு தமிழ் ஊடகங்களும் புலிகளின் நடவடிக்கைகள் மட்டுமே அனைத்து இழப்புகளுக்கும் ஏன் இன அழிப்பிற்கும் காரணம் புலிகளின் ஆயுதங்களைக் கைவிடாமைதான் பிரதான காரணம் என்று வரிந்து கட்டிக்கொண்டு தத்தமது பாணியில் பிரச்சாரங்களை மேற்கொண்டன. இவர்களுக்கெல்லாம் மேற்கத்தையக் கனவுலகிலிருந்து பல்வேறு ஆதரவுக் குரல்கள் ஒலித்தன. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான செயலர் ஜோன் ஹொல்ம்ஸ் புலிகள் மக்களைத் தடுத்து வைத்திருப்பது தான் அழிவுகளுக்குக் காரணம் என்று தனது பங்கிற்கு ராஜபக்ஷவைப் பாராட்ட “அரச சார்பு – புலியெதிர்ப்பு” ஊடகங்கள் புழகாங்கிதம் அடைந்து போயின.

ஜனநாயகம் : யாருக்காக?

அப்பாவி மக்களைப் துப்பாக்கிகளை நீட்டி அடக்கி வைத்து மனிதக் கேடயங்களாகப் பாவித்துக்கொண்டிருப்பது, கிரேக்க அரசு சொன்னது போல, |”கம்யூனிஸ நாசகாரர்களாகட்டும்”, ஆப்கானிஸ்தானில் அமரிக்கா சுட்டிக்காட்டும் “இஸ்லாமியப் பயங்கரவாதிகளாகட்டும்” வட இலங்கையின் கொல்லைப் புறத்தில் யாரும் கேள்விப்பட்டிராத கிராமத்தில் 200 ஆயிரம் மனிதர்களைப் பிடித்துவைத்திருக்கும் புலிகளாகட்டும், பிசாசாகட்டும், வீங்கிப் பெருத்த பூதமாகட்டும், அப்பாவி மக்களைக் கொன்றொழித்துத் தான் மேற்கிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஜனநாயகத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் ஜனநாயகம் யாருக்காக?
எங்காவது தொலைவில் காற்றுக் இலகுவில் உட்புகுந்து விடமுடியாத தொலை தூர நாடுகளிலெல்லாம் மக்கள் மீது குண்டூசி விழுந்ததற்காககூட கூக்குரல் போட்ட மேற்கு நாடுகளுக்கு தனது சொந்த மக்கள் மீதே குண்டுமழை பொழிந்து கசாப்புக்கடை நடாத்திக் கொண்டிருக்கும் இலங்கை அரசைத் தட்டிக் கொடுத்து பாராட்டிக் கொண்டிருப்பது ஜனநாயகமாகத் தெரிகிறது.!
 ஆயிரக்கணக்கான குழந்தைகளை, முதியோரை, ஒன்றுமறியா அப்பாவிகளைக் எரி குண்டுகளால் அழித்துத் துவம்சம் செய்து கொண்டிருக்கும் இலங்கை அரசின் அதிகாரிகளோடு கைகோர்த்துக் கொண்டு, சிறைக்கூடங்கள் போல இந்த நூற்றாண்டின் வெளிப்படையான அடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவிகளைப் பார்வையிடுவதாக சுற்றுலாச் செல்லும் புலம்பெயர் “மாற்றுக்கள்” எத்தனை மக்களை அழித்தாயினும் புலிகளை நிர்மூலமாக்க மேற்கின் “ஜனநாயகத்திற்கு” நியாயம் கற்பிக்கிறார்கள். தாம் இன்னும் ஜனநாயக வாதிகள் தான் எனத் தமக்குத்தாமே சமாதானம் கூறிக்கொள்ளவதற்காக மட்டும், சிறி லங்கா அரசும் குட்டிக் குட்டித் தவறுகள் செய்வதாக மேசையில் அறைந்து கூறுகிறார்கள். புலி அழிந்து போனால புதிய உலகம் பிறந்துவிடும் என எம்மையெல்லம் நம்பச் சொல்லி அடம்பிடிக்கிறார்கள்.

புத்தகங்களோ, ஆவணங்களோ தேவையில்லை!

இலங்கை அரசின் மனிதப்படுகொலைகளை நியாம்கேட்க அரசியல் விஞ்ஞானமோ, ஜனநாயக பட்டங்களோ, கட்டுக்கட்டாகப் புத்தகங்களோ, ஆவணங்களோ தேவையில்லை! சாதாரண மனிதாபிமானமுள்ள மனிதனாகவிருந்தாலே போதுமானது.
இலங்கையின் மகிந்த குடும்ப அரசிற்கும், அவ்வரசை புடைசூழ்ந்து மக்கள் மீதான அரச ப்யங்கரவாதத்தைப் பாதுகாக்கும் அனைத்து வல்லரசுகளுக்கும் கூட புலிகளின் அழிவு என்பது பிரதான பிரச்சனையல்ல. புலிகள் என்பது அழிவிற்காகப் பயன்படுத்தப்படும் ஆயுதம். மக்களை மிரட்டுவதற்காகப் பயன்படும் கருவி. போராட்டங்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வழிமுறை!
இவை தான் இலங்கை அரசினதும் அதனை ஆட்டுவிக்கும் ஏகாதிபத்தியங்களது உள் நோக்கு.
நீண்டகாலத் திட்டம்.
பயங்கரவாததிலிருந்து இலங்கையை முற்றாக மீட்க இன்னும் மூன்றாண்டுகள் தேவை என்கிறார் மகிந்தவின் சகோதரர், பசில் ராஜபக்ஷ. ஐந்து ஆண்டுகள் என்கிறார் இராணுவத் தளபதி.
அவர்கள் எல்லாப் போராட்ட சக்திகளையும், தேவையானால் சிறுபான்மை இனங்களின் ஒரு ப்குதியையேனும் அழித்தொழிக்க அவர்கள் வரித்துக்கொண்ட காலகட்டம் அது.
இந்த நீண்டகாலத் திட்டம் என்பதன் இறுதியில் இலங்கை என்ற நாட்டின் இறுதி நிலமும் கூட அன்னிய தேசங்களுக்கு அடகுவைக்கப்பட்டுவிடும். இலங்கையிடம் விற்பனை செய்வதற்க்கு மிஞ்சியிருக்கப்போகிற ஒன்று, போராட்டங்களை எதிர் கொள்வத்ற்கான வழிமுறை மட்டும்தான். தெற்காசியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே பாடம் சொல்கிஅது இலங்கை.
1. பெருந்தேசிய வெறிகொண்ட இராணுவத்தை நாடு முழுவதிலும் நிலை நிறுத்துவது..
2. அரசின் வன்முறைகெதிரான வன்முறை என்பதோ போராட்டங்கள் என்பதோ அழித்து நிர்மூலமாக்கப்படும் என்ற உளவியற் பயவுணர்வை மக்கள் மத்தியில் தோற்றுவிப்பது.
3. மக்கள் அழிக்கப்படுகிறார்கள் என்றால், அதற்குப் போராளிகளே காரணம் என்ற அரசியலை முன் வைப்பது.
4. இவ்வரசியலுக்கான பிரச்சார சக்திகளை இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் பிரச்சாரம் மேற்கொள்வது.
5. பெரும்பான்மையின மக்கள் மத்தியில் சிங்கள தேசிய வெறியையும் சிறுபான்மையினங்களுக் கெதிரான உணர்வையும் விதைப்ப்பது.
சிறீ லங்கா தேசியக்கொடி விற்பனையில் சாதனை படைத்திருக்கிறது. இராணுவ “மாவீரர்களுக்கு” இரத்ததானம் வழங்க சிங்கள ஒடுக்கப்படும் மக்கள் கூட போட்டிபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். தொலைக் கிராமங்களிலெல்லாம் அப்பாவி மக்கள் இறந்து போகும் தமிழ்க் குழந்தைகளைப் கேள்விப்படுவதேயில்லை. விகாரைகளில் இராணுவத்திற்காகவும் ஜனாதிபதி குடும்பத்திற்காகவும் தன்னிச்சையான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு வளரும் பாசிசத்தில் ஆயிரம் லசந்த விக்கிரமதுங்காக்கள் உயிருடனேயே கொலைசெய்யப்பட்டு விட்டார்கள்.
 “ஒன்றுமறியா” இலங்கை அரசு மேற்கொள்ளும் மனித அழிப்பிற்கு புலிகள் மட்டும் தான் காரனம் என்று புலம் பெயர் “மாற்று”க்கள் ஏற்கனவே நிறுவி விட்டார்கள். இப்போது அதன் அடுத்தகட்டம் ஆரம்பமாகிவிட்டது. போராட்டங்களுக்கும் வன்முறைக்கும் எதிரான பிரச்சாரம்!
உலக மனித இனம் வன்முறையில் பற்றுக்கொண்ட போர் விரும்பும் உயிரினக்களல்ல. ஆனால், தமிழ் பேசும் மனிதன் என்பதற்காக,இஸ்லாமியன் என்பதற்காக, தாழ்த்தப்பட்டவன் என்பதற்காக, அடிமையாக வாழ விரும்பாதவன் என்பதற்காக, வாழும் உரிமையை கோருபவன் எபதற்காக, வன்முறையைப் பிரயோகிப்பவர்கள் ஆட்சிபுரியும் அதிகாரவர்க்கமும் அதன் அடிவருடிகளும் தான். இந்த வன் முறைகெதிராக மக்கள் தம்மைத் தற்பாதுகாத்துக்கொள்ள முனையும் போதுதான் பயங்கரவாதிகளாக அழிக்கப்படுகிறார்கள்.

புலம்பெயர் அரச ஆதரவு “மாற்று சக்திகள்”

மக்கள் அனைத்து வன்முறைகளுக்கும் எதிரானவர்கள் தான் ஆனால் அரச வன்முறைக்கு ஆதரவானவர்களல்ல.
வன்முறைகெதிரான புலம்பெயர் அரச ஆதரவு “மாற்று சக்திகள்” தமது அகதி அந்தஸ்தைதையே அரசின் வன்முறையைக் காரணம் காட்டியே பெற்றுக்கொண்டவர்கள். தம்ழ் பேசும் மனிதனாக வாழ வழியற்றவர்களாக காரணம் காட்டியே மேற்கில் குடிபுகுந்தவர்கள். புலிகளோடு முரண்பட்டுக்கொண்டு புலிகளின் கொலைக் கரங்களுக்கு அஞ்சி அன்னிய தேசங்களில் குடிபுகுந்தவர்கள் கூட அரசிற்கெதிராகப் போராடும் உரிமையைப் புலிகள் மறுத்த ஒரே காரணத்திற்காக போர்க்கொடி உயர்த்தியவர்கள். அரசின் பிரச்சாரக் கூறுகளாகத் தொழிற்படும் இவர்கள் அதன் மிகப்பலம் வாய்ந்த எதிர்கால சக்திகளாக எதிர்பார்க்கப்படுபவர்கள்.
புலிகள் தமிழ் பேசும் மக்களின் நியாயமான போராட்டத்தைத் தவறாக வழிநடத்தி சீர் குலைத்துவிட்டார்கள், புலிகளின் சிந்தனை முறையின் எச்ச சொச்சங்கள் கூட மேலும் மேலும் போராட்டத்தை சீர்குலைக்கும். இன்று புலிகள் தமது பாசிசக் கட்டமைப்பு உட்பட அனைத்தையும் கலைத்து விட்டு, மனித நேயம் மிக்க ஜனநாயக சக்திகளின் அரசிற்கெதிரான போராட்டத்தை வளர்த்தெடுப்பது மட்டும் தான் புலிகளின் வரலாற்றுத் துரோகத்தை ஓரளவேனும் சீர்செய்யும். மக்கள் மத்தியில் போராட்டத்த்ன் மீதான நம்பிக்கை பிறக்கும்.
இன்றும் மக்கள் இழப்பைப்பற்றி கிஞ்சித்தும் துயர்கொள்ளாமல், பாசிச அரசிலைலை மட்டுமே நம்பியிருக்கும் புலிகளிடமிருந்து இதையெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பது சந்தேகத்திற்கிடமானதே. புலிகளைப் பொறுத்தவரை இதுவரை ஏகாதிபத்தியங்களுக்குச் சார்பான அமைப்பாகவே தன்னை வெளிப்படுத்தியிருக்கிறது. தலைமையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக எங்காவது ஒரு ஏகாதிபத்திய நாட்டின் காலடியில் தஞ்சம் கோரும் நிலைக்குத் தள்ளப்படும்.

இனியொரு…

இலங்கை அரசு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தன்னை முற்றாக அம்பலப்படுத்தியுள்ளது.
புலிகள் மீது மக்கள் நம்பிக்கையிழந்து விட்டனர்.
மேற்கத்திய அரசுகளின் ஜனநாயக வேடம் கலைந்து போய்விட்டது.
அரச ஆதரவுக்குழுக்களை என்றைக்குமே மக்கள் எதிரிகளாகத் தான் கணித்திருக்கிறார்கள்.
அனைத்துத் துயரங்களுக்கும் மத்தியில் இவையெல்லாம் ஜனநாயக சக்திகளுக்குப் புதிய நம்பிக்கையைத் தரவல்லன. இந்த சந்தர்ப்பம் சிங்கள, முஸ்லீம், மலையக தமிழ் ம்க்களின் இணைந்த அரச பாசிசத்திற்கெதிரான போராட்டத்திற்கான அடிப்படையை உருவாக்கும். அனைத்து முற்போக்கு சக்திகளும் இணையவேண்டியதன் அவசரமும் அவசியமுமான அரசியற்பகைபுலம் இன்று உருவாகியுள்ளதை இது உணர்த்தி நிற்கிறது.

Exit mobile version