இவர்கள் முன்வைத்த வாதங்களின் சாரம் என்ன?
இந்தியா ஒரு அரைக்காலனி நாடு; அரை நிலப்பிரபுத்துவ நாடு.
இந்தியாவில் புரட்சிக்கு காலம் கனிந்து விட்டது. மக்கள் புரட்சிக்கு தயாராக உள்ளனர்.
கட்சி உடனடியாக ஆயுதமேந்தி போராட வேண்டும்.
மக்களை கட்சி திரட்ட வேண்டியதில்லை. நமது வீரசாகசங்களைப் பார்த்து மக்கள் நம் பின் திரளுவார்கள்.
வர்க்க எதிரிகளாக உள்ள தனிநபர்களை அழித்தொழித்திட வேண்டும்.
தொழிற்சங்க, விவசாய சங்கப் பணிகள் எல்லாம் தேவையற்றது. ஆழமான விவாதங்களுக்கு பிறகு கட்சி இக்கருத்துக்களை நிராகரித்துவிட்டது. எனினும் சீர்குலைவுவாதிகள் தமது வாதங் களைக் கைவிடவில்லை. கட்சியினுள் பல்வேறு குழப்பங்களையும் கட்டுப்பாடு மீறல்களையும் அரங்கேற்றி வந்தனர்.
இதன் ஒரு கட்டத்தில் தான் நக்சல்பாரி கிராமத்தில் ஆயுதம் தாங்கிய கலகத்தை இவர்கள் தொடங்கினர்.“கட்சியின் இரண்டாம் மட்டத்தலைவராக இருந்த சாருவின் (சாருமசும்தார்) குரலை அவ ரது கட்சியே எதிர்பார்க்கவில்லை” என குங்கு மம் கட்டுரையாளர் கூறுகிறார். இது முற்றிலும் தவறான ஒன்று.சாருமசும்தார் கோஷ்டி முன்வைத்த கருத் துக்களை கட்சி ஜனநாயக முறையில் விவாதித் தது மட்டுமல்ல; அது சீர்குலைவு வாதம் எனவும் பொதுவுடைமை இயக்கத்தை தடம்புரள வைத்து விடும் எனவும் உறுதியான முடிவுக்கு வந்தது. எனவே இச்சீர்குலைவு வாதங்கள் கட்சியால் நிராகரிக்கப்பட்டன.இடிமுழக்கமா? சீர்குலைவு முழக்கமா?‘நக்சல்பாரி எழுச்சியை வசந்தத்தின் இடி முழக்கம்’ என வரலாறு பதிவு செய்ததாக குங்குமம் கட்டுரையாளர் கூறுகிறார். வசந்தத்தின் இடி முழக்கமாக அல்ல; மாறாக பொதுவுடமை இயக்கத்தின் முன்னேற்றத்திற்கு சீர்குலைவு ஏற்படுத்த முயன்ற நிகழ்வு இது என வரலாறு பதிவு செய்துள்ளது என்பதே உண்மை.ஏனெனில் இவர்கள் வைத்த ஒவ்வொரு கோட்பாடும் தவறான மதிப்பீடு என நிரூபிக்கப்பட்டுள்ளது. பல கோட்பாடுகளை அவர்களே மாற்றிக்கொண்டுள்ளனர். இந்த தவறான கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பல இளைஞர்கள் உயிர் இழந்ததும் திசைமாறிப்போனதும் வரலாற்று உண்மை.‘தமிழகத்தில் நக்சல்பாரி இயக்கம் எவ் வளவு வேகமாக எழுந்ததோ அதே வேகத்தில் பிளவைச் சந்தித்தது’ என குங்குமம் கட்டுரை யாளர் கூறுகிறார். இது தமிழகத்தில் மட்டுமல்ல பல பகுதிகளில் நக்சல் சீர்குலைவுவாதிகள் பிளவுபட்டுப்போயினர்.
ஒரு செல் இரண்டாகவும் அது நான்காகவும் பல்கிபெருகுவது போல நக்சல் சீர்குலைவு கோஷ்டிகள் பிளவுபடுவதும் பிறகு ஒன்றுபடுவதும் மீண்டும் பிளவுபடுவதும் என முடிவில்லா பரிணாம வளர்ச்சியைக் கண்டனர். 1979-80 காலத்தில் நக்சல் சீர்குலைவு வாதிகள் 35 கோஷ்டிகளாக பிளவுபட்டிருந்தனர்.சிபிஎம் ஊழியர்களைக் கொன்று குவித்தனர்ஒரு பொதுவுடைமை இயக்கம் செம்மை யாக செயல்பட இரு நிபந்தனைகளை தோழர் லெனின் முன்வைக்கிறார். ஒன்று சித்தாந்த ஒற்றுமை. இரண்டு அந்த ஒற்றுமையின் அடிப்படையில் ஸ்தாபன ஒற்றுமை.
இவை இரண்டும் இருந்தால் மட்டுமே இயக்கம் சிறப்பாக செயல்படும். நக்சல் சீர்குலைவுவாதிகளிடையே இவை இரண்டுமே இல்லை. எனவே அவர்கள் பல கோஷ்டிகளாகப் பிரிந்ததில் எவ்வித ஆச்சரிய மும் இல்லை. இந்த கோஷ்டிகளிடையே எவ்வளவு பிளவுகள் இருந்தாலும் ஒரு கருத்தில் மட்டும் ஒற்றுமை இருந்தது. அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதான எதிர்ப்பு என்பதாகும்.நக்சல் சீர்குலைவுவாதிகளுக்கு எதிராக சித்தாந்தக் கோணத்திலிருந்தும், நடைமுறையிலும் சமரசமற்ற எதிர்ப்பை வெளிப்படுத்துவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. எனவே இவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது கொலைவெறித் தாக்குதலை ஏவிவிடவும் தயங்கியதில்லை.
இந்தியாவில் 1975ல் அவசர நிலை! ஆனால் மேற்குவங்கத்திலோ 1971லிருந்தே அறிவிக்கப் படாத அவசரநிலை! 1971-77 காலகட்டத்தில் மட்டும் 1100 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இதில் நக்சல் சீர்குலைவுவாதிகளால் கொல்லப்பட்டவர்கள் கணிசமானவர்கள். காங்கிரஸ் குண்டர்க ளோடு இணைந்து நக்சல் சீர்குலைவுவாதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களை கொன்றனர்.
இந்தக் கூட்டணி இன்றுவரை நந்திகிராமத்தில் தொடர்கிறது. 2008ல் இது வரை 19 ஊழியர்களை மாவோயிஸ்ட் சீர் குலைவுவாதிகள் கொன்றுள்ளனர்.உழைப்பாளிகளைக் கொல்லும் மாவோயிஸ்ட்டுகள்இன்றும் நக்சல் சீர்குலைவுவாதிகள் பல கோஷ்டிகளாக உள்ளனர். அவர்களில் மாவோ யிஸ்ட்டுகள் கோஷ்டி இன்றளவும் ‘எதிரியை அழித்தொழிக்கும்’ கோட்பாட்டை கைவிட வில்லை.
எந்த உழைப்பாளி மக்களுக்காக ஆயுதம் ஏந்துவதாக மாவோயிஸ்ட்டுகள் கூறிக்கொள்கின்றனரோ அதே உழைப்பாளிகள் அதுவும் மலைவாழ் மக்கள் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியுள்ளனர். ‘சல்வா சுடும்’ எனும் அமைப்பை அரசு எந்திரம் ஏற்படுத்தி மலைவாழ் மக்களுக்கு ஆயுதங்கள் தரப்படுகின்றன.
இவர்கள் மாவோயிஸ்டுகளை தாக்குவதும் மாவோயிஸ்டுகள் இவர்களை தாக்கு வதும் ஜார்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் இன்றும் நடக்கிறது. மாவோயிஸ்டுகள் திருப்பித் தாக்கும்பொழுது பெண்கள் மற்றும் குழந்தை களைக் கூட விட்டுவைப்பதில்லை என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பரம ஏழைகளான மலைவாழ் மக்கள் ஏன் தமக்கு எதிராக ஆயுதம் ஏந்துகின்றனர் என் பதை சிந்தித்திட மாவோயிஸ்டுகள் தயாராக இல்லை.நேபாள மாவோயிஸ்டுகள் இந்திய மாவோயிஸ்டுகளை ஆதரித்தவர்கள். அவர்கள் நேபாளத்தின் சூழலை கணக்கில் கொண்டு தமது கோட்பாடுகளில் மாற்றம் கண்டுள்ளனர். ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்திய மாவோயிஸ்டுகள் தமது அடிப்படை நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது அவர்களது வேண்டுகோள். இந்த நியாய மான வேண்டுகோள் இந்திய மாவோயிஸ்டுகளின் காதுகளில் இறங்குமா என்பது கேள்விக் குறியே! ஊடகங்களின் ஆதரவு ஏன்?
இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வரும் நாசகர பொருளாதார கொள்கைகள் மக்களிடையே கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகின்றன. இதனை இடதுசாரிப்பாதையில் கொண்டு சென்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயல்கிறது. மக்களின் கோபம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக திரும்புவதைவிட நக்சல்/மாவோயிஸ்ட் சீர்குலைவுவாதிகளுக்கு ஆதரவாக திருப்புவது தமக்கு நல்லது என ஆளும் வர்க்கங்கள் கணக்கு போடுகின்றன.
எனவேதான் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக பல ஊடகங்கள் பக்கம்பக்கமாக செய்திகள் வெளியிடுகின்றன. பிரம்மாண்டமாக வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டைப் பற்றி எழுதாதவர்கள் மாவோயிஸ்டுகளை சிலாகிக்கின்றனர்.
இந்தியப்புரட்சியின் முன்னேற்றத்தில் இடது சீர்குலைவுவாதத்தை எதிர்த்து போராடியே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்துள்ளது. அப்போராட்டத்தில் பல இன்னுயிர்களையும் இழந்துள்ளது. இடது சீர்குலைவு வாதத்திற்கு எதிரான போராட்டத்தை இடைவிடாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து நடத்தும், ஏனெனில் இப்போராட்டம் இந்தியப்புரட்சியின் முன்னேற்றத்தோடு பிரிக்கமுடியாத தொடர்பு கொண்டதாகும்.
Thanks: அ.அன்வர் உசேன்