இலங்கை என்பது பௌத்ததைப் பாதுகாப்பதற்கான புனித தேசம், இந்த தேசத்தைத் தொடர்ச்சியாகப் பாதுகாக்கும் நிலையிலுள்ளவர்கள் சிங்கள பௌத்தர்கள், தமிழர்களும் ஏனைய சிறுபான்மையினரும் இந்தத் தீவில் வாழ இடமளித்த சகிப்புத் தன்மை கொண்ட சிங்கள மக்களுக்கு நன்றியுடையவர்களாயிருக்க வேண்டும் என்பதே பௌத்த சிங்கள தேசிய வாதமாகக் கட்டமைக்கப்படுகிறது என்கிறார், நீல் டெவோட்டா (P:49 Economic and Political Weekly: 31.01.2009)
ஒரு மக்கள் கூட்டத்தின் அடையாளம் திட்டமிட்டுச் சிதைக்கப்படும் போது, அவ்வடையாளத்தின் நியாயத்தன்மைக்கும் தேவைப்பாட்டிற்கும் அப்பால், அதற்கெதிரான போராட்டம் என்பது நியாயமானதே! இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அடையாளங்கள் சிதைக்கப்படும் போது அதற்கெதிரான போராட்டம் என்பது, பல படிமுறைகளூடாக ஜனநாயக வரை முறைக்குட்பட்ட வழிமுறைகளைக் கடந்து ஆயுதப் போராட்டமாகப் பரிணாமமடைந்தது. இன்னும், இதன் வழிமுறைகளுக்கும் தவறுகளுக்கும் அப்பால் இவ் வன்முறைப் போராட்டத்தின் நியாயத் தன்மையைப் பொதுவாக எந்த இடதுசாரிப் போக்குடையவர்களும் மறுத்ததில்லை.
நீல் டெவோட்டா குறிப்பிடுகின்ற பௌத்த சிங்கள தேசியவாதம் அல்லது பெருந்தேசிய வாதம் என்பது தமிழ் பேசும் மக்களின் மீது கட்டவிழ்ழ்த்து விட்ட அரசியல், பொருளாதார, கலாச்சார, சமூக அடக்கு முறைகள் கருத்தியலாக்கப்பட்டு பெருந்தேசிய வாதத்தின் ஏகோபித்த ஆதரவோடு சிறுபான்மைத் தமிழ் பேசும் அனைத்துத் தேசிய இனங்களின் மீதான ஒடுக்கு முறையாக வளர்ர்சியடைந்தது.
இந்த சமூகவிரோதக் கருத்தியலான பெருந்தேசிய வாதத்திற்கு எதிராக முன்னெழுந்த முதலாளித்துவ ஜனநாயக வரம்புகளுக்குட்பட்ட ஒவ்வொரு போராட்டங்களும் இதே கருத்தியலைக் கருவியாகக் கொண்டு அழித்தொழிக்கப்பட்டது. காலனியத்திற்குப் பின்னான 1958, 1983, 2009 ஆண்டுகளில் அரச பயங்கர வாதம் நடத்தி முடித்த இனப் படுகொலைகளான மக்கள் படுகொலைகளின் பின்னதாகவும் இந்த பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை அடித்தளமாகக் கொண்ட பெருந்தேசியவாதம் புதிய தெம்பையும் உத்வேகத்தையும் பெற்றுக்கொண்டது.
பௌத்தத்தை அரசியற் தளத்திற்கு நகர்த்தியதற்கான முழுப்பொறுப்பும் பிரித்தானியக் காலனியாதிக்க அரசையே சாருமெனினும் தேரவாத பௌத்தத்தின் சமூக ஆதிக்கம் காலனிக்கு முன் பகுதியிலேயே இருந்ததை நியூட்டன் குணசிங்க போன்ற மனிதவியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஐம்பதாயிரம் மனித உயிர்களை 100 நாட்களுக்குள், பயங்கரவாதிகளுக்கெதிரான போர் என்ற தலையங்கத்தில் பலி கொண்ட பேரினவாத அரசியல், தனது பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை இலங்கை வாழ் ஏனைய சிறுபான்மையினரின் மேல் புதிய உத்வேகத்துடன் திணிக்க முயல்கிறது.
மல்வத்த மற்றும் அஸ்கிரிய பௌத்த பீடங்களின் வரலாற்றில் மிக அதி உயர் விருதாகக் கருதப்படும் “விஷ்வ கீர்த்தி சிறீ திரி சிங்களாதீஸ்வர” என்ற விருதை, இப் பீடங்களின் மகா நாயக்கர்களான பௌத்த் பிக்குகள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு 23.05.2009 அன்று வழங்கிக் கௌரவித்துள்ளனர்.
சோழ சாம்ராஜ்யத்திற்கெதிரான போரில் பௌத்த சிங்கள ஆதிக்கத்தை நிறுவி இலங்கையை ஒரே கொடிக்குக் கீழ் கொண்டுவந்த கஜபாகு மன்னனுக்கு வழங்கப்பட இந்த திரி சிங்கள விருது அதன் பின்னராக இலங்கையில் முழுமையாகப் பௌத்த சிங்கள ஆதிக்கத்தை முழுமையாக நிறுவியதற்காக இலங்கை ஜனாதிபதிக்கு பௌத்த பீடாதிபதிகளால் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு தனிமனிதன் தன்னுடைய தாய் நாட்டிடமிருந்து பெற்றுக்கொள்ளத்தக்க மிகப்பெரிய விருதாக தான் இதைக் கருதுவதாகக் கூறிய மகிந்த ராஜபக்ஷ தனது தாய் நாடு பிளவுபடுவதை தான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் எனவும் கூறினார்.மகா சங்க பௌத்த பிக்குகள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, தாய் நாட்டின் ஐக்கியத்தையும் பௌத்த மதத்தையும் பாதுகாப்பதற்காகவே தனக்கும் இந்த விருது வழங்கப்பட்டதாக மேலும் தெரிவித்தார்.
பௌத்த சிங்கள மேலாத்திக்க வாதத்தை அடித்தளமாக கொண்ட பேரினவாத அரசியலானது ஆயிரக்கணக்கான மனிதர்களின் பிணங்களின் மீது புத்துயிர் பெற்றுள்ளது.
பேரின வாததின் தத்துவார்த்தப் பகுதியான இப் புத்துயிர்சியானது இதற்கெதிரான எதிர்ப்பு அரசியலை மேலும் மேலும் வலியுறுத்துகிறது. சாட்சியின்றி இன்னும் நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையும் அதற்கு வழங்கப்படுகின்ற சமூகவிரோதத் தத்துவார்த்த முலாமும் சிறுபான்மையின மக்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்கள் மக்கள் மத்தியிலும் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
தமிழ் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறையின் தத்துவார்த்தப் பின்புலமாக அமைந்த மேலாதிக்க வாதம் ஒரு புறத்தில் புத்துயிர் பெற மறுபுறத்தில் இதற்கான எதிர்ப்பு அரசியலென்பது, புலிகளின் அழிவிற்குப் பின்னதாக, முற்றாக அற்றுப் போயுள்ள நிலையையே நாம் காண்கிறோம். மேலும், இதே எதிர்ப்பு அரசியலுக்கான வெற்றிடத்தை மேற்கு நாடுகளும் அதன் ஏகாதிபத்திய நலன்கள் சார் புத்திஜீவுகளும் நிரப்புகின்ற ஒரு அபாயகரமான அரசியற் பகைப் புலத்தில் தான் அரசிற்கெதிரான ஆயுதப் போராட்டத்தின் தந்திரோபாயங்கள் வகுக்கப்பட வேண்டும்.
புலிகளின் அழிவிற்குப் பின்னதாகவேனும், புலிகள் தொடர்பான விமர்சனப்பார்வை என்பதும், தமிழ் பேசும் மக்களின் நியாயமான போராட்டத்தை புலிகள் சிதைவிற்குட்படுதினர் என்பதும் மக்கள் மத்தியில் சொல்லப்பட வேண்டும்.
நீண்ட ஜனநாயகப் போராட்டங்களூடக வன்முறை சார் எதிர்ப்பரசியல் என்பதே ஒரே வழியென்ற முடிபிற்கு வந்த போதுதான் ஆயுதமேந்திய தலை மறைவு இயக்கங்கள் உருவாகின. இவ்வியங்களின் முற்போக்குக் கூறுகளெல்லாம் புலிகளால் அழிக்கப்பட்ட பின்னர், எஞ்சியிருந்த புலிகள் ஒருவித
தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு இன அழிப்பிற்கெதிரான புதிய அரசியலை எவ்வாறு முன்வைப்பது என்பதை ஆய்வு செய்யக்கூட மறுக்கும் புலி அரசியலிற்கு எதிர்வினையாக சரணடைவு வாதமே முன்வைக்கப்படுகிறது.
புலி அரசியலின் தோல்விக்கான பிரதான காரணம் மக்களை அணிதிரட்டாத, மக்களிலிருந்து அன்னியப்பட்ட, வேறுமனே ஆயுதம் சார்ந்த அரசியலையே முன்வைத்ததாகும். புலிகளின் துப்பாக்கிகளுக்கு போதிய குண்டுகள் இருக்கும் வரை அவர்கள் பலமானவர்களாயிருந்தனர், அவை தீர்ந்து போன போது பலமிழந்து போயினர்.
சர்வதேச ரீதியில், மனிதாபிமானிகளோ, ஜனநாயக சக்திகளோ, முற்போக்காளர்களோ 30 வருட காலத்தில் அணிதிரட்டப்படவில்லை.
தமிழகதில் கூட வாக்கு அரசியல் நடத்தும், வை.கோ, கருணாநிதி, திருமாவளவன், பாண்டியன் போன்ற சந்தர்ப்பவாதிகளே தமிழ்பேசும் இலங்கை மக்களின் போராட்டத்தின் ஆதரவு சக்த்திகளாக உள்வாங்கப்பட்ட நிலையில் அவர்கள் அங்கம் வகிக்கும் அரசாங்கங்களே இலங்கையில் நடைபெறும் இன அழிப்பின் பிரதான பின்புலமாக உள்ளன. இன்று வரைக்கும் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும், வாக்கு அரசியலுக்கு உட்பட்டாத எந்த தமிழக இடது சாரிக் குழுக்களுடனும் புலிகள் ஒருங்கிணைவிற்கும் வர முயற்சிகவில்லை.
ஈராக் மீதான அமரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக தெருவிலிறங்கிய எந்த ஐரோப்பிய ஜனநாயக சக்திகளும் இலங்கையில் நடைபெறும் இன்ப்படுகொலை தொடர்பாக குழப்பமான கருத்தையே கொண்டுள்ள நிலையில் புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்களை ஏறெடுத்துக் கூடப் பார்க்கவில்லை. புலம் பெயர் புலி அரசியல் என்பது தமிழ் நாட்டைப்போல் ஐரோப்பிய நாடுகளிலும் சந்தர்ப்பவாத, கட்சி அரசியல் வாதிகளையே நம்பியுள்ளது.
இதே பிற்போக்கு சக்திகள் தான் புலித் தலைமையை நந்திக் கடல் வரை நகர்த்திச் சென்று இலங்கை இரணுவத்தின் கைகளில் ஒப்படைக்கவும் உதவியவர்கள்.
ஆக, மனித இனத்தின் மீதும பற்றுக் கொண்டவர்களும், ஐம்ப்தாயிரம் உயிர்களைப் பலிகொண்டு, ஊனமுற்ற ஒரு சந்ததியை உருவாக்கி, இன்னும் தடுப்பு முகாம்களில் அப்பாவிகளை அடைத்துவைத்து இனப்படுகொலையைத் தொடரும் இலங்கை அரசிற்கெதிரான எதிர்ப்பரசியலை முன்வைக்க விழைபவர்களும் புலிகளின் தோற்றுப்போன வழிமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.
1. மக்களை சார்ந்து நிற்கும் சர்வதேச சமூகத்தை படுகொலைகளுக்கெதிராக அணிதிரட்ட வேண்டும்.
2. புலம் பெயர் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் புலிகளின் அரசியல் தவறை அம்பலப்படுத்த வேண்டும்.
3. மக்கள் சார்ந்த சிறீ லங்கா அரசிற்கெதிரான தமிழ் பேசும் மக்களின் தற்பாதுகாப்பு யுத்தத்திற்கான புதிய தந்திரோபாயங்களை வகுத்துகொள்ள வேண்டும்.
எஞ்சியிருக்கும் புலிகளின் ஜனநாயக வழிமுறைக்குத் திரும்பும் வியாபார நோக்கிலான கோஷத்தை தமிழ் பேசும் மக்கள் வேடிக்கையான கோரமாகவே பார்க்கிறார்கள். சிறீலங்கா அரசிற்கெதிரான தமிழ் பேசும் மக்களின் போராட்ட்த்திற்கான தேவை, திட்டமிட்ட இனப் படுகொலையிலிருந்து தற்பாதுகாத்துக் கொள்வதற்கான போராட்டம் முனெப்போதையும் விட இன்று அவசியமாயுள்ளது. அதற்கான தத்துவார்த்த வழிமுறையும், தந்திரோபாய நகர்வும் புலிகளின் போராட்ட முறையை நிராகரிப்பதிலிருந்தே உருவாக முடியும்