
இன்று உலகம் முழுவதும் பொதுவாக எல்லா நாடுகளிலும் புதிய வருடத்தின் முதல் நாளாக கிரகாரியன் நாள்காட்டியின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.
வான வேடிக்கைகளும் அலங்காரங்களும் இசை நிகழ்ச்சிகளுமாக ஐரோப்பியப் புத்தாண்டான ஜனவரி முதலாம் திகதி உலகின் அதிகாரவர்க்கத்திற்கான ஒன்றாக மட்டும் மாறிவருகிறது.
வரலாற்றில் முதல் தடவையாக லண்டனில் நடைபெறும் வான வேடிக்கைகளைக் குறித்த எல்லைக்குள் நின்று பார்வையிடுவதற்கு கட்டணம் அறவிடப்படுகின்றது. ஒரு லட்சம் பேருக்கு கட்டணச் சேவை வழங்கப்படும் என லண்டன் நகர பிதா அறிவித்தார்.
இதுவரை காலமும் லண்டனைச் சூழவரவுள்ள பல பகுதிகளிலுமிருந்து வந்து நள்ளிரவு வரை வாண வேடிக்கைகளை மகிழ்ச்சியோடு கண்டுகளிக்கும் சாதாரண மக்கள் இனிமேல் பணம் இல்லாமல் பார்வையிட முடியாது.
லண்டனில் முதல் தடவையாக புத்தாண்டின் மகிழ்சி நுகர் பொருளாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. புதிய ஆண்டு இனிமேல் எப்படியிருக்கும் என லண்டன் நகரபிதாவின் முன்னறிவிப்பாக இதனைக் கருதலாம்.
உழைக்கும் மக்களது, சிறு வியாபாரிகளதும், தொழில் முனைவோரதும் உழைப்பையும் வாழ்வையும் உறிஞ்சிக்கொள்ளும் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் இலாபத்திற்காகவே 2014 ஆம் ஆண்டு கடந்து சென்றது.
லண்டனில் வான வேடிக்கையைப் பார்வையிடுவதற்கான பற்றுச் சீட்டின் விலை £10 மட்டுமே என ஆரம்பத்தில் விளம்பரப்படுத்தப்பட்டது. அதனை பெருமளவில் வாங்கிய வியாபார நிறுவனங்கள்பற்றுச்சீட்டு ஒன்றிற்கு £200 வரை விற்று முடித்தன.
ஏழைகள், உழைக்கும் மக்கள், மத்தியதர வர்க்கத்தினர் ஆகியோரை தொலை தூரத்திற்கு துரத்திவிட்டு உயர் குடிகளை மட்டுமே வான வேடிக்கையின் ஒளியில் மகிழ்ச்சிப் படுத்தும் புதிய ஆண்டில் மகிழ்ச்சி என்றல் என்ன என்பதை மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
உலகில் ஒடுக்கப்படும் மக்களோடு அவர்களுக்காக வாழ்தலில் பொதிந்திருக்கும் மகிழ்ச்சியைக் கண்டவர்கள் நாங்கள். முப்பது வருடப் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் சமூகத்திற்காக உயிரிழப்பதை மகிழ்ச்சி எனக் கொண்டடிய ஆயிரக்கணக்கான போராளிகளைக் கண்டிருக்கிறோம். அதே போராளிகளதும் மக்களதும் தியாகங்களை தமது பிழைப்பிற்காகவும்அடையாளத்திற்காகவும் பயன்படுத்தும் சமூகவிரோதிகளின் மகிழ்ச்சியையும் காண்கிறோம்.
உழைப்பின் வலியோடு புத்தாண்டின் ஒலியில் உறக்கம் கலைந்து ஒரு நாள் விடுமுறை என மகிழ்ச்சி கொள்ளும் உழைக்கும் மக்களை உலகம் முழுவதும் காண்கிறோம். ஈழத் தமிழர்களைப் போல ஒடுக்கப்பட்டவர்கள் புதிய ஆண்டை நம்பிக்கையோடு எதிர் நோக்கும் மகிழ்ச்சியைப் பார்த்திருக்கிறோம்.
வாண வேடிக்கை உட்பட நுகர்வுக் கலாச்சாரத்தின் வியாபாரக் குறியோடு வாழ்க்கை நடத்துவதை மகிழ்ச்சி எனக் கருதும் ஊதாரி உயர்குடிகளைக் காண்கிறோம். அதையெல்லாம் அருவருப்போடு அணுகும் புதிய போராடும் சமூகம் உருவாதலை மகிழ்ச்சியோடு காண்போம்.
புதிய ஆண்டு ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஆண்டாக அமைய இனியொருவோடு இணைந்திருக்கும் அனவருக்கும் வாழ்த்துக்கள்.