இந்துவாகப் பிறந்தேன் இந்துவாக மரணிக்க மாட்டேன் என்று சொன்ன அண்ணல் அம்பேத்கர் பல லட்சம் மகர் மக்களுடன் இந்து மதத்தில் இருந்து வெளியேறி புத்த மதத்தை தழுவினார். ஆனால், இந்து தேசியமும் இந்துத்துவமும் எழுச்சி பெற்றிருக்கும் இந்தியாவில் புத்த மதமும் இந்து மதத்தின் ஒரு அங்கமாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. கத்தோலிக்கம், இஸ்லாம் போன்று புத்த மத மக்களுக்கென்று தனிஉரிமைகள் சட்ட அங்கீகாரங்கள் இல்லை. இந்நிலையில், புத்தமதத்திற்கு தனி மத அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற நவ பௌத்தர்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதை நிறைவேற்றித்தர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, பொதுச்செயலாளர் ஒன்றிய அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் டாக்டர் விரேந்திர குமாரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இந்திய ஒன்றிய அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் டாக்டர் விரேந்திர குமாரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி ஆகியோர் தனித்தனியே கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் உள்ள கோரிக்கைகள் பின்வருமாறு!
அதிகரித்து வரும் வன்கொடுமைகள்:
2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் பட்டியல் சாதி (SC) நபர்கள் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு தாக்குதலை எதிர்கொள்கின்றனர். வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின்கீழ் 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 50,291 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 9.4% அதிகரித்துள்ளது என்று தேசிய குற்ற ஆவண மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தப் போக்கு, வன்கொடுமைகளைத் தடுப்பதில் ஒன்றிய, மாநில அரசுகளின் தோல்வியையே காட்டுகிறது. வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விகிதம் 2020 இல் 96.5% ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு 94% ஆக இருந்தது. ஆண்டின் இறுதியில், POA சட்டத்தின் கீழ் 177,379 வழக்குகள் விசாரணை நிலுவையில் உள்ளன. இது அலட்சியத்திற்கு ஒரு சான்று. POA திருத்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மாவட்ட மற்றும் மாநில அளவிலான மறுஆய்வுக் கூட்டங்களை, சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு தவறாமல் நடத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தேசிய எஸ்சி ஆணையத்தின் வருடாந்திர அறிக்கைகள்:
தேசிய எஸ்சி ஆணையம் (என்சிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தலைவருக்கு ஆண்டு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அது உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 10 ஆண்டுகளுக்கான அறிக்கைகள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 4 அறிக்கைகள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2016-17ஆம் ஆண்டுக்கான 10ஆவது அறிக்கை கடந்த 2018ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பின் 2017-18, 2018-19, 2019-20, 2020-21 ஆகிய 4 ஆண்டுகளுக்கான அறிக்கைகள் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. நிலுவையில் உள்ள ஆண்டறிக்கைகளை விரைந்து சமர்ப்பிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நவ பௌத்தர்களின் கோரிக்கை:
ஒரு சமூகம் தனக்கான Personal Law ஐ உருவாக்குவதற்கான பிரத்தியேக உரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என்பது சட்டத்தின் உலகளாவிய கொள்கையாகும். ஆனால் நம் நாட்டில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கருடன் சேர்ந்து புத்த மதத்திற்கு மாறிய நவ பௌத்தர்களுக்குத் தனியே திருமணம் மற்றும் வாரிசு சட்டம் இல்லை, ஏனெனில் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 இன் விளக்கம் (மனசாட்சி சுதந்திரம் மற்றும் சுதந்திரமான தொழில், நடைமுறை மற்றும் மதப் பிரச்சாரம்) அவர்களை ‘இந்துக்கள்’ என்று வகைப்படுத்துகிறது. இது இந்து Personal Law க்கு உட்பட்டது. எனவே நீதியரசர் எம்.என்.வெங்கடாசலையா ஆணையத்தின் பரிந்துரைகளின்படி அரசியலமைப்புச் சட்டத்தின் 25 (2) (பி) பிரிவைத் திருத்துவதன் மூலம் புத்தமதத்திற்கு தனி மத அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற நவ பௌத்தர்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதை நிறைவேற்றித்தர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.