Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலம்பெயர் தமிழ் ஊடகங்களின் அருவருப்பான வியாபாரம்

14.06.2014 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடகவியளாளர் சந்திப்புத் தொடர்பாக அதன் ஏற்பாட்டாளர்களுக்கு எழுதிய கடிதம் – சபா நாவலன்.

நண்பர்களே தயவு செய்து சிந்தியுங்கள்!

உங்கள் அனைவரிடமும் தோழமையுடன் வேண்டுவது….

நாழிதழ்கள், தொலைக்காட்சிகள், சஞ்சிகைகள் போன்ற அனைத்து ஊடகங்களும் நமது வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தின் அசைவையும் தீர்மானிக்கின்றன. பல வழிகளில் எம்மை அறியாமலேயே ஊடகங்களால் உள்வாங்கப்பட்டுவிடுகின்றோம். எம்மைச் சுற்றிவரவுள்ள உலகில் நடக்கின்ற நாளாந்த நிகழ்வுகள் என்ன , அவை எவ்வாறு எமக்கு ஊடகங்களால் வெளிப்படுத்தப்படுகின்றன என்பதை ஒவ்வொரு சம்பவத்தையும் ஆழமாக ஆராய்ந்தால் புரிந்துகொள்ள முடியும். இன்று ஈழத்தில் நடக்கும் அவலங்கள் தொடர்பாகவோ அன்றி புலம்பெயர் நாடுகளின் துயரங்கள் தொடர்பாகவோ உண்மையைக் கூற மறுக்கும் ஊடகங்கள் எம் கண்முன்னே நடக்கும் அழிவில் முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றன.
தமது வர்த்தக நலன்களை அடிப்படையாகக்கொண்டு அழிவிலும் அவலத்திலும் ஊடகங்கள் வகிக்கும் பங்கு கொண்டாட்டத்திற்கு உரியதல்ல. மாறாக விமர்சனத்திற்கும் சுய விமர்சனத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டும். அதனூடாக புதிய ஒடுக்கப்பட்ட மக்களின் ஊடகவியல் சமரசங்களுக்கும் விட்டுக்கொடுப்புக்களுக்கும் அப்பால் தோன்ற வேண்டும்.

இணைய ஊடகங்களிலிருந்து பெரும் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் கைகளில் இறுக்கப்பட்டிருக்கும் ஊடகங்கள் வரை சமூகத்தின் கருத்தைத் தீர்மானிப்பதில் மறுக்க முடியாத பங்கை வகிக்கின்றன. ஆக, மக்கள் சார்ந்த ஊடகங்கள் தொடர்பான உரையாடலைத் தவிர்த்து பொதுப்படையாக ஊடகம் என்ற வரையறைக்குள் எல்லா வியாபாரிகளையும் அடக்கிவிட முடியாது.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய இனம் என்ற அடிப்படையில் ஒடுக்கப்பட்டு, முப்பது ஆண்டுகள் ஆயுதப் போராட்டத்தைக் கடந்து, வன்னி மண்ணில் இந்த நூற்றாண்டின் மிகக் கொடிய இனப்படுகொலையைச் சந்தித்த பின்னரும் ஊடகங்கள் பிற்போக்குச் சிந்தனையின் ஊற்றுமூலமாகச் செயற்படுகின்ற தமிழ்ச் சூழல் அவமானத்திற்குரியது. பெருமைக்குரியதல்ல!

இலங்கை தெற்காசியாவின் வர்த்தகத் தலைநகரமாக மாற்றப்படுகிறது என்றும் அதற்காகவே இனப்படுகொலை திட்டமிடப்பட்டது என்றும் பல ஆய்வாளர்கள் கூற ஆரம்பித்துள்ளனர். அமெரிக்காவின் ஆசிய மையத்தின் மையப்புள்ளியாக இலங்கை மாறியுள்ளது என்றால் ஆசியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தின் மையப்புள்ளியாக எம்மை மாற்றும் தகமை எமக்குண்டு.

ஆனால் நடந்துகொண்டிருக்கும் அருவருப்பான ஊடக வியாபாரம் எமது சமூகத்தைச் சிதைத்துச் சீரழித்துக்கொண்டிருக்கிறது. போர் நடந்த காலத்தில் மக்கள் அழிவிற்கு உட்படுத்தப்படப் போகிறார்கள் என்ற உண்மையைத் தெரிந்துகொண்டே அதனை மறைத்தோம் என்றும் அது நியாயமானது தான் என்றும் புலம்பெயர் தொலைக்காட்சியில் ஒரு ஊடகவியலாளர் சூழுரைத்தார். இலங்கை அரசு மக்கள் மீதான் உளவியல் யுத்ததை நடத்திய வேளையில் அதனை எதிர்கொள்ளும் நோக்கோடு பொய் சொன்னோம் என்று தன்னை அவர் நியாயப்படுத்திக்கொண்டார்.

இவ்வாறு பொய் சொல்கின்ற தகவல்களை மறைக்கின்ற ஒவ்வொரு ஊடகங்களுக்கும் ஒவ்வொரு நியாயத்தை முன்வைத்துத் தப்பித்துக்கொள்கின்றன. மக்களை மந்தைகளாகவும் அறிவற்ற விலங்குகளாகவும் வைத்துக்கொள்கின்ற இந்த ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் சமூகத்தின் இயல்பான வளர்ச்சியைத் தடை செய்து அழிவுகளின் பங்காளிகளாகிவிடுகின்றனர்.

உலகத்தின் ஒவ்வொரு சமூகச் செயற்பாடுகளுக்கும் பல்தேசிய வர்த்தக நிறுவனங்களின் வியாபார வெறியையே முன்மாதிரியாகக் கொள்ளும் ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் முழுச் சமூகத்தினதும் அழிவிற்குத் துணை செல்கின்றனர்.

வெகுஜன ஊடகங்கள் என்று அழைக்கப்படுகின்ற எமது வீடுகளைத் தேடிவருகின்றதும், அதிக மக்களைச் சென்றடவதுமான ஊடகங்கள் பல பல்தேசிய வர்த்தக வெறிக்குள் மாட்டிகொண்டவையே.

வெகுஜன ஊடகங்களில் பெரும்பாலனவை பல்தேசிய வர்த்தக நிறுவனங்களே சொந்தமாக வைத்திருப்பதால், அவற்றின் நலன்களே அந்த ஊடகங்களில் பிரதிபலிப்பதாக நோம் சொம்ஸ்கி தனது Manufactured Consent என்ற நூலில் கூறுகிறார்.

அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் அங்கு பிரபலமான ஊடகங்கள் அனைத்தும் ஆறு பல்தேசிய நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. General Electrics, Comcat, Disney, News Corp, CBS, Time Warner என்ற அந்த நிறுவனங்கள் பல அழிவுகளின் சூத்திரதாரிகள். அவர்கள் செய்திகளைத் தங்களுக்கு எற்றதாக மாற்றி மக்கள் மத்தியில் கருத்துக்களாக விதைக்கின்றனர்.

ஐரோப்பா முழுவதும் வெளி நாட்டவர்களுக்கு எதிரான கருத்து வெம்மை மிக்க தீ போன்று பற்றியெரிகின்றது. வெளி நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்கு வேலை செய்ய வருகின்ற தொழிலாளர்களும் அகதிகளும் தமது வளங்களை அபகரித்துச் செல்கின்றனர் என்று ஐரோப்பியர்களை நம்பவைத்த பொறுப்பு ஊடகங்களையே சாரும். ஆனால் புள்ளிவிபரங்களை விலாவாரியாகப் போட்டுப்பார்த்தால் அதில் எந்த உண்மையையும் பார்க்க முடியாது. இதே போல குஜராத்தில் மோடி பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தினார் என்று இந்திய ஊடகங்கள் ஒருமித்த குரலில் ஒலித்தன. அது அப்பட்டமான பொய் என்கிறது புள்ளி விபரங்கள்.

இந்த ஊடகங்களை முன்மாதிரியாகக் கொண்டே அவற்றின் பிரதிகளைப் போன்றே ஈழத் தமிழ் ஊடகங்களும் புலம்பெயர் ஊடகங்களும் உருவாக்கப்படுகின்றன. ஆக, அதிகாரவர்க்கச் சிந்தனையின் காவிகளாக பெரும்பாலான தமிழ் ஊடகங்களில் செயற்படுகின்றன.

நாம் வாழும் சமூகத்தில் ஊடகம் என்பது விசித்திரமான நுகர்வுப் பண்டமாக அதிகாரவர்க்கத்தால் விற்பனைசெய்யப்படுகின்றது.  இலவச இணைய ஊடகங்கள் விளம்பரங்களிலிருந்து கருத்துக்கள் வரை விற்பனை செய்கின்றன. தன்னார்வ நிறுவனங்களூடாகக் மக்களை அழிக்கும் கருத்துக்கள் அலங்கரிக்கப்பட்ட நச்சுப் பண்டங்களாக ஊடகங்கள் ஊடாக விற்கப்படுகின்றன. இதே அதிகாரவர்க்கம் தான் இனப்படுகொலையை நடத்தியது. இன்று நிலப்பறிப்பின் பின்புலத்திலும், இனச் சுத்திகரிப்பின் பின்புலத்திலும் இதே அதிகாரவர்க்கம் தான் செயற்படுகின்றது. ஆக, நுகர்வுப் பண்டங்களாக விற்பனை செய்யப்படுகின்ற ஊடகங்களை ஒடுக்கப்படுகின்ற தேசிய இனத்தின் மனிதனாக எப்படி ஏற்றுக்கொள்வது?

ஊடங்கள் நமது சமூகத்தில் விசித்திரமான நுகர்வுப் பண்டங்கள் என்பதன் உள்ளர்த்தம் ஆழமானது. ஊடகத்தைப் பயன்படுத்தும் ஒரு மனிதன் அதனை நுகர்வுப்பண்டமாகக் கருதலாம். உண்மை என்னவெனில் சமூகத்தை பிற்போக்காக இயக்குவதற்குப் பயன்படும் ஊடகங்கள் முதன்மைப்படுத்தும் சம்பவங்களும் அதனூடாகக் கட்டமைக்கப்படும் கருத்தும் இங்கு நுகர்வுப் பண்டமாகிறது. இந்த வகையில் புலம்பெயர் தமிழ் சமூகத்தில் ஈழத் தமிழர்களின் அவலங்கள் நுகர்வுப் பண்டமாக்கப்படுகின்றது. ஒடுக்குமுறைக்குள் வாழும் மனிதர்கள் நுகர்வுப்பண்டமாகிறார்கள். இவ்வாறான அருவருக்கத்தக்க நுகர்வுப் பண்டத்தை பல்வேறு தேவைகளுக்காக மூலதனமாக்கிக்கொள்ளும் செயற்பாடு துடைத்தெறியப்பட வேண்டுமல்லவா?

இவை அனைத்துக்கும் மத்தியிலிருந்து மாபெரும் சக்தியாக எழும் ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் உலகம் முழுவதும் முகிழ்தெழும் புதிய உற்சாகம் தரும் காலத்தில் நாங்கள் வாழ்கிறோம். ஆனால் கவலைக்கிடமாக ஈழத் தமிழ்ஊடகங்கள் பழமைவாததிலிருந்தும், நுகர்வுக் கலாச்சார அடிமைத் தனத்திலிருந்தும் அதிகாரவர்க்கத்தின் நிகழ்ச்சி நிரலிலிருந்தும் இம்மியளவேனும் விடுதலையடையவில்லை.

அதிகாரவர்க்கம் உருவாக்கிய ஊடகத் தொழிற்சாலையின் பிற்போக்கு ஊழியர்களாக ஊடகவியலாளர்கள் தொடர்வதா, அன்றி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக உலகத்திற்கு முன்னுதாரணம் வழங்குவதா என்பதே எமக்கு முன்னால் உள்ள கேள்வி. ஐந்து நட்சத்திரவிடுதிகளிலும், அழகுபடுத்தப்பட்ட உணவகங்களின் ஜன்னலோரத்திலும் குடிபானங்களோடு அமர்ந்து நாமும் எப்படி அழிப்பவர்களுக்குப் பயன்படுவது என்பது குறித்து சிந்திப்பதை விடுத்து ஒடுக்கப்படும் சமூகத்தின் உரிமைக் குரலாகவும் உண்மையை மக்களுக்குக் கூறும் கருவியாகவும் ஏன் ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்த திட்டத்தை முன்வைக்கக்கூடாது? எல்லாவற்றிற்கும் அடிப்படையான இவை தானே அழிந்துகொண்டிருக்கும் எமது உடனடித் தேவை?

சபா நாவலன் -10.06.2014

Exit mobile version