புத்தரின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் டில்லியில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள புத்த பெருமானின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருட்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வரையிலும் இலங்கை முழுவதும் காட்சிப் பொருளாக வைப்பதற்காக கொண்டு செல்வது என இந்திய அரசும், இலங்கை அரசும் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வேண்டுகொளை ஏற்று இந்திய அரசு இம்முடிவை மேற்கொண்டு இருப்பதாகத் தெரிகிறது, இந்திய அரசின் முடிவு வெந்து போன தமிழர்களின் நெஞ்சில் வேல் கொண்டு குத்துவதாக இருக்கிறது.
இப்போது இலங்கையில் தமிழர்களின் இந்து சமய வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் பௌத்த விகாரைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இலங்கைத் தீவு முழுமையுமே ஒரு பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதற்கு இலங்கை அரசு வெறித்தனமாகச் செயல்பட்டு வருகின்றது.
இலங்கை அரசுக்கு புத்தரின் பெயரைச் சொல்வதற்கு எவ்வித அருகதையும் இல்லை. மே 17, 18 ஆகிய நாட்களில் படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்களை நினைவு கூர்ந்து உலகம் முழுமையும் வாழுகின்ற தமிழர்கள் வேதனையோடு கண்ணீர் அஞ்சலி செலுத்திக் கொண்டு இருக்கின்ற வேளையில் மே 18 ஆம் திகதி இந்தியா இப்படி ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டிருக்கிறது.
இது இந்திய அரசு தமிழர்களுக்கு இழைக்கின்ற மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். டில்லி தேசிய ஆஜணக் காப்பகத்தில் உள்ள புத்த பெருமானின் புனிதப் பொருட்கள், இன்றைக்கு உலகில் மிகவும் மதிக்கத்தக்க பழைமையான பொருட்களும் ஒன்றாகும். புனிதம் நிறைந்த அப்பொருட்களை இலங்கைக்குக் கொண்டு செல்லக்கடாது.
எனவே புத்த பெருமானின் புனிதப் பொருட்களை இலங்கைக்குக் அனுப்புவதற்காகச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.