ஒரு வாசகனின் வெளிப்பார்வைக்கு ஒரு கவர்ச்சிகரமான உலகமாக தோற்றமளிக்கும் புலம்பெயர் ஈழத்தமிழ் படைப்பாளிகள் சமூகம் மிக கேவலமான பண்புசார் உத்திகளுடன் தான் இன்று தமக்கான தளத்தினை கட்டமைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. ஒரு குறிப்பிட்ட கால இயங்கு நிலை இழந்த அல்லது மறுக்கப்பட்ட ஒரு தரப்பினரும், தொடர்ந்து இயங்கு நிலையில் இருக்கும் ஒரு தரப்பினரும், மட்டுமில்லாமல் இயங்கு நிலை மறுக்கப்பட்ட போதிலும் அதனை உடைத்து தமக்கான இலக்கிய தளத்தினை கட்டமைத்த ஒரு தரப்பினரும், என தம்பண்புசார் நிலைகளில் இயங்குகின்ற ஒரு தளப்பின்னணியூடாகவே இன்று புலம்பெயர் இலக்கிய தளத்தினை நோக்கவேண்டி உள்ளது.
உண்மையில் ஒரு படைப்பாளிக்கு அவன் இயங்குகின்ற பண்பு நிலையானது மறுக்கப்படல் மிக பெரும் அவல நிலை என்பதனை எந்த சந்தர்ப்பத்திலும் மறுக்க முடியாது. அப்படி மறுக்கப்பட்டதனை நியாயப்படுத்தும் நோக்கமும் இப்பத்திக்கு கிடையாது.
புலம்பெயர் படைப்பாளியின் படைப்பினை வெளிக்கொண்டு வருவதில் அல்லது வெளிச்சமிடுவதில் அந்த படைப்பாளியின் இயங்குகின்ற பண்புசார் நிலை முக்கிய பங்கினை வகிக்கிறது. ஒரு சிறந்த படைப்பினை உருவாக்கும் படைப்பாளி அவன் இயங்குகின்ற பண்பு நிலையினைக் கொண்டு தரம்பிரிக்கப்பட்டு, அந்த படைப்பினை உள்வாங்குவதானது அல்லது ஒருவகை காழ்ப்புணர்வோடு விமர்சிப்பதானது புலம்பெயர் இலக்கியத்தளத்தில் பெரும் சாபக்கேடாகவே உள்ளது. இத்தகைய செயற்பாடானது இன்றைய இயங்கு நிலையில் முன்னெப்போதுமில்லாத வகையில் ஒரு முதிர்வு நிலையினை அடைந்துள்ளது. இதனூடாக பல படைப்புக்கள் சராசரி வாசிப்பு மனநிலை கொண்ட மக்களிடம் சென்றடையாமல் கூட இருக்கிறது.
ஒரு சமூதாய கட்டமைப்பில் மக்களை வழிநடத்துகின்ற பெரும் பொறுப்பானது அந்த சமூதாயத்தில் இயங்குகின்ற படைப்பாளிகளையே சாரும். புலம்பெயர்ந்து இன்னொரு சமூகத்தளத்தில் வாழ்வினை கட்டியமைக்கும் ஒரு மக்கள் கூட்டமானது, அந்த சமூதாயத்தின் பண்பியலை சடுதியாக உள்வாங்கி விடவே முனையும். பண்பியல் மாற்றங்களை உள்வாங்கி அதனுள் அமிழ்ந்து போகும் சமூகமானது தம் சுய அடையாளங்களை இழந்துவிடும். இன் நிலையில் இருந்து சமூகத்தினை காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு அந்த சமூகத்தின் படைப்பாளிகளையே முழுவதுமாக சார்ந்துள்ளது.
அந்தவகையில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் படைப்பாளிகள் உன்னதமான சேவையினை ஆற்றிவருகிறார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ஈழத் தமிழ் மக்களுக்கென்று ஒரு குறியீட்டு படிமம் உலக அரங்கில் உருவாக்கி உள்ளது என்றால் அதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக படைப்பாளிகளே உள்ளார்கள் என்பது நிதர்சனமானது.
இருந்தபோதிலும், இலக்கியத்தரம் வாய்ந்த படைப்புகளை வெளிக் கொணர்வதில் அல்லது ஏற்றுக்கொள்வதில் புலம்பெயர்ஈழத்தமிழ் படைப்பாளிகளிடையே பாரியதொரு இடைவெளி உருவாக்கப்பட்டு உள்ளது. தம் பண்புசார் தளத்திற்கு மட்டுமே உரித்தான படைப்பாளனை அல்லது படைப்பினை கொண்டாடும் அதே வேளை மாற்றுத்தள படைப்பாளியை அல்லது படைப்பினை புறந்தள்ளுவதாகவும் அது அமைகிறது. புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் அமைப்பு ரீதியான பிரிவுகளுக்கு இன்னும் வழிகோலும் நிலையாகவே இதனை கருதவேண்டும்.
நோக்கு ரீதியில் முன்னைய காலங்களைவிட அதிகளவான புலம்பெயர் படைப்பாளர்கள் உருவாகி இருந்தாலும், படைப்புகளின் தன்மையானது பண மற்றும் தனிப்பட்ட செல்வாக்குகளாலும் நிர்வகிக்கப்படுகின்ற அல்லது வெளிக் கொணரப்படுகின்ற ஒரு நிலையினையும் காணமுடிகிறது. இது காத்திரமான ஒரு வளர்வு நிலையல்ல.
இதேயிடத்தில் இன்னொரு அவலநிலையினையும் குறிப்பிட்டேயாக வேண்டும். புலம்பெயர் ஈழத்தமிழ் படைப்பாளர் தளத்தில் ஒரு புதிய படைப்பாளன் உருவாகும்போது அவனுக்கான வழிநடத்தல்களும் அங்கீகாரங்களும் கூட பக்கசார்பான ஒரு நிலையூடாக அவனை வளர்த்துவிடுவதாகவே அமைகிறது. இது ஒருவகை கொம்பு சீவுதல்தான்.
காத்திரமான ஒரு படைப்பாளி தனக்கென ஒரு சுயசிந்தனையோடு இயங்கினாலும், அவனுக்கான அடையாளமொன்றை வழங்கிவிடுவதில் பண்புசார் தளம் மிக நெருக்கமாக செயற்படுகிறது. அதிலும் மிக நெருக்கமான அண்மைக்காலத்தில் தாய்நிலச்சூழல் காரணமாக புலம்பெயர்ந்துவந்த படைப்பாளர்கள் தங்களுக்கான ஒரு அடையாளத்தினை பெற்றுக்கொள்வதில் மிகுந்த சிக்களுக்கு முகம் கொடுக்கிறார்கள்.
ஒரு இனத்தின் நிலையான இருப்பில் அந்த இனத்தின் வேர்களான படைப்பாளர்களின் பங்கு மிக முக்கியமானது. வேர்கள் எப்போதும் மரத்தினை தாங்கிப் பிடிப்பதாக இருக்கவேண்டும். புதிய முளைய வேர்களை காப்பவையாகவும், வழி காட்டிகளாககவும் இருக்கவேண்டும். மாறாக ஒரு பக்க கிளைகள் மேல் கொண்ட காழ்ப்பினால் தமது பணியினை நிறுத்திவிடவோ அல்லது பக்க சார்புடனோ நிகழ்த்த விரும்பும் பட்சத்தில் அது அந்த முழு மரத்தினையும் பாதிப்பதாகவே அமையும்.
தமிழ் தேசிய இனத்தின் ஒற்றுமையையும் வளர்வையும் கருத்தில் கொண்டு புலம்பெயர்ந்த படைப்பாளிகள் ஒரு தளநிலையில் நின்று இயங்கவேண்டிய கடப்பாடு முன்னெப்போதையும் விட தற்காலத்தில் அதிகமாகவே இருக்கிறது. பல்வேறு முகங்களை கொண்ட படைப்பாளிகள் தான் சமூகத்தின் வெளிப்பாடு என்றாலும் காலத்தின் தேவையையும், இனத்தின் இருப்பையும் கருத்திற்கொண்டு ஒரு பொதுநிகழ்ச்சி நிரலின் கீழ் ஒன்றுபட்டும், புதிய படைப்பாளிகளை உள்வாங்கியும் செயற்படவேண்டும். புலத்தில் இயங்கும் பன்முகத்தன்மை வாய்ந்த மூத்த படைப்பாளிகள் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். முன் வருவார்களா ?